Wednesday, April 26, 2006

கனடிய இராணுவம் இந்தியாவிற்குச் செல்லுமா?

ஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு கனடிய போர் வீரர்களின் உடல்கள் இராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்டிருக்கின்றது. எதற்காக இந்த உயிர்கள் பலியிடப்படுகின்றன. யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பொய்யான தவறான தகவல்களையே வழங்குகின்றன.

அதே நேரம் வீழ்ந்துவிட்ட இராணுவ வீரர்களுக்கான முக்கியத்துவத்தையும் மரியாதையையும் ஊடகத் துறை தரவில்லை என்பது இவ்வீரர்களின் உறவினர்களால் வைக்கப் படும் குற்றச்சாட்டாகவும் இருக்கின்றது.

1989 இல் முடிவுக்கு வந்த சோவியத்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்நாட்டு யுத்தத்திலும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சீரழிவிலும் சிக்கித் தவித்தது. அந்த வேளையில்தான் ஒரு கிராமத்து சமய வழிபாட்டுத் தலைவரான முல்லா ஒமர் தலைமையில் மதக் கல்வி மாணவர்கள் ஒன்று சேர்ந்து தலிபான்கள் ஆனார்கள். சிறு சிறு குழுத்தலைவர்களுக்கு எதிராகவும் கற்பழிப்பு போதைப் பொருள் கடத்தல் ,சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கும் எதிராகப் போராடினார்கள். வெற்றி கொண்ட இடங்களிலெல்லாம் பிரதேச வாத மத அடிப்படைவாத சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். புஸ்தான் இனக் குழுமத்தில் இருந்து வந்த தலிபான்கள் இவர்கள் 9/11 வகை தீவிர வாதிகளாக இல்லாவிட்டாலும் மத அடிப்படை வாத கொம்யூனிஸத்திற்கு எதிரான கடும் போக்காளர்களாக இருந்தார்கள். தலிபான்கள் ஓப்பியம் மற்றும் ஹீரோயின் உற்பத்தியை முற்று முழுதாக தடை செய்தாலும் பிற்போக்குவாத கடுமையாளர்களாக
இனம் காணப்பட்டார்கள்.

வெளிப்படையாக "தீவிரவாதிகளின் முகாம்" (terrorist camps) என்று சொல்லப் பட்டு அமெரிக்காவாலும் மேற்கு நாடுகளாலும் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட முகாம்கள் அனைத்திலும் கம்யூனிஸத்திற்கெதிராக ஆப்கானிஸ்தானிலும் மத்திய ஆசியாவிலும் போராட இணைந்து கொண்டிருந்த முஸ்லீம் தொண்டர்களே தங்கியிருந்தனர்.

கம்யூனிஸ்டுகள் 1970 இல் இருந்து கம்யூனிஸக் கொள்கைகளை பாடசாலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பரப்பி வந்தனர். அதனால் பெண்களுக்கான கல்வி தலிபான்களால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. தலிபான்கள் சிறிய அளவிலான கொடுமைகளுக்காகவும் நீண்ட காலமாக இருந்து வந்த புத்தர் சிலைகள் தகர்ப்புக்காகவும் இன்றும் குறை கூறப்படுகின்றார்கள்.

9/11 தாக்குதல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்கள் முன் வரை அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள் உதவி பெற்று வந்தவர்களே இந்தத் தலிபான்கள். இவர்களுடன் 300 அல் கைடா அமைப்பினரையும் பயன்படுத்தி முஸ்லீம்கள் அதிகம் வாழும் சீனாவின் மேற்குப் பிரதேசத்திலும் ரஸ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த மத்திய ஆசியாவிலும் குழப்பம் விளைவிக்க அமெரிக்கா யோசனை கொண்டிருக்கக் கூடியளவில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் தான் இவர்கள்.

அமெரிக்க எண்ணெய்க் கம்பனிக்கான குளாய்த் திட்டத்தை ஆப்கானிஸ்தானிற்கூடாக எடுத்துவரும் அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அமெரிக்காவுடனான தேனிலவு முடிவுக்கு வந்தது.

9/11 தாக்குதலுக்குப் பின்னான காலத்தில் ஒஸாம பின் லாடனின் அடைக்கலமும் அமெரிக்காவின் ஓசாமாவை ஒப்படைக்கக் கோரிய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்ததாலும் வந்தது தொல்லை.
9/11 தாக்குதலுக்கான சூத்திரதாரி ஒஸாமா தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியபோது சர்வதேச நீதி மன்றத்தில் ஒஸாமாவை ஒப்படைக்க தலிபான்கள் முன் வந்தார்கள். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்துவிட்டது. தொடர்ந்து 9/11 இற்கான பழியை தலிபான்கள் மேல் போட்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத முல்லா ஒமர் புஸ்தான் இன மக்களுடன் கலந்து விடுமாறு தலிபான்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தலிபான்கள் சிறு சிறு கொரில்லா சண்டைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இவர்களுடன் ஹிஸ்பி இஸ்லாமி என்னும் இயக்கமும் இணைந்து போராடி வருகின்றது.

அப்படியொரு சண்டையிலேயே நான்கு கனடிய இராணுவ வீரர்களும் வீழ்ந்து பட்டு இராணுவ மரியாதையுடன் கனடாவிற்கு எடுத்து வரப்பட்டார்கள்.

கனடியர்கள் தொடர்ந்தும் அங்கு இருப்பதற்கு முக்கிய பிரச்சார காரணமாகச் சொல்லப்படுவது ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பது என்பது. அதற்காக அமெரிக்காவால் அமைக்கப் பட்ட கர்ஸாயின் பொம்மை அரசினால் நடாத்தப் பட்ட தேர்தலில் சோவியத் காலத்தில் நடாத்தப் பட்ட தேர்தல்களில் இடம் பெற்றதையும் விட அதிக அளவில் ஊழல் இடம் பெற்றுள்ளது. இதற்காக நூறு மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள் சிறு சிறு குழுத்தலைவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

தலிபான்களின் பின்னான ஆட்சிக் காலத்தில் மீண்டும் தோன்றிய போதைப் பொருள் கடத்தலால் தங்கள் மடிகளை நிரப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் மேலும் செல்வந்தர் ஆனார்கள்.

தலிபான்கள் அகற்றப் பட்டதன் பின் ஓப்பியம் உற்பத்தி 90% வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க - NATO படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நார்கோ மாகாணத்திலிருந்துதான் உலகின் முழுத்தேவைக்குமான ஹீரோயின் உற்பத்தி செய்யப்
படுகின்றது. வெளி நாட்டுப் படைகள் வெளியேறும் கணத்திலேயே ஹர்ஸாயின் அரசும் செயலிழந்துவிடும்.

சோவியத்தின் அராஜகத்தில் இருந்து மீண்ட ஆப்கானியர்களில் 1.5 மில்லியன் ஆப்கானியர்கள் போதைப் பொருள் தாதாக்களாலும் அமெரிக்க கனேடிய NATO படைகளாலும் கொல்லப்பட ஆயிரக் கணக்கான ஆப்கானியர்கள் தினமும் சித்திரவதை செய்யப் படுகின்றார்கள். அதிக அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உஸ்பெக் பகுதிகள்- இன்று அமெரிக்க கனடிய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஆப்கானியர்கள் தலிபான்கள் காலத்தையும் விட அதிக அளவில் சித்திர வதை செய்யப் படுகின்றார்கள்.

கனடா ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்காக மேலும் பிரச்சாரப் படுத்தும் காரணம் " பெண்கள் சுதந்திரத்தைப் பாது காப்பது " என்பது நகைப்புக்கிடமான முட்டாள்த் தனம். மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்படுவதைப் போல் தலிபான்கள் பெண்களை மற்ற ஆப்கானியர்களை விட ஒன்றும் மோசமாக சித்திரவதை செய்து விடவில்லை. பெண் கொடுமை என்பது தென் ஆசிய நாடுகள் எங்கும் நிறைந்திருக்கின்றது.

கனடிய இராணுவம் ஒன்றும் சமூக சேவகர்கள் அல்லவே. அவர்களுடைய சமூகப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும் முடியாத காரியம். மூளையில்லாதவர்கள் மட்டும்தான் அப்படி முடியும் என்று எண்ணுவார்கள்.

இந்தியாவில் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொளுத்தப் படுகின்றார்கள். சாதி விட்டு சாதி திருமணம் செய்பவர்கள் தூக்கிலிடப் படுகின்றார்கள். அல்லது வெட்டிக் கொல்லப்படுகின்றார்கள். இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளதாக Lancet என்ற மருத்துவ சஞ்சிகை கூறுகின்றது.

" பெண்கள் உரிமைக்காக " போராட கனடியர்கள் அடுத்து இந்தியாவிற்குத் தான் செல்ல வேண்டும். செல்வார்களா?

கொழும்பு குண்டு வெடிப்பு- ஒரு சதி

கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அவர் பகலுணவுக்காக வெளிவரும் வரை காத்திருந்து தாக்குவது என்பது பல காரணங்களுக்காக நம்பகத்தன்மை அற்றுப் போகின்றது.

1. இவ்வாறான உச்சப் பாது காப்பு வலையத்தை அண்மிக்க முதலே பல வீதித் தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் தாண்டி வர வேண்டியதிருக்கும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அதி சக்தி வாய்ந்த குண்டினைப் பொருத்திய தற்கொலைக் குண்டுதாரி இத்தனை சோதனைச் சாவடிகளையும் தாண்டி குண்டுகளுடன் வருவது என்பது ஒரு நகைச்சுவையே.

2. தற்கொலை நோக்கிற்காக வந்தவர் இராணுவத் தளபதி வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கியது என்ற கூற்று. அதி உச்சப் பாது காப்பு பிரதேசத்தில் தேவையற்று நிற்பது சந்தேகத்தை உண்டாக்கும். அதுவும் ஒரு தமிழ்ப் பெண் நிற்பது உடனடிக் கவனத்தைப் பெறும். சாதாரண சிங்களப் பொது மக்களே சந்தேகப் பட்டு காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

இந்த இரண்டு காரணங்களாலும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதல் என்பது விடுதலைப் புலிகளே மறுப்பது போல அடிபட்டுப் போகின்றது.

அப்படியென்றால் இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் பயனடையப் போவது யார்?

இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் தமிழர் தரப்பை விட சிங்களத் தரப்பில் பயனடையப் பலர் காத்திருக்கின்றார்கள்.

முதலாவது மகிந்த ராஜபக்ஸ. பேச்சு வார்த்தைகள் தொடரப் படவேண்டும் என்ற சர்வதேச நெருக்குவாரமும் அதற்கு எதிரான தோழமைக் கட்சியான ஜே.வி.பி கொடுத்துக்கொண்டிருக்கும் பயமுறுத்துதல்களும் அவரை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றது. பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் குறைந்த பட்ச அதிகாரத்தையேனும் தமிழர் தரப்புக்குக் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் அவரால் சிங்களத்தின் காவலன் என்ற பெயரைத் தக்க வைக்க முடியாத நிலமை ஏற்படும். அதனால் சூனியமாகும் அரசியல் எதிர்காலம். இதனை தவிர்த்துக் கொள்ள திட்டமிட்ட வகையில் ஆரம்பிக்கப் பட்ட திருமலை இனக்கலவரம் பிசுபிசுத்துப் போக புதிய முயற்சியாக இதனை ஆரம்பித்திருக்கலாம்.

இக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து திருமலையில் விமானக் குண்டு வீச்சு. அதிக சென்சிற்றிவ் ஆன பிரதேசமாக வேகமாக உணர்ச்சித் தீ பற்றிக் கொள்ளக் கூடிய மூவின மக்களும் செறிந்து வாழும் திருமலை தெரிவு செய்யப்பட்டமை இதை உறுதிப் படுத்துகின்றது. நான்காம் ஈழப் போரில் சிங்களம் திருமலையை தமிழர் தரப்பிடம் இழந்து விடலாம் என்ற பயம். அல்லது திருமலையில் அதிக கவனத்தை வைத்திருக்கும் அன்னிய சக்தியின் தூண்டுதல் காரணமாயிருக்கலாம்.

இரண்டாவது ஜே.வி.பி. இழந்த அரசியல் செல்வாக்கை மக்களிடம் இனவாதத் தீயைக் கக்கி மீட்டுக் கொள்ளல் . மகிந்த அரசிற்கு அதிக நெருக்கடிகளைக் கொடுத்து பேரம் பேசும் வலுவை அதிகப் படுத்தல்.நோர்வேக்கு எதிரான வெளியேற்றக் கோஷம் 7 அமைச்சுப் பதவிகள் வரை மகிந்த ராஜபக்கஸவால் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மற்றும் ஆட்சிமாற்றத்தை வேகப்படுத்த இராணுவத்தின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறும் வகையில் மகிந்தவுக்கு ஆதரவான இராணுவத் தலமையை அகற்றுதல்.

சமீப காலமாக ஜே.வி.பி இன் அங்கத்தவர்கள் இராணுவத்தில் பெருமளவில் ஊடுருவியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது -மக்கள் அரசியலால் முடியாது எனினும்- புரட்சிகர அரசியல் மாற்றத்தை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை. இரண்டு முறை தோல்வியடைந்த புரட்சியை மூன்றாவது முறையும் முயற்சிக்கப் பின் நிற்க மமட்டார்கள்.

மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத் தடையை ஊக்கப் படுத்தி இலங்கைத் தீவில் தமிழர் போராட்டத்தை நசுக்கி தமது ஆதிக்கத்தையும் நலனையும் எதிர் பார்த்திருக்கும் அன்னிய சக்தி அல்லது சக்திகள்.

நான்காவது தொடரும் போரினால் ஆயுதவிற்பனையை ஊக்கப்படுத்தி கொழுத்த பணம் சம்பாதிக்க முயலும் ருசி கண்ட ஆயுத வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்கள்.


இந்த நான்கு தரப்பின் தலையீடும் சதியும் இத்திட்டமிட்ட குண்டு வெடிப்பில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற உறுதியான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட முன்னரே விடுதலைப் புலிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டு தமிழ் மக்களின் மீது விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது. இத்தகைய விமானத் தாக்குதல் விடுதலைப் புலிகளை ஆத்திரமடைய வைத்து போரைத் துவங்குவதை சம்பந்தப்பட்ட தரப்பு எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டு போட்டுத் தாக்குவதில் காட்டிய அவசரத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் யாரும் கண்டிக்கவில்லை.

தமிழர் தரப்பைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு வலிந்த போரினையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற வலிந்த சந்தேகத்தை இது ஏற்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் பொறுமை இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.

இதனால் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைய கொழும்பைச் சுற்றியோ அல்லது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களிலோ வலிமையான இன்னுமொரு குண்டு வெடிப்பு இடம் பெறலாம். வழமை போல அதுவும் விடுதலைப் புலிகளின் தலையில் சுமத்தப் பட சர்வ தேசம் மெளனம் காத்து நிற்கும்.

ஆனால் இம் முறை மேற்கு நாடுகளில் இக்குண்டு வெடிப்பு பற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் விடுதலைப் புலிகள் என்பதை கவனமாகத் தவிர்த்து " பெண் தற்கொலை தாரி " என்றே செய்தி வெளியிட்டமை அவர்களுக்கும் இதே சந்தேகம் இருக்கின்றது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இவ்வளவு இருந்தும் சர்வதேச சமூகம் வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? இந்த சதியை அம்பலப் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர் மண்னில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கின்றது.

Sunday, April 23, 2006

சர்வதேசமே சிந்தனை செய்

வடக்கு கிழக்கு இன்று மரணங்களின் பூமியாகி விட்டது. மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களின் துயரத்துடன் ஒவ்வொரு காலையும் விடிகின்றது. அன்னிய நாட்டின் இராணுவத்தால் சூழப்பட்டவர்களின் மன நிலையுடன் மக்கள் ஒவ்வொரு பொழுதையும் நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களத்தின் வெறிபிடித்த இராணுவமும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து அராஜகம் ஆடிக்கொண்டிருக்கின்றது. தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக அமைதியிழந்து வாழ்வைத் தொலைத்த மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியத்தின் நியாயமான வாழ்தலுக்கான எத்தனிப்பைப் புரிந்து கொள்ளாத தன்மையுடன் சர்வதேசம் என்ற போர்வையில் பல நாடுகள் தங்கள் மனம் போன போக்கில் எமது நியாயாதிக்கப் போராட்டத்தை இழுத்துச் செல்கின்றனர். பிரச்சனையின் அடிப்படைத் தன்மையையே புரிந்து கொள்ளாத நுனிப்புல் மேய்தல் வழியில் அவர்கள் அறிந்து கொண்ட வகையில் அல்லது தங்கள் நலன் சார்ந்த லெளகீக வழிமுறையில் எமது எதிர்காலத்தை அவர்கள் வழி நடத்திச் செல்ல முனைவதை நாம் காணலாம்.

அண்மையில் Human Rights Watch என்ற அமெரிக்க அமைப்பு ஒன்றின் அறிக்கையில் தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய அவதூறான திரிக்கப் பட்ட செய்திகள் பரபரப்பாக பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதே போல அமெரிக்க இராஜாங்க அமைச்சகத்தின் அறிக்கைகளிலும் தமிழ் மக்களின் நியாயத்தன்மை வாய்ந்த போராட்டம் கொச்சைப் படுத்தப்படுவதும் போராட்டத்தின் தலைமை மீது அநாவசிய காட்டம் காட்டப் படுவதும் அனைவரும் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்த கனடிய அரசின் விடுதலைப் புலிகள் மீதான தடையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்வதேசத்தின் இத்தகைய கண்மூடித்தனமான போக்கும் சிங்களப் பயங்கர வாதத்தின் கோர முகத்தை பகிரங்கப் படுத்துவதில் காட்டப் படும் அக்கறை இன்மையும் இன்று சிங்களப் பேரினவாதிகளை தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்குவதில் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. அண்மையில் திருகோணமலையில் இடம் பெற்ற இன அழிப்பு பற்றி யாரும் அதிகளவு அக்கறை காட்டாத தன்மையே காணப்படுகின்றது.

இத்தனை ஒடுக்கு முறைகளையும் பகிரங்கமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகளின் மீதான தடையை எதிர்பார்த்திருப்பதாக கொக்கரித்து நிற்கின்றது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன இவ்வாறு கொக்கரித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் இன்னொரு முகமான ஐ. தே. கட்சியும் தனது ஆதரவை உடனடியாக பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மூலம் வழி மொழிந்துள்ளது.

சிங்களப் பேரினவாதத்தின் பொய்யான பரப்புரைகள் திட்டமிடப்பட்ட முறையில் வெகுசாதுரியமாக சர்வ தேசத்தின் பால் எடுத்துச் செல்லப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

நான்காம் ஈழப் போரின் தொடக்கமே அரச படைகளின் மீதான கிளைமோர்த் தாக்குதல் என்று இப்போதுள்ள அவல நிலமைக்கும் நெருக்கடிக்குமான பழியை சாதுரியமாக தமிழர் தரப்பின் மீது போடும் கைங்கர்யத்தை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்கின்றது. 51 அரச படையினர் கொல்லப் பட்டுள்ளதாகவும் அது செய்தி வெளியிடுகின்றது. வடக்கு கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட அப்பாவி மக்களின் கொலையை மூடி மறைத்து விடுகின்றது.

ஜெனிவாப் பேச்சுகளின் பின்னர் மட்டும் 60 படையினர் பலி என்று ஐ. தே. கட்சியின் ஊது குழலான பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க வாய் மலர்ந்திருக்கின்றார். மக்களை முட்டாளாக்கிய மகிந்த சிந்தனையால் மகிந்த பதவியேற்ற பின்னான 4 மாதங்களில் மட்டும் 250 மேற்பட்ட படையினர் பலி என்று மிகையான விளம்பரம் செய்துள்ளார். கொழும்பின் ஆங்கில ஊடகங்களை மட்டும் படிக்கும் சர்வ தேசத்தின் பிரதி நிதிகளை இந்தப் பொய்கள் இலகுவாக உண்மைகளாகச் சென்றடைகின்றன.

ஆனால் உண்மை நிலையோ NESHOR என்ற வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் செயலாளர் கலாநிதி என். மாலதி கூறுவதைப் போல கடந்த ஏழு வாரங்களில் மட்டும் 62 பொது மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்கு வெளியே இவ்வமைப்பில் கடமையாற்றும் அங்கத்தவர்களுக்கு விடுக்கப் படும் கொலைப் பயமுறுத்தல்கள் மூலம் உண்மை சுடுவதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஜனவரியில் இருந்து 577 பேர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் இருக்கின்றனர். இவர்களில் 60 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் வாழுகின்றனர்.

சிங்களப் பேரினவாதிகளும் சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையை தங்களின் அரசியல் இலாபத்துக்காகப் பயன் படுத்துவதை சர்வதேசம் புரிந்து கொள்வதற்கான வழி வகைகளை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். நோர்வே வெளியேற வேண்டுமென்ற ஜே. வி. பியின் கோசம் இன்று மகிந்தவின் ஜே. வி. பிக்கான ஏழு அமைச்சுப் பதவிகளின் பேரத்தில் கைவிடப் படும் நிலையில் இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் ஜெனிவாப் பேச்சுகளில் இருந்து விலகும் நிலைப் பாட்டிற்கு ஜே. வி. பியின் நோர்வே எதிர்ப்பு நிலைப்பாடும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத க்களைவிற்கான முட்டுக்கட்டையுமே காரணம் என்று ஐ. தே. கட்சி அந்தர் பல்டி அடித்து அரசியல் ஆதாயம் தேடுகின்றது.

ஜெனிவாப் பேச்சுகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட உயர் பாதுகாப்பு வலய நீக்குதலுக்கான தடையும் இயல்பு நிலையைப் பேணுவதில் அக்கறை காட்டாத அரசாங்கத்தின் மெத்தனப் போக்குமே காரணம் என்பதை சர்வதேச சமூகத்தை உணரச் செய்யும் வழிவகைகளை நாம் எடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலமையில் ஜெனிவாவில் அடுத்த கட்டப் பேச்சுகள் எதைப்பற்றியது என்பதே தற்போதுள்ள மில்லியன் டொலர்க் கேள்வி என்ற தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் ஆதங்கத்தை சர்வதேசத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். உயர் பாதுகாப்பு வலையங்களால் மனித உரிமை மீறப்படுகின்றது என்ற யாழ் அரச அதிபரின் அறிக்கையில் உள்ள கருத்துகளையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல் காரணமாக அண்மையில் ஐ.நா ஆணைய மனித உரிமைக் குழுவில் இணைந்து கொள்ள சிறிலங்கா எடுத்துக் கொண்ட முயற்சியைச் சாடி ஆசிய மனித உரிமைகள் ஆணையம் ஹொங்ஹொங்கிலுள்ள அதன் தலைமையகத்தில் இருந்து வெளியிட்ட அறிக்கையை
எம் பரப்புரைக்கு நம்பகத் தன்மை ஏற்பட நாம் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளது. ஐ. நா மனித உரிமை ஆணையம் கடந்த 2003 இல் பரிந்துரைத்த எதனையும் சிறிலங்கா இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அதே போல் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சித்திரவதைகள் தொடர்பான குழுவின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டவைகளையும் சிறிலங்கா இதுவரை நடை முறைப் படுத்தவில்லை.

சிறிலங்காவின் காவல் துறை நீதித் துறை அனைத்துமே விமர்சனத்துக்குரிய வகையில் மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. சிறி லங்காவில் காணாமல்ப் போவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகையால் இத்தகைய சிறிலங்காவை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சிறிலங்காவின் தமிழர்களுக்கெதிரான அராஜக கொடுங்கோன்மையைத் தோலுரித்துக் காட்ட பெரிதும் உதவும்.

ஜெனிவாப் பேச்சு வார்த்தைகளிற்கு பெரிதும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதக் களைவு என்பது பற்றி உண்மைக்குப் புறம்பான பரப்புரை சர்வதேசத்தின் மத்தியில் செய்யப் படுகின்றது. கிழக்குப் பிரதேசத்தில் கருணா குழுவோ வேறு எந்த ஒட்டுக் குழுவுடனோ சிறிலங்கா இராணுவத்துக்கோ சிறிலங்கா அரசாங்கத்துக்கோ எதுவித தொடர்பும் இல்லை என்று ரொய்டருக்கு செவ்வி வழங்கிய பாலித கோகன்ன கூறியிருக்கின்றார். ஆனால் அண்மையில் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான SBS தொலைக்காட்சி தனது Date Line என்ற நிகழ்வில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியில் ஒட்டுக் குழுக்களின் பிரசன்னத்தை பகிரங்கப் படுத்தியுள்ளது.

இவையெல்லாம் சிங்களப் பேரின வாதத்தின் கபட நாடகத்தை அம்பலமாக்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவத்தின் அடக்கு முறைகளை சர்வதேசத்தின் முன்னால் வெளிக்கொணரவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

சர்வதேசம் இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ளாமலும் இருப்பதற்கு எம்மக்களிடையே இருக்கின்ற போட்டி பொறாமையும் அக்கறையின்மையும் ஒரு வகையில் காரணம் என்பதை ஓய்வு பெற்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் இடித்துரைத்திருக்கின்றார். எமக்கிடையே இருக்கக் கூடிய போட்டி பொறாமைகளை இறுகக் கட்டி வைத்து விட்டு தமிழ்த் தேசியமும் அதன் இருப்பும் என்ற நிலைப்பாட்டில் உறுதியான ஒற்றுமையையும் கூட்டுச் செயல்பாட்டையும் முன்னெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் உளப்பூர்வமாக நம்பி ஏற்படக் கூடிய சகல தடைகளையும் உடைத்தெறிய உறுதி ஏற்க வேண்டும்.

Lobby என்கின்ற கருத்தியல் பூர்வமான பரப்புரையின் மூலம் எமது போராட்டத்தின் நியாயாதிக்கத்தை சர்வதேசத்தின் நாடுகளுக்கும் மக்களுக்கும் தெளிபு படுத்தி அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று ஆறரைக் கோடி அரபு மக்களின் இடையே தனித் தீவாக இருக்கும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவினதும் சர்வதேச நாடுகளினதும் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இத் தந்திரோபாய கருத்துப் பரவலாக்க உத்தியால் தான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்தப் பட்ட இவ்வகையான தடைக்கு கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்களின் கருத்துப் பரப்புரையினால் கனடிய மக்களிடம் வென்றெடுத்திருக்கக் கூடிய ஆதரவைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டமையே காரணம் என்ற பேராசிரியரின் குற்றச் சாட்டு பொருள் பொதிந்ததுவே. இனி வரும் தமிழ் தேசியத்துக்கான போராட்டம் ஈழ மண்ணிலும் புலம் பெயர் மண்ணிலும் சம நேரத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளப் பட வேண்டும்.

இன்று எமது போராட்டத்திற்கு எதிரான கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கும் சர்வதேசத்தின் கருத்துக்களை எமது போராட்டத்தின் ஆதரவு நிலைப்பாட்டின் திசையில் எடுத்து வர வேண்டிய கடமையும் திறமையும் நம்மிடையே இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடலாகாது

Thursday, April 20, 2006

பேச்சு வார்த்தை - ஒரு கபட நாடகம்

மூன்று தசாப்தங்களின் மேலாக வாழ்வதற்கான போராட்டம் என்ற ஆயுதப் போராட்டத்தினுள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவலங்களை தீர்க்கும் நோக்கிலேயே பெருமெடுப்பில் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேசசமூகம் கூறிக்கொள்கின்றது.

பேச்சு வார்த்தைகள் எதைப் பற்றியது என்பதையும் பேச்சு வார்த்தைகளால் அடையவேண்டிய இலக்குகள் எது என்பதையும் நன்கு தீர்மானித்து அதன் திசையில் நகர்வதே பேச்சு வார்த்தைகளில் இருந்து உரிய பலனைப்பெற இயலும். அவ்வாறு இல்லாது எதற்காகப் பேசுகின்றோம் என்ற இலக்கேயில்லாது பேசிக் கொண்டிருப்பதால் எதுவித பயனும் விளையப் போவதில்லை.

அத்தகைய ஒரு இலக்கற்ற பேச்சு வார்த்தை பற்றியே சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ஆரவாரமாகப் பேசிக் கொள்கின்றன.

இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் சிங்களம் என்ற இரு வேறுபட்ட கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட இரு பெரும் இனங்களுக்கிடையில் எழுந்துள்ள வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும் பற்றியதே இன்று இலங்கையில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைக்குக் காரணமாகும்.

ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முயலும் போது அடக்கப்படும் இனம் தன் உரிமைக்காகப் போராடுவது பல சந்தர்ப்பங்களில் சரித்திரத்தினூடு பதிவு செய்யப் பட்டுள்ளது. உலகின் பலதிசைகளிலும் வெடித்து நிற்கும் போராட்டங்கள் மக்களின் உரிமையும் சுதந்திரமும் வேண்டிய போராட்டங்களே.

இலங்கைத் தீவில் அடக்கும் இனமாக சிங்களமும் அடக்கப்படும் இனமாக தமிழ் தேசியமும் அதனால் போராடும் இனமுமாக நாங்கள் இருக்கின்றோம். சர்வதேச வரையறைகளுக்குள்ளேயே இவ்வாறு முரண்பட்ட பல இனங்கள் ஒன்றுக் கொன்று காத்திரமான விட்டுக்கொடுப்புகளுடன் தமக்குள் இணைந்து சம உரிமையுடன் வாழ்கின்றன.

இதை புரிந்து கொள்ளக் கூடிய சர்வதேச சமூகத்தின் அரசுகளால் இலங்கைத் தீவின் பிரச்சனையைப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது என்பதை யாரும் நம்பத் தயாராயில்லை. அடிப்படைப் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கும் அதற்கான தயாரிப்புக்கும் இலங்கை ஆட்சி வர்க்கத்தை தயார் படுத்துவதே இவர்கள் முன்னாலுள்ள முதல் கடமையாகும். இது இரு இறைமையுள்ள இனங்களுக்கிடையேயான பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முன் வராத மன நிலையுடன் ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கி விடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சிங்களப் பெரும்பான்மையுடன் எதைப் பற்றிப் பேசுவது என்பதை சர்வதேச சமூகம் தான் சொல்ல வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனையின் வரலாற்றுக் கால நகர்வில் நடாத்தப் பட்ட வட்ட மேசை மாநாடுகளும் திம்பு முதல் பாங்கொக் ஒஸ்லோ பேச்சுகளைத் தொடர்ந்து இறுதியாக ஜெனிவாவில் நடை பெற்ற பேச்சுகளில் இருந்தும் நாம் பெற்றுக் கொண்டது தான் என்ன?

அண்மையில் நடைபெற்ற திருகோண்மலை சம்பவங்களைப் பார்க்கும் போது மீண்டும் 58 ஆம் ஆண்டின் இருண்ட கற்கால மன நிலையிலேயே சிங்களச் சாதாரண மக்களும் இராணுவமும் சிங்கள அரசாங்கமும் இருப்பதையே நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இவர்களுடன் -இத்தகைய ஆதிக்க வெறியுடன் காட்டிமிராண்டி மன நிலையில் இருக்கும் இவர்களுடன் - எதனைப் பற்றிப் பேசுமாறு சர்வதேசம் தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் பகிரங்கப் படுத்த வேண்டும். ஜெனிவா பேச்சுக்களில் எட்டப்பட்ட உயர் பாதுகாப்பு வலைய அகற்றலும் ஒட்டுக் குழுக்களின் களையெடுப்பும் என்பதுவே இன்னும் நிறைவேற்றப் படாத சூழலில் அடுத்து பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்பதைக் கூற வேண்டும். . ஒரு இனம் தொடர்ந்தும் அடக்கப் படுவதும் வீதியிலும் வீட்டிலும் வைத்து கொல்லப்படுவதையும் கொழுத்தப் படுவதையும் வாளாவிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் எதைப் பற்றிப் பேச வேண்டி வலியுறுத்துகின்றது என்பதை தெளிபு படுத்த வேண்டும்.

சர்வதேச சமூகம் என்ற கோதாவில் களம் இறங்கியுள்ள அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜப்பானும் தங்களுக்கான அரசியல் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சாதகமான சூழலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கொண்டு வர கொண்டையை அள்ளி முடிந்து கொள்ளும் அவசரத்தில் காரியங்களை நகர்த்த முற்படுகின்றன.

அபரிமிதமான வேகத்தில் முன்னேறி வரும் சீனாவின் பொருளாதார இராணுவ வல்லமை இந்நாடுகளின் உலக வல்லாதிக்கக் கனவுகளை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வேரறுத்து விடக் கூடும் என்ற அச்சத்தின் உந்துதலினாலேயே அவசரக் கோலத்தில் இப் பிராந்திய நிலமைகளை சீர் செய்து தமது கால்களை ஆழப்பதிக்கும் நோக்கில் செயல் படுகின்றன. எதிர் காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டிக்கான களத்தில் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகம் பாரிய பங்களிப்பைச் செய்யக் கூடும் என்பதே சர்வதேசம் என்ற போர்வையில் இவர்கள் எம் சுதந்திரப்போரில் மூக்கை நுழைக்கப் பெரிதும் காரணமாக இருக்கின்றது.

எண்ணை வலய நாடுகளில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் இராட்சத எண்ணெய்க் கம்பனிகளின் ஆதிக்கத்தையும் எண்ணெய் விற்பனையில் அமெரிக்க டொலரின் பிடியையும் முடிவுக்குக் கொண்டு வரவும் டொலருக்குப் பதிலாக யூறோவை மாற்றீடாகக் கொண்டுவரவும் ஈராக்கும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளும் எடுத்த முயற்சியை நசுக்குவதையே நோக்கமாகக் கொண்டு ஈராக் மீது படை எடுத்தன. ஆனால் சொல்லப் பட்ட காரணங்களோ வேறு. அவை அத்தனையும் பொய் என்பது ஈராக் கைப்பற்றப் பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

அத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான மத்திய , கிழக்கு ஆசியாவிற்கான எரி பொருள் தன்னிறைவுக் கட்டமைப்பு என்ற ஈரானின் பாகிஸ்தானுக்கூடான இந்தியாவிற்கான நிலத்தடி எரிவாயுக் குளாய்த் திட்டத்தையும் முறியடிக்கும் வகையில் அவசர அவசரமாக இந்தியாவுடன் அனல் மின்நிலையத்திற்கான உதவி என்ற பெயரில் இந்தியாவையும் தனது வலையில் அமெரிக்கா வீழ்த்திவிட்டுள்ளது. எதிர்கால சர்வவல்லமை வாய்ந்த சீனாவினால் வரக்கூடிய ஆக்கிரமிப்பு என்ற பயத்தை பூதாகாரப் படுத்தி அமெரிக்கா இதைச் சாதித்துள்ளது. எதிர்காலப் பேயைப் பார்த்து இன்றைய பூதத்திடம் இந்தியா வகையாகச் சிக்கிக் கொண்டுள்ளது.

இவையெல்லாம் எமக்குக் கற்றுத் தருவது என்னவென்றால் சர்வதேசத்தின் ( என்று கூறிக் கொள்ளும் வல்லாதிக்க நாடுகளின் ) நலன் கருதிய திசையிலேயே உலகின் போக்கு ஒழுங்கு படுத்தப் படும் என்பதே தவிர ஒரு நீதியான போராட்டம் பற்றிய உண்மையான அக்கறை எதுவும் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது என்பதே.

பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி நசுக்கப் படுவதும் வேண்டாத காரணங்கள் தேடிக்கொண்டு வரப்பட்டு போராட்டத்தின் நோக்கத்தையும் மலினப் படுத்த பல சக்திகள் தீவிரமாகச் செயல் படுகின்றன. விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது சர்வதேசத்தின் இவ்வகையான ஒரு முனைப்பேயாகும்.

உலகெல்லாம் ஜனநாயகம் பற்றி பாடம் நடாத்தும் இவர்கள் தமிழ் மக்களால் கடந்த கால பொதுத் தேர்தல்களிலும் உள்ளூராச்சிச் சபைகளின் தேர்தல் முடிவிலும் எடுத்துரைத்த ஜனநாயக விழுமியங்களை கண்ணெடுத்தும் பாராது சுலபமாக தட்டிக் கழித்து விடுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பாலஸ்தீன ஹமாஸின் அரசாங்கத்தையும் ஏற்றுக் கொள்வது மறுதலிக்கப் பட்டதும் உதவிகள் திரும்பப் பெறப் பட்டதும் இதையே காட்டுகின்றது.

இவர்களின் நலன் சார்ந்த உலகின் போக்கில் ஒழுங்குபட முரண்படும் சக்திகளையும் நியாயங்களையும் இவ்வாறு வேரறுக்க முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் படும். ஆனால் உண்மையான நீதியான சுதந்திரப் போராட்டங்கள் தம் இலக்கினைச் சென்றடைவதை எவையும் தடுத்து விடமுடியாது என்பதற்கு வியற்நாம் போன்ற வீரம் செறிந்த வரலாறுகள் இன்றும் எமக்கு முன்னுதாரணங்களாகும்.

Thursday, April 06, 2006

ஈராக் யுத்தம் -கற்றுக்கொண்டதும் பெற்றுக் கொண்டதும்.

மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஈராக் மக்கள் சதாம் குசைனிடம் இருந்து விடுதலை பெற்று அல்லது அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புக்கு உள்பட்டு உயிர்களையும் குருதியையும் வீதிகளில் ஓடவிட்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி புஷ்ஷின் வார்த்தைகளில் கூறப்போனால் ''மிஷன் நிறைவு பெற்று விட்டது" (mission accomplished). தன் நாட்டு மக்களுக்கு புஷ் இவ்வாறு தான் அறிவித்திருந்தார். ஈராக் போரில் தாம் வெற்றி பெற்று விட்டதாக தனது மக்களுக்கு கூசாது பொய் கூறியிருந்தார்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காகவே அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்திருந்தது.

1) இராக்கின் பரந்து பட்ட எண்ணெய் வளங்களை கொள்ளை அடிப்பதும் மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தளமாக ஈராக்கை மாற்றுவதும்.

2) இஸ்ரேலின் இரண்டு பிரதான எதிரிகளில் ஒன்றை அழிப்பதும் (ஈரான் இரண்டாவது எதிரியாகும்)


மூன்று வருடங்களின் முடிவில் முதலாவது இலக்கு இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது இலக்கு நிறைவேற்றப் பட்டுவிட்டது. ஒரு காலத்தில் அரபு உலகின் மிக முன்னேற்றம் கண்ட நாடாகவிருந்த இராக் இன்று அழிக்கப்பட்டு விட்டது. துண்டுகளாக உடைந்து விட்டது. அல்லது உடையக் கூடிய அபாயமுள்ள உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவம் தங்கள் நிலைகளையும் பெறுமதிமிக்க எண்ணெய் விநியோகக் குளாய்களையும் காத்துக் கொள்வதிலேயே பல சிரமங்களை அடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட "ஒபரேஷன் ஸ்வார்மர்" (operation swarmer) போன்ற வியற்நாமிய யுத்த வடிவத்தையொத்த பிரயோசனமற்ற தேடி அழிப்பு முயற்சி தோல்வியின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியதுடன் உயர் இரானுவ அதிகாரிகளின் கெரில்லா யுத்தத்தை முறியடிப்பதற்கான பாடங்களை கற்றுக் கொள்ள முடியா இயலாமையையும் முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டத் தொடங்கி விட்டது.

மூன்று வருட யுத்தம் முடிவில் 2300 அமெரிக்க இராணுவத்தின் இழப்பையும் 16300 இராணுவத்தினரை காயப்படுத்தி யுத்தகளத்திலிருந்து அகற்றியும் 30,000 இராக்கிய பொது மக்களின் உயிரிழப்பையும் தந்துள்ளது. அத்துடன் 15000 இலிருந்து 18000 ஆயிரம் யுத்தக் கைதிகளையும் அமெரிக்காவின் பிடியில் வைத்திருக்கின்றது. இது சதாம் குசேயின் வைத்திருந்த யுத்த அல்லது அரசியல் கைதிகளின் எண்ணிக்கையையும் விட அதிகமாகும்.

இராக்கிலும் ஆப்ககனிஸ்தானிலுமான இந்த அர்த்தமற்ற யுத்தம் 9.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை (அமெரிக்கா கூறுவதைப்போல்) ஒவ்வொரு மாதமும் விலையாகக் கொள்கின்றது. அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் இயங்குவதற்காக அமெரிக்க திறைசேரி இப்பணத்தை ஜப்பானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கடனாகப் பெற்றுக் கொள்கின்றது. இந்தத் தொகை அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அமைப்பான CIA , சுதேசி இன குழுக்களின் தலவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பைப் பெறவும் கூலிக் குழுக்களை ஒப்பந்தக் காரர்கள் என்ற அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும் வழங்கப் படும் இலஞ்சம் கூலி என்பவற்றிற்கான பல மில்லியன் டொலர்களை உள்ளடக்காது என்பது குறிப்பிடத்தக்கத்து.

ஈராக்கின் எண்ணை வளங்களை கையகப் படுத்தும் சுவாரஷ்யமான இந்த யுத்தம் இதுவரை 500 பில்லியன் டொலர்களை விழுங்கியுள்ளது. இது வியற்நாம் யுத்தம் விழுங்கிக் கொண்ட மொத்தத் தொகையிலும் மேலதிகமாக 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (2006 ஆம் ஆண்டு நாணயப் பெறுமதியில்) அதிகமாகும்.

அமெரிக்காவின் ஈராக் மீதான இந்த யுத்தம் ஈரானையும் இஸ்ரவேலையும் பெருமளவில் பயனடைய வைத்திருக்கின்றது. ஈராக் மீதான ஈரானின் ஆதிக்கம் நாளும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. மிகவும் ஆச்சரியமானதும் குறிப்பிடத் தக்கதுமான விடயம் என்னவென்றால் சாத்தானின் அச்சு என்று அமெரிக்காவால் வர்ணிக்கப் பட்ட ஈரானுடன் ஈராக் தொடர்பான (எல்லை மற்றும் ஆயுதக் குழுக்களுக்கான உதவிகளை தடை செய்தல் போன்ற) பொது உடன்பாடுகளை அடைவதற்கான பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான இக்கட்டுக்குள் வாஷிங்டனைத் தள்ளியுள்ளது. மறு வார்த்தையில் சொல்லப் போனால் அமெரிக்காவின் ஈரானின் மீதான ஆக்கிரமிப்பு எண்ணத்தை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது.

1980 களில் ஈரானை ஆக்கிரமிக்கும் ஈராக்கின் 8 வருட நீண்ட யுத்தத்திற்கு நிதுயுதவி அளித்து பின்னின்ற அமெரிக்கா இன்று ஈரான் மெது மெதுவாக ஈராக்கின் பெரும்பகுதியினை தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வருவதை தடுக்கவியலாது பார்த்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஈரானைப் பின் தளமாகக் கொண்டியங்கும் ஸியா முஸ்லிம் கட்சிகளின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.

ஈராக் போரின் விளைவால் பயனடைந்த இரண்டாவது சக்தியாக இஸ்ரேல் இருக்கின்றது. இஸ்ரேலின் நீண்ட கால இலக்கான ஸ்திரமற்ற பலமற்ற அரபுலகத்தை அப்பிராந்தியத்தில் பேணும் நோக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஈராக் மூன்று பகுதிகளாக உடையும் வாய்ப்பு (வடக்கில் குர்டிஷ், மத்தியில் சன்னி, தெற்கில் ஸியா பகுதிகள்) ஏற்கனவே சிரியாவை ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் நிலமைக்குக் கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்தில் ஈராக்கினால் ஏற்பட்டிருக்கக் கூடிய இஸ்ரேலின் அணு ஆயுத ஏகாதிபத்தியத்துக்கான போட்டி நசிக்கப் பட்டுள்ளது.

அதே நேரம் பலஸ்தீனியர்களால் உருவாக்கப் படக்கூடிய இஸ்ரேலுக்கான பாதுகாப்பு நெருக்கடிகளைக் குறைத்துள்ளதுடன் எண்ணெய் வளம் மிக்க ஒரு பகுதியாக அரைவாசி சுய ஆதிக்கம் பெற்றுள்ள வட ஈராக்கிலுள்ள குர்டிஷ் பிரதேசத்திலும் இஸ்ரேலின் செல்வாக்கை அதிகரித்துள்ளது.

மூன்றாவது பயனடைந்தவர் என்று யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது அமெரிக்காவின் ஜன்ம எதிரியான ஒஸாமா பின் லாடனே தான். ஓஸாமா பின் லாடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து சிறு சிறு தாக்குதல்களை அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொண்டு அடைவதற்கு முயற்சி செய்து வந்த இஸ்லாமிய உலகின் மீதான அமெரிக்காவின் செல்வாக்கை உடைப்பது என்பதையும் அமெரிக்காவின் பொருளாதார வளங்களை அழிப்பது என்பதையும் ஒட்டு மொத்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை மாதாந்தம் விழுங்கும் ஆப்கானிஸ்தான் ஈராக் யுத்தங்கள் ஒஸாமாவின் எண்னத்தை ஈடேற்றும் வகையிலேயே அமைந்துள்ளன.

இன்று ஈராக் புஷ்ஷின் அரசு பயப்படுவதைப் போலவே உலகெங்கும் உள்ள அமெரிக்க எதிர்ப்பு ஜிகாதிஸ்திகளை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைப்பாளர் , கவருனர், ஆயுத வழங்குனர் என்ற பல்வேறு பட்ட அவதாரங்களை எடுத்துள்ளது.

மிக மோசமான விளைவு என்னவென்றால் அமெரிக்கா தனது பெரு மதிப்பினை இச்சிறிய நவீன காலனித்துவ கொடூர யுத்தத்தை முன்னெடுத்ததன் மூலம் இழந்துள்ளது.

அமெரிக்காவின் நவீன பழமைவாதி களின், உலகின் ஒரே ஏகாதிபத்திய வல்லரசுக் கனவுகளும் புஷ்- செனேயின் அடாவடி அரசியல் நடைமுறைகளும் ஈராக்கின் புதை மணலில் அமிழ்ந்து கொண்டிருக்கின்றன.