Saturday, October 28, 2006

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிறீலங்கா

சண்டையும் சமாதானமும் சமாதானத்துக்கான சண்டையுமாக காலத்தை இழுத்தடிக்கும் முனைப்புடன் சிங்களப் பேரினவாதம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. கால இழுத்தடிப்புடன் தமிழினத்தின் கழுத்தறுக்கும் விருப்புடன் எதிர்ப்படும் நெருக்கடிகளைக் கடந்து கொண்டிருக்கின்றது. காலனியாட்சியதிகாரத்தின் கை மாற்றத்துடன் இலங்கையின் சிறுபான்மையினங்களின் சுயாதிபத்தையும் இருப்பையும் கொல்லையில் குழிபறித்து மூடிவிடும் வேகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

.

தனிச்சிங்களச் சட்டம், இனக்களையெடுப்பினை அவாவி நிற்கும் இனக்கலவரங்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்று காலத்துக்காலம் ஆட்சியதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட சிங்களப் பேரினவாதக்கட்சிகள் தொடர்பறாத நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சிறுபான்மை இனங்களின் தனிதன்மையைக் குலைப்பதிலும் தொடர்பு பட்ட வாழ்விடப் பிரதேசத் தொடர்புகளையும் சீர் குலைக்கும் நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன

.

ஆதிக்க வாதத்திற்கெதிரான சிறுபான்மையினங்களின் அகிம்சை அரசியல்ப் போராட்டங்கள் தோல்வியைக் கண்டுவிட ஆயுதப்போராட்டம் தலையெடுத்து இன்று வீறுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப தந்திரோபாயங்களின் வடிவினை மாற்றிக் கொண்ட பேரினவாதமும் பேச்சு வார்த்தைகள் இழுத்தடிப்புகள் என்ற போக்கில் அன்னியத் தலையீடுகளின் ஆதரவுடன் இன விடுதலையின் கூர்மையினை சிதறடிக்கும் காரியங்களில் ஈடு பட்டுக்கொண்டிருக்கின்றது

.

அவற்றின் தொடர்பாக திம்புப் பேச்சு வார்த்தைகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் இராணுவ மாறுதலின் பின்னணியில் உருவாக்கப் பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் செயற்பாடும் நடைமுறைக்கு வந்தது. நீண்ட ஒரு போராட்டத்தின் சிறு அங்கீகாரமாக தமிழ்த் தேசியத்தின் பிரதேசத் தொடர்பு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வடக்குக் கிழக்குப் பிரதேசம் இணைக்கப் பட்ட மாகாண அலகாக அங்கீகரிக்கப்பட்டது. இணைக்கப்பட்ட பிரதேசத்தின் ஆட்சியதிகாரம் என்ற அளவில் மாகாண அரசு என்ற நொண்டிக் குதிரையின் சாரதியாக இந்தியாவை ஏற்றிவிட்ட குள்ள நரி ஜே ஆர் தனக்கு நேர இருந்த நெருக்கடியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது

.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒரு கூறாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்குக்கிழக்கின் இணைப்பை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் முன்னெடுக்காது தொடர்ந்து வந்த அரசியல் சுழியில் அமிழ்ந்து கரை ஒதுங்கிவிட்டது. குறிப்பிட்ட காலத்தின் முடிவிற்குள் சுதந்திரமான சர்வ சன வாக்கெடுப்பின் மூலம் இணைப்பின் தேவையை உறுதிசெய்ய வேண்டுமென்ற சரத்தை உள் நுழைத்த குள்ள நரி ஜே ஆர் இலங்கையின் ஒற்றையாட்சி அதிகார வரம்புக்குள் அடங்க முடியாத மாற்றம் இதுவென்பதை அறிந்திருந்தும் காத்திரமான சட்ட மாற்றத்தைக் கொண்டு வரும் பெரும்பான்மையிருந்தும் அதனைச் செய்யாது விட்டு விட்டது

.

இன்று தமிழ் மக்களின் பிரதேசத் தொடர்பை கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டிருந்த அங்கீகாரம் இலங்கையின் ஒற்றையாட்சியதிகாரத்தின் வரையறைக்குள் அமைந்த நீதித் துறையின் பார்வையில் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. ஆச்சரியமானது என்னவென்றால் இலங்கையின் ஒற்றை ஆட்சியதிகாரத்தின் வரையறைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் ஒற்றை ஆட்சியதிகாரத்துக்கு மாற்றீடாக சமஷ்டி வரைபை முன்மொழிந்து நிற்கும் சர்வதேசமும் அதன் அவசியம் பற்றி வாய் கிழியக் கதைக்கும் இந்தியாவும் தமிழ் அரசியல் வாதிகளும் ஏதோவொரு கடக்க முடியாத பெரிதொரு தடை வந்ததைப் போல மலைத்து நிற்பதேயாகும்

.

சுவிஸில் முன்னெடுக்கப் படவிருக்கின்ற பேச்சு வார்த்தைகளில் எதைப்பற்றிப் பேசுவது என்று மலைத்து நிற்கும் தமிழ்த் தரப்பும் பேசுவதற்கு எதுவுமில்லாது சர்வ தேசத்தின் வற்புறுத்தல் காரணமாக பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் சிங்களப் பேரினவாத அரசிற்கும் பேசுவதற்குக் காத்திரமான விடயமாகவும் இலங்கையின்

இனப்பிரச்சினையின் தீர்வை சர்வதேச சமூகம் உண்மையிலேயே அவாவி நிற்கின்றதென்றால் அதன் உண்மை முகத்தை வெளிப்படுத்த அதற்கு அருமையான சந்தர்ப்பமாக அரசியல் சாஸன மாற்றத்தை உருவாக்கும் ஒரு மேடையாக சுவிஸ் பேச்சு வார்த்தைகளைப் பயன் படுத்தலாம்.

சிறிலங்கா சுதந்திர முன்னணி அரசும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அவசர அவசரமாக ஒன்றிணைவது இந்த நீதி மன்றத்தீர்ப்பால் விளைந்த அடுத்தது என்ன என்ற கேள்வியாலும் அதற்கான வெளிப்பாடாக சிங்களை பேரினவாதத்தின் முகமூடி கிழிந்து சர்வ தேசத்தின் முன்னால் தலை குனிந்து நிற்கப் போகும் அவலத்தைச் சரி செய்து கொள்ளவே அல்லாமல் தமிழ் மக்களினது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளவோ இல்லை அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவோ அல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க முயலும் அதி தீவிரவாதக் கட்சிகளான ஜே .வி .பி போன்ற துட்ட சக்திகளிடம் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவே என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்

.

அரசியல் நிலமை அவ்வாறு இருக்க , அறுதிப் பெரும்பான்மையோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் இதய சுத்தியோ இல்லாத சிங்கள ஆட்சியாளருக்கு எதிரான நாடாளுமன்றப் பகிஷ்கரிப்போ புறக்கணிப்போ எதுவித மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

.

இந்த நீதிமன்றத் தீர்வினால் இலங்கையில் ஒரு அரசியல் சாஸன மாற்றத்தை கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை மெள்ள மெள்ளப் புரிந்து கொண்டு வரும் சர்வதேசத்தின் நாடியோட்டத்தைச் சரிவரக் கணித்துக் கொண்டவகையில் இலங்கைத் தீவில் சமஸ்டி ஆட்சியதிகாரத்தின் அடிக்கல்லை நடுவதன் மூலமே எமது போராட்டத்தை வென்றெடுக்கலாம்

.

ஆகவே சுவிஸில் நடைபெறப் போகும் பேச்சு வார்த்தகள் தமிழர் தரப்பைப் பொறுத்தளவில் மிக முக்கியமாக இருக்கப் போகின்றது என்பதையே காலம் உணர்த்தி நிற்கின்றது. சிங்களப் பேரினவாதத்தின் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்பதையும் நாம் புரிந்து கொண்டதையும் இந்த மேசை வெளிப்படுத்தி நிற்கப் போகின்றது

.