Friday, February 15, 2008

சிறந்த மாணவர் அமைப்பாக கனடா யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு தெரிவு







சிறந்த மாணவர் அமைப்பாக கனடா யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரத்தில் "பல்லின பண்பாட்டு வாரம் - 2008" அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களால் நடத்தப்பட்டது. யோர்க் பல்கலைக்கழகத்தின் 60-க்கும் அதிகமான மாணவர் கழகங்கள், 10,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்ற, உற்சாகமும், ஒன்றுபட்டதுமான வாரமாக, பல நிறங்களும், ஒலிகளும், பல்வேறு கண்கவர் காட்சிகளுமாக பல்லின பண்பாட்டு வாரம் கோலாகலமானது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பு இந்த நிகழ்வின் சிறப்பாக பங்குபற்றிய ஒரு அமைப்பாக விளங்கியது.
இந்த வருடம் மேலும் ஒரு விடயம் இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. ஓவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் பல்லின நாடுகளின் கொடிகள் யோர்க் வளாக பாதையில் கட்டப்பட்டன.
இந்த வருடம் அவற்றுடன் தமிழீழத் தேசியக் கொடியும் கம்பீரமாகப் பறக்க விடப்பட்டது. மிகவும் சிறப்பாக அனைத்து நிகழ்வுகளிலும் வாரம் முழுக்கக் கலந்துகொண்ட யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு பல வெற்றிகளை தனதாக்கிக்கொண்டது.
இந்த வாரத்தில் அளிக்கப்பட்ட ஆறு பரிசுகளில், மூன்றினைப் பெற்றுக்கொண்டு சிறந்த அமைப்பிற்கான பரிசிலையும் பெற்றுக்கொண்டது.
இந்த வாரத்தில் நடத்தப்பட்ட வீதி ஊர்வலத்தில், தமிழீழத் தேசியக் கொடியினை உயர்த்திப் பிடித்தவாறு தமிழ் மாணவர்கள் சென்றனர். அந்த ஊர்வலத்தின் கருப்பொருளாக தமிழ்த் திருமணத்தினைத் தெரிவு செய்து, மங்கள ஒலியுடன், பல வர்ணம் கொண்ட ஒரு ஊர்வலமாக அதனை வடிவமைத்திருந்தனர்.
ஊர்வலத்தினைத் தொடர்ந்து ஆடை அணிவகுப்பு நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய ஆடைகளில் மாணவர்கள் அணிவகுப்பினைச் செய்திருந்தனர். தமிழர் திருமண ஊர்வலத்திற்கு முதலாவது பரிசினையும், ஆடை அணிவகுப்பிற்கு இரண்டாவது பரிசினையும் அந்தப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு பெற்றுக்கொண்டது. பல இனத்தவர்களின் உணவுச் சாவடிகளுக்கு மத்தியில், தனித்துவமானதாக தமிழர் உணவுச் சாவடி திகழ்ந்தது. பல்லினத்தவருக்கும் தமிழரின் கைவண்ணமான பண்பாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பாபு கேட்டரிங்கின் ஆதரவுடன் தமது உணவுச் சாவடியினை அமைத்த யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினர், உணவுப் பிரிவிலும் முதலாவது பரிசினைப் பெற்றனர்.
இறுதி இரண்டு நாட்களும், பல்லின பண்பாட்டுப் பட்டறைகள் நடைபெற்றன. இதன் போது பரத நாட்டியத்தின் மேலோட்டமான அடவுகளை, வந்த மற்றைய இனத்தவருக்கு தமிழ் மாணவர்கள் கற்பித்திருந்தனர். இறுதியாக நடைபெற்ற மேடை நிகழ்வில், தமிழ் மாணவர் அமைப்பு ஒரு நிகழ்ச்சியினை வழங்கியிருந்தது. இதில், கலாச்சார நடனம், மேற்கத்தைய நடனம், இசை மற்றும் மேடைப்பாடல் என்பன ஒரு கோர்வையாகத் தமிழர் பாரம்பரியம் கூறும் வண்ணம் எடுத்து வரப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் கடின உழைப்புடன், நேர்த்தியான முறையில் அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டு, யோர்க் பல்கலைக்கழகத்தின் "பல்லின பண்பாட்டு வாரம் - 2008" இன் அனைத்துத் துறையிலும் சிறந்த மாணவர் அமைப்பாகத் தமிழ் மாணவர் அமைப்புத் தெரிவு செய்யப்பட்டது. இந்த வாரத்தில் மற்றைய பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய தமிழ் மாணவர் அமைப்புக்களும், இளையவர்களும், தமது சக மாணவர் அமைப்பான யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பிற்கு தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பின் குறிக்கோள், அந்தப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களை ஒன்றிணைப்பதுவும், தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான புரிதலை வளர்த்தெடுப்பதுவும் ஆகும்.
இத்தகைய ஒரு நிகழ்வில் இந்த மாணவர்கள் தமது அமைப்பின் நோக்கினை வலுவாக உள்வாங்கி, அதனை நன்றே செயல்படுத்தியும் இருந்தனர் என்றே கூறவேண்டும்.

Sunday, February 10, 2008

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன்



இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது:
"புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம். "அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி? "மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) "ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து "நூறு கோடி தேவைப்படும்" என்றார். "சரி பார்க்கலாம்" என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர். அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989 ஆம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜொனியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார். ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி "நான் லண்டன் போய் வரட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம். ஜொனி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்' என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள். இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து "ஒரு கொலையை" மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?" தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே? "அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், "ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31 ஆம் திகதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5:00 மணியளவில் இராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. "அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார். அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய இராணுவத்தால் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாத குறையாக முறையிட்டார்.
அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை. அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா? "நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா? அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை? இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை. அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, "உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?" என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. "நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு" என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?" ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே? "உண்மைதான் அது. இந்திய இராணுவம் புதைமணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?" என்றார். நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். "அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்" என்று வருத்தப்பட்டார். "சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?" என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். "இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து "தமிழீழத் தாயகம்" என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2:30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் இரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால் ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன்.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது." புலிகளைக் காரணம் காட்டி காங்கிரசார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே? "பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியொரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்த பூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்

Thursday, February 07, 2008

யுத்தத்தில் எந்தத் தரப்பும் வெற்றிபெறாத ஸ்தம்பித நிலையை நோக்கி இலங்கை - யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியை வருட முடிவுக்குள் கைப்பற்றப் போவதாக இலங்கைத் தலைவர்கள் கூறுகின்றபோதும் அந்த நம்பிக்கைக்கு பொருத்தமானதாக கள நிலைவரம் இல்லையெனவும் எந்தவொரு தரப்புக்கும் வெற்றிகிட்டாத இராணுவ ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையே ஏற்படும் என்று யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருட இறுதியில் ஓய்வுபெறும் போது பயங்கரவாதப் பிரச்சினையை, தனக்கு அடுத்துவரும் தளபதிக்கு விட்டுச் செல்லப்போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்லப்போவதாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ சூளுரைத்திருந்தார். இதேசமயம், முன்னொருபோதுமில்லாத வகையில் ஆயுதப் படைகள் வெற்றிபெற்று வருவதாகவும் கடந்த இரு வருடங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கியமான பகுதிகள் படையினர் வசம் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் ஒன்றரை மாவட்டங்களே இன்னமும் புலிகளிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியமையும் அவர்களின் கணிசமான கப்பல்கள் அழிக்கப்பட்டமையும் தென்னிலங்கையில் பொது மக்களின் மனநிலையை அதிகளவு நம்பிக்கையுடன் வைத்திருப்பதற்கு உதவியது. ஆயினும், 2007 நடுப்பகுதியின் பின்னர் குறிப்பிடத்தக்க வெற்றிகள் வெளிக்காட்டப்படவில்லை. இது இராணுவ ரீதியான ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தி விடுமென்று யுத்த விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது. வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னாரில் கடந்த வருடம் செப்டெம்பரில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. விடத்தல் தீவை கைப்பற்றுவதே நோக்கமாக இருந்தது. ஆனால், 4 மாதங்கள் இடம்பெற்ற மோதலின் பின் 8 கிலோமீற்றர் தூரமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது அண்டிய பகுதியிலுள்ள அண்மித்த பகுதி என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவ நிபுணர் ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்.ஸுக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முதலாவது இரண்டாவது கட்டுப்பாட்டுக் கோடுகளை உடைப்பதற்கு அரச படையினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிறந்த படையினரும் இராணுவத் தளபாடங்களும் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால், புலிகள் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்தி வெளியிட்டுள்ளது. இரு தரப்பிலும் இழப்புகள் அதிகமாகும். அரச படையினருடன் ஒப்பிடுகையில் விடுதலைப்புலிகள் தரப்பு இழப்புகள் சுமார் இரண்டு மடங்காகும் என்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். வடக்கே யாழ் குடாநாட்டில் சுமார் 50 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ளனர். அரச படைகளின் சக்தியை திசைதிருப்ப மணலாறுப் பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். அத்துடன், பலாலி மீதும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட தென்னிலங்கையில் சிறியளவிலான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர். வருட முடிவில் வடபிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான படையினரை அங்கு வைத்திருக்க வேண்டும். அதேசமயம், தெற்கில் புதிதாகப் படையினரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள 50 ஆயிரம் படையினருக்கு அப்பால் கிழக்கில் புதிதாகக் கைப்பற்றிய 2 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பகுதிக்கு 1 இலட்சம் படையினர் தேவைப்படுகின்றனர். யாலவுக்கு 4 ஆயிரம் பேர் தேவையாகும். இலங்கையில் மொத்த நிலப்பரப்பில் இவை சுமார் அரைப்பங்காகும். இதற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் படையினர் தேவை. இது முக்கியமான கொழும்புப் பிராந்தியத்தை உள்ளடக்காத தொகையாகும். கொழும்புப் பிராந்தியத்திற்கு 1 இலட்சம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக கூறியுள்ளார். 2007 இல் பாதுகாப்பு செலவினம் 139 பில்லியன் ரூபாவாகும். ஆனால், உண்மையான செலவினம் இதன் 20 சதவீதம் அதிகமானதாகும். இந்த வருட செலவினம் 166 பில்லியன் ரூபாவென எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

Wednesday, February 06, 2008

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்


























































சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்திய நாடாளுமன்றம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன. இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-இனப்படுகொலைக்குத் துணை போகாதே!ஆயுத உதவி வழங்காதே!என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை ஒரு பாரிய கவன ஈர்ப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ள படிவங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தின் இன்று மாலை 4:00 மணியளவில் நேரில் கையளிகக் உள்ளனர்.இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:- தமிழீழ நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை இந்திய அரசிடம் நாங்கள் முன்வைக்க வேண்டியுள்ளது.இருப்பினும் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்காதே என்ற ஒற்றைக் கோரிக்கையையே இப்போது நாம் வலியுறுத்துகின்றோம்.இந்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிராக இந்திய அரசே இராணுவ வழித் தீர்வுக்காக இராணுவ உதவிகளை வழங்கும் முரண்பாட்டை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.தமிழ்நாட்டினது அனைத்து கட்சியினரும்- மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட- தமிழ்நாட்டு அமைச்சர்கள்- தமிழகத்தின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பு தமிழ்நாட்டு மக்களும் இந்த கோரிக்கைகாக கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்தியக்கத்தை முன்னெடுத்தது பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும் இந்தக் கோரிக்கை இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கை என்றார் அவர்.பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், அமைதி வழித் தீர்வை வலியுறுத்திக் கொண்டே இராணுவ வழித் தீர்வுக்கான ஆயுத் உதவிகளை செய்யக் கூடாது என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். சிறிலங்கா அரசுக்கான ஆயுத உதவிகளை தொடர்ந்தும் மத்தியிலே ஆளும் காங்கிரசு அரசாங்கம் வழங்குமேயானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்பது வேரடி மண்ணோடு வீழ்ந்துபோய்விடும் என்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நாம் சொல்லவும் விரும்புகிறோம் என்றார்.

Tuesday, February 05, 2008

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்தால் சர்வதேச நிதி உதவிகள் ஸ்தம்பிக்கும் கொழும்புக்கான நெதர்லாந்துத் தூதுவர் எச்சரிக்கை

இலங்கையில் மோதல் தீவிரமடைந்து, யுத்தம் மோசமாகி, உயிரிழப்புகள் அதிகரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதி உதவிகள் ஸ்தம்பிக்கும் என்று கொழும்புக்கான நெதர்லாந்துத் தூதுவர் ரேய்னோட் வன் டிக் தெரிவித்துள்ளார்.
இணைத்தலைமை நாடுகள் யுத்தம் தீர்வில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளதால் இதுவே தர்க்க ரீதியான விளைவாக அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.ஆங்கில வார இதழொன்றிற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கருணா ஐரோப்பாவிற்குள் தப்புவதற்கு உதவிய நபரை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு கையாளும் என்ற கேள்விக்கு "குற்றவாளிக்கும் அவரைப் பாதுகாத்தவருக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்புக் காணப்பட்டதற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் குற்றச் செயலிற்கு ஒத்துழைத்தவர்களாகக் கருதப்படுவது சட்டரீதியாகப் பொதுவான விடயம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். "இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்தோ அல்லது உயர் குழாம் குறித்தோ இதனைத் தாம் தெரிவிக்கவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கருணாவின் தற்போதைய நிலை முழுக்க முழுக்க இலங்கைக்கும் பிரிட்டனிற்கும் இடைப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதால் அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தூதுவர், அரசும் இவ்வாறு செயற்பட்டால் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.ஸிம்பாப்வே அரசின் மனித உரிமைக் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் அந்த நாட்டின் 150 அதிகாரிகளுக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்."இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பது நிரூபிக்கப்பட்டாலே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கையில் இந்த நிலை ஏற்படாது என எதிர்பார்க்கின்றேன். எனினும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்கு ஜனாதிபதி முயல்வார்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நடைபெற்றாலும் மனிதாபிமானப் பணி தொடரும் அந்தச் செவ்வியில் அவரிடம் கேட்கப் பட்ட ஓரிரு முக்கிய கேள்விகளும் பதில்களும் வருமாறுகேள்வி - இலங்கை முழு அளவில் யுத்தம் ஒன்றுக்குள் குதித்தால் சர்வதேசத்தின் பெறுபேறு என்னவாக இருக்கும் பதில் - சர்வதேச சமூகத்தின் பிரதிப லிப்பை ஏற்கனவே நாம் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டோம். சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பு மூன்று கட்டங்களைக் கொண்டது."இராணுவ நடவடிக்கை மூலம் வட பகுதியைத் துப்புரவு செய்யப்போகிறோம்" என ஜெனரல் பொன்சேகா கூறியிருக் கிறார். இந்த நிலையில் யுத்தம் இடம் பெற்றாலும் இடம்பெறாவிட்டாலும் எமது மனிதாபிமானப் பணிகள் தொடரும். பொது மக்களுக்கு எமது உதவிகள் அவசியம். தேவைப்படுவோருக்கு அவசரகால உதவிகளை வழங்கும் செஞ்சிலுவைச் சர்வதே சக்குழு, ஐ.நா. அகதிகள் தூதரகம் போன்றவற்றுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப் படுகின்றது. அது தொடரும்.அடுத்தது எந்தப் பிணக்குத் தொடர்ந்தாலும் மனிதாபிமான உரிமைகள் பேணப்பட வலியுறுத்துவோம். அதற்காகக் குரல் எழுப்புவோம்.மூன்றாவதாக சம்பந்தப்பட்ட தரப்பு களை அமைதி முயற்சிக்குக் கொண்டு வரத் தூண்டுவோம்.கடைசியாக பிணக்குகளில் சம்பந்தப் பட்ட தரப்புகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடு ஒன்று உள்ளது. "பாரிஸ் கோட்பாடு" எனப்படும் இந்த இணக்கம், போரில் ஈடுபட்டுள்ள நாட்டுக்கு நிதி (பட்ஜெட்) உதவி அளிப்பது நல்ல செயன் முறை அல்ல என்று வலியுறுத்துகிறது."பட்ஜெட்"ஊடான நிதி உதவி இல்லாமல் போகும்நாம் இணங்கியுள்ள அந்த முடிவின் படி, "பட்ஜெட்"ஊடாக வழங்கப்படும் நிதி உதவிகள் அனைத்தும் இல்லாமல் போக, அத்திட்டங்களும் ஸ்தம்பிக்கும்.கேள்வி - சர்வதேசத்தின் விமர்சனம் வெறும் விரிவுரைப் பேச்சு மட்டுமே என்ற எண்ணம் இலங்கையில் உள்ளது. உங்களின் இந்த சொற்கள் தொடர்ந்து செயல்களாக மாற்றப்படாத வரையில் அந்தச் சொற்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று (இலங்கை) அரசு கருதுகின்றதே........?பதில்- இலங்கைக்கு "லெக்ஸர்" (விரிவுரை) வழங்க வேண்டியது அவசியம் என சர்வதேச சமூகம் நினைக்கவில்லை. காசோ லைகளில் கையெழுத்திடுவதை மட்டுமே நாம் நிறுத்துவோம். அதைக்கூடப் பகிரங்கமாகச் செய்ய வேண்டும் என்றில்லை.வெளியே பகிரங்கப்படுத்தாமல் நீண்ட காலத்துக்கு முன்னர் இது தொடர்பாக வரையறை செய்யப்பட்ட வழிகாட்டல்களை இப்போது பின்பற்றினால் மட்டுமே போதும்.இலங்கைக்குப் போதிப்பது தடுக்கப் படக்கூடாது எனச் சிலர் கருதினாலும், பெரும்பாலான நிபுணத்துவ இராஜதந்திரிகள் எப்போதுமே போதிக்கும் வேலையைச் செய்யமாட்டார்கள்.ஒரு விடயம் குறித்து உலகம் என்ன கருதுகின்றது என்று கூறுவதுடன் அவர்கள் அமைந்துவிடுவார்கள்.நாட்டில் நடைபெறுவது தொடர்பான எமது கருத்துணர்வை வெளிப்படுத்துவதற்கு, அது தொடர்பான சர்வதேச சமூகத்தின் மௌனத்தை எடைபோடு வதே சிறந்த வழியாகும். என்றார் அவர்.

Monday, February 04, 2008

சிங்களத்தின் 60 ஆண்டுகால இன அழிப்பினை வெளிப்படுத்தும் நோர்வே பொருட்காட்சி

























































தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறைக் கொடுமைகளையும், தாயக மக்களின் இன்றைய நிலைமைகளையும் வெளிப்படுத்தும் வகையிலான பொருட்காட்சி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
தமிழர் வள ஆலோசனை மையத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இப்பொருட்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10.02.08) நாள் வரை நடைபெறுகின்றது.
இதில் முப்பரிமாண மாதிரி அமைப்புக்கள் (3 dimension models), ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய காலத்திலிருந்து இற்றைவரையான 60 ஆண்டுகளாக தமிழர்கள் மீது கொடிய இன ஒடுக்குமுறையினை சிங்களம் கட்டவிழ்த்த விட்டு வருகின்றது. இன்றைய நிலையில் தமிழர்கள் மீதான பாரிய இன அழிப்பினை மேற்கொண்டுள்ளது என்பதனை வெளிப்படுத்தும் வகையில் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமைகளை நோர்வேஜிய மக்களுக்கும் நோர்வேயில் உள்ள தமிழ் இளையோர்களுக்கும் எடுத்துரைப்பதே பொருட்காட்சியின் முதன்மை நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முப்பரிமாண மாதிரிகள்
மக்களின் வாழ்விடங்கள், பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள், வணக்கத்தலங்கள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை, மீன்பிடித்தடையால் தமிழ் மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், 50 000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு, ஏ-9 பாதை மூடப்பட்ட நிலையில் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழும் யாழ். குடாநாட்டு மக்களின் அவல வாழ்வு, இராணுவ சுற்றிவளைப்புகளுக்கு உட்பட்டுள்ள தமிழ்ப் பாடசாலைகள் போன்ற இராணுத்தின் கொடூர நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண மாதிரிகள் அமைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஒடுக்குமுறைக் கொடுமைகளையும் அவலங்களையும், வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் மற்றும் தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாட்டினை வலியுறுத்தும் வகையிலான வராலாற்று ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, காணொளியிலும் காண்பிக்கப்படுகின்றது.
நோர்வே ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள்
தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக நோர்வேஜிய நாழிதழ்களில் நோர்வே தமிழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.










சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள்- தமிழர்களுக்கு கறுப்பு நாள்











சிறிலங்காவின் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாளினை கறுப்பு நாளாக அடையாளப்படுத்துமாறு நோர்வே தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் பணிமனைகளுக்குச் செல்லும் போது கறுப்புப் பட்டி அணிந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, February 03, 2008

இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள போர்: கொழும்பு ஊடகம்

பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன.
ஆனால் இருபக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:கடந்த திங்கட்கிழமை (28) முற்பகல் 9:15 மணியளவில் ரஸ்யத் தயாரிப்பான அன்ரனோவ்-32 ரக வானூர்தி உயர் அதிகாரிகளுடன் பலாலியில் தரையிறங்க ஆயத்தமாகிய போது பீரங்கி எறிகணைகள் பலாலி தளத்திற்குள் வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. யாழ். குடாநாட்டில் உள்ள படையினரின் தலைமையகம் பலாலித் தளமாகும்.வானூர்தியில் இருந்த உயர் அதிகாரிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சக தலைமை அதிகாரி ஏயர் மார்சல் டொனால்ட் பெரேரா ஆகியோர் இருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படையணியின் பதக்கம் அளிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.பூநகரியின் கல்முனையின் முனைப்பகுதியில் இருந்து இரு 130 மி.மீ பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகளில் 15 எறிகணைகள் பலாலி தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தன.இத்தாக்குதலில் 55 ஆவது படையணியைச் சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தும் படி யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ உத்தரவிட்டிருந்தார். வான் படையின் வானூர்திகளும் தாக்குதலை நடத்தியிருந்தன. எனினும் விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை நகர்த்தியிருக்கலாம் என படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை விரைவாக நகர்த்தும் திறன் கொண்டவர்கள். உழவு இயந்திரங்களின் உதவியுடன் அவர்கள் பீரங்கிகளை தாக்குதலின் பின்னர் விரைவாக நகர்த்தி விடுவதுண்டு.பூநகரியின் கல்முனை முனைப்புள்ளியானது விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதாவது இப்புள்ளியில் இருந்து 27 கி.மீ தூர வீச்சிற்குள் யாழ். குடாநாட்டின் பிரதான தளம் அடங்குவது குறிப்பிடத்தக்கது.130 மி.மீ. ரக பீரங்கியின் தூரவீச்சு 27.5 கி.மீ ஆகும். எனவே கல்முனைப் புள்ளியில் இருந்து விடுதலைப் புலிகளால் பலாலித் தளத்தை முடக்க முடியும். விடுதலைப் புலிகள் வசம் நான்கு 130 மி.மீ பீரங்கிகளும், இருபது 122 மி.மீ பீரங்கிகளும், எண்பது 120 மி.மீ மோட்டார்களும் உண்டு என நம்பப்படுகின்றது.பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் பயணத்தை தடுப்பதே இத்தாக்குதலின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. எனினும் கவசத் தாக்குதல் படையணியின் விழா திட்டமிடப்பட்ட வகையில் நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி சந்திரசிறீ பங்குபற்றியிருந்ததுடன், 8 அதிகாரிகளும், 125 படையினரும் அணிவகுப்பு மரியாதையை வழங்கியிருந்தனர்.கவசத்தாக்குதல் படையணியானது சரத் பொன்சேகாவின் மூளையில் இருந்து உதயமாகிய உத்தியாகும். படையினரின் நகர்வுத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளுடன் ஒப்பிடும் போது அதன் சுடுதிறனும் அதிகமாகும். எனினும் இப்படையணிக்கு தேவையான விநியோகங்கள் அதிகமாகும். அதாவது அவர்களின் வாகனங்களை பராமரிப்பதற்கு தேவையான படையினரும் அதிகம்.சில படை நடவடிக்கைகளில் இலகு காலாட் படையினரின் நகர்வுத்திறன் மிகவும் குறைவானதாகும். குறிப்பாக "வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையை குறிப்பிடலாம். இதன் போது விடுதலைப் புலிகளின் நேரடியற்ற சூடுகளில் அதிகளவான இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் கவசத்தாக்குதல் படையணியினரின் உருவாக்கத்தின் மூலம் இராணுவத்தினரின் இழப்புக்களை குறைக்க முடியும். அதாவது கவச வாகனத்தின் கவசத்தகடுகள் தாக்குதல்களில் இருந்து துருப்புக்களை காப்பாற்றலாம்.கவசத்தாக்குதல் றெஜிமென்ட்டானது 3 ஆவது சிலோன் இலகு காலாட்படை பற்றலியன், 10 ஆவது சிங்க றெஜிமென்ட், 4 ஆவது கஜபா பற்றலியன், 5 ஆவது மற்றும் 6 ஆவது கவச படைப்பிரிவுகள் (இவை புதிதாக உருவாக்கப்பட்டவை) ஆகிய பற்றலியன்களை கொண்டது.இப் படையணி மீது விடுதலைப் புலிகளுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் நாள் கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற கவசத் தாக்குதல் படையணியின் ஆரம்ப விழாவின் போதும் விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதலை நடத்தியிருந்தனர்.விழாவை ஆரம்பிப்பதற்குரிய விளக்கை எற்றியவுடன் அந்தப் பகுதியில் 34 எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருந்தன. அதன் போது இந்த பிரிகேட்டின் கட்டளைத் தளபதி லெப். கேணல் ரால்ஃப் நுகெரா, லெப்.கேணல் சுமித் அத்தப்பத்து, மேஜர் ஹரேந்திர பீரீஸ் ஆகியோரும் மேலும் இரு அதிகாரிகளும் காயமடைந்திருந்தனர்.2006 ஆம் ஆண்டு முகமாலையில் நடைபெற்று தோல்வியில் முடிந்த படை நடவடிக்கையின் போது இப்படையணி ரி-55 ரக பிரதான போர் டாங்கிகள் உட்பட பல கவசவாகனங்களை இழந்திருந்தது.இதனிடையே இப் படையணி கடந்த புதன்கிழமை முகமாலை நாகர்கோவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் பங்குபற்றி உள்ளது. 53 மற்றும் 55 ஆவது படையணிகளின் படையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கவசத்தாக்குதல் படையணி ரி-55 ரக பிரதான போர் டாங்கிகளை பயன்படுத்தியிருந்தது.இதன்போது 2 படையினர் கொல்லப்பட்டதாகவும் 6-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கவசத் தாக்குதல் படையணி பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளதால் வடபோர்முனையில் படை நடவடிக்கைகள் அதிகரிக்கலாம். படையினர் ஆனையிறவை நோக்கி முன்நகர்வதுடன், கிளிநொச்சியையும் கைப்பற்ற முயற்சிக்கலாம். இப்பகுதிகளின் திறந்த தரையமைப்பு கவசத் தாக்குதல் படையணியின் நடவடிக்கைக்கு சிறந்தது.இதனிடையே தென் சிறிலங்காவில் தாக்குதல் அச்சங்கள் அதிகரித்துள்ளன. இந்த அச்சம் நேற்று சனிக்கிழமை காலை தம்புள்ளப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் மேலும் அதிகரித்துள்ளது. இத்தாக்குதலில் பேருந்தில் இருந்த 20 பேர் கொல்லப்பட்டதுடன், 50-க்கும் அதிகமானோர் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த வருடத்தில் இடம்பெற்ற 2 ஆவது குண்டுவெடிப்பு இதுவாகும். முதல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த வாரம் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 11 பாடசாலைச் சிறுவர்கள் உள்ளிட்ட 20 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.தட்சணாமருதமடுப் பகுதியில் உள்ள றோமன் கத்தேலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் இருந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் எற்றிச்சென்ற சென்ற பேருந்தே தாக்குதலில் சிக்கியது. இத்தாக்குதலில் மேலும் 8 பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.படையினரின் ஆழ ஊடுருவும் படையினரே இத்தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இரு பக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-->

Saturday, February 02, 2008

இந்திய இராணுவ உதவியை நிறுத்தக் கோரும் ஒரு லட்சம் கையெழுத்துகள் ஒப்படைப்பு





























சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ உதவி செய்யக்கூடாது என்று தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மட்டும் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களை ஒப்படைக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
உடுமலைப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஒரு இலட்சம் கையெழுத்துகள் ஒப்படைப்பு நிகழ்வுக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.
பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக திரண்டிருந்தனர்

Friday, February 01, 2008

சிறிலங்கா மீதான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் செயற்திறன் அற்றவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமூகத்தின் கவனம் செறிவாகி வருகின்ற போதிலும் முக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் மந்தமாகவும், செயற்திறன் அற்றும் உள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமூகத்தின் கவனம் செறிவாகி வருகின்ற போதிலும் முக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் செயற்திறன் அற்றவையாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை அனுமதிக்க சம்மதித்ததன் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தப்பிப் பிழைத்த போதிலும், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைப்பதனை பின்னர் அது நிராகரித்துள்ளது.
எனினும் சிறிலங்கா மீதான முக்கிய நாடுகளின் நடைவடிக்கைகள் காத்திரமானவையாக இல்லை. மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து அமெரிக்கா அரசின் மிலேனியம் சவால்களுக்கான நிதியம் 110 மில்லியன் டொலர்கள் உதவியை நிறுத்தியுள்ளது. பிரித்தானியாவும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி 3 மில்லியன் டொலர்கள் உதவியை நிறுத்தியுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் சிறிலங்காவில் 1,100-க்கும் அதிகமானோர் கடத்தப்பட்டு காணாமல் போய் உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள்.
இரு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. சட்டவிதிகளை பயன்படுத்தி கொழும்பில் எழுந்தமானமாக பெருமளவான தமிழ் மக்கள் கைது செய்யப்படுவதுடன், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள், பொதுச்சேவை பணியாளர்கள் ஆகியோரும் இலங்கையில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.