Sunday, May 28, 2006

அமெரிக்காவின் ஏகாதிபத்யக் கனவும் ஈழப் போராட்டமும்

இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது.

தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது.

சர்வதேச நாடுகள் என்ற கோதாவில் ஈழப்பிரச்சனையில் தலையிடும் நாடுகளின் தலமைப் பொறுப்பை வலிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா தன் ஏக ஏகாதிபத்தியக் கனவுகளை வலிந்து திணித்து பிராந்தியங்களின் அரசியல் பலத்தினைத் தீர்மானிக்கும் முனைப்புடன் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது.

பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற அமெரிக்காவிற்கு அட்சயபாத்திரமாக அனைத்து அனுகூலங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும் வரை இந்த அவலம் தொடரத் தான் போகின்றது.

இன்று அமெரிக்காவின் அதிரடி ஆட்டங்களுக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச நாடுகள் வரலாற்றில் தலை குனிந்து நிற்கப் போகின்ற காலம் ஒன்று வரத்தான் போகின்றது.

ஈழப்போராட்டத்தின் தலைமைச் சக்திகளான விடுதலைப் புலிகளைத் தடை செய்த அமெரிக்கா தன் நட்பு நாடுகளையும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளைக் கொண்டு வர நிர்ப்பந்தித்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது. அந்த வரிசையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தன் நட்பு நாடுகளான பிரித்தானியா, ஒஸ்ரியா போன்ற நாடுகளின் மூலம் தன் எண்ணத்தை ஈடேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியப் போகின்ற ஐரோப்பிய ஒன்றியம் என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அக்கொள்கையில் இருந்து விலகி அமெரிக்காவின் எடுபிடியாகவே செயற்படப் போகின்றது. தன்னிடம் இருந்து கைநழுவிப் போன உலகின் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் முதன்மைச் சக்தி என்னும் நிலையை மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து மீட்டெடுக்கும் ஐரோப்பாவின் கனவு ஈடேறாமலேயே போகப் போகின்றது. அமெரிக்காவின் அபிலாஷைகளுக்கு எவ்வளவு தூரம் ஐரோப்பிய ஒன்றியம் பலியாகியுள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'' இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். அரசியல் பன்மைத்துவமும் மாற்று ஜனநாயகக் குரல்களையும் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அனைத்து இன மக்களின் நலன்களும் பாது காக்கப் படும்."

"ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகலால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டாய அறவிடலை ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்களால் இயன்றளவிற்கு தடை செய்ய வேண்டும் "

"கடல் சார் நடவடிக்கைகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாரிய அளவில் மீறியுள்ளனர். குறிப்பாக மே 11 ஆம் திகதி கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். கண்காணிப்புக் குழுவினரும் பேராபத்திற்குள்ளாகியுள்ளனர்"

இவ்வகையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கும் எதிரானதும் 30 ஆண்டுகால இனவிடுதலைப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பல சரத்துகள் அமெரிக்காவின் தூண்டுதலில் அவ்வறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் இராணுவ தளப்பிரதேசமாக இலங்கையைக் கொண்டு வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அமெரிக்கா வெகுவாக முன்னேறியிருக்கின்றது. இதுவரை அமெரிக்காவிற்குப் பிடி கொடாமல் நழுவி வந்த இந்தியா, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான "அணு ஆயுத பரிமாற்றுத் திட்டத்தின் மூலம்" வகையாகச் சிக்கிக்கொண்டுள்ளது.

அது எவ்வளவு தூரம் என்றால் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நடவடிக்கைகளைக் கவனித்தே காய் நகர்த்தி வந்த அமெரிக்கா இன்று இந்தியாவையும் தனது நடவடிக்கைகளுக்கு துணை போக வலியுறுத்தும் நிலை வரை வந்துள்ளது. அண்மையில் "இலங்கைப் பிரச்சனையில் எத்தகைய பங்காற்றுவது என்பதை முடிவெடுப்பது முழுக்க முழுக்க இந்தியாவைப் பொறுத்தது. இந்தியா சர்வதேச சமூகத்துடன் எந்தளவு இணைந்து செயற்படப் போகின்றது என்று இறுதியும் உறுதியுமான முடிவை இந்தியா தான் எடுக்க வேண்டும் " என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் அரச பிரதிச் செயலர் ரிச்சேட் பெளச்சர் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதிலிருந்து அமெரிக்கா இந்தியாவிற்கு அளிக்கும் செய்தி முடிவானதும் இறுக்கமானதுமாகும். அமெரிக்காவின் அபிலாஷைகளுக்கு எதிராக இந்தியா எடுக்கக் கூடிய முடிவுகளை அமெரிக்கா சகித்துக் கொண்டிராது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இதையும் மீறி இந்தியா ஏதாவது செய்ய முற்பட்டால் சர்வதேச பயங்கர வாதத்திற்கு எதிரான அணியில் இருந்து இந்தியாவை விலக்கி வைப்பதுடன் இந்தியாவின் அணு ஆயுத ஆராய்சிகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போடுவதுடன் பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்ட காஸ்மீரத் தீவிர வாதத்தைத் தூண்டி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா பின்னிற்காது. இந்தியாவின் கையறு நிலையைப் புரிந்து கொண்டே இந்திய மார்க்சிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்சனையில் ஆர்வம் காட்ட வெளிக்கிட்டிருப்பது அமெரிக்காவின் இலங்கைப் பிரசன்னத்தை எவ்வகையிலாக தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்ற ஆசையினாலேயே.

"ஐக்கிய இலங்கை என்னும் கட்டமைப்புக்குள் கூட்டாட்சி முறையில் உரிய அதிகாரப் பகிர்வின் மூலம் அமைதி வழித் தீர்வு காண வேண்டும் " என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஸ் கரத் கூரியுள்ளார்.

மார்க்சிஸ்டுகள் புரிந்து கொண்ட அளவு கூட இலங்கை இனப்பிரச்சனையையும் அமெரிக்காவின் அக்கறையின் தாற்பரியத்தையும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. அமெரிக்காவின் இலங்கையிலாலான தலையீடு பற்றி இவர்கள் இதுவரை வாயையே திறக்கவில்லை. இலங்கைப் பிரச்சனை இன்னும் இந்தியாவின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றது என்ற மனப்பான்மையில் இவர்கள் இருப்பார்களாயின் இந்திய மக்களின் முன்னால் தலை குனிய வேண்டிய காலம் ஒன்றிருக்கின்றது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் மீதும் அபரிமிதமான நெருக்கடிகளை ஏற்படுத்தி தனது எண்ணத்தை ஈடேற்ற அமெரிக்கா முயலும். அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் அதனையே சுட்டிக் காட்டுகின்றது.

அதேவேளை சிங்கள அரசாங்கத்தின் மீதும் தனது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது. சிங்களத் தலைமைகளிடயே முரண்பாடுகளைத் தூண்டி விட்டு குறைந்த பட்ச தீர்வினைக் கூட இனப்பிரச்சனை தொடர்பாக எடுக்க முடியா கையறு நிலையில் சிங்களத் தலைமை இருப்பதைக் காரணம் காட்டி அமெரிக்கா தன் பிரசன்னத்தை ஞாயப் படுத்தப் போகின்றது. இதைப் புரிந்து கொள்ளா சுயநல அரசியல் மனப்பான்மையில் சிங்கள அரசியல் கட்சிகள் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் அமைதிப் படையின் வருகையை தவிர்க்க முடியாது என்னும் வகையில் ஐ.தே.கட்சியின் ராஜித சேனரத்ன கருத்துக் கூறியிருக்கின்றார். அமெரிக்காவின் நெருக்கத்திற்குரிய ஐ.தே.கட்சியின் ஆரூடம் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான அறிக்கையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐ.நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படக் கூடிய இலங்கைக்குப் படை அனுப்புவதற்கான தீர்மானத்தை மீறி இலங்கை அரசாலும் எதனையும் செய்ய முடியாது என்பதை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும். ஐ.நா வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடு ஒன்றின் இறைமையைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைதிப் படை உதவி புரியும் என்ற சரத்தின் கீழ் அங்கத்துவ நாடான இலங்கையும் கட்டுப்படும். "இலங்கையின் இறைமைக்கான ஆபத்து'' என்னும் வகையில் அமெரிக்கா கொண்டு வரப் போகும் தீர்மானத்திற்கு அமெரிக்காவின் அடிப்பொடி நாடுகளான சர்வதேசம் நிச்சயம் ஆதரவளிக்கும்.

" இலங்கையில் முழு அளவிலான யுத்தம் ஒன்று ஏற்படாத வரையில் ஐ.நாடுகள் படையின் தேவை இலங்கையில் அவசியமல்ல" என்று அவுஸ்திரேய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கூறியுள்ளார். ஆகவே இலங்கையில் முழு அளவிலான யுத்தம் ஒன்று ஏற்படும் போது ஐ.நா அமைதிபடையின் பிரசன்னம் இலங்கையில் இருக்கும் என்பதை அவர் நிச்சயப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானின் கருத்து நிச்சயமாக அமெரிக்காவின் முடிவினையே பகிரங்கப் படுத்துகின்றது.

இதே வேளை தமது சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் ஈழ மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப் போகின்றது. ஏற்கனவே இந்திய அமைதி காக்கும் படைகளினை வரவேற்று தங்களின் விரல்களைச் சுட்டுக் கொண்ட அனுபவம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

அதே நேரம் வலிந்து திணிக்கப்படப் போகின்ற ஐ.நா வின் அமைதிகாக்கும் படைகள் என்ற போர்வையில் வருகின்ற அமெரிக்காவின் அத்து மீறலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்.

உண்மையான ஜனநாயகச் சக்திகளினதும் நியாயமான ஒரு இனத்தின் போராட்டத்திற்கும் ஆதரவான சர்வதேசச் சக்திகளையும் வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகின்றார்கள் என்பதிலேயே இதற்கான விடை அடங்கியிருக்கின்றது.

Sunday, May 21, 2006

யாரைக் குறி வைக்கின்றார்கள்?

அமெரிக்கா பிரிட்டன் கனடாவைத் தொடர்ந்து இப்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப் போகின்றது என்று ஒரு கதை அடிபடுகின்றது. தடை செய்யுமா? இல்லையா? என்று பலத்த வாதப்பிரதிவாதங்களும் கருத்தெடுப்புகளும் கூட நடை பெறுகின்றது. தடை செய்யும் செய்யாது என்பதற்கு அப்பால் ஏன் தடைசெய்கின்றன என்பதற்கான காரணங்களையும் அப்படித் தடைசெய்வதனால் ஏதாவது பலனை இந்நாடுகள் பெறுகின்றனவா? என்பதையும் நாம் ஆராய்வோமானால் பல சுவாரஸ்யமான விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இலங்கையில் தன் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்காக தமிழ் மக்கள் நடாத்திவரும் போராட்டமாகும். விடுதலைப் புலிகள் என்பது அம் மக்களில் பலர் போராட்டமே வாழ்வாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கமாகும்.

தமிழ் மக்கள் வேறு விடுதலைப் புலிகள் வேறு என்று பிதற்றிக் கொண்டு திரிவதெல்லாம் வெறும் மாயைதான். விடுதலைப் புலிகள் என்றல்லாமல் வேறு எந்தப் பெயரிலென்றாலும் மக்களுக்காக மக்களின் சார்பில் தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் எந்த ஒரு இயக்கமும் தமிழ் மக்களும் வேறு வேறல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் வேறு போராடும் இயக்கம் வேறு என்பது தமிழீழப் போராட்டத்தை பலவீனப் படுத்த எதிரியானவன் பாவிக்கும் ஒரு உளவியல் தந்திரம் என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.

இது மக்களுக்கான போராட்டம் என்பதுவும் மக்களே முன்னின்று நடாத்துகின்றார்கள் என்பதையும் இந்நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் சிறிலங்காவின் தவறான பரப்புரையினால் எடுக்கப்படும் தவறுகளில் இருந்து இந்நாடுகள் தங்களைக்காத்துக் கொள்ளக் கூடும். இதை நாம் கூறிக்கொள்வது சிறிலங்காவின் பரப்புரைகளினாலேயே சர்வதேசம் இவ்வாறான முடிவுகளை எடுக்கின்றது என்ற தவறான என்ணங்களுடன் சிந்திக்கும் மக்களுக்காக.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தான் இங்கு சுவாரஸ்யமானது. உலகை இன்று ஆண்டு கொண்டிருப்பது அமெரிக்காவோ இல்லை பிரித்தானியாவோ இல்லை ஜப்பானோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகை இன்று ஆண்டு கொண்டிருப்பது உலகெங்கும் பரந்து வாழும் சில நூறு கோடீஸ்வரர்கள் மட்டுமே. ஆம் அந்த ஒரு சில பணமுதலைகளின் சித்தாந்தங்களின் படியே இத்தனை கோடி மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதிகள் முதல் இராணுவத்தின் கடைக்கோடி சிப்பாய் வரை இவர்களின் நலனுக்காக தமது வாழ்வையும் கடைசி சொட்டுக் குருதியையும் அர்பணித்துப் போராடுகின்றார்கள்.
மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள்.

இன்று உலகினையே குளோபலிஸம் என்ற அதிஉச்ச நுகர்வோர் பொருளாதாரத்தில் கட்டிப் போட ஆவல் கொண்டு இப்பண முதலைகள் எடுக்கும் நடவடிக்கைகளே இன்று உலகெங்கும் ஓடும் இரத்த ஆறுகளுக்கும் கொல்லப்படும் உயிர்களுக்கும் அழிவுகளுக்கும் மூல காரணங்களாகும்.

நாடுகள் சிறு சிறு துண்டுகளாகச் சிதறிப் போவதையோ நுகர்வோர் மனப்பான்மையிலிருந்து மாற்றம் பெற்று உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மூன்றாம் உலக நாடுகள் வருவதையோ இவர்கள் அனுமதிப்பதில்லை. இது அவர்களின் குளோபலிஸம் எனப்படும் உலக ரீதியான நுகர்வோர் சந்தைக்கு பெரும் ஆபத்தாக முடிந்து விடும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள், உலக வங்கி, அரசு சாரா தொண்டர் அமைப்புகள் என்ற போர்வையில் வளர் முக நாடுகளுக்குள் ஊடுருவி வளர்ந்து வரும் சுதேசியப் பொருளாதாரத்தை சீரழிப்பதுவும் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற மஜாஜாலங்களில் மக்களை ஈடுபடுத்தி மக்களின் சிந்திக்கும் திறனையும் உழைக்கும் நேரத்தையும் வீணடிப்பதும் சினிமா ,மதம், இனம் , நான் பெரிது நீ பெரிது என்ற சில்லறை விடயங்களில் மக்களை அலைக்கழித்து மக்கள் சக்தியை ஒருங்கிணைய விடாது மிகக் கவனமாகக் கையாண்டு தங்கள் நலன்களுக்கு கெடுதல் இல்லாத போக்கில் பூமியின் சுழற்சியைத் தீர்மானிப்பதும் இவர்களே.

தங்களின் இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட இவர்கள் மக்களின் நீண்ட கால,குறுகிய கால நன்மைகள் என்ற எவற்றிலுமே அக்கறை காட்டுவதேயில்லை.

பூமியில் பெரும் ஆபத்தாய் முடியக் கூடிய ஓசோன் மண்டலங்களின் சிதைவு பற்றியோ கிறீன் ஹவுஸ் எபக்ட்டினால் வெப்பமடைந்து வரும் சூழல் பற்றியோ இவர்கள் எந்த அக்கறையும் கொள்வதில்லை.

இப்பண முதலைகளுக்கு தலைமை தாங்கி நிற்கும் அமெரிக்காவின் செல்வந்தர்களின் நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இதுவரை சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தன்னை ஈடுபடுத்தி கையொப்பம் போட்டுக்கொள்ளவில்லை என்பதே இவர்களின் அக்கறை எவ்வகையானது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

வல்லரசு என்ற மாயைக்குள் மக்களைத்திணித்து பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் உலகின் ஓரங்களில் இருந்து வரக்கூடிய குளோபலிஸம் என்ற சித்தாந்தத்திற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் களைவதில் இவர்கள் மும்முரமாக ஈடுபடுகின்றார்கள். தங்கள் நலனுக்கு எதிரானவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொருளாதாரத் தடைகள் முதல் படையெடுப்புவரை நடாத்தி தடைகளை அகற்ற முற்படுகின்றார்கள்.

வீடியோ கேம்ஸ்களிலிருந்து டாவின்சி கோட் போன்ற பரபரப்பான விடயங்கள் வரை மக்காளை மூழ்கடித்து சிந்திக்கவிடாது கவனத்தை சிதறடிக்கின்றார்கள்.

இக்கட்டுகளில் இருந்து மக்களைக்காத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப் பட்ட சோஸ்லிஸப் பொருளாதாரக் கொள்கையையும் முனைப்புடன் குறிவைத்து சிதைப்பதில் வெற்றி கண்டு விட்டார்கள். அதையும் விட சிறப்பான ஒரு சித்தாந்தம் வரும் வரை உலகம் இப்பண முதலைகளின் நலனின் போக்கிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டே நாம் எம் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் வழிவகைகளையும் ஏற்படக் கூடிய தடைகளைக் களைவது என்பது பற்றியும் சிந்திப்பது சரியானதாக இருக்கும்.

இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் பலர் பலவித சித்தாந்தக் குழப்பத்தில் மூழ்கி போராட்டம் முன்னெடுக்கப் படும் விதம் சரியானதா? கோட்பாடு என்ன சொல்கின்றது என்ற குழப்பத்தில் இருந்து தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். நுகர்வோர் கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்ற மக்களை இவற்றில் இருந்து மீட்டெடுத்து வருகின்ற பிரமைகளை நாம் மறந்து விடத்தான் வேண்டும்.

கார்ல் மாக்ஸ்ஸும் லெனினும் இப்போது பிறந்து மறுபடியும் சோசலிஸப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்பது இன்றைய காலகட்டத்தில் சந்தேகத்திற்குரியதே. இதைப் புரிந்து கொண்டே சீனா தனது பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரக் கட்டமைப்புக்குள் உட்படுத்திக் கொண்டமையினாலேயே அது இன்று தன்னைக்காத்துக்கொள்ளக் கூடியதாகவும் வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.

இப்போது சர்வதேச சமூகம் என்பது எது என்பதையும் அவை எடுக்கக் கூடிய முடிவுகள் எவ்வாறு இருக்கக் கூடும் என்பதையும் நாம் புரிந்து கொள்வதில் எந்தத் தடைகளும் நமக்கு இருக்க முடியாது. உலகப் பொருளாதார ஒழுக்கினையும் அதன் நலன்களையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் இவற்றின் போக்கு எவ்வாறு இருக்கக் கூடும் என்பதையும் ஊகித்துக் கொள்வதில் ஒன்றும் சிக்கல் கொள்ளத் தேவையில்லை.

ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரப் படப்போகும் தடை என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டியதே. உலகை ஆளுகின்ற பணமுதலைகளின் நலன் நுகர்வோர் கலாச்சாரத்தைக் கொண்ட அடிமை நாடுகளையே ஊக்குவிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளும் போது இனங்களின் எழுச்சி என்பதும் நாடுகளின் பிரிவுகள் என்பதையும் இவர்களினால் எள்ளளவும் சகித்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்வோம். அதே நேரம் தமிழீழப்போராட்டத்திற்கான உளவியல் ரீதியான ஆதரவும் பொருளாதார ரீதியான ஆதரவும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மூலமே சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றது என்பதையும் இவர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளுக்கான ஆதரவிற்குத் தடை என்பது தமிழ்த் தேசியத்தின் போராட்டத்தில் பாதிப்பினைக் கொண்டுவரும் என்பதையும் அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அமெரிக்கா பிரித்தானியா கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் தடையக் கொண்டுவரத் துடிக்கும் நேரத்தில் மற்றொரு நாடான ஜப்பானில் தடை கொண்டு வரப்பட மாட்டாது என்றும் ஒரு பிரச்சாரம் கொண்டு வரப் படுகின்றது. ஜப்பானில் தமிழ்மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்து வாழவில்லை என்பதுவும் இவ்வாறான தடைகளினால் ஜப்பானினால் தமிழீழப் போரரட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் கோண்டுவர முடியாது என்பதையும் ஜப்பானியர்கள் நன்கு அறிவார்கள்.

ஆகவே விடுதலைப் புலிகளுக்கான தடை என்பது ஆங்காங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பிலிருந்து தடை செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டது என்பதை நாம் அனைவரும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றோம் என்பதை சர்வதேச நாடுகளுக்குப் புரிய வைக்கவேண்டிய கடப்பாடும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான பங்களிப்பில் எம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் இருக்கின்றார்கள்.

இங்கு நாம் உழைக்கும் பணம் என்பது எமது வியர்வைக்கும் நாம் சிந்தும் குருதிக்கும் விலையாகக் கிடைப்பது. இந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு வரி செலுத்தப் படுவது. அப்பணத்தை நாம் எவ்வாறு செலவழிப்பது என்பதில் எமக்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. அதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இலங்கை நாட்டில் நடப்பது என்பதையும் சர்வதேச நாடுகளின் சட்டம் ஒழுங்கு எவற்றுக்குமே தீங்கோ இடையூறோ செய்யாதது என்பதையும் நாம் இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சர்வதேச நாடுகள் தங்கள் நலனை முன்னிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் சிங்களப் பேரின வாதத்தின் அடக்கு முறைகளுக்கு ஓரளவில் அனுகூலமாய் இருக்கின்றது என்பதை ஒத்துக் கொண்டாலும் தங்களுடைய வேண்டுதலினாலேயே சர்வதேசம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கின்றன என்று மார் தட்டிக் கொண்டிருக்கும் சிங்கத்துக்குப் பிறந்த சிங்களக் குட்டிகளுக்காக நாம் அனுதாபப் படுவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்.

Thursday, May 18, 2006

சிறுவர் வாழ்வும் சர்வதேசத்தின் அலட்சியமும்

போர்க்காலச்

சூழ் நிலையில் அதிகளவில் பாதிக்கப் படுவது சிறுவர்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. போர்க்காலம் இல்லாத சூழ் நிலைகளிலும் அதிகம் பாதிக்கப் படுவதும் அவர்களே என்பது யாராலும் மறுக்கமுடியா உண்மையாகும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமையும் திறனும் அற்ற அவர்களை மற்றவர்கள் இலகுவில் ஆக்கிரமிக்கவும் சீரழிக்கவும் கூடிய வலிவற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றார்கள்

.

சர்வ

தேச நாடுகளில் கடத்தப்படக் கூடியவர்களாகவும் விற்பனை செய்யப்படக் கூடியவர்களாகவும் இருக்கும் இவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பாலியல் தொழிளாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். சமூகத்தின் பல வழிகளிலும் சீரழிக்கப் படும் இவர்களைப் பாதுகாக்க 60 ஆண்டுகளாக முன்னெடுக்கப் பட்ட வழிமுறைகள் அனைத்தும் உள்ளெடுக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட சாசனம் ஒன்று 1989 இல் அனைத்து நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படக் கூடிய வகையில் ( Convention on the rights of the child ) உருவாக்கப் பட்டது.

உலகெங்கும்

ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்காவும், சோமாலியாவும் இதை நடை முறைப்படுத்த மறுத்து விட்டன

.

இச் சாசனம் குறிக்கும் இரண்டு முக்கிய சரத்துகளாக பின்வரும் விடயங்கள் விரிவு படுத்தப்பட்டன

.

1.

சிறுவர் விற்பனை, சிறுவர் விபச்சாரம் மற்றும் பாலியல் சீரழுவுகளுக்கு உட்படுத்துவதற்கு எதிரான சரத்து 2002 ஜனவரி 18 இல் இருந்தும்

,

2.

ஆயுதப் பாவனைக்குள் சிறுவர்களை ஈடுபடுத்தலைத் தவிர்த்தல் என்பது 25 மே 2000 இலிருந்தும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிக் கொள்ளப்பட்டிக்கின்றது

.

இன்று சிறுவர் பாலியல்த் தொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நாடுகள் உலகெங்கும் மிகுந்து காணப்படுகின்றன. தாய்லாந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. பல மில்லியன் சிறுவர் சிறுமிகள் விபச்சாரத்திலும் பாலியல் சீரழிவுகளிலும் ஈடு படுத்தப் படுகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் 2 50, 000 சிறுவர்களும் இளைஞர்களும் H I V தொற்றுக்கு ஆளாகின்றார்கள்

.

குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நாடுகளாக ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் திகழ்கின்றன. இந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்ளும் உத்தியாக குடும்ப அங்கத்தினர்களினாலேயே இது ஊக்குவிக்கப் படுகின்றது

.

250

மில்லியன் 5 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலமையில் 120 மில்லியன் சிறுவர்கள் முழு நேரத் தொழிலாளர்களாகவும் 50 இலிருந்து 60 மில்லியன் வரையான சிறுவர்கள் ஆபத்து நிறைந்த சூழ் நிலைகளுள்ளும் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்

.

இரண்டு

மில்லியன் சிறுவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கிடையில் ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மூன்று மடங்கு சிறுவர்கள் நிரந்தர அங்கவீனர்களாகவோ கடுமையான காயங்களுக்கோ உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்

.

இது

இன்று சிறுவர்களின் வாழ்வியல் நிலமைகளையும் சர்வதேசத்தின் அலட்சியத்தையும் காட்டப் போதுமான தரவுகளாகும். இவை அனைத்தும் .நா.சபையின் சிறுவர்களுக்கான உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் கூறும் செய்திகளாகும்

.

இலங்கையின்

சிங்கள இராணுவத்தின் செல்லடிகளிலும் ஆகாய தரை குண்டு வீச்சுத் தாக்குதலினாலும் தினம் தினம் செத்து மடியும் சிறுவர்களினதும் அனாதைகளாக்கப் படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாதது. அதே போல் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான போரியல் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் பண வரவிற்கான ஒரு வழியாக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் சாக்கில் சிறுவர் பாலியல் சீரழிவுகளை சிங்கள் அரசாங்கமே ஊக்குவிக்கின்றது. இலங்கையின் அழகு மிகு கடற்கரைப் பிரதேசங்கள் எங்கும் இத்தகைய அசிங்கங்களைக் காணலாம்

.

தாய்லாந்திற்கு

அடுத்தபடியாக சிறுவர் விபச்சாரத் தேவைகளுக்காக அலையும் மன நோய் பிடித்த நோயாளிகள் உல்லாசப் பிரயாணிகள் என்ற போர்வையில் தெரிவு செய்யும் இடம் இலங்கையாகும். தனிப்பட்ட முதலாளிகளும் சிங்கள அரசாங்கமும் இணைந்து ஊக்குவிக்கும் ஒரு துறையாக இது இருக்கின்றது. போர் வெறியினால் பலியிடப்படும் இளைஞ்ர்களாகவும் பாலியல் தேவைகளுக்காகப் பலியிடப்படும் சிறுவர்களாகவும் இருப்பவர்கள் சிங்கள ஏழை மக்களின் குழந்தைகளே

.

அதேபோல

பயங்கர ஆயுதங்களின் பரீட்சார்த்தக் களமாக இருக்கும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சிங்கள இராணுவத்தின் படைகளால் கொன்றொழிக்கப் படுபவர்களில் தமிழ்ச் சிறுவர்களும் பெண்களுமே அதிகளவில் காணப்படுகின்றார்கள்

.

இத்தனை

அழிவுகளையும் அவலங்களையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் தாய் தந்தையை, கூடப் பிறந்தவர்களை, உற்றார் உறவினர்களை இழந்தவர்கள் எதிரியின் கைகளில் அகப்பட்டு வீணே இறப்பதற்கு மறுத்து எதிரியைக் கொன்று அழிப்பதற்குப் புறப்பட்டால் மட்டும் சிறுவர் படையென்றும் சிறுவரை படைகளில் சேர்ப்பது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும் வெற்றுக் கூப்பாடு போடுகின்றார்கள்

.

இலங்கை

இராணுவத்தின் காட்டுமிராண்டி போர் முறைகளையும் அப்பாவி மக்களின் வாழ்விடங்கள் மீது தரை கடல் வான் வெளித் தாக்குதலை தடுத்து நிறுத்தும் வல்லமையும் உண்மையான அக்கறையும் உங்களுக்கு இருந்தால் மட்டும் வாருங்கள். எம் கையில் தூக்கியிருக்கும் ஆயுதங்களை தரையில் போட்டுவிட்டு மனித நேயத்தைப் பற்றிப் பேசுவதற்கு நாம் உண்மையான அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உங்களுக்கு தமிழ் ஈழத்தின் பாவப்பட்ட சிறுவர்களான நாங்கள் உறுதி கூறுகின்றோம். அதுவரை எமது எதிரிகளுடன் போராடுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தவோ தடை செய்யவோ முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

ஹுயூமன் றைற்ஸ் ......ஹுயூமன் றைறஸ்.....யார் சொல்வது றைற்....

ஹுயூமன் றைற்ஸ் வோச் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. சில நாட்களின் முன்பு விடுதலைப் புலிகளைப் பற்றி சில பல புரளிகளைக் கிளப்பியிருந்தது. யார் இதன் மூல கர்த்தாக்கள் என்பது மூடு மந்திரமாக இருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவில் சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் அவதூறுகளைக் கிளப்புவதற்காக முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் முந்நாள் கம்யூனிசநாடுகளின் அரசுகளை ஆட்டங்காண வைத்து ஸ்வாகா செய்வதற்கு பேருதவி செய்த ஒரு தனியார் அமைப்பு இன்று பரிமாண மாற்றங்களைக் கண்டு ஹியூமன் றைற்ஸ் வோச் என்ற அமைப்பாக புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. .நா போன்ற பொது ஸ்தாபனங்களின் எந்த தொட்ர்பும் இல்லாது தனியார் ஸ்தாபனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இது கிளப்பும் புரளிக்கெல்லாம் ஆதாரம் இருக்கின்றதோ இல்லையோ அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஆனாலும் இதன் தொடர் அறிக்கைகளில் பல சுவாரஸ்யமான சங்கதிகளும் வெளி வந்திருக்கின்றது. அப்படியொரு சுவையான சங்கதி அமெரிக்கா பற்றியது.

அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் என்ன கோபமோ என்னவோ அவரையும் அவர் சகா சென்னியையும் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கின்றது. அதே நேரம் ஏப்பிரல் 20 இல் சீனத் தலைவர் ஹூ ஜின்ராஓ அமெரிக்காவிற்கு விஜயம் செய்த வேளையில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் படியும் புஷ்ஷுக்கு கடிதம் அனுப்பியது. இது எப்படியிருக்கின்றது என்றால் ஒரு துட்டனிடம் இன்னுமொரு துட்டனைப் பற்றி முறைப்பாடு செய்வதைப் போல.

இங்கு கவனிப்புக்குரியதும் நகைப்புக்குரியதும் என்னவென்றால் நீதி நியாயம் ஜனநாயகம் பற்றிக் கதைக்கும் ஒவ்வொரு நாடும் தங்களளவில் முதுகு கொள்ளா அழுக்குகளைச் சுமக்கின்றன என்பது தான். ஊருக்குத் தான் உபதேசம் உனக்கல்ல..... என்று தான் எல்லா நாடுகளும் நடந்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உத்தம வேடம் போடுகின்றன. சர்வதேச சமூகம் என்று அலங்காரக் கொண்டையுடன் திரியும் இவர்கள் கொண்டைக்குள் ஆயிரம் அழுக்கு.

எங்களைக் குற்றம் சொல்லப் புறப்பட்ட சீமான்களை மறித்து ஆயிரம் கேள்வி கேட்கலாம். அத்தனை பட்டியல் இங்கிருக்கின்றது. இந்த ஹுயூமன் றைற்ஸ் வோச்சின் அறிக்கையை வைத்துத் தான் விடுதலைப் புலிகளை கனடா தடை செய்தது என்று ஆலாய்ப் பறந்த மனிதர்கள் சிலர் நியாயம் கற்பித்துத் திரிந்தார்கள். அப்படியென்றால் இதோ இந்தியா பற்றி அமெரிக்கா பற்றி ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் பற்றியெல்லாம் கிழி கிழியென்று கிழித்து அறிக்கை விட்டிருக்கின்றார்களே. இப்போ கனடா என்ன செய்யப் போகின்றது.

விடுதலைப் புலிகளைத் தடை செய்யச் சொல்லப்பட்ட காரணங்களை விட ஆயிரம் மடங்கு நீதிக்குப் புறம்பானதும் மனித உரிமைகளை துச்சம்மெனவும் மதித்து இந்நாடுகள்

நடக்கின்றனவே.

இந்த அழகில் .நா டுகளின் மனித உரிமைக் கவுன்சிலின் ஆசியாவிற்கான 13 அங்கத்துவ நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இலங்கையும் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனவே. இந்த இலட்சணத்தில் மனித உரிமைகள் எப்படி காப்பாற்றப் படப் போகின்றன. ஏன் யாரும் இது பற்றிக் கேள்வி யெழுப்பவில்லை.

அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வண்வே ரபிக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை அள்ளிக் கொண்டு வந்து வழ்க்கு விசாரணை எதுவுமின்றி ஆண்டுக் கணக்கில் வைத்திருக்கின்றதே.

கனடா என்ன செய்யப் போகின்றது? அமெரிக்கா அண்ணனென்றால் பிரித்தானியா தம்பி.

அமெரிக்காவையும் இந்தியாவையும் ஜப்பானையும் தடை செய்து இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்கப் போகின்றதா?

இதோ அபூ ஹாரிப் ( Abu Gharaib ) சிறையில் நிர்வாணமாக கைதிகளை வைத்து சித்திரவதை செய்தார்களே. உலகமே அதிர்ந்து போனதே. இன்றுவரை அதிலீடுபட்டவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இது அறிக்கையில் சொல்லியிருக்கின்றதே. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் கியூபாவின் குவான்ரனாமோ பே சிறையில் எந்த விசாரணையுமின்றி சித்திரவதையில் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றார்களே. அவர்களை நீதியின் முன்பாக நிறுத்துமாறு அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றதே. இந்த ஹுயூமன் றைற்ஸ் வோச். இது மனித உரிமை மீறலாக ஸ் ரீபன் கார்ப்பரின் கொன்ஸ்ரவேற்றிவ் அரசாங்கத்திற்குத் தெரியவில்லையா?

ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் குஸேனின் சிறையில் இருந்தவர்களை விட அதிகம் பேர் சிறையில் இருக்கின்றார்கள் ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர் ஆட்சியில். எங்கே தப்பு நடந்தது.

அமெரிக்காவான அமெரிக்கா. ஆனானப்பட்ட அமெரிக்கா. .நாடுகள் சபையை உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா இவற்றுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றது?

இந்தியா காஸ்மீரில் இராணுவத்தைப் போட்டு அப்பாவி காஸ்மீரிகளைக் கொன்று குவித்துப்போடுவதை குஜராத்தில் அரசே வலிந்து மதக் கலவரங்களைத் தூண்டி முஸ்லீம் மக்களைத் துடிக்கத் துடிக்க நெருப்பில் போட்டுக் கொல்வதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளதே. இது வெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா?

இரண்டாம் மகாயுத்த காலத்தில் சீனா, கொரியா, வியற்நாம், பிலிப்பைன்ஸ் என்று எல்லா தூரகிழக்கு நாட்டு மக்களையும் கொன்று குவித்துப் பெண்களை தன் இராணுவத்தின் பசிக்குக் கூட்டிக் கொடுத்தும் இன்னும் பாவச் சுமையை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் ஜப்பானும் புத்தரின் போதனைகள் போல ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்பளம் போல பொரிந்து பொடிபட்டுப் போய் அணு குண்டின் வீரியத்தையும் வேதனையையும் அனுபவித்தவர்கள் அதே அமெரிக்காவின் தாளத்திற்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் ஆசைக்கு அகாஸி அண்ணாச்சியும் அவுட் ஆப் போகஸில் அலட்டிக் கொண்டிருக்கின்றார்.

அகிம்சையையும் அடாவடியையும் உலகுக்கு ஒருசேரப் போதித்த இந்தியா . காஸ்மீரயும் பஞ்சாப்பையும் காலடியில் போட்டு நசுக்கிய இந்தியா ஈழத்தமிழனுக்கு மட்டும் அகிம்ஸையைப் பேதி மருந்து போலப் பருக்குகின்றார்கள்.

எங்கே ஹுயூமன் றைற்ஸ் .... எங்கே ஹுயூமன் றைற்ஸ் என்று தேடத்தான் வேண்டும். இதில் யார் சொல்வது யார் செய்வது ஹுயூமன் றைற்ஸ்.

Friday, May 05, 2006

இலங்கையின் இனப்பிரச்சனை - பெளத்தத்தின் ஆணிவேர்

" என்னுடைய பெளத்த மதம் எப்படிப் பொறுமை காக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றது. என்னுடைய இராணுவத் தளபதியை கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டு படுகொலை செய்ய முயற்சித்தனர்.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மேற்கொண்ட போதும் நாம் பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். " இவ்வாறு சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை. இலங்கையின் சர்வ வல்லமையுடன் ஆட்சி பீடத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே தான்.

இவரைப் போலவே சிங்களவர்களில் அனைத்து மட்டத்தினருமே பெளத்த மேலாண்மை என்ற பொய்மையான மாயைக்குள் மூழ்கிப் போயிருக்கின்றார்கள். சிங்கள இனத்திலிருந்து பெளத்தம் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெளத்தம் என்பது இல்லாமல் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை என்பது தான் உண்மை.

சிங்களவர்களின் மஹாவம்சம் கூறுவதை எடுத்துக் கொண்டால் விஜயனின் வழித் தோன்றல்கள் சிங்களவர்கள் ஆயினர் என்று குறிப்பிடுகின்றது. இந்தியாவின் கலிங்கா என்ற இடத்திலிருந்து அவனின் துஷ்ட குணத்தினால் நாட்டு மக்களின் சீற்றத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான விஜயன் அரசனான தந்தையால் நாடு கடத்தப்படுகின்றான்.

நாடு கடத்தப்பட்ட துட்டனான விஜயன் யக்கினிப் பெண்ணான குவேனியை மணந்து பின்னர் அவளை ஒதுக்கி தென்னிந்தியாவின் மதுரையை ஆண்ட பாண்டுவின் மகளை மணந்து இலங்கையை ஆண்டான் என்று மஹாவம்சம் கூறுகின்றது. விஜயன் பிறப்பால் ஒரு பெளத்தன் அல்ல. மணம் கொண்ட வகையிலும் அவன் பெளத்தத்துடன் தொடர்பு கொண்டவனும் அல்ல.

ஆனால் மஹாவம்சத்தை எழுதிய மஹாநாம என்ற பெளத்தபிக்கு "இலங்கைத் தீவு பெளத்தம் வளர்வதற்கும் நின்று நிலைப்பதற்கும் சாக்கிய முனியால் ஆசீர்வதிக்கப்பட்டதென்றும். அதனால் விஜயனும் அவன் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள் "என்று தேர வாதப் பெளத்தத்தின் மத அடிப்படை வாதத்தை அழகாகப் புகுத்தி விடுகின்றார். தந்தையால் நாடு கடத்தப்பட்ட துட்டனான ஒருவனுக்கு கடவுளின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவது என்பது தர்மத்துக்கும் இறை அன்புக்கும் எதிரானது. ஆனாலும் இங்கு இலங்கையில் பெளத்தத்தை வளர்ப்பதற்கு மிகவும் பாடுபட்டவர்கள் யார் என்று பார்த்தோமானால் அவர்கள் இந்தியாவின் வடக்கிலிருந்து வந்திருந்த பெளத்தத் துறவிகளாகும். திராவிட கிரந்த எழுத்துக்கள் பாவனையில் இருந்த இலங்கையில் ஆரிய கிரந்த எழுத்துக்களை பிரதியீடு செய்ததிலும் பாளி மற்றும் ஒலு மொழிகளின் கலப்பிலான புதிய மொழியான சிங்களத்தின் உருவாக்கத்திலும் இவர்களின் பங்கு அளப்பரியது. மற்றும் அவர்கள் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் தென்னிந்தியாவின் தாக்கம் அதிகம் இருந்த இலங்கையில் வட இந்திய மதமான பெளத்தத்தின் பரம்புதலை ஊக்கப் படுத்தவும் அவர்கள் கையிலெடுத்த பிரமாஸ்திரமே மேலாண்மைச்சமூக மனப்பான்மையின் கூறான ஆரிய இனத் தோன்றலான விஜயனின் கதையும் வரலாறும்.

இத்தனைக்கும் மஹாவம்சம் எழுதப்பட்ட காலம் 5ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. கி.மு 161ஆம் ஆண்டு தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்து துட்டகெமுனு ஆட்சி பீடமேறிய 700 வருடங்களின் பின்னால் எழுதப்பட்ட மஹாவம்சத்தில் துட்ட கெமுனுவை சிங்களத்தின் காவலனாகவும் காவிய நாயகனாகவும் வரித்துக் கொண்டு எழுதப்பட்ட காவியமே மகாவம்சமாகும். அதற்கு முதல் எழுதப்பட்ட தீபவம்சம் அதன் பின் எழுதப்பட்ட சூள வம்சம் ராஜவாளிய அனைத்தும் சிங்கள அடையாளத்தின் ஊற்று மூலமாகவும் பெளத்த மேலாண்மையின் வெளிப்பாடாகவும் இயற்றப் பட்டவையே ஆகும்.

தேரவாதப் பெளத்தம் இல்லாது சிங்களம் என்ற இனத்தின் கலை கலாச்சார சமுகவியல் கூறுகள் தனித்து இயங்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

ஆனால் தமிழ்த் தேசியம் என்பது இந்து சமயம் என்பதற்கு அப்பாலும் தனித்து இயங்கக் கூடியது. சைவம் சமணம் சாக்கியம் கிறிஸ்தவம் இஸ்லாம் என்று தமிழ்த் தேசியத்தில் பல மதங்கள் செழித்து வளர்ந்திருந்தன. மதமே இல்லையென்ற ஈ.வெ ரா பெரியாரும் கிறிஸ்தவரான தந்தை செல்வாவும் தலைவர்களாக இருப்பதில் தமிழ்த் தேசியத்தில் எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை என்பது தமிழ்த் தேசியத்தின் விசால மனப்பாங்கிற்கு எடுத்துக் காட்டாகும்.

ஆனால் பிறப்பால் கிறிஸ்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா பெளத்தராக மதம் மாறிய பின்னர் தான் இலங்கையின் பிரதமராகலாம் என்பது தான் சிங்கள தேசிய இனத்தில் தேரவாதப் பெளத்தம் கொண்டிருக்கும் மேலாண்மைக்கு உதாரணமாகும்.

அரசு இயந்திரத்தில் அங்கம் வகிப்பவர்களிடம் மட்டுமல்ல அடிமட்டத்தில் இருக்கும் சிங்கள மக்களிடமும் ஆழ வேரூன்றியிருக்கும் தேர வாதப் பெளத்தம் எற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பதுவே இலங்கை இனப் பிரச்சனையில் மிகவும் சிக்கலை உருவாக்கும் அடிப்படைக் காரணியாகும்.

அரசு இயந்திரத்தின் உறுஞ்சுதலுக்கும் இனப்பிரச்சினையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் அடிமட்ட சிங்கள மக்கள் கூட அடிப்படையான சில உரிமைகளைக் கூட தமிழ் மக்களுக்கு வழங்கச் சம்மதியாது முகம் திருப்பிக் கொள்வதும் தமிழருக்கு எதிரான அனைத்துப் பிரச்சனையிலும் அரசு இயந்திரத்தின் அனைத்து அடக்கு முறைகளுக்கும் ஆதரவு கொடுப்பதற்கும் இதுவே முதன்மைக் காரணமாகும்.

அடக்கப்படும் அடிமட்டச் சிங்கள மக்களுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவது இனப்பிரச்சினைக்கும் சமூக பொருளாதாரப் பிரச்சினைக்கும் உவப்பான தீர்வு என்று சொல்பவர்கள் சிங்கள மக்களின் மீதான தேர வாதப் பெளத்ததின் ஆதிக்கத்தன்மையை கருத்துக் கெடுக்கத் தவறுகின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

2000 ஆண்டுகளாக கவனமாக ஊட்டப்பட்டு வரும் தேரவாதப் பெளத்தத்தின் இருப்புக்கான ஆதிக்க மனப்பான்மை என்னும் ஆணி வேரை அசைப்பதிலேயே தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான வழி இருக்கின்றது.

Tuesday, May 02, 2006

எங்களைச்சுத்திப் பேய்கள்- கொட்டகதெனியா அலறல்

இருந்தாலும் ஒரு மனிதனுக்கு இப்படியொரு துன்பம் நேர்ந்திருக்கக்கூடாது. நித்திரையும் இல்லாமல் கொட்டக்கொட்ட முழித்திருந்தால் யார் தான் வாய்விட்டுக் கதறியழாமல் இருக்க முடியும். இப்படிக் கதறியழுது கொண்டிருப்பவர் வேறு யாருமில்லை. சாட்சாத் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவின் பாதுகாப்பு ஆலோசகர் புத்தி சொல்லிக் கொடுப்பவர் என்று பல அவதாரம் எடுக்கும் எச்.எம். ஜி கொட்டக தெனியா தான் இவ்வாறு பேய் பிடித்து அலறிக்கொண்டிருக்கின்றார்

.

ஜனாதிபதியின் லோசகர் என்றால் பென்ஸ் காரில் சுத்தி வந்து வயிறு புடைக்க விருந்துகள் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. செத்த பேய்கள் மற்றும் இருக்கும் பேய்கள் என்று வகை தொகையில்லாமல் எல்லாப் பேய்களும் சேர்ந்து பிடிக்க குய்யோ முறையோ என்று அலறிக் கொண்டிருக்கின்றார் ஆலோசகர் கொட்டகதெனியா. கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தான் அவர் தன் குறைகளைக் கொட்டியிருக்கின்றார்

.

அவிசாவளையில் ஐந்து தமிழ் இளைஞர்களைப் பிடித்து சிங்கள இராணுவப் பேய்கள் தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்ள அவர்களின் தலைகளைத் துண்டிந்து சடலத்தைக் கொண்டு போடப் போக பேய் பிடித்தலின் உச்சக் கட்டம் ஆரம்பித்து விட்டது. தமிழ் இளைஞ்ர்கள் தான் என்று எப்படிச் சொல்வீர்கள் என்பது போல பொல பொலவென்று பிடித்துக் கொண்டார். பாதாள உலகத்தவராக இருக்கமுடியாதா ? அடிக்கடி நடக்கும் காவல்துறையுடனான மோதலில் இவ்வாறுதான் அவர்களைக் கொல்லுகின்றோம் என்று உதாரணம் காட்டியிருக்கின்றார். அதுவும் 21 ஆம் நூற்றாண்டில் பொறுப்பு வாய்ந்த ஒரு அரசாங்கம் கற்காலத்துக் காட்டு மிராண்டிகள் போல கொலை செய்கின்றார்கள் என்று உரக்கவே சொல்லியிருக்கின்றார். ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பவர் பேய் பிடித்திருக்காது விட்டால் இவ்வாறெல்லாம் பேசுவாரா

?

அதுவும் சர்வதேச ஆசிய நாடுகளுக்கான மனித உரிமைகள் சபை இலங்கை அரசாங்கத்தை வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கும்போது. சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் அந்த உடல்கள் தமிழர்களினதுதான் என்று எப்படி முடிவுக்கு வருவீர்கள் என்று கேட்டிருக்கின்றார். பின்னை என்ன? அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் உரிமைகளை நீங்கள் எப்படி உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம்

.

கொழும்பில் குண்டு வெடித்தவுடன் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லி திருமலையில் குண்டு போடுவது அவர்களுக்கு மட்டும் இருக்கும் பிரத்தியேக உரிமையல்லவா? விசாரணையாவது ? மண்ணாவது ? மறந்தும் மூச்சு விடாதீர்கள்

.

தலையைத் திருகி எறியும் சிங்களப் படைகளின் ஒழுக்கம் பற்றி சந்தேகம் வருகின்றதா? அப்படியெல்லாம் வரக் கூடாது என்பதற்காகத் தான் அவரே தன் படையினருக்கும் ஒரு ஒழுக்கச் சேட்டிபிக்கேற் கொடுக்கின்றார்

.

// "

சிறிலங்கா அரச படைகள் மிகுந்த ஒழுக்கத்தோடு இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளால் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் அரச படைகள் பொறுமை காக்கின்றன. இங்கிலாந்து போன்ற நாடுகளில் குண்டு வெடிப்பு நடந்தபோது எதுவித உத்தரவுக்கும் காத்திருக்காமல் சந்தேக நபர்கள சுட்டுக் கொண்டார்கள் " - //

கொட்டகதெனியா

இப்படிச் சொல்வதால் இவர்களின் சிங்களப் படைகள் ஒவ்வொரு கொலைக்கும் தன்னிடம் அல்லது மகிந்தவிடம் அனுமதிபெற்றுத் தான் சுட்டுக் கொல்கின்றார்கள் என்பதை சொல்லாமல் சொல்கின்றாரா? அப்படியென்றால் வடக்கு கிழக்கில் நடக்கும் அத்தனை படு கொலைகளும் அரசின் ஆசீர்வாதத்துடன் நடப்பதாக ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி சொல்லலாமா? பேய் பிடித்திருந்தால் எதுவும் நடக்கலாம்

.

//

" இலங்கையில் இருக்கும் அரச சார்பற்ற நிறுவன முகவர்கள், ஊடகங்கள் ஆகியவை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு நாட்டை பிளவுபடுத்துகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினால் பயங்கரவாத அமைப்பின் நிழல் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத இயக்கத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்கின்றது. "- //

கொட்டகதெனியா

இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் தன்னைச் சுற்றியிருக்கும் பேய்களை இனங்காட்டியிருக்கின்றார். அவரைப் பொறுத்த அளவில் சிங்களப் பெளத்த பேரினவாதத்துக்கு ஜால்ரா அடிக்காத அனைவரும் பேய்களே

.

//"

சிறிலங்கா இராணுவ தளபதி மீது தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி கொழும்பில் பல மாதங்களாக தங்கியுள்ளார். ஆனால் நாங்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடாத்தினால் தமிழர்களின் உரிமையை மறுப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் கூப்பாடு போடுகின்றனர்." //-

கொட்டகதெனியா

அதுதானே எப்படி கூப்பாடு போட முடியும். அப்பாவி தமிழ் மக்களைப் பிடித்து சித்திரவதை செய்து காசு பறிப்பதைக் கூட அனுமதிக்காமல் சும்மா கூக்குரல் போடும் தமிழ் அரசியல் வாதிகளை முதலில் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும். அப்படித் தான் சிங்களப் பிக்குகள் கூக்குரலிடுகின்றார்கள். பெளத்தத்தைக் காக்க இதைவிட்டால் வேறு வழி

?

//" ஜெனிவாவில் ஒரு மாதத்துக்கு முன்பாக அரச படைகள் மீது எதுவித தாக்குதலையும் நடாத்த மாட்டோம் என்று விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எதிரிகளால் வைக்கப்படும் விமர்சனங்களை மக்கள் நிராகரிப்பார்கள்". //-

கொட்டகதெனியா

இவர்கள் மட்டும் பெரிய மேன்மையானவர்களோ? உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றி விட்டார்களா? ஒட்டுக் குழுக்களைப் பிடித்து உள்ளுக்குப் போட்டுவிட்டார்களா? என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கின்றது. இதுதான் சொல்வது, படிக்கும் போது விசயத்தை விளங்கிப் படிக்க வேண்டும் என்று. மேலே கொட்டக தெனியா சொன்னதில் இறுதி வாக்கியத்தை மீண்டும் படிக்குமாறு நான் உங்களுக்கு சிபாரிசு செய்கின்றேன். ஆங்.. அதுதான் ... " சிறிலங்கா அரசாங்கத்தின் மீது

....."

//"

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகள் பலமாக ஊடுருவியிருப்பதாக அனைவரும் உணருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த ஒரு தமிழரும் வாயைத் திறந்து தகவல் கொடுப்பது இல்லை. கொழும்பில் உள்ள அதிகாரமிக்க சக்திகளால் விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியும். காவல் துறையிலும் இராணுவத்திலும் நிறையப் பேரை விடுதலைப் புலிகள் விலக்கு வாங்கியுள்ளனர். இராணுவத் தளபதி மீதான தாக்குதல் என்பது இராணுவத்தில் உள்ள சிலரது ஒத்துழைப்புடனேயே நடந்தது என்பதை உறுதியாக நான் கூறுவேன்".//

கொட்டகதெனியா

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் சிறிலங்கா இராணுவம் ஒழுக்கத்தின் சீலர்கள் என்று சேட்டிபிக்கேற் கொடுத்திருந்தாரே இப்ப இப்படிச் சொல்லுறாரே என்று ஆச்சரியப் படுகின்றீர்களா? பேய்களின் நடுவே வாழ்பவர்கள் சில வேளைகளில் உளறவும் செய்வார்கள் எந்த ஒரு தமிழரும் வாயைத் திறந்து தகவல் கொடுப்பதில்லையாம். அப்போ டக்லஸும் கருணாவும் எதைத் திறந்து தகவல் கொடுக்கிறார்களாம் என்று நீங்கள் சந்தேகப் படுவது எனக்கும் புரிகின்றது. எனக்கு இன்னுமொரு சந்தேகம் . அப்படியென்றால் அவர்களும் சிங்களப் பெளத்தத்தில் இணைந்து விட்டார்களா? அவர்களின் சிங்களப் பெயரைக் கூறினால் டக்லஸும் கருணாவும் கூறுவதைக் கேட்டு நியாயம் பிளக்க வரும் BBC மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிற்கு கதை சொல்லுவதற்கு எங்களுக்கு வசதியாகப் போய்விடும்.

//"

நாம் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் . நாம் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட முடியாது (அடடா.... புல்லரிக்கின்றதே).மனித உரிமைகளை மதித்துச் செயற்படுத்த வேண்டும் என்று விடுதளைப் புலிகளை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். ஆனால் அப்படிச் செய்திருக்கின்றார்களா? இப்போது கர்ப்பிணிப் பெண்ணை தற்கொலைதாரியாக அனுப்பியிருக்கின்றார்கள். இது .நா வின் சாசனங்களுக்கு எதிரானது. நம்ப முடியாதது."-//

கொட்டகதெனியா

எத்தனை கர்ப்பிணிப் பெண்களின் தலையில் குண்டுகள் போட்டு துடிக்கத் துடிக்க கொன்று போட்டார்கள். அப்போதெல்லாம் .நா வின் சாசனம் நினைவிற்கு வருவதில்லையோ? ஆசியாவிற்கான மனித உரிமைகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்துள்ளதே. கோபி அன்னான் பொது மக்களைக் கொல்லுவதை உடனடியாகநிறுத்தச் சொல்லி கேட்டிருக்கின்றாரே? இது எல்லாம் இலங்கை அரசாங்கத்தைதான் என்று அறிவாரோ ஆலோசகர்

.

இவ்வாறெல்லாம் நீதி நியாயம் பற்றிக் கதைப்பவர்கள் எல்லாம் இரண்டு காலுள்ள பேய்கள். பின்னே இருக்காதா? பென்ஸ் கார்களில் சுத்தி வந்து வயிறு புடைக்க விருந்துண்டு காலத்தைக்கடத்த விடாமல் அரசாங்கத்தைப் பற்றி குறை சொல்பவர்கள் நியாயம் கேட்பவர்கள் எல்லாம் தூக்கமும் இல்லாமல் செய்து விட்டார்களே. இதுக்கு மேலும் தாங்க முடியாமல் தான் கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் புலம்பித் தள்ளியுள்ளார். மகிந்தவின் ஆலோசகர் கொட்டகதெனியா

.

இவர்களுக்குத் தமிழ் மக்கள் சொல்லக் கூடிய ஆலோசனை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இந்தப் பேய்கள் எல்லாம் சிங்கள மாந்திரீகத்திற்குக் கட்டுப்படமாட்டாது. நல்ல மலையாள மாந்திரீகர் ஒருவரைத் தேடிக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் அரச தலைவரையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரால் வெளியிடப்பட்ட "மகிந்தவின் சிந்தனைகளும் " ஒரு தினுசாகத் தான் இருக்கின்றது.