Saturday, October 28, 2006

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிறீலங்கா

சண்டையும் சமாதானமும் சமாதானத்துக்கான சண்டையுமாக காலத்தை இழுத்தடிக்கும் முனைப்புடன் சிங்களப் பேரினவாதம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. கால இழுத்தடிப்புடன் தமிழினத்தின் கழுத்தறுக்கும் விருப்புடன் எதிர்ப்படும் நெருக்கடிகளைக் கடந்து கொண்டிருக்கின்றது. காலனியாட்சியதிகாரத்தின் கை மாற்றத்துடன் இலங்கையின் சிறுபான்மையினங்களின் சுயாதிபத்தையும் இருப்பையும் கொல்லையில் குழிபறித்து மூடிவிடும் வேகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

.

தனிச்சிங்களச் சட்டம், இனக்களையெடுப்பினை அவாவி நிற்கும் இனக்கலவரங்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்று காலத்துக்காலம் ஆட்சியதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட சிங்களப் பேரினவாதக்கட்சிகள் தொடர்பறாத நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சிறுபான்மை இனங்களின் தனிதன்மையைக் குலைப்பதிலும் தொடர்பு பட்ட வாழ்விடப் பிரதேசத் தொடர்புகளையும் சீர் குலைக்கும் நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன

.

ஆதிக்க வாதத்திற்கெதிரான சிறுபான்மையினங்களின் அகிம்சை அரசியல்ப் போராட்டங்கள் தோல்வியைக் கண்டுவிட ஆயுதப்போராட்டம் தலையெடுத்து இன்று வீறுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. காலமாற்றத்திற்கேற்ப தந்திரோபாயங்களின் வடிவினை மாற்றிக் கொண்ட பேரினவாதமும் பேச்சு வார்த்தைகள் இழுத்தடிப்புகள் என்ற போக்கில் அன்னியத் தலையீடுகளின் ஆதரவுடன் இன விடுதலையின் கூர்மையினை சிதறடிக்கும் காரியங்களில் ஈடு பட்டுக்கொண்டிருக்கின்றது

.

அவற்றின் தொடர்பாக திம்புப் பேச்சு வார்த்தைகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் இராணுவ மாறுதலின் பின்னணியில் உருவாக்கப் பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் செயற்பாடும் நடைமுறைக்கு வந்தது. நீண்ட ஒரு போராட்டத்தின் சிறு அங்கீகாரமாக தமிழ்த் தேசியத்தின் பிரதேசத் தொடர்பு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வடக்குக் கிழக்குப் பிரதேசம் இணைக்கப் பட்ட மாகாண அலகாக அங்கீகரிக்கப்பட்டது. இணைக்கப்பட்ட பிரதேசத்தின் ஆட்சியதிகாரம் என்ற அளவில் மாகாண அரசு என்ற நொண்டிக் குதிரையின் சாரதியாக இந்தியாவை ஏற்றிவிட்ட குள்ள நரி ஜே ஆர் தனக்கு நேர இருந்த நெருக்கடியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது

.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒரு கூறாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வடக்குக்கிழக்கின் இணைப்பை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் முன்னெடுக்காது தொடர்ந்து வந்த அரசியல் சுழியில் அமிழ்ந்து கரை ஒதுங்கிவிட்டது. குறிப்பிட்ட காலத்தின் முடிவிற்குள் சுதந்திரமான சர்வ சன வாக்கெடுப்பின் மூலம் இணைப்பின் தேவையை உறுதிசெய்ய வேண்டுமென்ற சரத்தை உள் நுழைத்த குள்ள நரி ஜே ஆர் இலங்கையின் ஒற்றையாட்சி அதிகார வரம்புக்குள் அடங்க முடியாத மாற்றம் இதுவென்பதை அறிந்திருந்தும் காத்திரமான சட்ட மாற்றத்தைக் கொண்டு வரும் பெரும்பான்மையிருந்தும் அதனைச் செய்யாது விட்டு விட்டது

.

இன்று தமிழ் மக்களின் பிரதேசத் தொடர்பை கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டிருந்த அங்கீகாரம் இலங்கையின் ஒற்றையாட்சியதிகாரத்தின் வரையறைக்குள் அமைந்த நீதித் துறையின் பார்வையில் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கின்றது. இது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. ஆச்சரியமானது என்னவென்றால் இலங்கையின் ஒற்றை ஆட்சியதிகாரத்தின் வரையறைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் ஒற்றை ஆட்சியதிகாரத்துக்கு மாற்றீடாக சமஷ்டி வரைபை முன்மொழிந்து நிற்கும் சர்வதேசமும் அதன் அவசியம் பற்றி வாய் கிழியக் கதைக்கும் இந்தியாவும் தமிழ் அரசியல் வாதிகளும் ஏதோவொரு கடக்க முடியாத பெரிதொரு தடை வந்ததைப் போல மலைத்து நிற்பதேயாகும்

.

சுவிஸில் முன்னெடுக்கப் படவிருக்கின்ற பேச்சு வார்த்தைகளில் எதைப்பற்றிப் பேசுவது என்று மலைத்து நிற்கும் தமிழ்த் தரப்பும் பேசுவதற்கு எதுவுமில்லாது சர்வ தேசத்தின் வற்புறுத்தல் காரணமாக பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் சிங்களப் பேரினவாத அரசிற்கும் பேசுவதற்குக் காத்திரமான விடயமாகவும் இலங்கையின்

இனப்பிரச்சினையின் தீர்வை சர்வதேச சமூகம் உண்மையிலேயே அவாவி நிற்கின்றதென்றால் அதன் உண்மை முகத்தை வெளிப்படுத்த அதற்கு அருமையான சந்தர்ப்பமாக அரசியல் சாஸன மாற்றத்தை உருவாக்கும் ஒரு மேடையாக சுவிஸ் பேச்சு வார்த்தைகளைப் பயன் படுத்தலாம்.

சிறிலங்கா சுதந்திர முன்னணி அரசும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அவசர அவசரமாக ஒன்றிணைவது இந்த நீதி மன்றத்தீர்ப்பால் விளைந்த அடுத்தது என்ன என்ற கேள்வியாலும் அதற்கான வெளிப்பாடாக சிங்களை பேரினவாதத்தின் முகமூடி கிழிந்து சர்வ தேசத்தின் முன்னால் தலை குனிந்து நிற்கப் போகும் அவலத்தைச் சரி செய்து கொள்ளவே அல்லாமல் தமிழ் மக்களினது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளவோ இல்லை அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவோ அல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க முயலும் அதி தீவிரவாதக் கட்சிகளான ஜே .வி .பி போன்ற துட்ட சக்திகளிடம் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவே என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்

.

அரசியல் நிலமை அவ்வாறு இருக்க , அறுதிப் பெரும்பான்மையோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் இதய சுத்தியோ இல்லாத சிங்கள ஆட்சியாளருக்கு எதிரான நாடாளுமன்றப் பகிஷ்கரிப்போ புறக்கணிப்போ எதுவித மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

.

இந்த நீதிமன்றத் தீர்வினால் இலங்கையில் ஒரு அரசியல் சாஸன மாற்றத்தை கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை மெள்ள மெள்ளப் புரிந்து கொண்டு வரும் சர்வதேசத்தின் நாடியோட்டத்தைச் சரிவரக் கணித்துக் கொண்டவகையில் இலங்கைத் தீவில் சமஸ்டி ஆட்சியதிகாரத்தின் அடிக்கல்லை நடுவதன் மூலமே எமது போராட்டத்தை வென்றெடுக்கலாம்

.

ஆகவே சுவிஸில் நடைபெறப் போகும் பேச்சு வார்த்தகள் தமிழர் தரப்பைப் பொறுத்தளவில் மிக முக்கியமாக இருக்கப் போகின்றது என்பதையே காலம் உணர்த்தி நிற்கின்றது. சிங்களப் பேரினவாதத்தின் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்பதையும் நாம் புரிந்து கொண்டதையும் இந்த மேசை வெளிப்படுத்தி நிற்கப் போகின்றது

.

Saturday, July 22, 2006

இன்னொரு பாச்சலுக்குத் தயாராகிறதா அமெரிக்கா ?

மத்திய கிழக்கில் யுத்தம் வெடித்துக் கிளம்பியுள்ளது. யுத்தம் ஆரம்பமானதற்கு என்னென்னவோ காரணங்களைக் கூறிக்கொண்டாலும் யுத்தம் தொடர்ந்து செல்வதற்கும் செல்லப் போவதற்கும் பல காரணங்களை எதிர்வு கூறலாம். இந்த யுத்தத்தின் மூலம் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பல தரப்புக்கும் இருக்கின்றது. உலக மயமாக்கல் பொருளாதார நிர்ப்பந்தத்தின் மூலம் ஏக வல்லரசாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்கா எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் இன்னும் தீவிர நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்த இடம் இருக்கின்றது

.

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு எதிராக வெளிக்கிளம்பும் இஸ்லாமியத் தீவிர வாதமோ இல்லை அமெரிக்கா கூறிக்கொள்வதைப் போல தலிபான் பயங்கர வாதமோ முதலில் இஸ்ரவேலையே குறி வைக்கும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள இஸ்ரவேல் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கை தொடர்பான செயற்பாடே இன்று காசா மற்றும் லெபனான் நகரங்களில் இஸ்ரவேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதல் நடவடிக்கைகளாகும். அதே நேரம் இராக்கின் ஆக்கிரமிப்பின் பின்னான இராணுவ கருத்தியல் தளத்தில் அரபு உலகத்தின் செயற்பாடு எவ்வாறு அமையக் கூடும் என்பதையும் அமெரிக்கா நாடி பிடித்தறிய முயலும் ஒரு உளவியல் நடவடிக்கையுமாகும்

.

அதே நேரம் இஸ்ரவேலின் நேரடிப் பிரசன்னம் மத்திய கிழக்கு அரசியல் சமநிலையில் எவ்வாறு விமர்சனத்தை உருவாக்கும் என்பதையும் அமெரிக்கா அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றது. இன்றைய நிலமை அமெரிக்காவின் எண்ணத்திற்கு மிகவும் சாதகமானதாகவே காணப்படுவதையிட்டு அமெரிக்கா மகிழ்வடையலாம். இதை விளங்கிக் கொள்ள 1991 இல் ஈராக்கின் முன்னைய சர்வாதிகாரி சதாம் குசேன் குவைத்தை ஆக்கிரமித்த காலப் பகுதியின் மனநிலையை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அன்று குவைத்தை மீட்க சர்வதேசப் படைகள் சவூதியிலிருந்து புறப்பட்டபோது சதாம் குசேன் ஸ்கட் வகை ஏவுகணைகளை வகை தொகையின்றி இஸ்ரவேலின் மீது ஏவி யுத்தத்தில் இஸ்ரவேலையும் இழுத்து விடுவதற்கான அத்தனை தந்திரங்களையும் பிரயோகித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்ரவேலும் பொறுமையிழந்து கருத்து வெளியிட்டபோது அனைத்து அரபு உலகும் ஒன்று சேர்ந்து இஸ்ரவேலின் யுத்த முஸ்தீபுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் தாங்களும் இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கப் போவதாக சபதம் செய்தன

.

இதனால் பயந்து போன அமெரிக்கா இஸ்ரவேலை கடைசி வரை யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காததுடன் பயந்து ஓடிய ஈராக் இராணுவத்தை ஈராக்கினுள் நுழைந்து தாக்குவதையும் தவிர்த்துக் கொண்டது. ஆனால் 2001 இல் இடம் பெற்ற இரட்டைக் கோபுரத் தகர்ப்பு அமெரிக்காவின் நீண்ட நாள் கனவாகிய மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது என்பதை இலகுவாக்க முதல் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கால் பதித்தது

.

அன்று அமெரிக்கா எடுத்த கபடத்தனமான தந்திரம் நிறைந்த கோஷம் தான் பயங்கர வாதத்திற்கு எதிரான போர் ஆகும். அமெரிக்காவில் இடம் பெற்ற இரட்டைக் கோபுரத்தகர்ப்பு நடவடிக்கையானது உலகின் பல நாடுகளை அச்சுறுத்தியது. இஸ்லாமியத் தீவிர வாதம் அல்லது பயங்கரவாதம் பற்றிய பயம் அனைத்து நாடுகளையும் பிடித்து உலுக்கி நின்றது. அதனால் கிளர்ந்தெழுந்த ஆதரவு அமெரிக்காவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சலை அமெரிக்காவிற்கு வழங்கியது. அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோஷத்துடன் அனைத்து நிலமைகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மத்திய கிழக்கில் உறுதியாகக் கால் பதித்துக் கொண்டது

.

சதாம் குசேனின் அதிகப் பிரசங்கித் தனத்தை அடக்கமில்லா துடுக்குப் பேச்சுக்களை தங்களிடம் இருக்கக் கூடிய மீடியா பலத்தினால் மிகப் பெரிய பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருக்கும் சர்வாதிகாரியாக பூதாகாரப் படுத்தி அவரால் ஏற்படப் போகின்ற பேரழிவுகளில் இருந்து உலகைக் காப்பாற்றும் பேருபகாரியாக தன்னை அடையாளப் படுத்தி ஈராக்கையும் இலகுவாக விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டது. அமெரிக்காவின் பேராசையான ஈராக்கின் எண்ணை வளத்தை உறிஞ்சும் கனவு இன்றி கேள்வி கேட்பார் யாருமின்றி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஈராக்கில் மேற்கொண்டிருக்கும் யுத்தத்துக்கான செலவை ஈராக்கியர்களே மனமுவந்து எண்ணெய் மூலம் தீர்த்துக் கொண்டிருப்பதான மாயையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக பெரும் எண்ணெய் ,இயற்கை வாயு வளத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஈரான் அமெரிக்காவின் அடுத்த குறியாக இருக்கின்றது.

அமெரிக்காவின் பயங்கர வாதத்துக்கு எதிரான கோஷமும் , .நாடுகள் சபையினதும் சர்வதேச சமூகத்தினதும் அபிப்பிராயங்களையும் வேண்டுகோள்களையும் அலட்சியப் படுத்தி அமெரிக்கா ஈராக்கைக் கையகப் படுத்திக் கொண்ட தான் தோன்றித் தனமான செயற்பாடு இன்று அரபுலகின் மன உறுதியைக் குலைத்ததுடன் அமெரிக்காவிற்கு எதிரான சிறு முணுமுணுப்புக் கூட தங்களையும் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தி விடும் என்ற பயத்துடன் தங்களை ஆட்சியிலிருந்தும் அகற்றிவிடும் என்ற நடுக்கத்தையும் அரபுத் தலைவர்களிடமும் அரசாங்கங்களிடமும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் இதுவரை அமெரிக்கத் தீவிர எதிர்ப்பை தன் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த லிபியாவின் ஜனாதிபதி முஹம்மர் கடாபி எந்த வித நிபந்தனையுமின்றி அமெரிக்காவிடம் சரணடைந்ததோடல்லாது சர்வதேச பரிசோதனையாளர் குழுவை தன் நாட்டில் ஆயுதப் பரிசோதனை செய்வதையும் அனுமதித்துள்ளார். தனது ஜனாதிபதி மாளிகை மீது குண்டு வீசி தன்னால் மிகவும் நேசிக்கப் பட்ட வளர்ப்பு மகள் கொல்லப்பட்ட போதும் அசைந்து கொடுக்காதிருந்த கடாபி ஈராக்கின் ஆக்கிரமிப்பின் பின் தன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டுள்ளார் என்பது நோக்கத் தக்கது

.

இதை புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கா சிறு பொறியாகக் கிளம்பிய பிரச்சனையை ஊதி விட்டுப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றது. ஈராக்கில் குடி கொண்டிருக்கும் அமெரிக்கப் படைகள் ஈரானில் காலடி எடுத்து வைக்கும் போது முகாஜிதீன்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளான சவூதி அரேபியா,.யேமன், சிரியா, போன்ற நாடுகளின் கவனத்தைத் திருப்பும் முயற்சியாக இன்னுமொரு போர்க்களத்தைத் திறக்க அமெரிக்கா எண்ணியுள்ளது. அந்தப் போர்க்களத்திற்கான முன்னோடி நடவடிக்கையாகவே இன்றைய மத்திய கிழக்குப் பிரச்சினையைப் பார்க்க வேண்டியுள்ளது

.

1991

இல் இஸ்ரவேலின் பங்களிப்பை எதிர்த்து போர் வெறி கொண்டு சூழுரைத்த அரபுலக நாடுகள் இன்று இஸ்ரவேலே வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டிருக்கும் நிலமையில் கூட பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்கப் பட வேண்டும் என்று குரல் எழுப்புவதற்கப்பால் எதுவும் செய்ய முடியா மன பலமற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.ஹாமஸுடன் இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட முறுகல் நிலையிலும் எகிப்து உட்பட பல அரபு நாடுகள் பேச்சு வார்த்தையையே வேண்டி நின்றன. 1969 இல் ஏற்பட்ட ஆறு நாள் யுத்தம் போன்ற எந்த தீவிர கருத்துகளையும் அவை வெளிவிடாது அடக்கியே வாசிக்க விரும்புகின்றன

.

நாடுகள் கோபி அன்னானின் தெற்கு லெபனானில் சர்வதேச படையை நிலை நிறுத்துவதே இம் முறுகல் நிலையைத் தணிக்க உதவும் என்ற ஆலோசனையையும் இஸ்ரவேல் உதாசீனம் செய்துள்ளது. அதே நேரம் பணக்கார நாடுகளான G 8 நாடுகளின் கூட்டத்தில் பிரான்ஸும் ரஷ்யாவும் இஸ்ரவேலின் விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அலட்சியப் படுத்தியுள்ளது. G 8 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையையும் யாரும் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை

.

இஸ்ரவேலின் விமானத் தாக்குதல்கள் பல உயிர்களைப் பலி வாங்கியுள்ளதுடன் பல்லாயிரக் கணக்கானவர்களை லெபனானில் இருந்து வெளியேற்றியுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா உள்பட பல நாடுகள் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி தத்தமது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியையேனும் பிரச்சனையைத் தணிவுக்குக் கொண்டு வருவதில் காட்டவில்லை. இஸ்ரவேலின் தொடர் நடவடிக்கைகளைப் பார்த்து தங்களால் திகைத்துப் போய்த்தான் நிற்க முடிகின்றதேயன்றி அவர்களைக் கட்டுப் படுத்த முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரியொருவர் பூசி மெழுகியுள்ளார்

.

அமெரிக்காவின் அடுத்த பாச்சலுக்கு அரபுலகில் ஏற்படக் கூடிய எதிர்ப்பு எவ்வாறு இருக்கக் கூடும் என்பதை நாடி பிடித்துப் பார்க்க முயலும் அமெரிக்கா இப் பிரச்சனையை இலகுவில் தணிவிற்குக் கொண்டு வர அனுமதிக்காது. அதே நேரம் இரண்டு இஸ்ரவேலிய இராணுவத்தைக் கைப்பற்றி வைத்து இத் தீப்பொறியைக் கொழுந்து விட்டெரியச் செய்திருக்கும் அல்லது அமெரிக்காவின் பரிசோதனையை வெற்றி கரமாக நடாத்துவதற்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கும் ஹெஸ்புல்லா இயக்கத்தின் தலைவரான

ஷேக்

ஹாசன் நஸ்ருல்லா போரைத் தவிர வேறு தெரிவுகள் இல்லையென்று சூளுரைத்துள்ளார்

.

மத்திய கிழக்குப் பிரச்சனை அமெரிக்காவின் அடுத்த பாச்சலுக்கான கள நிலமையை ஆராயும் முகமாகவே திறக்கப் பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கையில் இஸ்ரவேலின் பங்களிப்பும் நிச்சயம் உண்டு என்பதும் தெளிவாக்கப் பட்டுள்ளது

.

அதே நேரம் அமெரிக்காவின் ஏக தனி சுரண்டல் கொள்கையை இனியும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க ரஷ்யாவும் பிரான்ஸும் தயாராகவில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் பலனைப் பங்கு போட்டுக் கொள்ளுமா? அல்லது தனிப் போக்கிலேயே அலட்சியத்துடன் முன்னேறிச் செல்லுமா ? என்பதை அமெரிக்காவின் வருங்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டும்

.

மத்திய கிழக்கு பிரதேசம், போர் நடவடிக்கைகளால் சின்னாபின்னமாக்கப் பட்டாலும் மூன்றாம் உலக மகாயுத்தமொன்றை எதிர்கொள்ள எந்த ஒரு வல்லரசும் தயாராகவில்லை என்பதையும் நம்பலாம்

.