Saturday, January 14, 2006

இரண்டாயிரம் ஆண்டு வீரவணக்கம்

இரண்டாயிரம் ஆண்டு தொடர்ச்சியான வீரவணக்கம் ஒரு முடி மன்னனுக்குக் கிடைத்திருக்கின்றதென்றால் அவனின் வீரமும் அவனின் நற்குணங்களும் எவ்வளவு தூரம் மக்கள் மனங்களில் ஆட்சிபெற்றிருக்க வேண்டும்.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாதார சாட்சியம் கிடைத்திருக்கின்றது. அதுவும் ஒரு தமிழ் மன்னனுக்கு என்னும் போது உங்களைப் போலவே நானும் ஆச்சரியப் பட்டேன்.

கி.மு 161 வரை அநுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனுக்கே இந்த அழியாப் புகழ் கிடைத்திருக்கின்றது. இலங்கையின் சரித்திரத்தை தனிச் சிங்களப் பெளத்தத்தின் வரலாறாகவே எழுதப் புகுந்த மகாவம்சத்தாலேயே இம்மன்னனின் புகழையும் நீதியான ஆட்சியையும் மறுதலிக்க முடியாத ஒரு சிறப்புடன் வரலாற்றில் பெயர் பிடித்துக் கொண்ட ஒரு தமிழ் மன்னனின் கதையிது.

44 ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி நண்பருக்கும் பகைவருக்கும் ஒரே நீதி என்ற இலக்கணத்தின் படி இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் தன் எதிரியாகிய துட்டகைமுனுவாலேயே மரியாதைசெய்யப்பட்டவன்.

அவன் இறந்து 700 வருடங்களின் பின்னால் துட்டகைமுனுவை பெளத்த சிங்களத்தின் காவலனாகவும் காவிய நாயகனாகவும் வரித்துக் கொண்டு இலங்கையின் சரித்திரத்தை தனியே பெளத்தசிங்கள சரிதமாகவே எழுதத் துணிந்த மகாவம்சத்தில் அதன் ஆசிரியர் மஹாநாம இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

" இச்சை, வெறுப்பு, பயம்,மாயை ஆகியவற்றைத் தவிர்த்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி அவன் நேர்மையாக செங்கோல் ஓச்சி வந்தான். இரவிலே முகில்கள் மழையைப் பொழிந்தன. பகலில் மழை பெய்யவே இல்லை. இச்செங்கோலனை இயற்கையே கூட ஆதரித்தது போலும். இந்த மன்னன் துன்மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்காததனால் தான் அவனுடைய நம்பிக்கைகள் பொய்யானவையாக இருந்தபோதும் அதிசயிக்க தக்க சக்திகளை அவர் வரமாகப் பெற்றிருந்தார் " எனக் குறிப்பிடும் மகாவம்சம், " துட்டகைமுனு வெற்றிவாகை சூடிய பின் தலைநகருக்குள் தேர்ப்படையுடனும் காலாட்படையுடனும் யானைப்படையுடனும் அணிவகுத்துச் சென்றான். நகரிலே முரசு அறையும் படி ஆணையிட்டான். முரசொலி காதுக்கு எட்டிய தூரத்தில் இருந்து மக்கள் எல்லோரும் கூடிய பின்னர் எல்லாள மன்னனின் ஈமக்கிரியைகளை துட்டகைமுனு நடத்தினான்.
போர்க்களத்திலேயே எல்லாளனின் உடல் பாடையில் வைக்கப்பட்டு துட்டகைமுனு அச்சிதைக்கு தீ மூட்டினான். அங்கு ஒரு நினைவுத் தூபியை கட்டி எழுப்பி அதனை வழிபடுமாறு ஆணையிட்டான். அன்று தொட்டு இலங்கை மன்னர்கள் அந்நினைவு தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்துவது வழக்கம்" என்று குறிப்பிடுகின்றது.

இந்நினைவு தூபியைக் குறிக்க பயன்பட்டிருக்கும் பாளிச் சொல் ' cetiya'. இதன் அருகில் இருக்கும் கல்வெட்டில் " அரசனாயிருந்தால் என்ன குடியானவனாக இருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது" எனவும் குறிப்பிட்டிருந்ததாக மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றது.

மகாவம்சத்தின் உரை நூலாக அமைந்த "வம்சத்த பக்காசினி" இல் நேரடி அனுபவத் தகவலாக 'எல்லார பட்டிமாகர' (எல்லாள விக்கிரக அகம்) பற்றிய தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நூலின் பதிப்பாசிரியரின் கூற்றுப்படி இந்நூல் கி.பி 6 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. வில்கெல்ம் கைகர் என்னும் வரலாற்று ஆராய்சியாளர் இந்நூல் 11 ஆம் 13 ஆம் நூற்றாண்டுக்கிடைப்பட்டது என்று கூறுகின்றார்.

நம் சமகால ஆராய்ச்சியாளரான பரண வித்தானவும் எல்லாளன் இறந்து ஆயிரம் ஆண்டுகளின் பின்னரும் எல்லாளனின் ' பிரதிமைக்கு' அஞ்சலி செலுத்தப் பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்.

14 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட "சந்தர்மலங்காரய" என்னும் நூல் " எல்லாளன் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயருடன் விளங்கிய தாதுகோபுரத்தை துட்டகைமுனு கட்டுவித்தான் எனத் திட்டவட்டமாகக் கூறுகின்றது. இற்றைவரையும் (14 ஆம் நூற்றாண்டில் ) இவ்விடத்துக்கு மன்னர்கள் வரும் போது முரசு கொட்டப்படுவதில்லை." எனவும் கூறுகின்றது.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது எதிரிகளிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்த பிலிமத்தலாவ - மிகப் பழைய கண்டிய அரச குடும்பத்தின் தலைவன் - அநுராதபுரத்தில் இருக்கையில் காலாதிகாலமாகக் கடைப்பிடித்து வந்த இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்தான் என்று கூறப்படுகின்றது.

1840 இல் வெளிவந்த "இலங்கையில் 11 ஆண்டுகள் " என்ற நூலில் அதன் ஆசிரியரான போப்ஸ் இவ்வாறு கூறுகின்றார்.

" ஒரு நாத்திகனின் பாழடைந்த கல்லறையை பெளத்த யாத்திரீகர்கள் ஒரு புனித கட்டிடத்தின் அழிபாடு எனக் கருதுகின்றனர். எல்லாளன் இறந்து 20 நூற்றாண்டுகளாகியும் எல்லாளனைத் தோற்கடித்தவனது ஆணையை எந்த ஒரு சுதேசியும் எக்கட்டத்திலும் தட்டிக் கழித்திருப்பான் என நான் நம்பவில்லை. 1818 இல் பிலிமத்தலாவ தான் ஈடுபட்டிருந்த கிளர்ச்சி நசுக்கப்பட்டு தப்பி ஓடிக்கொண்டிருந்த வேளையில் மிகக் களைப்புற்று கை கால்கள் அசைக்க முடியாது இருந்தபோதிலும் தனது சிவிகையில் இருந்து கீழிறங்கினான். இடத்தைச் சரியாகத் தெரியாததனால் இந்தப் பண்டைய நினைவுச் சின்னத்தை எப்போதோ கடந்தாகிவிட்டது என உறுதி அளிக்கப் படும் வரை அவன் தொடர்ந்து நடந்தான் " எனக் கூறுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்னரும் இந்த பாழடைந்த கட்டிடம் " எல்லாள சொகென " என் அழைக்கப்பட்டது.

எமெசன் ரெனன்ற் எழுதிய 'இலங்கை' என்ற நூலில் சிங்கள வீர தர்மம்-எல்லாளனும் துட்டகைமுனுவும்- என்ற தலைப்பில் "இரு தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட போரே இலங்கை வீர தர்மத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு. எல்லாளனுடைய வீரத்தை உண்மையில் மெச்சிய அவனது பகைவன் எல்லாளன் மாண்ட அதே இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினான்.அதன் அழிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. இன்றும் கூட சிங்கள மக்கள் பயபக்தியோடு அதனை வழிபடுகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆயிரம் ஆண்டுகளின் பின்னரும் போற்றப் படும் மன்னன் ஒரு தமிழன் என்ற வகையில் நாமெல்லாம் பெருமைப்படலாம்.

9 comments:

Kanags said...

எல்லாள மன்னனுக்கு எனது வீர வணக்கங்கள். தகவல்களைப் பகிர்ந்தமைக்கும் பதிந்தமைக்கும் தங்களுக்கு நன்றிகள்.

thamillvaanan said...

மிக முக்கியமான பதிவு. பதிவுக்கு நன்றிகள். 44 ஆண்டுகள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஒரு தமிழ் மன்னனால் ஆட்சி செய்ய முடிந்தது என்றால் நிச்சயமாக குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் அப்பகுதியில் ஏற்கனவே வசித்திருக்கவேண்டும். ஆனால் இன்று அப்பகுதியில் அவ்வாறு தமிழர்;கள் இல்லை. தற்போது இலங்கைத்தீவு சிங்களவருக்கு சொந்தம் என கூக்குரலிடுகிறார்கள். வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. தமிழ் அரசு ஒன்று எழுச்சிபெறும்போதுதான் இலங்கைத்தமிழனுக்கு விடிவு பிறக்கும்.

மீண்டும் நன்றிகளுகடன்
தமிழ்வாணன்

thamillvaanan said...

தமிழ்மணத்திலிருந்து நேரடியாக உங்கள் பதிவுக்கு வரும்போது பின்னூட்டங்களுக்கான சுட்டிகள் வேலை செய்யவில்லை. கவனிக்கவும். நன்றி.

இளந்திரையன் said...

கனக்ஸ் தமிழ்வாணன் உங்கள் வருகைக்கு நன்றி.

சிங்களவர்களும் தமிழர்களும் ஆதித் திராவிட மக்களே. பெளத்தத்தின் வருகைக்கு முன்னாலும் பெளத்தத்தின் பரவுகைக் காலத்திலும் திராவிடப் பிராமி எழுத்துக்கள் தான் வழக்கிலிருந்தன. பெளத்தத்தின் ஆளுகையுடன் பாளி போன்ற மொழிகளின் ஆட்சியும் கலந்து புதிய சமயமும் புதிய மொழியாக சிங்களமும் உருவானது.

தமிழ் நாட்டுப் படையெடுப்பும் செல்வாக்கும் மிகுதி மக்களை தமிழரும் சைவருமாக உருவாக்கியது. இது எத்தனையோ நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இடம் பெற்ற ஒரு பரிணாம மாற்றம். பிற்காலத்தில் வியாபார நோக்கமாக வந்து குடியேற்ய அரபியர்களின் கலப்பாக சோனகர் தோற்றம் பெற்றார்கள்.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே மக்களாக இருந்து பின்னர் நம்பிக்கைகள் காரணமாகப் பிரிந்தவர்கள் தான். இலங்கையின் கடைசி மன்னன் இராஜ சிங்கணும் ஒரு தமிழன் தான். 1815 இல்தான் கண்டி அரசு வீழ்ச்சியுற்றது.

இலங்கையில் சிங்களவர்க்கு எவ்வளவு உரிமையிருக்கின்றதோ அதேயளவு உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது. இன்று நீர்கொழும்பிலிருந்து சிலாபம் புத்தளம் போன்ற கரயோரங்களிலும் மாத்தறை போன்ற பகுதிகளிலும் இருந்த தமிழ் மக்களைப் பற்றி நாங்களே கதைப்பதில்லை. தமிழ் ஈழத்தின் பகுதிகளைச் சுருக்கி விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். அவர்களும் வசதியாக சிங்களவர்களாக மாறி விட்டார்கள்/மாறிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் யாழ்ப்பாணத்தாரின் மேட்டிமைக் குடி 'விளையாட்டும் ' ஒரு அவலமான காரணம் என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

Anonymous said...

இப்போது சரியாக பின்னூட்ட பக்கத்துக்கு வந்துவிடேன்.

எல்லாளனின் வரலாறு தற்போதைய வரலாற்று புத்தகங்களில் மறைக்கப்பட்ட ஒன்றாக மாறுகிறது.

உண்மையில் இலங்கயின் மக்கள் ஒரெ வழி குழுமம் மதம் காரணமாக பிரிந்து பின் மொழியும் வேறுபட்டது என்பதே பொருந்தும் என நினைக்கிறேன்

//இருக்கின்றது. இன்று நீர்கொழும்பிலிருந்து சிலாபம் புத்தளம் போன்ற கரயோரங்களிலும் மாத்தறை போன்ற பகுதிகளிலும் இருந்த தமிழ் மக்களைப் பற்றி நாங்களே கதைப்பதில்லை. தமிழ் ஈழத்தின் பகுதிகளைச் சுருக்கி விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். அவர்களும் வசதியாக சிங்களவர்களாக மாறி விட்டார்கள்/மாறிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் யாழ்ப்பாணத்தாரின் மேட்டிமைக் குடி 'விளையாட்டும் ' ஒரு அவலமான காரணம் என்பதை நினைவு கொள்ளவேண்டும். //

மேலே சொன்னது உண்மையில் மிகவும் வேதனைக்குரிய கவந்த்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம்

இளந்திரையன் said...

என்ன குளக்கோட்டன் ...எல்லாளன் சமாதியை இல்லை அது துட்டகைமுனுவின் சமாதி என நிரூபிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர் பரண வித்தான முதல் கொண்டு சிங்கள அரசாங்க மந்திரிகள் வரை இப்போது முயற்சி செய்வது உங்களுக்குத் தெரியாதா? பொலனறுவையில் பாழடைந்து கிடக்கும் சிவன் கோயில் இராஜேந்திர சோழன் கட்டியது... கையை விட்டே விட்டாச்சு... சிலாபத்தில் இருக்கும் முனீஸ்வரம்.. கதிர்காமம் ...இப்போ சிங்களக் கோவில்களாகி விட்டன.....உடப்பு, முந்தல் புத்தளம் போன்ற இடங்களில் இன்னும் தமிழரும் தமிழின் ஏச்சமும் இருக்கின்றது.... யாரும் அவர்களைப் பற்றிக் கதைப்பதில்லை....

Anonymous said...

//கி.மு 161 வரை அநுராதபுரத்தில் \\
இளந்திரையன் பலமுறை ஞாபகப்படுத்தி பார்த்தேன் எல்லாளன், துட்டகைமுனு காலம் கிமு அல்ல கிபி என்று தான் ஞாபகம்.
என்னால் உறுதி படுத்தமுடியவில்லை எதற்கும் அப்பாவை கேட்டு சொல்கிறேன்.

இளந்திரையன் said...

மகாவம்சம் எழுதப் படுவதற்கு சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்டது எல்லாளன் காலம். மகாவம்சம் 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆகவே கி.மு.100 வருடங்களிற்கு முற்பட்டது. கி.மு 161இல் எல்லாளனுடைய மறைவு.

இளந்திரையன் said...

Dr.james T Ratnam அவர்களின் "எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்" என்ற ஆய்வுக்கட்டுரையை ஆதாரமாக வைத்தே எழுதினேன். நீங்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் கிடைத்தால் அறியத்தாருங்கள் குழைக் காட்டான்.

மற்றும் உங்களிடம் ஒரு கேள்வி தமிழ் நாதம் மற்றும் உலகத்தமிழரில் கட்டுரை எழுதுவது நீங்களா ?