Thursday, January 26, 2006

சொர்க்கத்தின் துயரம் -தொடக்கம் பிப்ரவரி 04 1948

பெப்ரவரி 04 . இந்து சமுத்திரத்தின் சொர்க்கத்தில் முதல் கண்ணீர்த் துளி துளிர்த்த நாள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பேர் போன வெள்ளையர் பிரிந்திருந்த இராட்சியங்களை ஒன்று படுத்தி ஆண்டபின் கண்ணீரையும் குருதியையும் சாபமாகக் கொடுத்தபடி கப்பலேறிய நாள்.

யாழ், வன்னி,கோட்டை, கண்டி இராட்சியங்கள் என விரிந்து சுதந்திரத்துடன் வாழ்ந்திருந்த மக்களை நிருவாக வசதி கருதி ஒரு நாடாக்கி ஒரு வேதனையின் வரலாற்றை விருப்பமுடன் உருவாக்கி விட்டுச் சென்ற நாள்.

ஒரே நாடாக இருந்ததென்னவோ 1863இல் கண்டி இராட்சியம் கடைசி கடைசியாக ஆங்கிலேயரினால் கைப்பற்ற முடிந்ததிலிருந்து 1948 இல் கப்பலேறிய காலம் வரை ஒரு நூறு ஆண்டுகளிற்கும் குறைவான காலம் என்றாலும் ஒரு நூற்றாண்டுக்குத் தேவையான கண்ணீர்க் கதைக்கு வழி சமைத்து விட்டிருக்கின்றது.

இன்றைய உலக மனிதத்தின் வேதனைகளிற்கு அனைத்து வழிகளிலும் காரியமாற்றிப் போயிருந்தது சூரியனை அஸ்தமிக்க விடாது திமிர்த்த ஆங்கிலேய சாம்ராச்சியம்.

300 இராச்சியங்களைக் கொண்டிருந்த இந்திய உபகண்டத்தில் மூன்று நாடுகளை உருவாக்கியதும் மத்திய கிழக்கில் முல்லாக்களின் இடையே யூதரை வைத்ததும் அடிமைகளின் தேசத்தை ஆபிரிக்காவில் உருவாக்கிப் போனதும் வெள்ளையரின் ஆணவம்.

நூறு ஆண்டுக்கால போரை விடாது நடாத்தியவர்களும் சிறு யுத்தங்களை இணைத்து மகா யுத்தமாக்கியவர்களும் போரின்றி உலகம் இல்லை என்பதை நடைமுறைப் படுத்துபவர்களும் அவர்களின் வாரிசுகளே.

இலங்கையின் இன்றைய கண்ணீருக்கும் இரத்தத்திற்கும் பதில் சொல்லவேண்டியவர்களே நீதியாளர்களாக வேஷம் போடுவதே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துக்கம்.

வெள்ளையரின் வெளியேற்றத்தை ஒட்டி அநகாரிக தர்மபாலா தலைமையில் விழித்தெழுந்த சிங்களப் பேரினவாதத்தின் முன் தமிழ்த் தேசியவாதம் போட்டி போடவிரும்பாது போனதும் தமிழ்த் தலைமைகள் அரசியல்ச் சாணக்கியம் அற்ற சவடால்களையும் சரணாகதிகளையும் கொண்டியங்கியதும் இன்று முழுத்தமிழினத்தின் துயரத்தின் சாட்சியமாக நின்று நிலைக்கின்றது.

சரித்திரத்தின் பாடங்களை படிக்கத்தவறியதும் சாரட்டு வண்டிப் பவனிகளும் இங்கிலாந்துப் பாராளுமன்ற வாதப் பிரதிவாதங்களும் மட்டுமே வாழ்க்கையின் கிலாக்கியம் என்று திரிந்த தமிழ்த் தலைமைகள் சிறுகச் சிறுக கிளர்ந்தெழுந்த சிங்களப் பேரினவாதத்தின் முன் மண்டியிட்டுப் போயினர்.

அயல் தேசத்தின் ஜின்னாவின் அரசியல் சாணக்கியத்தை கண்மூடிக் காணாது விட்ட தமிழ்த் தலைமைகள் இன்று தமிழ் மண்ணில் ஓடும் கண்ணீர் ஆற்றுக்கு காரணமாகிப் போயினர்.

1948 இல் வெள்ளையரின் வெளியேற்றத்தின் போது சமத்துவமும் சகோதரத்துவமும் பேசிய சிங்களம் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே தன் கோர முகம் காட்டி நின்றது.

சட்ட மூளைகளும் சாணக்கிய மூளைகளும் வெட்கிப் போக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களைத் தன் காலடியில் போட்டு கொக்கரித்து நின்றது.

1926 இல் இலங்கைக்கு சமஸ்டியே ஒரே தீர்வு என முழங்கி நின்ற ஆக்ஸ்போர்ட் மாணவன் எச்.டபிள்யூ. பண்டாரநாயக்கவே 1958 இல் ஆட்சியிலேறிய 24 மணிநேரத்தில் தனிச் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்று சொல்லிச் செயல்படுத்தியபோது தமிழ்ச் சாணக்கியத் தலைவர்கள் எல்லாம் காணாமல்ப் போயிருந்தனர்.

அர்த்தமில்லா 50 இற்கு 50 கோரிக்கைகளும் இரத்தப் பொட்டுகளும் வட்டுக்கோட்டைக் கொட்டைப் பாக்கும் இன்று தமிழ்ப் பிரதேசம் எங்கும் ஓடும் இரத்த ஆறுகளுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

தமிழனின் தோலில் செருப்புப் போடும் வேட்கை மீதூரப் பெற்ற இலங்கரத்னவின் வாரிசுகளிடம் மண்டியிட்டுப் பிச்சை கேட்கும் ஆர்வத்துடன் காட்டிக்கொடுப்புகளை விரும்பிச் செய்யும் முனைப்புடனும் இன்றும் இருக்கும் சில மாக்களை என்னவென்று சொல்லமுடியும்.

சரித்திரதில் இருந்ததென்னவோ ஒரு காக்கை வன்னியன் என்ற போதிலும் அச்சுப் பிரதிகளாக ஆயிரக் கணக்கில் உலா வரும் இவர்கள் வேண்டும் வரம் என்னவோ ?

1948 பெப்ரவரி 04 இல் ஆரம்பித்த இந்து சமுத்திரதின் சொர்க்கத்தின் துயரம் முடிவிற்கு வரும் காலம் எக்காலமோ ?

Monday, January 23, 2006

"கோ" என்ற ஒரு சொல்

அடை மழை அடித்துப் பெய்து கொண்டிருக்கின்றது. சள சளவெனத்தரையில் மோதி அறையும் சப்தம் இரைச்சலாய்க் கேட்கின்றது. இடையிடையே ஊடு பரவி ஊதலாய் வீசி அடிக்கும் காற்றில் நீர்த்துளிகள் சிதைந்து தூவாணமாக ஜன்னலில் மோதித் தெறிக்கின்றது. நமநமத்துப் போன தரை போல மனதும் கொளகொளத்துப் போய்க் குமைந்து கொண்டிருக்கின்றது. எதனால் இப்படி நடந்தது என்ற கேள்வி விடை காணா விடலையாக இலக்கின்றி அலைந்து கொண்டிருந்தது.

மூலையில்ப் பதுங்கி விம்மித்தணியும் குழந்தைகளின் கேவல் காதுகளில் கேட்கும் நாராசமாய் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற பிரமை தான் நீடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் தூங்கி வெகு நேரமாயிருக்க வேண்டும். அறை இருண்டிருக்க கதவு இறுகச் சாத்தப்பட்டிருந்தது.

உணர்ச்சிக் கொந்தளிப்பின் வேகம் தணிய உடல் அடித்துப் போட்டது போன்ற சோர்வுடன் அவன் படுத்திருந்தான். தன்னைப் பற்றி எண்ணும் போதே தன்னிலை மறந்த கோபமும் பச்சாதாபமும் ஒன்றுசேர எழுந்தன. தன்னால் இன்று சிதைந்து போன அமைதியும் அழகும் அவனைப் பார்த்து கேலி செய்வது போன்ற பிரமை அவனை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது. முதலும் முடிவுமாய் இல்லாத தொடரும் இந்நிலை அவன் நிம்மதியை அரித்துத் தின்று கொண்டிருந்தது. உலகமே தனக்கெதிராய் செயற்படுவது போன்ற ஆவேசம் தோன்றியது. மனதின் கொந்தளிப்பு ஒரு நிலையில்ப் படியாமல் மேலும் கீழும் நழுவிக் கொண்டிருந்தது. உலகின் சூழ்ச்சிகளும் சூக்குமங்களும் தனக்கெதிராக சதி செய்வது போன்று தோன்றியது. காரணங்களை அறியும் முன் விளைவு தன் உயிரின் -அவன் நினைத்துக் கொண்டிருப்பது போல் _குழந்தைகளிலும் மனைவியிலும் இரத்தமாய் விடிந்ததே அவனைத் தூங்க விடா உழல்வில் தூக்கிப் போட்டிருந்தது.

ஒரு கணவனாய் தன்னால் செய்திருக்கக் கூடிய நன்மைகளையும் துன்பங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் சீரழிவில் இருந்து தன்னைக் காக்கக் கூடிய ஏதும் ஒரு பெரும் சக்தி தன்னால்க் காயம் பட்டுச் சிதைந்து போய் வானத்தைப் பார்த்து கையேந்தும் அவளையும் காக்கக் கூடும் - காக்க வேண்டும் என்று அவனுக்குப்பட்டது. சமூகத்தின் நெருக்குவாரங்களில் அடிபட்டுப் போகும் அவனின் ஆதங்கம் வெறியாகி அவளை மட்டும் அடித்துப் போட்டு கருக்கிக் கொண்டிருப்பது இவ்வாறு நீளும் இரவுகளில் மட்டும் அவனால் உணர முடிகின்றது. முடிந்தென்ன....... தொடரும் பகல்களிலும் முடியும் காலங்களிலும் அவளை துவைத்துப் போடும் இரக்கமில்லாத கொடியவனாய் இலகுவாய் மாறிப் போகும் கொடுமைதான் வாய்த்திருக்கின்றது.

இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது இருக்குமாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதி அவளை இரையாய் விழுங்கிக் கொண்டிருப்பதை யாரால் ஞாயப்படுத்த முடியும் அவனைத்தவிர. " கோ" என்று அவளுக்கு அரசனாயும் இறைவனாயும் வாழப் பணித்த சமுதாயம் அவனை நசுக்கிப் போடும் இடர் அத்தனையையும் ஒற்றைத்தலையில் சுமக்கும் பலி பீடமாய் அவளை ஆக்கிப் போட்டிருப்பதை உணர முடியாக் கயமையில் அவன் முழுகிப் போயிருந்தான்.

வேலையிடத்தில் இருந்து திரும்பி வந்தவன் சோபாவில் துவண்டு போய் சரிந்திருந்தான். உடல் வீட்டிற்கு வந்து விட்டிருந்தபோதும் மனம் என்னவோ வேலைத் தலத்திலேயே சுத்திச் சுத்தி நின்றது. காலையிலிருந்தே மனம் என்ன செய்வதென்ற புலனறியாக் குழப்பத்தில் சுழன்று கொண்டிருந்தது. மனம் ஒருப்பட்டு வேலையில் கவனம் செலுத்தா சதுராட்டதில் தடக்கடித்துக் கொண்டிருந்தான். பாரிய இயந்திரத்தின் இரைச்சலின் மேலாக மனதின் அங்கலாய்ப்பு அவனை திசைதிருப்பிக் கொண்டிருந்தது. இறுதி செய்ய வேண்டிய கடனின் தவணை நாளை என்பதே அவன் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. எப்படிப் பிரச்சனையைக்கடப்பது என்று கேள்வியின் இழுவல் திசையெல்லாம் ஒதுக்கப் பட்டும் தீர்வறியாக் குழப்பத்தில் மனது துவண்டு கொண்டிருந்தது. இயந்திரமாய் வேலையில் கவிழ்த்து மடித்து வந்த இரும்புத் பாளங்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தான். நெக்கு விட்டு இளகித் தேவைப்பட்ட துளைகளையும் வெட்டுகளையும் போட்டுக்கொண்டு வெளியில் வந்த துண்டங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான் உதவியாளன். சள சள வென்று கதைத்துக் கொண்டே வேலையில் ஈடுபடுபவனின் மெளனம் கண்டு அவனும் எண்ணச் சுழலில் சிக்கி வேலையிலீடுபட வந்தது வில்லங்கம். எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகையில் கண்ணில்ப் பட்ட குறையை அவனிடம் காட்ட மனம் துணுக்குற்றது. உதவியாளனின் கவனக் குறைவென்றாலும் இயந்திர இயக்குனன் என்ற வகையில் அடிக்கடி பரிசீலித்துப் பார்க்கும் கடமையும் பொறுப்பும் அவனதே என்ற நிலமையில் தவறின் முழுத் தார்மீகப் பொறுப்பும் அவனின் மீதே சுமத்தப் பட்டது. மேற்பார்வையாளரின் முன்னால் கூனிக் குறுகி நின்றபோதும் முகாமையாளரின் பார்வைக்கு எடுத்தச் செல்லப் பட்டிருக்கும் பிரச்சனையின் பூதாகரமும் அவனின் மன உளைச்சலை மேலும் தீவிரப் படுத்தியது. அவனை என்றுமே போட்டியாளனாகவே கணித்த சக வேலையாளரின் அடாவடிப் பேச்சுகளும் கேலிகளும் அவனைச் சூடாக்கவே செய்தது. அவனது எந்தப் பேச்சும் செயலும் ஒருவித அத்து மீறலாகவே கணிக்கப் படக் கூடிய சூழல் உணர்ந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். அவர்களின் உல்லாசத்திற்கும் கவலையில்லா வாழ்விற்கும் அவர்களின் பொருளாதார செழிப்பு காரணம் என்பதும் மனைவியரின் தேர்ந்தெடுப்பில் செழுமையையும் சேர்த்துக் கொண்ட புத்திசாலித்தனம் என்ற பிதற்றல்களையும் அவன் அறிந்தேயிருந்தான். நெருக்கடிகள் அவனை நெருக்கிக் கொள்ளும் வேளைகளில் தனக்கெதிராக சதிசெய்திருக்கக் கூடியவர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் அனைவரையும் அர்ச்சித்து ஆறுதல் அடைவதை வழக்காக்கிக்கொண்டிருந்தான். இன்றும் தனக்கேற்பட்ட இத் தலை
குனிவிற்கும் அவர்களின் முழுமையான சதியே காரணம் என்று வசை பாடி தன் இயலாமையையும் ஆற்றாமையையும் சமனப் படுத்திக் கொண்டிருந்தான். வீடு வந்தும் போக்க முடியா மனத்தாங்கலுடன் படுத்திருந்த அவனிடம் மனவி கேட்ட ஏதோவொன்று அசாத்திய கோபத்தை ஏற்படுத்த முஷ்டி மடக்கி மூக்கில் நேர்குத்தாக இறக்கினான். ' ஐயோ' என்று அலறி விழுந்தவளை நடிக்கும் நயவஞ்சகக் காரி என்ற எண்ணமும் தனது அத்தனை சிறுமைக்கும் மூல காரணமாய் இவளே இருக்கின்றாள் என்ற ஆற்றாமை வெறியும் ஏற்பட அவன் வெறியில் சிக்கிச் சின்னாபின்னமாக அவள் சிதைந்து போக இடையில் அகப்பட்ட சின்னக் குழந்தைகள் பந்தாக எறியப் பட வீடு இரண களமாகியது.

குடும்பம் என்பதன் அச்சுத் தெரியா அவலத்தின் சிதைவில் சிதைந்து போகும் மூலப் பொருளாக அவள் இருப்பதன் தத்துவ விசாரம் அறியாக் கயமையில் அவன் சொல்லிக் கொண்டான். அவள் என் மனைவி. என் இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமனாய்ப் பயன் பெற வேண்டியவள். சுத்தி வந்த தூகத்தின் சுழற்சியில் அவன் ஆழ்ந்து போகும் போதும் அவன் கோபத்தை தாங்கிக் கொள்ளும் தலை விரி கோல காவிரியின் வடிவம் தாங்கி பொறுமைத் தாயாகி இரத்தமும் கயமையும் நிறைந்த பூமியாய் அவள் உருமாறியபோது அவன் தூங்கிப் போய்விட்டிருந்தான்.

Thursday, January 19, 2006

கீற்றும் ஆனா ரூனாவும் -எளக்கிய பதர்களும்

கீற்று சிற்றிதழில் ஆனா ரூனா அவர்கள் எழுதிய "பயங்கர வாதத்தின் வேர்களும் விழுதுகளும்" பார்த்தேன். "துப்பட்டா பிடி" சண்டை பிடி தமிழக இலக்கியச் சூழலில் இவ்வாறான கேள்விகள் எழுவது சற்று ஆச்சரியமாகவே இருந்தது.

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தமிழர் நன்மைக்கோ தன் அரசியல் நன்மைக்கோ கூட ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி உச்சரிப்பதே பாவம் என்பது போலவும் " தமிழகம் காஸ்மீர் ஆகுமா ? " என்று கேட்டு நாகேஷின் நட்சத்திர ஜோக்கை கேட்டவர்கள் போலவும் குலுங்கிச் சிரித்து கும்மியடிக்கும் எளக்கியக்காரரும் காலில் விழுந்து கட்டவுட் வைப்பதெல்லாம் தன்மானத் தமிழனின் தனி மனித சுதந்திரம் என்று வாளாவிருக்கும் இலக்கியச் சிங்கங்களும் பெண்பித்துச் சாமியார்களின் அழுகைக்குப் பொங்கியெழுந்து ஆதரவு கொடுக்கும் அரைவேக்காடுகளும் குமுறுவதையும் கூப்பாடு போடுவதையும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அழுகிய சூழலில் இவரின் கட்டுரை மனிதம் பற்றிய சில நம்பிக்கைகளை விதைத்துச் செல்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தின் மனச்சாட்சியை நோக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்குமா ? இல்லை கிடப்பில் போடப் படுமா ? என்பதற்கும் அப்பால் மக்களின் மனக் கதவுகளை வலிமையுடன் தட்டுமா ? என்பதே எனது கேள்வி.

" துப்பாட்டா " விடயங்களுக்கெல்லாம் துடித்துப் பதைத்து கூட்டமெல்லாம் போடும் எளக்கிய வாதிகளும் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று சொரிந்து கொள்ளும் பேதைகளும் வீட்டில் என்னென்ன கோலங்களில் இருக்கின்றார்கள் என்பதை போய்ப் பார்த்தால் தான் தெரியும். " நீதி போதனை செய்பவர்களுக்கு நான் செவி சாய்க்க வேணுமானால் ,அவர்கள் அவ்வாறு போதனை செய்யத் தகுதி உடையவர்களாக இருக்கவேணும் " என்று சார்வாகன் அவர்கள் சொல்வதைப் போல் எதுவுமில்லாது இலக்கியம் என்று பதிப்பதிலெல்லாம் ஊருக்குபதேசம் செய்யும் இவர்கள் என்னத்தை புதிதாகக் கிழித்து விடப் போகின்றார்கள்.

"பார்ப்பானின் பாதுகாப்புக் கோவணம் " என்று சக எழுத்தாளன் என்பதற்கும் அப்பால் ஒரு மனிதனாகக் கூட பார்க்கவியலாத பிரபலங்கள். ஆணாதிக்கத்திற்கெதிரான சமூகப் பிரக்ஞயை வேண்டி எழுத்து வேள்வி செய்யவென எழுந்து வந்த குட்டி ரேவதி எஸ்.ரா வின் சீண்டலுக்கு மட்டும் துடித்தெழுந்தது ஏன் ? வீட்டில் மலினப் படுத்திய பெண்மையை வெளியிலும் மலினப் படுத்த துணிந்த எஸ்.ரா போன்றவர்களுக்காக பொறி பறக்கப் பேசுபவர்கள் பற்றியும் யோசிக்கத் தோன்றுகின்றது.

மறுத்தானுக்கு மறுத்தான் அதற்கு மறுத்தான் என்று இலக்கிய வரட்சியை ஈடு செய்ய காகிதத் தோரணங்கள் கட்டிக் கொள்ளும் இவர்களுக்கு காத்திரமான சிலரும் கதை கூற வருவது சகிக்க முடியாமல் இருக்கின்றது. நடிகர்களின் மலர் தூவிகளும் இலக்கியப் பழுதைகளும் அடிக்கும் கொட்டத்தில் நேர விரயம் தவிர என்ன இருக்கின்றது. தங்கள் சமுதாய முன்னேற்றம் கருதி ஒரு தீர்க்க தரிசனம் அல்ல ஒரு தீவட்டியாவது கிடைக்காதா என்று உங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிக்கும் இலக்கியப்பாமரனுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா ?

நன்றி: கீற்று. கொம்
ஆனாரூனாவின் கட்டுரை www.keetru.com/literature/essays/aanaarunaa_16.html

Wednesday, January 18, 2006

மீண்டும் ஒரு முறை இந்தியா ?

" எனது அரசியல் வாழ்வின் அனுபவமும் இவரின் வாழ்க்கையின் வயதும் ஒன்றே " என்று எகத்தாளமாகக் குறிப்பிட்டவர் அரசியல் குள்ள நரி என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்.. ஜெயவர்த்தனா. முதன் முதலில் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னால் இவ்வாறு குறிப்பிட்டார். அவரால் இவ்வாறு சுட்டிக்காட்டப் பட்டவர் காலஞ்சென்ற இரஜீவ் காந்தியவர்கள். தொடர்ந்து " இந்தியாவை எங்களுக்காக தமிழருடன் போரிட விட்டு எனது படைகளை ஓய்வில் வைத்திருக்கப் போகின்றேன் " என்றும் குறிப்பிட்டார்.

அவரின் கணிப்பு பொய்க்கவில்லை என்பதும் அதன் பின்னர் என்னென்னவோ நடந்தேறியதும் நாமறிவோம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் அவர் வாரிசுகள் இன்றும் அதே மன நிலையிலேயே இருக்கின்றார்கள் என்பதை விளங்கப் படுத்தவே.

ஈழப்பிரச்சனையில் கையைச் சுட்டுக் கொண்ட இந்தியா என்ன முடிவில் இருக்கின்றதோ என்னவோ ஆனால் இலங்கைச் சிங்கள ஆட்சியாளர்களின் கனவு அதுவாகத் தான் இருக்கின்றது. முடிந்தவரை இந்தியாவை ஈழத்தமிழருடன் மோத விடுவது அதே நேரம் மேற்குலகுடன் விசுவாசமாக இருப்பது என்ற இரட்டை மன நிலையிலேயே அது காய் நகர்த்தி வருகின்றது.

இந்தியாவை மோதவிடுவது சுலபம் என்ற முடிவிற்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கும் காரணங்கள். ஒன்று இந்தியா ஏற்கனவே விடுதலைப் புலிகளுடன் மோதிப் பகைமை கொண்டுள்ளது. ஆகவே இந்தியா ஈழத்தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கும் என்று அவர்கள் நம்புவது.
இரண்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளைக் கொண்டுவருவதை தன் பாதுகாப்பைக் கருதி தவிர்க்கும் கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்று எண்ணுவது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்களின் கருத்து சரியென்றே படுகின்றது. இதுவரை நடைபெற்ற தமிழ் மக்களின் படுகொலை பற்றி இந்தியா இதுவரை எந்தக் கருத்தும் கூறாதது இந்நம்பிக்கையை சரியென்றே ஊர்ஜிதம் செய்கின்றது.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை அதிபர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை சந்திப்பதிலேயே ஆர்வம் காட்டினார் என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் இந்திய மத்திய அரசு உடனடி ஆர்வம் எதனையும் காட்டாவிட்டாலும் இவர்களின் நம்பிக்கை எதனையும் மறுத்தும் கூறவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. எதிர்பார்த்து வந்த சமிக்ஞை கிடைக்காததைத் தொடர்ந்து அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றதும் இதற்காகவே காத்திருந்தது போல அமெரிக்காவிடுதலைப் புலிகளை காரசாரமாகக் கண்டித்து அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருக்கின்றது.

இதே நேரம் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த சமாதான ஒப்பந்தம் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதுவும் போர் மூளும் அபாயம் நெருங்கிக் கொண்டிருப்பதும் வெளிப்படையாகும். இந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்துக்கான திட்டங்களும் விருப்பும் இல்லாத சிங்கள அரசு இந்தியாவை இழுத்து விடுவதற்கான சகல வழிமுறைகளையும் கையாளுகின்றது.

இலங்கை அதிபரின் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசியல் அமைப்புப் பற்றியும் நடைமுறை பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டியதும் இந்தியாவிற்கு வைக்கப் போகும் இன்னொரு பொறியேயாகும். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளின் சமஸ்டி முறையைப் பற்றி அறிந்து தெளிபு பெற்றிருக்கும் இவ்வேளையில் நோர்வே தலைமையிலான சமாதான நாடுகளும் ஈழப்பிரச்சனைக்கான தீர்வாக சமஸ்டி முறையை முன்மொழியும் வேளையிலேயேயும் இது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி யுத்தம் தவிர்க்க முடியாது என்னும் ஒரு சூழல் தோன்றுகையில் அல்லது மேற்கு நாடுகளின் நெருக்குதல் அதிகரிக்கும் போது இந்திய அரசியல் அமைப்பு போன்ற ஒரு தீர்வுக்கே உடன்படுவதாக காட்டிக் கொள்வதே இலங்கை அரசின் தற்போதைய உத்தியாகும்.

ஒன்று விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் மறுதலிக்கும்போது உலக நாடுகளுடன் பேரம் பேசுவதற்கும் விடுதலைப் புலிகளின் மேல் அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு நெருக்குவதற்கும் உதவலாம்.

இரண்டு விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொண்டால் இதனை வடக்குக் கிழக்கில் நடைமுறைப் படுத்தும் தார்மீகக் கடமையும் இந்தியாவிற்கே போய்ச் சேரச் செய்வது. இன்று தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவான அலையைத் தணிக்கும் முகமாக இந்தியா இக்கடமையை ஏற்றுக் கொள்ளும் என்றும் நம்புகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் நன்மை பெறப் போவதென்னவோ சிறிலங்கா இனவாதிகளே. ஏற்றுக் கொண்டால் நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் இந்தியா களத்தில் இறங்கும். அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமது சம இனத்தவரே ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுதந்திரப் பற்றாக் குறையான அரசியலமைப்பில் வாழுவதை தமிழக மக்கள் உணர்ந்து கிளர்ச்சியில் ஈடுபடமுயலலாம். அதனால் எப்பாடு பட்டேனும் விடுதலை புலிகளை நெருக்கி இவ்வரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்ள வைக்க இந்தியா களத்தில் இறங்கியே தீரும் என எதிர்பார்ப்பது.

அடுத்த கட்ட இந்தியாவின் காய் நகர்த்தலுக்காக காத்திருக்கும் சிறிலங்காவின் துருப்புச் சீட்டாகவே இந்திய அரசியலமைப்பை ஒத்த முறையை இலங்கையில் அமுல் படுத்துவது என்பது விளங்குகின்றது.

சிறி லங்கா அரசியல் வாதிகள் மட்டுமன்றி புத்தி ஜீவிகளும் இவ்வாறு விரும்புவதும் நம்புவதும் தான் மிகப் பெரிய சோகம். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு சிங்களப் பேரினவாதம் இன்னும் தயாரில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலமையில் இந்தியா எவ்வாறு செயல்படும் என்பதிலேயே சிறிலங்காவின் அடுத்த கட்ட நகர்வும் செயற்பாடும் அமையும்.

இந்தியா எங்கே போகின்றது ?

இந்தியா எங்கே போகின்றது ? கேள்வி சுவாரஸ்யமானது. ஆனால் பதில் என்னவோ இந்தியா என்ற நாட்டிற்கே ஆபத்தானது. இது என் பார்வை என்பதை முதலில் சொல்லிக் கொள்கின்றேன். பார்வையின் கோணம் சரியா இல்லையா என்பதை விவாதித்துப் பார்க்க நான் தயார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் இன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் சீனாவின் அபரிமிதமான பொருளாதார மற்றும் சனத்தொகை வளர்ச்சி. இது இதுவரை இருந்து வரக்கூடிய ஐரோப்பிய சார்பு உலக நலன்களை வேருடன் புரட்டிப் போடக் கூடியது. முதலில் ஐரோப்பிய சார்பு உலக நல எவ்வாறு முன்னெடுக்கப் படுகின்றது என்பதை சற்று பார்க்கலாம். ஐரோப்பிய சார்பு உலக நலன் பல வழிகளில் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

பொருளாதார சுரண்டல். முதன்மையான வழிமுறையாக கையாளப் படுகின்றது. காலனித்துவ காலத்தின் நேரடிச் சுரண்டலும் அதைத் தொடர்ந்த நவீன காலத்தின் மறைமுகச் சுரண்டலுமாக இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இம்மறைமுக பொருளாதாரச் சுரண்டல் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதையும் நுகர்வோர் பொருளாதார நாடுகளாகத் தொடர்ந்தும் இந்நாடுகளை வைத்திருப்பதை ஊக்குவிப்பதுமாக நடை பெறுகின்றது. நுகர்வோர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது ஐரோப்பிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு உதவிசெய்யும். உற்பத்திப் பொருட்கள் பெரும் பாலும் தொழில் நுட்பம் சார்ந்தவையாக ஆடம்பரப் பொருட்களாகவும் அழிவுப்பொருட்களாகவும் மிகுந்து காணப்படுகின்றது. உணவுப் பொருட்கள் விவசாயப் பொருட்களின் உதவிகள் மட்டுப் படுத்தப் பட்டதாகவும் காணப் படுவதும் அவற்றின் சுய உற்பத்திகள் ஊக்குவிக்கப் படாமலும் தடைகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. ஜீ 8 போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகள் விவசாய மானியத் தடையை வலியுறுத்துவது சுய உற்பத்தியை வளரும் நாடுகளில் ஊக்குவிக்கப் பெரும் தடையாகும். கடன் மீளச் செலுத்துவதற்கான விலக்களிப்பு பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் தொழில் முயற்சியையும் சுரண்டலையும் ஊக்குவிக்க உலக வங்கி போடும் தூண்டில் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மேற்குலக நன்மை சார்ந்த உலகப் போக்கு பொருளாதார ரீதியில் இவ்வகையாக நடைமுறைப் படுத்தும் வேளையில் மத ரீதியான கருத்துச் சிதைவுகள் ரோமிலிருந்து ஊக்குவிக்கப் படுகின்றது. நான் இப்படிச் சொல்லும் போது யாருடைய மத நம்பிக்கையையும் நான் சேதப் படுத்தவில்லை என்பதை கூறிக் கொள்கின்றேன். இவ்வகையான கருத்துச் சேதம் இலத்தீன் அமெரிக்க ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களிடம் வெகுவாக எடுபடுகின்றது என்பதுடன் ஐரோப்பிய அமெரிக்க மக்களின் சுய சிந்தனையையும் மழுங்கடித்து முதலாளித்துவத்தின் சுரண்டலை ஏதிர்ப்பில்லாமல் நடைபெற வழி சமைத்துள்ளது. நுகர்வுப் பொருளாதாரம் மக்களின் சிந்தனை சக்தியை மழுங்கடிப்பதன் மூலமே தனது தேவைகளைப் பெற்றுக் கொள்கின்றது. தேசியம் இனம் சாதி போன்ற பல குறுகிய மாயைக்குள் மக்களை புதைத்து வைத்திருக்க தன்னாலான அனைத்துக் காரியங்களையும் செய்கின்றது.

20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் வரலாற்றுப் பிறழ்வாக இன்று கருதப் படும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மேற்கு சார் முதலாளித்துவத்தை தனிக்காட்டு ராஜாவாக்கியுள்ளது. கம்யூனிசத்தின் நோக்கம் தனிமனிதரைப் பொருளாதார ரீதியில் சமப்படுத்துவது. அது சரியா பிழையா காரிய சாத்தியமா என்பதற்கப்பால் முதலாளித்துவத்தை எதிர்த்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய எதிரியான சோவியத்தை சிதறடித்த முதலாளித்துவத்தின் பார்வை இப்போது மத்தியகிழக்கு மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது. சோவியத்தை மீள் எழுச்சியை எந்த விதத்திலும் அனுமதிக்காத கடும் போக்கில் அது காரியம் ஆற்றிக்கொண்டிருக்கின்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் சிதைவையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட நேட்டோவின் பிடிக்குள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வேகமாக உள்ளெடுத்துக் கொண்டிருக்கின்றது.

தஜிகிஸ்தான், கஜகிஸ்தான் போன்ற முன்னைநாள் சோவியத்நாடுகளில் பலமான இராணுவ நிலைகளை அமைத்து கஸ்பியன் கார்டனை அமைத்துள்ளது. இது எதிர்காலத்தில் உச்சம் பெறக்கூடிய இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டியைக் கருத்தில் கொண்டும் ஐரோப்பா நோக்கிய ஆசிய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தக் கூடியதுமான அரணாகவும் நிறுவப்பட்டுள்ளது. தம் நலன்களுக்கெதிராக எழக்கூடிய தடைகளை அகற்றும் நடவடிக்கையில் விரைவு காட்டுவதன் வெளிப்பாடே ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தமும் ஈரான், வடகொ ரியா போன்ற நாடுகளின் மீதான யுத்த முஸ்தீபுகளும் ஆகும். மத்திய கிழக்கின் மீதான யுத்தம் ஆதிக்கப் போட்டி என்பதல்லாமல் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கக் கூடிய எண்ணைத் தேவையைச் சேமிப்பதாகும்.

மத்திய கிழக்கு நாடுகளின் முதிர்ச்சியற்ற சமய அடிப்படைவாத நடவடிக்கைகள் ரொனி பிளயரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் பார்பரியன் மனப்பாங்கு மேற்குசார் நலன்களை நிலைநாட்டவும் இன்னும் ஆழப்படுத்தவும் சந்தர்ப்பங்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றது. சோவியத்தின் வீழ்ச்சி ஒரு வரலாற்றுப் பைறழ்வு என்றால் அமெரிக்கா மீதான தாக்குதல் மாபெரும் வரலாற்றுத் தவறு இதை யார் செய்திருந்தாலும். அமெரிக்கா இப்படியான சந்தர்ப்பத்தை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது. இன்று பேரினவாதத்தின் எதேச்சசதிகாரம் எந்தக் கேள்வியும் இன்றி முன்னெடுக்கப்படுவது தான் மிகப் பெரிய சோகம்.

இதற்கான அடிப்படையை அமெரிக்கா வெகு சிறப்பாக ஏற்படுத்திக் கொண்டது. அதனை " இன்று உலகில் இரண்டு பிரிவுகள் தான் இருக்கின்றன. ஒன்று பயங்கர வாதத்தை ஆதரிக்கும் நாடுகள். மற்றது பயங்கர வாதத்தை எதிர்க்கும் நாடுகள். நீங்கள் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் " என்று மிகத் தெளிவாகவே புஸ்ஸின் வார்த்தைகளில் கூறிவிட்டது. எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பதென்பதை பயங்கர வாதமாக அழகாக பூச்சுப் பூசியுள்ளது. இதனாலேயே உலக நாடுகள் இன்று வாயையே திறக்க முடியாமல் மென்று முழுங்கும் நிலையிலுள்ளன. வாயைத் திறந்தால் சாத்தானின் அச்சில் சேர்த்து விடக் கூடிய பொறி ஒன்று வைக்கப் பட்டுள்ளது. இது இன்று உலகப் போக்கின் அடிப்படையை விளங்க உதவும் என்று எடுத்துக் கொண்டு இந்தியாவின் நிலையைப் பார்ப்போம்.

இது வரை இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்த சோவியத் சார்பு என்பது சோவியத் யூனியனின் உடைவின் பின் திரிசங்கு சொர்க்க நிலையாகப் போய்விட்டது. மேற்கின் பேரினவாதம் இன்று சீனாவைச் சுற்றி வளையம் அமைக்கும் வேளையில் இந்தியாவையும் அதன் பார்வையில் வைத்திருக்கின்றது. இந்தியாவின் அதீத சனத் தொகைப் பெருக்கமும் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் தொலை நோக்கற்ற அரசியல் தலமைகளும் இந்தியாவை எங்கோ கொண்டு போகின்றது. அதீத சனத்தொகைப் பெருக்கமும் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் வளர் ம்உக நாடுகளில் இயல்பானது என்றாலும் தொலை நோக்கற்ற அரசியல் தலமைகள் மிகவும் ஆபத்தானவை.

மேற்கு சார் பேரினவாதத்தின் ஆபத்தை சீனா விளங்கிக் கொண்ட அளவு கூட இந்தியா விளங்கிக் கொள்ளவில்லை அல்லது விளங்கிக் கொண்ட போதும் அதனைத் தடுக்கும் செயல்களில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவுடன் நெருங்கிக் கொள்வது என்பது சோவியத்துடன் இருந்த அளவு என்றுமே நடக்கப் போவதில்லை. ஏனெனில் பேரினவாதத்தின் இருப்பிற்கு சீனா இந்தியா என்பன வளர்ச்சியடைவது என்றுமே அச்சுறுத்தலானது.

பலம் வாய்ந்த நாடுகளின் சிதைவே பேரினவாதத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும். முதளாளித்துவத்தின் பார்வையில் ஒரே உறையில் ஒரே கத்திதான் இருக்க முடியும். அணு ஆயுத நாடு என்று மார்தட்டிக் கொள்வதெல்லாம் கவைகுதவாத வேலை. அழிவைத் தவிர வேறு ஒன்றுக்கும் உதவாத பொருள் அது. அணு சக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன் படுத்தும் முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் இல்லை.

அமெரிக்காவுடன் இணைந்து செல்ல எடுக்கும் முயற்சி அமெரிக்காவின் பிடியை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இறுக்கிக் கொள்ள துணை போகுமேயொழிய இந்தியாவிற்கு எந்தவிதத்திலும் நன்மையாகாது. நியாயமாகக் கேட்டுப் பெறக் கூடிய உதவிகளையும் கிடைக்கவிடாது தடுத்துக் கொள்ள அமெரிக்கா பாகிஸ்தானை தடவிக்கொடுத்து வளர்த்து வருகின்றது.

இந்தியாவின் இக்கையறு நிலை கார்ஸியாத் தீவுகளில் இருந்த அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை இலங்கை வரை அழைத்து வந்து விட்டது. இந்நிலைமைக்கு தொலை நோக்கற்ற குறுகிய அரசியல் லாபநோக்குள்ள அரசியல் தலமைகளும் றோ போன்ற அமைப்புகளின் தான் தோன்றித் தனங்களும் முழுக்க முழுக்கக் காரணம். சோவியத்தின் வீழ்ச்சியின் பின் நெருங்கியிருக்கக் கூடிய சீனாவுடன் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமை மகா தவறாகப் போகப் போகின்றது. பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்ற அளவிலாவது ஒன்று சேர முயற்சித்திருக்கலாம். இன்று சீனாவின் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படும் நிலையில் இந்தியா இருக்கின்றது. சீனாவை போன்று தாக்கமான வளர்ச்சியைக் காட்ட வேண்டிய இந்தியா சிறு பூச்சியான பாகிஸ்தானுடன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவிற்குள் மூக்கை நுழைக்க ஒரு தாய்வானை வைத்திருப்பது போல இந்தியாவிற்குள் மூக்கை நுழைக்க ஒரு காஸ்மீரை வைத்திருக்கின்றது முதலாளித்துவப் பேரினவாதம். இந்தியா தன் அயல் நாடுகளுடன் சுமுகமான நட்பைக் கட்டியெழுப்ப முயலாது அடாவடியயக நடந்து கொண்டிருப்பது பெரும் சோகம் . வடக்கே சீனா கிழக்கே பங்களாதேசம் தெற்கே இலங்கை மேற்கே பாகிஸ்தான் என்று இந்தியாவைப் பகைமையுடனும் சந்தேகத்துடனும் பார்க்கும் நாடுகளே பெருகியுள்ளன.

இதற்கும் மேலாக நாட்டிற்குள்ளேயே குத்து வெட்டுகள். உள்நாட்டிலேயே நீதி கிடைக்காது இந்தியா என்ற அமைப்பிலேயே நம்பிக்கை தகர்ந்த மக்கள். இமாச்சலம், நாகாலாந்து, ஆந்திரா , பஞ்சாப் என்று காலத்திற்குக் காலம் புகைந்து தணிந்து கொண்டிருக்கும் அதிருப்தி. சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகளையும் தாண்டி விட்ட நிலமையிலும் வளங்கள் சமாகப் பங்கிடப் பட்டு பொருளாதார முயற்சிகள் முடுக்கிவிடப் படவில்லை. ஐந்தாண்டுத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. பொருளாதார முன்னேற்றம் என்பது தனி மனித வருமானத்தால் தீர்மானிக்கப் படுவது என்பது மறக்கடிக்கப் பட்டுள்ளது. நாட்டின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டின் கீழே வாழுகின்றார்கள். உயர் கல்வியறிவு உள்நாட்டில் பயன்படுத்தும் வளமான சூழல் ஏற்படுத்தப் படவில்லை. சொந்த நாட்டில் பயன்படுத்த முடியாதவாறு தங்கள் அறிவை வெளிநாட்டில் மக்கள் வித்துக்கொண்டிருக்கின்றார்கள். வளர்ந்து வரும் நாடு ஒன்றில் இந்நிலமை காணப் படுவது தொழில்நுட்ப வறட்சியையே ஏற்படுத்தும்.

அதிதீவிர இந்துத்துவா போக்கு அல்லது மேற்கு சார்ந்த இப்போது இருப்பதைப் போன்ற அதி மென்மைப் போக்கு இந்தியாவை நல்ல திசையில் கொண்டு போகப் போவதில்லை.

தீர்க்க தரிசனம் மிக்க தலைமையும் அதி நுட்ப அறிவு சார்ந்த பொருளாதாரம் மற்றும் இணக்கமான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் வரை இந்தியா மேற்கின் பேரினவாதச் சூழ்ச்சியில் சிக்கி அமிழ்ந்து போவதற்கான வாய்ப்புகளே இருக்கின்றது. அறிவு ஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் சொந்த விருப்பு வெறுப்புக்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நாடு என்பதை மட்டும் எண்ணிச் செயற்படும் நேரம் இது.

Tuesday, January 17, 2006

"இது தான் தமிழ் நாடு" .... ஞானியாரின் பதிவுக்கான எனது தெளிபு

http://nilavunanban.blogspot.com/2006/01/blog-post_17.html

உலகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் தாய்த் தமிழகத்துடன் ஒரு உளப்பூர்வமான உறவு இருந்து கொண்டிருக்கும். தாய்த் தமிழகம் என்பது தொப்பூள்க் கொடி உறவு முறையானது. உலகின் மூலை முடுக்கில் இருக்கக் கூடிய எந்தத் தமிழனுக்கும் தமிழ் நாடு என்பது ஒரு பாதுகாப்பு உணர்வையும் நிம்மதியையும் அதே வேளையில் மனக்கிளர்வையும் தரக்கூடியது.

பலரும் இதனை உணர்ந்திருப்பார்கள் என்னைப் போல.தாய்த் தமிழகம் என்பது தமிழரின் கலை கலாச்சாரப் பண்பாடுகளுக்கு வேரடி மண்ணாய் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.

உறவு முறைகளில் தாய்வழி வந்தவர்களுடன் மனது ஒட்டிக் கொள்வது அதிகம்.

"தமிழகத்தில் தும்மினால் தலவாக்கொல்லையில் கேட்கும் " என்று சொல்வார்கள். ( தலவாக்கொல்லை இலங்கையின் மலைநாட்டைச் சேர்ந்த ஒரு ஊரின் பெயர்).

உலகெங்கும் இருக்கும் தமிழர்களை அதிகம் பாதிப்பது தமிழ் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்.

அந்த வகையில் நமது சக வலைபதிப்பாளர் ரசிகவ் ஞானியார் "இதுதான் தமிழ்நாடு " என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.

வண்ணப் படங்களுடன் வளமான கவிதை வரிகள் வேறு அழகாகப் போட்டிருந்தார்.

"பெரியோரைக் கனம் பண்ணு " என்று பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதனைப் பற்றியதே இந்தப் பதிவு. அதுவும் செயல் முறை விளக்கங்களுடன் வண்னப்படங்களாக கறுப்பு வெள்ளை படங்களாக என்று கலக்கலுடன்.

முதல் படமே அன்வர் ராஜா செய்முறை விளக்கம் கொடுக்க அற்புதமான கவிதை வரிகள்.

" தமிழ் நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம் தரையில் விழுந்தே பல சாதனைகள் புரிவோம்" எத்தனை அழகான கவிதை வரிகள்.தமிழ் நாடு என்பதில் நாம் கொள்ளும் பெருமிதம் நம் எல்லோருக்கும் தெரியும்.அதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் கிடையாது. அதற்கான காரணங்களையும் நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். உலகில் வாழும் தமிழர் அனைவரும் ஒரு முறையேனும் தமிழ் நாட்டைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் இருக்கும். அப்படி இல்லையென்றால் அவர்களின் வாழ்க்கை ஜென்ம சாபல்யம் அடைந்து விடாது.

சாதனை செய்வதென்றால் இலேசானதா ? தரையில் விழுந்து "தண்ணீ'யில் விழுந்தெல்லாம் சாதனை செய்வார்கள். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் 'கின்னஸ்' புத்தகத்தைப் பார்த்து தெளிபு கொள்ளலாம். எத்தனை விதமான சாதன முறைகள் இருக்கின்றன என்றெல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். தமிழிலும் இது மொழி பெயர்க்கப் பட்டால் இச் செய் முறை செய்து காட்டுபவர்களிற்கு பலவித புதிய உத்தி முறைகள் தோன்ற வாய்ப்பிருக்கின்றது என்பதனால் இதனை நான் பலமாகச் சிபாரிசு செய்கின்றேன்.

இப் படங்களைப் பார்க்கும் போது 'செய்முறை' விளக்கங்கள் எல்லாம் சில குறிப்பிட்ட வகையிலேயே இருக்கின்றன. சில செய்முறைகள் திரும்பத்திரும்ப செய்யப் படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. பல வேறுபட்ட முறைகளில் "தரையில் விழுந்து " செய்யும் சாதனைகளுக்கு இது உதவக் கூடும் என்பதனால் என் பலமான சிபாரிசு தரப்படுகின்றது.

தனபால் என்பவரின் செய்முறைக்கான கவிதை இவ்வாறு சொல்கின்றது.
"தோளில் விழுந்தால் துண்டு மரியாதைப் படும். காலில் விழுந்தால் மரியாதை துண்டிக்கப் படும்"
பின்னடியில் ஏதோ உள்குத்து நோக்கம் இருப்பதாக எனக்குப் படுவதால் கடும் கண்டனத்துக்குள்ளாகின்றது. காலில் விழுவதால் எப்படி மரியாதை துண்டிக்கப் படும். இந்து சமயத்தில் "விழுந்து" கும்பிடுவது போற்றப் படுகின்றது.

ஆண்களுக்கு 'அட்டாங்க நமச்காரம்" என்பதும் பெண்களுக்கு "பஞ்சாங்க நமஸ்காரம்" என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இங்கு காட்டப்படும் விழுந்து கும்பிடும் செய் முறைகள் இவையொன்றையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. "அட்டாங்க" என்பது எட்டு அங்கங்கள் நிலத்தில் பட வணங்குவது. கால்கள் இரண்டு கைகள் இரண்டு என்ற ரீதியில் வளைந்து கும்பிடுவது பிழையானது என்று ஞானியார் குறிப்பிட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கின்றேன். இடப்பிரச்சனை கூட ஒரு காரணமாக இருக்கலாம். மேடை அமைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வருங் காலத்தில் அமைக்கப் படும் மேடைகளில் விழுந்து கும்பிடும் இடம் குறைந்த பட்சம் ஆறு அடி விஸ்தீரணம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஜீவானந்தத்தின் செய்முறை பூரண மரியாதை செய்யும் முறைக்கு மாறு பட்டது. போலியாக மரியாதை செய்யும் முறைக்கு " கூழைக்கும்பிடு" என்று சொல்வார்கள். கூழைக் கும்பிடு என்பது போலி மரியாதை. "நக்கல்" மனதிலுள்ளவர்களால் தான் இவ்வாறு நடக்க முடியும். அவர் பார்வையும் சரியாக இல்லை. படத்தை உற்றுப்
பார்ப்பவர்கள் இதனைக் கவனிக்கலாம். பாதார விந்தங்களைப் பார்க்காது பார்வை எங்கோ போகின்றது.( பணப்பையைக் கூட பார்க்கலாம்)

இச்செயல் முறைக்கு ஞானியார் குறளொன்றை எடுத்து விட்டிருக்கின்றார். இப்போலி மரியாதையுள்ள ஜீவனைப் பெற்ற தாயும் பெரிதுவப்பாள் என்று என்னால் நம்பமுடியவில்லை. போர்க்களத்தில் புறமுதுகிட்டான் எனக் கேட்ட தாயவள் பால் கொடுத்த முலையறுப்பேன் என்று பொருமி நின்றது எம் தமிழ்ப் பெண்களின் வீரம் என்பதை எடுத்துக் கூறவேண்டும். முறத்தால் புலி விரட்டிய தமிழ்ப் பெண்ணின் வீர உணர்வை உங்களுடைய எடுத்துக் காட்டு குறை சொல்வதாக எனக்குத் தோன்றுகின்றது.

அடுத்து ஜெயக்குமார் காட்டும் செயல் முறையில் ஒருபடி முன்னேற்றம் காணப்படுகின்றது. தலையும் நிலத்தில்ப் பட ஐந்து அங்கங்களுக்கு முன்னேறியிருக்கின்றார். பஞ்சாங்க நமஸ்காரம் பெண்களுக்கானது என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லை என்று படுகின்றது. இவர் தலையில் இருக்கும் ஒளிவட்டம் மட்டும் இல்லையென்றால் ஒரு பெண்ணின் மரியாதை என்று நானும் எடுத்துக் கொள்வேன்.

ஞானியார் கொடுத்த கவிதை வரிகள் "வளைந்து விடு மூங்கிலாய் நீண்டுவிடு வளைந்தே இருந்தால் மனிதா நீ மாண்டுவிடு " என்று கூறுகின்றது. இதில் ஞானியார் பற்றியும் எனக்குச் சந்தேகம் வருகின்றது.

மரியாதை செய்யும் இடத்தில் வன்முறைகளைத் தூண்டும் வார்த்தைகளை இவர் பயன்படுத்துகின்றார் என்றே தோன்றுகின்றது. முதலில் வளைந்து விட்டு மூங்கிலாய் நீண்டு விடு என்று கூறுகின்றார். வளைந்த மூங்கில் நிமிரும்போது பாரிய விசையுடன் அது நிமிரும். இப்படி நிமிரும் போது முன்னால் உள்ளவர்களை அது குத்திக் குதறிவிடக் கூடிய ஆபத்து இருக்கின்றது. இதை தான் ஞானியார் விரும்புகின்றாரா ? ஞானம் பெற்றவர்களே இவ்வாறு புத்திமதி சொல்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தைத் தரம் தாழ்த்தி விடும் என்பதால் எனது கடும் கண்டனங்களை இங்கே கூறிக் கொள்கின்றேன்.

மூங்கில் என்ற இடத்தில் நாணல் என்று பாவிக்குமாறும் அவருக்கு சிபாரிசு செய்கின்றேன். இவ்வாறு செய்வதால் தடா பொடா பாய்வதிலிருந்து அவர் தப்பிக்கக் கூடும். நாணல் நீரோட்டதில் வளைந்தாலும் முறிந்து போகாது தப்பிக் கொள்கின்றது என்பதால் ஞானியாரின் கருத்துக்கு ஏற்றது என்பதுடன் பல உயிர்களையும் காப்பாற்ற முடிகின்றது. " மனிதா நீ மாண்டுவிடு " என்று ஈற்று வரியில் குறிப்பிடுவதைத் தான் குறிப்பிடுகின்றேன். மரியாதை செய்பவர் எல்லோரும் மாண்டுவிடுவது என்றால் மரியாதை செயவதிலுள்ள மரியாதையே போய்விடும்.

பாண்டுரங்கன் செய்யும் செய் முறை இடம் மாறி இங்கு வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. "தவளைப் பாய்ச்சல் " என்பதற்கு செய்முறை காட்டுவது போல் இருக்கின்றது. மரியாதை செய்யும் இடங்களிலெல்லாம் இவ்வாறு " விளையாடுவது" எற்றுக் கொள்ள முடியாததாகும். " தவளைப் பாய்ச்சல்" என்பது விடுதலைப் புலிகளின் வெற்றி பெற்ற யுத்தத் தந்திரமாகும். இவ்வாறான செய்முறைகளைச் செய்பவர்களிடம் அதிக கவனம் தேவை என்பதை மரியாதை பெறுபவர்களுக்கு சிபாரிசு செய்கின்றேன்.

"வளைக்க வை வளையாதே மரித்துப் போகும் மரியாதை" என்று கவிதை சொல்லியிருக்கின்றார் ஞானியார். இது மரியாதை கொடுப்பவருக்கா ? இல்லை மரியாதை வாங்குபவருக்கா ? என்ற குழப்பத்தில் என் தூக்கம் கெட்டுப் போனது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஞானியார் பெரிய கவிஞர் என்றாலும் என்னைப் போன்ற கத்துக் குட்டிகளை இவ்வாறு கவுத்துப் போடக் கூடாது என்றும் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.

பன்னீர்ச் செல்வத்தின் செயல் முறை பன்னீர் தெளிப்பதைப் போலத்தான் இருக்கின்றது. கண்மூடி இருப்பதிலேயே அந்த " பயபக்தி" தெரிகின்றது.

ஞானியாரின் " அருவியாய் விழு சுனாமியாய் எழு" என்பது ஒரு எதுகை மோனையை கருத்தில்க் கொண்டு எழுதியது என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு சுனையாகக் கூட ஒழுக முடியாதவரை சுனாமி அது இது என்பதெல்லாம் உங்களுக்கும் நகைச் சுவை உணர்வு இருக்கின்றது என்பதைத் தான் தெரிவிக்கின்றது. கார்ப்பரேஷன் குளாயில் ஒழுகும் சொட்டுத் தண்ணீருக்கு வேண்டுமென்றால் ஒப்பிடலாம்.

அடுத்து பொன்னையன். இவரின் செயல் முறை தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டது போல் காணப்படவில்லை. ஜப்பானின் சமுராய் வீரர்கள் போன்ற ஒரு நிமிர்ந்த முறை காணப்படுகின்றது. ஞானியார் குறிப்பிடும் " சிந்திய கெளரவத்தைப் பொறுக்கவோ கோர்க்கவோ ? " என்ற கவிதை வரியும் வேறு வகைக் குறிப்பை உணர்த்துகின்றது. பாரதத்தில் வரும் கர்ணன் துரியோதனன் போல் எதாவது "சோத்துக்" கடன் இருக்கலாம்.

செம்மலையின் செய்முறை நன்றாக உட்கார்ந்து செய்யும் முறை. ஆனாலும் பூரணப்படவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. அதிக பட்சம் ஆறு அங்கங்கள் பயன்பட்டிருக்கலாம். இரு முழங்கால்களையும் சேர்த்துக் கொள்கின்றார்.

ஞானியார் மு. மேத்தா ரேஞ்சுக்கு கவிதை எழுத முயன்றிருக்கின்றார். அவர் தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு "காற்று புயல்" என்றெல்லாம் கவிதை எழுதுவார். அல்லது ஞானியார் வீரசிவாஜி கட்டப்பொம்மன் போன்ற திரைப்படங்களைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்ச்சிக் குறுகுறுப்பாகவும் இருக்கலாம்.

"யாரங்கே தன்மானத்தைத் தரையில் போட்டது ?" என்று எழுதித் தள்ளியுள்ளார். தன் மானம் என்பது தூக்கிப் போடும் பொருள் அல்ல என்பதை மட்டும் அவருக்குச் சொல்லிக்கொள்கின்றேன்.

சண்முகநாதன் இவர் செய்முறையைப் பார்த்தால் நோய்வாய்ப்பட்டவர் போன்றிருக்கின்றது. மூல வருத்தம் உள்ளவர்களையெல்லாம் இப்படி போட்டு வருத்துவது தவிர்க்கப் பட வேண்டும். ஞானியார் இவரைச் சீரியஸ் ஆகவே கணக்கெடுக்கவில்லை என்று தெரிகின்றது.

"அம்மா இங்கே வா வா ஆசீர்வாதம் தா தா காலில் விழும் எனக்கு கட்சியில் இருக்கு கணக்கு" என்று குழந்தைப் பாடல் ரேஞ்சுக்குப் போய் "தோ தோ நாய்க்குட்டி துள்ளி வா வா நாய்க்குட்டி" என்ற குழந்தைப் பாடல் மெட்டையும் எடுத்து கவிதை எழுதிய பாங்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. " நக்கல் இருக்கலாம் நளினம் இருக்கக்கூடாது " என்று சொல்வார்கள். இது நக்கலா ? இல்லை நளினமா? என்பதை ஞானியார் விளக்கினால் நன்றாக இருக்கும்.

அடுத்து தளவாய் சுந்தரத்தின் செயல் முறை தொட்டுக் கும்பிடுகின்ற ரேஞ்சில் இருக்கின்றது. தளவாய் என்ற பட்டப் பெயரும் இருப்பதால் வீரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதுதான். வீரப் பரம்பரை என்பதற்காக " கல்தோன்றா மண் தோன்றா காலத்தே முன் விழுந்த மூத்த குடி " என்று ஞானியார் அவரை அம்பு வில்லுக் காலத்திற்கு கொண்டு சென்றிருப்பது அதீதப் புகழ்ச்சி என்றே எனக்குப் படுகின்றது. கல்லும் தோன்ற வில்லை மண்ணும் தோன்றவில்லை என்பதால் கடலில் விழுந்த குடி என்று ஞானியார் கருதுவதாக தோன்றியபொழுது ஒரு உண்மை பளிச்சிட்டது.

கூர்ப்புத் தத்துவம் நீரில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் பின் தரைக்கும் பரவியது என்று சொல்கின்றது. ஆமை பாம்பு போன்ற இரண்டிலும் வாழக் கூடிய இரண்டும் கெட்டானுகள் இதற்கு நல்ல உதாரணம்.

மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என்ற நவீன விஞ்ஞானத்தை முறியடிக்கும் வகையில் நீரிலிருக்கும் ஏதாவது உயிரினத்தில் இருந்து தமிழன் தோன்றினான் என்ற வகையில் " கல்தோன்றா மண்தோன்றா .... ......... மூத்தகுடி " என்ற சொல் தொடரை ஆதாரமாக வைத்து ஒரு நவீன விஞ்ஞானத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்த உண்மை. இதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

அடுத்து தம்பித் துரையின் செயல் முறை. ஞானியார் " துறைக்காக துரையிங்கு கரையானதோ ? " என்று எழுதிய கவிதை முற்றுப் பெறாமல் தொக்கி நிற்கின்றது என்றே கருதுகின்றேன்.
" அதனால்- மக்களெல்லாம் இரையாவதோ ? " என்று முடித்திருக்கலாம்.

கவிதையில் அழகுணர்ச்சியுடன் ஒரு மெஸேஜ் உம் இருந்தால் மக்களிடம் இலகுவாக ரீச் ஆகும் என்பதால் ஞானியாரிதைக் கவனத்தில் எடுத்து வருங்காலத்தில் இன்னும் டாலடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைத்திலிங்கத்தின் செயல் முறைக்கு ஞானியாரின் கவிதை இடக்கு முடக்காக இருக்கின்றது. " விழுந்தால் காலில். விழுந்தது கட்சி" என்று தமிழ் நாட்டையே கலக்கத்திற்குள்ளாக்கி விட்டீர்கள். இந்தக் கட்சி விழுந்தால் தமிழரின் பாரம்பரியங்களை யார் கட்டிக் காப்பது ? எனவே இக் கவிதையை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து வளர்மதி. நிலவு என்பதை அல்லது தேயும் பொருட்களை குறியீடாக வைத்து இந்தக் கவிதையை ஞானியார் எழுதியிருக்கின்றார் என எண்ணுகின்றேன்.

" எழுந்திரு அஞ்சலி எழுந்திரு" என்று கவிதை எழுதி 'அஞ்சலி .. அஞ்சலி ' என்ற பாடலின் இசையை எடுத்துக் கொள்ளும் உங்கள் எண்ணம் புரிந்து கொள்ள முடிந்தாலும் மணிரத்தினத்திடம் ஒரு வார்த்தை கூறிவிடுங்கள். இல்லாவிட்டால் காப்பி ரைட் பிரச்சனை வந்து விடக்கூடும். குஷ்புவின் வார்த்தையைக் காப்பி அடித்ததற்கே அவர் மனைவி படும் பாட்டில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதியாக வேலுச்சாமியின் செய்முறையுடன் ஞானியார் இந்தத் தொகுப்பை நிறைவு செய்துள்ளார். கண்ண தாசன் வரிகளான " பறவையை கண்டான் விமானம் படைத்தான் எதனைக் கண்டான் மனிதனைப் படைத்தான் ? " என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்டவன் தன்னைப் போல படைத்த மனிதனை சாதாரணமாக எடை போடுவது நல்லதல்ல. ஆண்டவனே எப்படி இருப்பார் என்று புரியாமல் ஆளுக்கொரு சாமி பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான அதி மேதாவித்தனமான கேள்விகள் கேட்டு உங்களை உயர்த்திக் கொள்ள முயல்வது எங்களுக்குப் புரியாத இரகசியம் அல்ல.

ஆண்டவனை எவ்வாறு புரிந்து கொள்ள முடியாது அல்லாடுகின்றோமோ அதுபோலவே இதுவும் ரோதனையான விடயம் என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்கின்றேன். காசி ராமேஸ்வரம் என்றே சுத்தி சுத்தி வந்தும் அறிந்து கொள்ள முடியாத விடயத்தை கணணிக்குள் வந்து கண்டு பிடித்து விடலாம் என்பது ஞானியாரின் அதீத தன்னம்பிக்கை என்று சொல்லிக் கொள்ளலாம். இவ்வாறான தொகுப்பைத் தருவதற்கு என்னவோ ஸ்ராங்காக (தமிழ் நாட்டிலிருந்து தருவதற்கு) இருக்க வேண்டுமென்பது எனது கணிப்பு. அந்த வகையில் அவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் "விழுந்து" மரியாதை செய்கின்றது.

பின்னூட்டங்களில் ஹா....ஹா என்று சிரித்த அனானிமஸ்ஸும் நல்லா இருக்கு என்று சொன்ன என்னார் இவர்களெல்லாம் நிறைவை எடுத்துக் கொள்வது போல குறறயையும் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறான குறைபாட்டு செயல் முறைகளையே தமிழனின் பண்பாடு என்று அகில உலகமும் காப்பி அடிக்கக் கூடிய அபாயமும் இருக்கின்றது. ஜீ.இராகவனின் வயிற்றெரிச்சல் புரிகின்றது. சரியாக நடிக்கத் தெரியாத கபோதிகளின் செய்முறைகள் அவரை எரிச்சல் அடையச் செய்திருக்கும். மற்றும் உலகிற்கே மரியாதைப் பண்பை எடுத்துச் சொல்லும் இப்படியான தொகுப்புக்களில் இருக்கக் கூடிய நடிகர்களின் குறைபாட்டைக் குறித்து அவர் மானம் போவதாக அடித்துக் கொள்வதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

இனிமேல் ஆவது இவ்வாறு தொகுக்க முனைபவர்கள் அரசாங்கத்தில் இருந்து அவர்கள் எண்ணங்களையும் விசேட குறிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும் மரியாதை பெறுபவர் கும்பிடுவதை விட்டு ஆசீர்வதுப்பது போல் அபயக்கரம் காட்டவேண்டும். இது கரங்களில் கறை இல்லை என்பதைக்காட்டவும் சமயத்தில் பிடிக்காதவர்களின் தலையை அமுக்கி விடவும் இன்ன பிற காரணங்களுக்காக உதவக்கூடும் என்பதையும் இம்முறையை கைக்கொள்ளுமாறும் சிபாரிசு செய்கின்றேன்.

பின்னூட்டம் இட கை நமநமத்தால் 'சிந்து'வை அழுத்தி முன் பக்கம் வர வேண்டுகின்றேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

ஞானியாரின் பதிவு http://nilavunanban.blogspot.com/2006/01/blog-post_17.html


Sunday, January 15, 2006

அடடா .... அடடா ......

இப்போதெல்லாம் யார் கதாநாயன் யார் கோமாளி என்றெல்லாம் வேறு படுத்திப் பார்ப்பதே முடியாத காரியமாய்ப் போய் விட்டது. ஏனென்றால் ஹீரோவாக நினத்தவரெல்லாம் கோமாளியாகவும் கோமாளியாக நினைத்தவரெல்லாம் ஹீரோவாகவும் மாறும் காலமாகப் போய் விட்டது.

ஹீரோவாக நினைத்திருந்த ரஷ்யா உக்ரேனுடன் வாயுச்சண்டை (வாய்ச் சண்டையில்லை) பிடித்து கோமாளியாக வேஷம் கட்டி நிற்கின்றது. சின்னச் சின்ன நாடுகள் எல்லாம் இப்படி கோமாளி வேஷம் போட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்டு கொண்டாலும் அது அப்படித்தான் என்று விட்டு விடுவார்கள். உதாரணத்திற்கு இலங்கை. விபூஷகர் எல்லாம் அரசியல்வாதி வேஷம் கட்டி மக்களுக்குச் சிரிப்பூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இப்போது பெரிய நாடுகளும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு வேஷம் கட்டிக் கொள்ளத் தொடங்கி விட்டன. உலக மயமாக்கல் கட்டிக்கொண்ட சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்றே எண்ணிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அமெரிக்காவும் வேஷம் கட்டத்தொடங்கி விட்டதோ என்று எனக்குத் ( இப்பொழுது தான் உன் கண்ணுக்குத் தெரிந்ததா ? என்று யாராவது திட்டினால் என்னிடம் பதிலில்லை ) தோன்றுகின்றது.

வருகின்ற செவ்வாய்க்கிழமை 24.01.2006 இல் அமெரிக்க புலனாய்வித் துறை அதிகாரிகள் இலங்கைக்கு வரப்போகின்றார்களாம். அவர்கள் வருவது போவது என்பதிலெல்லாம் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொண்டு வரும் காரணம் தான் எனக்குச் சிரிப்பை வரவழைக்கின்றது.

" தாங்கள் தேடி அழித்தொழித்து வரும் பயங்கர வாதிகளுடன் இலங்கையில் இயங்கும் குழுக்களுக்கு ஏதேனும் தொடர்பிருக்கின்றதா ? " என்று பார்க்க வருகின்றார்களாம். பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடிய அளவு சின்னப் பிரச்சனையாக இது இருக்கக் கூடுமென்று நான் நினைக்கவில்லை. யார் யார் பயங்கரவாதம் பேசுகின்றார்கள் ? செய்கின்றார்கள் என்று இன்று பத்தாம்பசலி மக்களுக்கும் தெரிந்திருக்கின்றது.

மதராஸ்ஸாக்களிற்கூடாக மந்திரம் சொல்லி அனுப்புகின்ற சவூதி அமெரிக்கரின் கூட்டாளி. ஆண்டுக்காண்டு அரசல் புரசலாக அப்பப்போது வெள்ளையரையும் வேற்றுக் கிரகத்து மனிதர்களையும் போட்டுத் தள்ளும் இந்தோனேசியா இனிய நாடு. நேரடியாகவே பேசக்கூடிய மலேசியா மோதுவதற்கு உதவாத நாடு. பாகிஸ்தான் 'மூச்'.....

கஸ்ரப் பட்டு உழைத்து மூளை தேய்ந்தவர்களுக்கு ஒரு உல்லாசம் கொடுக்க இலங்கைக்கு வருகின்றார்களோ தெரியவில்லை. இலங்கை உல்லாசத்திற்குப் பேர் போன நாடு. அல்லது இந்தியாவுக்கு சில நித்திரை இல்லாத இரவுகளைக் கொடுக்க வருகின்றார்களோ தெரியவில்லை.

சதாம் குசைனின் பெயரில் கிராமம் வைத்து பின்லேடனைத் தொழுது அப்பாவிகளைக் கிழக்கின் கரையில் வெட்டிப் போடுபவர்கள் அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கின்றார்கள். சோஷலிசம் பேசி மக்களைக் குப்பைக்கூடயில் போட்டு மூடுபவர்களும் சிவப்புக் கம்பளத்தால் தங்களை மூடிக்கொண்டிருப்பவர்களும் அரசாங்கத்தில் தான் இருக்கின்றார்கள். அசோகன் அனுப்பிய புத்தம் தம்மம் எல்லாவற்றையும் விட்டு அசோகனின் மனமாற்றத்திற்கு முன்னுள்ள இரத்தம் சத்தம் எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டிருப்பவர்களும் அரசாங்கத்துடன் தான் இருக்கின்றார்கள். பயங்கரவாததைத் தேடி அழிக்கும் அமெரிக்கர்களுக்கு நல்ல வேட்டைதான்.

இது முடியாதென்று இந்தியாவிற்கும் போகின்றார்களாம். ஏன்.. அங்கும் பயங்கரவாதிகளா ? பாகிஸ்தானுக்கும் இவர்கள் போகவேண்டி வரும். பாகிஸ்தானைத் தொடர்ந்து கஜகஸ்தான் மத்திய அரபு நாடுகள் என்று ... நாடுகளுக்கா பஞ்சம். பெரிய ஒரு டூர் ஆகத்தான் புறப்பட்டிருக்கின்றார்கள்.

அட ... போங்க ... நல்ல ஒரு அரசியல் .... டமாஸுங்க......

Saturday, January 14, 2006

இரண்டாயிரம் ஆண்டு வீரவணக்கம்

இரண்டாயிரம் ஆண்டு தொடர்ச்சியான வீரவணக்கம் ஒரு முடி மன்னனுக்குக் கிடைத்திருக்கின்றதென்றால் அவனின் வீரமும் அவனின் நற்குணங்களும் எவ்வளவு தூரம் மக்கள் மனங்களில் ஆட்சிபெற்றிருக்க வேண்டும்.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாதார சாட்சியம் கிடைத்திருக்கின்றது. அதுவும் ஒரு தமிழ் மன்னனுக்கு என்னும் போது உங்களைப் போலவே நானும் ஆச்சரியப் பட்டேன்.

கி.மு 161 வரை அநுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனுக்கே இந்த அழியாப் புகழ் கிடைத்திருக்கின்றது. இலங்கையின் சரித்திரத்தை தனிச் சிங்களப் பெளத்தத்தின் வரலாறாகவே எழுதப் புகுந்த மகாவம்சத்தாலேயே இம்மன்னனின் புகழையும் நீதியான ஆட்சியையும் மறுதலிக்க முடியாத ஒரு சிறப்புடன் வரலாற்றில் பெயர் பிடித்துக் கொண்ட ஒரு தமிழ் மன்னனின் கதையிது.

44 ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி நண்பருக்கும் பகைவருக்கும் ஒரே நீதி என்ற இலக்கணத்தின் படி இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் தன் எதிரியாகிய துட்டகைமுனுவாலேயே மரியாதைசெய்யப்பட்டவன்.

அவன் இறந்து 700 வருடங்களின் பின்னால் துட்டகைமுனுவை பெளத்த சிங்களத்தின் காவலனாகவும் காவிய நாயகனாகவும் வரித்துக் கொண்டு இலங்கையின் சரித்திரத்தை தனியே பெளத்தசிங்கள சரிதமாகவே எழுதத் துணிந்த மகாவம்சத்தில் அதன் ஆசிரியர் மஹாநாம இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

" இச்சை, வெறுப்பு, பயம்,மாயை ஆகியவற்றைத் தவிர்த்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி அவன் நேர்மையாக செங்கோல் ஓச்சி வந்தான். இரவிலே முகில்கள் மழையைப் பொழிந்தன. பகலில் மழை பெய்யவே இல்லை. இச்செங்கோலனை இயற்கையே கூட ஆதரித்தது போலும். இந்த மன்னன் துன்மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்காததனால் தான் அவனுடைய நம்பிக்கைகள் பொய்யானவையாக இருந்தபோதும் அதிசயிக்க தக்க சக்திகளை அவர் வரமாகப் பெற்றிருந்தார் " எனக் குறிப்பிடும் மகாவம்சம், " துட்டகைமுனு வெற்றிவாகை சூடிய பின் தலைநகருக்குள் தேர்ப்படையுடனும் காலாட்படையுடனும் யானைப்படையுடனும் அணிவகுத்துச் சென்றான். நகரிலே முரசு அறையும் படி ஆணையிட்டான். முரசொலி காதுக்கு எட்டிய தூரத்தில் இருந்து மக்கள் எல்லோரும் கூடிய பின்னர் எல்லாள மன்னனின் ஈமக்கிரியைகளை துட்டகைமுனு நடத்தினான்.
போர்க்களத்திலேயே எல்லாளனின் உடல் பாடையில் வைக்கப்பட்டு துட்டகைமுனு அச்சிதைக்கு தீ மூட்டினான். அங்கு ஒரு நினைவுத் தூபியை கட்டி எழுப்பி அதனை வழிபடுமாறு ஆணையிட்டான். அன்று தொட்டு இலங்கை மன்னர்கள் அந்நினைவு தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்துவது வழக்கம்" என்று குறிப்பிடுகின்றது.

இந்நினைவு தூபியைக் குறிக்க பயன்பட்டிருக்கும் பாளிச் சொல் ' cetiya'. இதன் அருகில் இருக்கும் கல்வெட்டில் " அரசனாயிருந்தால் என்ன குடியானவனாக இருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது" எனவும் குறிப்பிட்டிருந்ததாக மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றது.

மகாவம்சத்தின் உரை நூலாக அமைந்த "வம்சத்த பக்காசினி" இல் நேரடி அனுபவத் தகவலாக 'எல்லார பட்டிமாகர' (எல்லாள விக்கிரக அகம்) பற்றிய தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நூலின் பதிப்பாசிரியரின் கூற்றுப்படி இந்நூல் கி.பி 6 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. வில்கெல்ம் கைகர் என்னும் வரலாற்று ஆராய்சியாளர் இந்நூல் 11 ஆம் 13 ஆம் நூற்றாண்டுக்கிடைப்பட்டது என்று கூறுகின்றார்.

நம் சமகால ஆராய்ச்சியாளரான பரண வித்தானவும் எல்லாளன் இறந்து ஆயிரம் ஆண்டுகளின் பின்னரும் எல்லாளனின் ' பிரதிமைக்கு' அஞ்சலி செலுத்தப் பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்.

14 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட "சந்தர்மலங்காரய" என்னும் நூல் " எல்லாளன் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயருடன் விளங்கிய தாதுகோபுரத்தை துட்டகைமுனு கட்டுவித்தான் எனத் திட்டவட்டமாகக் கூறுகின்றது. இற்றைவரையும் (14 ஆம் நூற்றாண்டில் ) இவ்விடத்துக்கு மன்னர்கள் வரும் போது முரசு கொட்டப்படுவதில்லை." எனவும் கூறுகின்றது.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது எதிரிகளிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்த பிலிமத்தலாவ - மிகப் பழைய கண்டிய அரச குடும்பத்தின் தலைவன் - அநுராதபுரத்தில் இருக்கையில் காலாதிகாலமாகக் கடைப்பிடித்து வந்த இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்தான் என்று கூறப்படுகின்றது.

1840 இல் வெளிவந்த "இலங்கையில் 11 ஆண்டுகள் " என்ற நூலில் அதன் ஆசிரியரான போப்ஸ் இவ்வாறு கூறுகின்றார்.

" ஒரு நாத்திகனின் பாழடைந்த கல்லறையை பெளத்த யாத்திரீகர்கள் ஒரு புனித கட்டிடத்தின் அழிபாடு எனக் கருதுகின்றனர். எல்லாளன் இறந்து 20 நூற்றாண்டுகளாகியும் எல்லாளனைத் தோற்கடித்தவனது ஆணையை எந்த ஒரு சுதேசியும் எக்கட்டத்திலும் தட்டிக் கழித்திருப்பான் என நான் நம்பவில்லை. 1818 இல் பிலிமத்தலாவ தான் ஈடுபட்டிருந்த கிளர்ச்சி நசுக்கப்பட்டு தப்பி ஓடிக்கொண்டிருந்த வேளையில் மிகக் களைப்புற்று கை கால்கள் அசைக்க முடியாது இருந்தபோதிலும் தனது சிவிகையில் இருந்து கீழிறங்கினான். இடத்தைச் சரியாகத் தெரியாததனால் இந்தப் பண்டைய நினைவுச் சின்னத்தை எப்போதோ கடந்தாகிவிட்டது என உறுதி அளிக்கப் படும் வரை அவன் தொடர்ந்து நடந்தான் " எனக் கூறுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னரும் இந்த பாழடைந்த கட்டிடம் " எல்லாள சொகென " என் அழைக்கப்பட்டது.

எமெசன் ரெனன்ற் எழுதிய 'இலங்கை' என்ற நூலில் சிங்கள வீர தர்மம்-எல்லாளனும் துட்டகைமுனுவும்- என்ற தலைப்பில் "இரு தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட போரே இலங்கை வீர தர்மத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு. எல்லாளனுடைய வீரத்தை உண்மையில் மெச்சிய அவனது பகைவன் எல்லாளன் மாண்ட அதே இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினான்.அதன் அழிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. இன்றும் கூட சிங்கள மக்கள் பயபக்தியோடு அதனை வழிபடுகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆயிரம் ஆண்டுகளின் பின்னரும் போற்றப் படும் மன்னன் ஒரு தமிழன் என்ற வகையில் நாமெல்லாம் பெருமைப்படலாம்.

Friday, January 13, 2006

பொங்கலோ பொங்கல்

பொங்கல் பெருநாள். தமிழர் திருநாள் என்றெல்லாம் சிறப்பித்துச் சொல்லுகின்றோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் விழுந்து கிடப்பவனுக்கு உற்சாகம் ஏற்பட வேண்டும் என்று சொன்னார்களோ என்னவோ ? வாழ்க்கையே மறுதலிக்கப் பட்டவர்களுக்கு என்ன சொல்ல ?

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத்தில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபோது (ஒரு மார்கழி மாதத்தில்) தை பிறக்கப் போகின்றது வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எட்டிப் பார்த்தது.

ஆனால் இன்று .... பட்டாசு ஓசை கேட்கின்றதோ இல்லையோ துப்பாக்கி ஓசை கேட்கக் கூடாது என்று ஏங்கும் மக்கள் தான் எங்கும். பொங்கும் மங்களம் எங்கும் தங்குகின்றதோ இல்லையோ பொங்கும் பயம் எங்கும் தங்கி நிற்கின்றது.

நானா ? நீயா ? நைனாவா ? என்று "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் " என்று ஆளாளுக்குக் கிளம்பி இருக்கின்றார்கள்.

" குழந்தைப் பிள்ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது " என்னுமாப் போல் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம் அமெரிக்கா அவுஸ்திரேலியா நோர்வே இந்தியா என்று குழந்தைப் பிள்ளைகளின் கைகளில் சீவன் போகும் விளையாட்டில் சிக்கிக் கொண்டுள்ளது.

புதுப் பானை எடுத்துப் பொங்கலிடுகிறார்களோ இல்லையோ கையில் கிடைத்த தட்டுமுட்டுச் சாமான்களுடன் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கின்றார்கள் தமிழ் நாட்டிற்கு.

தமிழ் நாட்டில் மட்டும் என்ன வாழுதாம். புதுக்கதிர் வெட்டி பொங்கலிட அரிவாள் தூக்குகின்றார்களோ இல்லையோ ஆளை வெட்ட அரிவாள் தூக்கிக் காட்டுகின்றார்கள்.

சந்தி சிரிக்கச் சண்டை போட்டுக்கொண்டே பொங்கல் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கின்றார்கள். மனதில் பொங்க வேண்டிய அன்பு பொங்கக் காணோம்.

தமிழன் என்றால் ஒரு இனம் என்பதை மறந்து வீட்டுக்கொரு சாதி வீதிக்கொரு நீதி பேசித்திரியும் இனமாகி விட்டது தமிழ் இனம்.

" நான் " பெரிது .. " நீ " பெரிது என சண்டை போட்டு " நாம் " தாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

" சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காதவர்கள் " அல்ல நாங்கள், சொந்த சகோதரர்களை துன்பத்தில் போட்டு கொலை செய்வதில் சிந்தை மகிழ்பவர்கள் நாங்கள்.

இந்த நிலை மாறி தமிழராய் வாழ வேண்டும் என்று எண்ணுவோம்.

" பொங்கல் பொங்குகின்றதோ இல்லையோ இம்முறை இந்தக் கோபம் பொங்கட்டும் "


பொங்கலோ பொங்கல்.

Wednesday, January 11, 2006

தமிழீழம் : இறுதிப் போர் ?

2002 இல் கைச்சாத்தாகி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் என்றுமில்லாதவாறு கடும் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அடுத்து என்ன ? என்ற கேள்வி பலராலும் கேட்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

என்ன நடக்கும் என்ற நிஜத்திற்கு அப்பால் பல ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப் பட்ட அனைத்துத் தரப்பும் பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சமாதான உடன்பாட்டாளர்கள் என்ற நிலையில் இருக்கும் நோர்வேயினதும் சமாதான இணைநாடுகளினதும் செயற்பாடுகளை மீறிய வகையில் களநிலவரம் வரலாறு காணாத கொடிய போர் ஒன்றுக்கான திசையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களும் மக்கள் எழுச்சிப் படை என்ற பெயரில் இடம் பெறும் பதிலடிகளும் சாமாதானத்தின்பால் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கைகளைக் குறைத்த வண்ணமே இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அரசு சாரா தொண்டர் அமைப்புக்கள் பல தமது செயற்பாடுகளை இடைநிறுத்தி வெளியேறிக்கொண்டிருக்கின்றன. பல நாடுகள் தமது பிரஜைகளை வடக்கு கிழக்குப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.

எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் வகையில் ஆளும் சுதந்திர முன்னணியின் கூட்டாளிக் கட்சியான ஜே.வி.பி நோர்வேயின் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை நிராகரித்ததுடன் ' அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து நோர்வே விலகினால் மட்டும் அந்த நாட்டுடன் எந்தப் பிரச்சனை குறித்தும் பேசுகின்றோம். நோர்வேயை சிறிலங்காவின் எதிரணியாகவே பார்க்கின்றோம். ' எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது. மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ' வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்பதற்கு சான்றுகள் உள்ளதா ? இருந்தால் நேரடி விவாதத்திற்கு தயார் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். தென் இலங்கைக் கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஒரு போரினை விரும்பும் மன நிலயிலேயே இருக்கின்றனர் என்பதை மக்கள் முன்னணிகள் விடுக்கும் அறிக்கைகளில் இருந்து கணித்துக் கொள்ளலாம். அண்மையில் திருமலையில் ஐந்து மாணவர்கள் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. படையினர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது அராஜகம் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு சிங்கள முன்னனி என்ற அந்த அமைப்பு அறிக்கை விட்டிருக்கின்றது.

தமிழர் தரப்பில் இராணுவத்தின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொங்கி எழும் மக்கள் படை என்ற பெயரில் பதில் தாக்குதலும் கண்டன அறிக்கைகளும் வெளியிடப் படுகின்றது. இத்தாக்குதல்கள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுத லைப் புலிகளாலேயே நடைபெறுகின்றது என்னும் அரசின் குற்றச் சாட்டுகளிற்கு பதில் கூறிய கண்காணிப்புக் குழுத்தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் 'விடுதலைப் புலிகளே இத்தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை ' என தமது அறிக்கையில் குறிப்பிட்ட அவர் எனினும் நன்கு பயிற்சி பெற்றவர்களாலேயே இத்தாக்குதல்கள் நடை பெற்றிருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் மக்களைப் பயிற்றுவிப்பதாக விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவே அறிவித்து அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கண்காணிப்புக் குழுவின் தலைவரின் அறிக்கை பொருள் பொதிந்ததாகவே காணப் படுகின்றது.

அதே நேரம் 08 ஜனவரி 2006 இல் தமிழீழத் தொலைக்காட்சியில் நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் மூத்த உறுப்பினரான கா. வே. பாலகுமாரன் கூறிய கூற்றையும் இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ' சிறிலங்கா இராணுவத்தால் மக்கள் தாக்கப் பட்டு அவர்கள் இடம் பெயரும் போது அந்த மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த மக்களைக் கொண்டே இராணுவத்தைத் திருப்பித் தாக்கும் படையையும் தயாரித்து ஒரு பாரிய வராலாற்றுத் திருப்பத்தை வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக உருவாக்கப் போகின்றோம் என்பதுதான் எங்களது தீர்க்கமான தீர்மானகரமான அரசியல் இராணுவரீதியான சிந்தனையும் கூட என்று தெரிவித்திருக்கின்றார்.

இதே வேளை சமாதானப் பேச்சுவார்த்தக்கு இரு தரப்பையும் கொண்டு வர வேண்டிய தார்மீக நிலைப்பாட்டைக் கடந்து அமெரிக்கா விடுதலைப் புலிகளை மட்டும் கடும் தொனியில் எச்சரித்துள்ளது. ' இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறையை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் ' என்று அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெட் கொழும்பில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அரசின் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 'சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னைப் பாதுகாக்கவும் நாம் உதவுகின்றோம். வர்த்தகர்களுடனான கூட்டத்தில் அமெரிக்கத் தூதுவர் ஏன் இவ்வாறு கடுமையாகப் பேசுகின்றார் என்ற கேள்வி எழக் கூடும். அமைதி முயற்சிகள் வர்த்தக முயற்சிகளுக்கு அவசியமானது ' என்று தெரிவித்ததோடு பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் பற்றி எதுவித அனுதாபமும் தெரிவிக்காத அமெரிக்கா இலங்கை மீதான கரிசனைக்கான காரணத்தையும் தெளிவு படுத்தியுள்ளது. உலகின் ஜனநாயகத்தின் காவலர்களாகத் தம்மை இனங்காட்டி இன்று ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் வலிந்து யுத்தங்களைத் திணித்து அதனால் அமெரிக்க வரி செலுத்துபவர்கள் தலையில் இரண்டு திரிலியன் டொலர்களைக் கடனாகச் சுமத்தியிருக்கும் அமெரிக்காவின் ஜனநாயக அணுகு முறை இவ்வாறு மிரட்டலாக வெளிப்பட்டிருக்கின்றது. அங்க வீனர்களான அமெரிக்க இராணுவ வீரர்களின் ஆயுள்கால பராமரிப்புச் செலவும் இதனுள் அடங்கும் என்று அண்மையில் வெளியிடப் பட்ட ஆய்வறிக்கை கூறுகின்றது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை வழி மொழியும் அவுஸ்திரேலியாவும் சம்பவங்களைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கர வாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை அமைதிப் பேச்சு வார்த்தகளைக் காரணம் காட்டி நோர்வே நிராகரித்துள்ளது. அதே நேரம் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையான இலங்கை அரசிற்கான உதவிகளாக இருக்காது என்பதை சமீபத்தில் இடம் பெற்ற அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஊகிக்க முடிகின்றது. முக்கிய இடதுசாரித் தலைவரான பரதன் உட்பட தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடு இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாகவே இருக்கின்றன.

இதற்கிடையில் ஊடகங்களும் பிரபல அரசியல் ஆய்வாளர்களும் யுத்தம் ஏற்பட்டால் யுத்தத்தின் போக்கு எவ்வாறு இருக்கக் கூடும் என்பதை ஆரூடம் கூறத் தொடங்கி விட்டனர்.

இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் இலக்கு ' யாழப்பாணம் தான் ' என்று ரொய்டர் செய்தித் தாபனத்தின் அரசியல் ஆய்வாளர் பீற்றர் ஆப்ஸ் அடித்துக் கூறுகின்றார்.

'' யாழ்ப்பாணம் தான் அவர்களின் பிரதான இலக்கு '' என்று வழி மொழிகின்றார் பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ். ''மரபுவழிப் படைத்தாக்குதலில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் பல்லவீனமானவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் கொரில்லாத் தாக்குதல் பலம் வாய்ந்ததாக இருக்கும்" என்றும் கருத்துத் தெரிவிக்கின்றார்.

அதே நேரம் தாக்குதலுக்குள்ளாகும் இலக்குகளாக கடல்வழி விநியோகப் பாதையும் பலாலி விமானத்தளமும் இருக்கக் கூடுமெனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். யாழப்பாணக் குடா நாட்டில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் இராணுவத்தினருக்குமான விநியோகப் பாதைகளாக இவ்விரு பாதைகளுமே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்சம் விமான ஓடுபாதையும் எரிபொருள் களஞ்சியங்களும் தாக்கி அழிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இத்தாக்குதல் வெற்றியடையக் கூடும் என்ற எதிர்வு கூறலுக்கு பின் வரும் காரணங்களை எடுத்துக்காட்டுகின்றார். " யாழ்ப்ப்பாணக் குடாநாடு சந்தேகமில்லாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. ஆனாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் எப்படி இத்தனை கைக்குண்டுகளும் கண்ணிவெடிகளும் கடத்தி வரப்பட்டன ? " என்று கேள்வி எழுப்புகின்றார் இக்பால் அத்தாஸ்.

சிறிலங்காவிற்கான அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிகளைத் தொடர்ந்து இராணுவ உதவிகள் அதிகரிக்கக் கூடும் என்றும் இவ்வுதவிகள் ஆயுதங்களையும் பெரும் தொகை நிதியையும் கொண்டிருக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறும் சில ஆய்வாளர்கள் சர்வதேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பும் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். சர்வ தேச நாடுகள் படைத்தரப்பை அனுப்பாது என்பதை சமாதான சபையின் தலைவர் ஜெகான் பெரேராவும் வழி மொழிகின்றார்.

யுத்தம் வரப்போகின்றது என்பதை எதிர்பார்க்கும் அனைத்துத் தரப்பும் அப்படி வந்தால் அது இதுவரை இல்லாத வகையில் மிகவும் கடுமையானதாக இருக்கக் கூடும் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார்கள்.

Monday, January 09, 2006

உறவுகள் மேம்பட ...

- நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் - EGO

-பேச்சைக் குறையுங்கள்- LOOSE TALKS

-சமயோசிதத்துடன் நடவுங்கள் -DIPLOMACY

-விட்டுக் கொடுங்கள்-COMPROMISE

-சகிப்புத்தன்மையுடன் இருங்க்கள்-TOLERANCE

-நெகிழ்வுத்தன்மையுடன் இருங்கள்-FLEXIBILITY

-இதமாகப் பேசுங்கள்-COURTESY

-மகிழ்வுடன் அணுகுங்கள்-SMILE

Monday, January 02, 2006

தமிழகவானில் தமிழீழப் விடுதலைப் போராட்டம்

தமிழீழப்போராட்டம் பற்றி அண்மையில் தமிழக அரசியல் வாதிகளும் தமிழகத் தினசரிகளும் வெளிய்யிட்ட அறிக்கைகளின் தொகுப்பு - (எனது கருத்துக்கள் அல்ல.)

ஐ.நா வில் தமிழீழக் கொடி விரைவில் பறக்கும் : வை கோ (29/12/2005 )
-------------------------------------------------------------------------

ஐ.நா சபையிலே புதிய புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும் என்று அவர் சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கூறினார்.


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (29/12/2005 )
------------------------------------------------

ஈழத் தமிழர்களை சாகடிக்க வேண்டும் என்று சொல்கிறபோது மற்றத் தலைவர்கள் அதைப் பார்த்து கல்லாகி இருக்கவேண்டுமா ? ஈழத்தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். நாட்டால் வேறு பட்டு இருக்கலாம். வீட்டால் , கலாச்சாரத்தால் , பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். யாருக்கெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகின்றதோ யாரெல்லாம் தமிழன் என்ரு சொல்கிறார்களோ அவர்கள் தமிழ் அபிமானத்தோடு ஈழத்தமிழர்களைப் பார்க்க வேண்டாமா? ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இனியும் தொடரக் கூடாது என்று அவர் தலமை வகித்துப் பேசிய ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கூறினார்.


'விடுதலை ' நாளேடு ( 30/12/2005 )
----------------------------------------------
இன எதிரிகளின் புருவங்கள் ஏறி இறங்கி இற்று விழ புயலெனத் தமிழர்கள் வந்தனர் சென்னை மாநாடு குறித்து விடுதலை நாளேடு .

6 கோடித் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு உததசீனப் படுத்தி விட முடியாது : தினமணி நாளேடு

ஈழத்தமிழர் பிரச்சினையில் மனம் குமுறி நிற்கும் 6 கோடித்தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு உதாசீனப் படுத்தி விட முடியாது என்பதை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ நினைவில் கொள்ள வேண்டும் என தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது.


வைகோ 01/01/2006
-------------------------

இலங்கையில் சிங்கள இராணுவம் நடத்திவரு அட்டூழியங்கள் குறித்து இந்திய-சிறிலங்கா கூட்டறிக்கை மெளனம் சாதித்தது ஏன் என்று ம்திமுக பொதுச்செயலாளர் சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் நேர்காணலில் கேள்வி எழுப்பினார்.


ஈழத்தமிழருக்கு உதவுவதை ஒத்த தமிழ்ப் பணி எதுவும் இல்லை: தமிழக முதுபெரும் கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி
---------------------------------------------------------

தமிழகத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மகாநாடு நடத்தப் பட்டமை குறித்த தனது மகிழ்ச்சியினையும் ஆதரவையும் தமிழகத்தின் முது பெரும் கல்வியியலாளரும் முன்னாள் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான வா.செ. குழந்தைசாமி திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இலங்கைத்தமிழர் கொடுமைக்கு ஆளாக்கப் படக் கூடாது : மு.கருணாநிதி (01/01/2006 )
--------------------------------------------------------------------------------------------

இலங்கையில் உள்ள தமிழர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் நிலைப்பாடு பழைய நிலைப்பாடுதான் என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி சென்னையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

Sunday, January 01, 2006

தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு

இன்று விடுதலை வேண்டிப் போராடுகின்ற இனக்குழுமங்களாக ஈழத் தமிழ் மக்களும் காஸ்மீர மக்களும் இனம் காணப் பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற பல இனக்குழுமங்களுள் காஸ்மீரம் நீண்ட கால வரலாறும் தொடர்ச்சியான வெளிப்பாடும் கொண்டது. அதே போல இலங்கையின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கும் உண்டு.

காஸ்மீரத்தின் சுதந்திரம் , பாகிஸ்தானிய படைகள் காஸ்மீரத்துள் புகுந்தபோதும் மன்னனின் சூழ்நிலை இந்தியாவை வலிந்து அழைக்கவேண்டியதாகிப் போனபோதும் பறிபோயிற்று. இன்று வரை தொடரும் போராட்டம் இரத்தமும் சதையுமாக குதறிப் போடும் அவலங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழத்தின் சுதந்திரம் 1505 இல் போத்துக்கேயர் கடற்கரையோரம் கால் வைத்தபோது பறிபோயிற்று. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சி முறை வசதிக்காக ஒன்று சேர்ந்து இலங்கையானபோது அதன் எல்லைகளும் காணாமற்போயிற்று. தொடர்ந்து ஐந்து நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சியின் முடிவிலும் அரசியல் தொலைநோக்கற்ற தமிழ் அரசியல் வாதிகளின் முடிவுகளால் சிங்களப் பேரின வாதிகளின் கால்களுக்கிடையில் சிதைந்து கொண்டிருக்கின்றது.

இன்றளவும் உலக வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப பந்தாடப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரத்தில் இன்று பாதுகாப்பிற்கெனச் சென்ற இந்தியப் படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? ஒருவேளை காஸ்மீரம் இந்தியாவின் உதவியை நாடியிராவிட்டால் பாகிஸ்தானின் பஞ்சாப் போன்றோ இல்லை பலூசிஸ்தான் போன்றோ பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கக் கூடும் என்று கருத்துக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஆனாலும் இப்பொழுதும் அதைவிடச் சிறந்த முறையில் தானா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ?

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையில் இருந்து தங்களை காத்தருளும் இரட்சகர்கள் என எதிர்பார்த்திருந்த தமிழ் ஈழ மக்களுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பரிசுதான் என்ன ? அவர்கள் இராணுவ வாகனங்களின் சங்கிலிப் பாதங்களுள் அரைபட்டு இரத்தமும் சதையுமாக சிதைந்து போனதைவிட வேறு என்ன பரிசு கிடைத்தது.

இந்தியா என்பதையும் விட தாய்வழிப் பந்தம் வேரடி மண் என்று காலாதி காலம் நம்பியிருந்த தமிழக மக்களும் தலைவர்களும் கூட மெளனமாகிப் போயிருந்தார்களே ? இன்று வரை தனது பிராந்திய நன்மைகள் என்ற குறுகிய வட்டத்துள் நின்றே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பதைத் தவிர இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது ?

ஆறரைகோடி தமிழ் நாட்டவர்களின் உறவுகளில் ஏற்படாத கரிசனை சிங்களவர்களின் பால் ஏற்படுவதற்கு இந்தியா இதைவிட வலுவான என்ன காரணத்தைக் கூறுக்கூடும்.

முன்னை நாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் மரணம் தான் காரணம் என்று கூறிக்கொள்ள முனையலாம். அப்படி என்றால் சமாதானப் படைகள் ஈழத் தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்ததற்கு என்ன காரணம் இருக்கமுடியும்.

இரண்டு பெரும் போர்களையும் தீவிரவாதத்திதின் தாக்குதல்களையும் இந்தியாவிற்குப் பரிசளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் எப்படி நேசக் கரம் நீட்டுகின்றார்கள். தீவிரவாதம் என்னும் பாஷை யில் பேசிக்கொண்டிருக்கும் பா கிஸ்தா னை விட தமிழ் ஈழம் எப்படி இந்தியாவிற்கு ஆபத்தானதாய் இருக்கமுடியும். இலங்கயின் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய நேரடி வாரிசுகளின் குடியுரிமையைப் பறித்ததிலிருந்து இரஜீவ் காந்தியை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபின் துப்பாக்கியால் அடித்தது வரை செய்தது சிங்களவர்கள் அல்லவா ? அவர்களுடன் வராத கோபம் ஈழத்தமிழ் மக்கள் மேல் வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இந்தியப் பகிஷ்கரிப்பு என்ற பெயரில் இந்தியப் பொருட்களைத் தீயிலிட்டு எரித்த கட்சிகளுடன் கூடிக் குலவுவதில் இந்தியாவிற்கும் அதன் அரசியல் கட்சிகளுக்கும் எந்த வெட்கமுமில்லை.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழ் ழ் மக்கள் சார்பாக கருத்து சொல்வதை மட்டும் கொச்சைப் படுத்துவதில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வசதியான வாழ்வுடையவர்கள். மலையகத்தமிழர்கள் தான் இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்ற கருத்தும் முன் வைக்கப் படுகின்றது. அப்படி ஸ்மாட் ஆக சிந்திக்கும் படியும் கருத்து விதைக்கப் படுகின்றது. தமிழ் ஈழத்தின் சுதந்திரப் போராட்டம் முன்னர் எப்படியிருந்த போதும் இப்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கான பொதுவான போராட்டமாக பரிணமித்துள்ளதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் தவறுகள் ஏற்படுவதும் பின்னர் திருத்தப் படுவதும் இயல்பானதே.

இதற்காகவே சொல்லி வைத்ததுபோல் போராட்டத்தின் முன்னோடிகளாக இருந்து கருத்து மோதல்களால் மரணித்த பத்மநாபா, சிறீசபாரட்ணம் போன்றோரின் மரணங்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன. மிகவும் துக்கரமான தவறுகள் இவை என்றாலும் போராட்டத்தின் ஆரம்பகால தவறுகள் இவை என்பதற்கப்பால் தமிழகத்தமிழர்களின் உணர்வுகளை வேறு எவ்வாறு பாதிக்கக் கூடும்.

நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்களும் சித்திரவதை செய்யப் பட்டு சீரழிக்கப் படும் அபலைகளும் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா?

இவையெல்லாம் இந்திய மேலாண்மை அரசின் போக்கை கேள்வி கேட்கவோ எதிர்ப்புக் காட்டவோ தமிழக மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதுமான காரணங்களாக இல்லையா? ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டதி ற்கான எதிர்ப்பிற்கு இந்தியாவின் பிராந்திய வல்லரசுப் பார்வை தவிர்ந்த வேறு ஏதாவது காரணங்கள் இருக்க முடியுமா ?

இன்று உலக நாடுகளுடன் இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கை பல நோக்கங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களின் அபிலாசைகளின் போக்கில் வளைத்தெடுக்கும் நோக்கிலேயே என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனும் நன்கு புரிந்தே இருக்கின்றார்கள். உலக நாடுகள் எவற்றையும் விட இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவையும் அனுசரணையையும் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். காரணம் பாரம்பரிய தொப்பூழ்கொடியுறவு தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஈழத்தமிழ் மக்களைப் போலவே காஸ்மீர மக்களும் இந்தியாவினதும் பாகிஸ்தானதும் உலக வல்லரசுகளினதும் பகடைக் காய்களாக இருப்பதைத் தவிர போராட்ட வடிவத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை. நோக்கமும் வேற் வேறாகவே காணப்படுகின்றன என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் ?

வாழ்க்கையின் மொழி என்ன ?

வாழ்க்கைக்கு மொழி இருக்கின்றதா ? யாராவது அந்த மொழியைக் கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா ? ஏன் இப்படியொரு கேள்வி எனக்குள் ஏற்பட்டது என்பது கூட இன்னும் ஆச்சரியமாகவே இருந்துகொண்டிருக்கின்றது. வாழ்க்கை என்பது என்ன என்பது கூட விளங்காத புதிராகத் தான் இருக்கின்றது. வாழ்க்கை என்றால் என்ன ?

நான் இதுவரை வாழ்ந்ததா ? இல்லை இனிவருங் காலத்தில் வாழப் போவதா ? இல்லை நான் அல்லாமல் மற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதா?
எது வாழ்க்கை. எவர் வாழ்ந்தது ? அல்லது வாழ்ந்து கொண்டிருப்பது ? அல்லது வாழப்போவது ? எதை வாழ்க்கை என்று சொல்ல முடியும்.

உலகம் பிறந்ததிலிருந்து 'வாழ்ந்து' மறைந்த கோடிக்கணக்கான மனித உயிரகள் செய்தது என்ன ? மனிதர் தவிர்ந்த மற்றும் உயிரினங்கள் செய்து கொண்டிருப்பது என்ன ? இதனை வாழ்க்கை என்று சொல்ல முடியுமா ? அல்லது வாழ்க்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளக் கூடுமா ?

மனிதர் வாழ்ந்தது , வாழ்வதே வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் வாழ்வின் மொழி என்ன ? வாழ்வின் மொழியை அறிந்திருந்தால் வாழ்க்கையில் இத்தனை துன்ப துயரங்களும் இல்லாமல் மனித இனம் வாழ்ந்து விட்டுப் போகக் கூடுமோ ?

வாழ்க்கைப் பயணம் இன்ன திசையில் நகர்ந்து இந்த இலக்கில் முடிந்து விடும் என்பதறிந்தால் மனித மனத்தின் மாச்சரியங்களும் கொடூர முகங்களும் இல்லாது ஒழிந்து போகக்கூடுமோ ?

எது வாழ்க்கையின் மொழி ? வாழ்க்கையின் மொழி என்பது மனிதாபிமானம் நிறைந்ததாய் இருக்கக் கூடும். மனிதனை மனிதன் நேசிப்பதை சொல்லிக் கொடுப்பதாய் இருக்கக் கூடும். மனிதருடன் இணைந்து மகிழ்ந்து வாழ்வதை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடும்.

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் வாழ்க்கையின் மொழியைச் சரிவரப் புரிந்தே வாழ்கின்றன மனிதரைத் தவிர.
அவற்றுக்கிடையே போட்டியில்லை , பொறாமையில்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை , சுரண்டல் இல்லை.

ஆனால் மனிதனிடம் இவை எல்லாம் இருக்கின்றன. வாழ்க்கையின் குறிப்புணராத பேதமை இருக்கின்றது. தான் என்ற கர்வம் இருக்கின்றது. தனது நம்பிக்கையை மற்றவர் மேல் திணிக்கின்ற மதம் இருக்கின்றது. தனக்கு மட்டுமே அனைத்தும் என்கிற பேராசை இருக்கின்றது.

அதானால் வாழ்க்கையைத் தொலைக்கப் போகின்ற ஆபத்தும் இருக்கின்றது. எப்பொழுது நாம் வாழ்க்கையின் மொழியைப் புரிந்து கொள்ளப் போகின்றோம் ?