Thursday, January 26, 2006

சொர்க்கத்தின் துயரம் -தொடக்கம் பிப்ரவரி 04 1948

பெப்ரவரி 04 . இந்து சமுத்திரத்தின் சொர்க்கத்தில் முதல் கண்ணீர்த் துளி துளிர்த்த நாள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பேர் போன வெள்ளையர் பிரிந்திருந்த இராட்சியங்களை ஒன்று படுத்தி ஆண்டபின் கண்ணீரையும் குருதியையும் சாபமாகக் கொடுத்தபடி கப்பலேறிய நாள்.

யாழ், வன்னி,கோட்டை, கண்டி இராட்சியங்கள் என விரிந்து சுதந்திரத்துடன் வாழ்ந்திருந்த மக்களை நிருவாக வசதி கருதி ஒரு நாடாக்கி ஒரு வேதனையின் வரலாற்றை விருப்பமுடன் உருவாக்கி விட்டுச் சென்ற நாள்.

ஒரே நாடாக இருந்ததென்னவோ 1863இல் கண்டி இராட்சியம் கடைசி கடைசியாக ஆங்கிலேயரினால் கைப்பற்ற முடிந்ததிலிருந்து 1948 இல் கப்பலேறிய காலம் வரை ஒரு நூறு ஆண்டுகளிற்கும் குறைவான காலம் என்றாலும் ஒரு நூற்றாண்டுக்குத் தேவையான கண்ணீர்க் கதைக்கு வழி சமைத்து விட்டிருக்கின்றது.

இன்றைய உலக மனிதத்தின் வேதனைகளிற்கு அனைத்து வழிகளிலும் காரியமாற்றிப் போயிருந்தது சூரியனை அஸ்தமிக்க விடாது திமிர்த்த ஆங்கிலேய சாம்ராச்சியம்.

300 இராச்சியங்களைக் கொண்டிருந்த இந்திய உபகண்டத்தில் மூன்று நாடுகளை உருவாக்கியதும் மத்திய கிழக்கில் முல்லாக்களின் இடையே யூதரை வைத்ததும் அடிமைகளின் தேசத்தை ஆபிரிக்காவில் உருவாக்கிப் போனதும் வெள்ளையரின் ஆணவம்.

நூறு ஆண்டுக்கால போரை விடாது நடாத்தியவர்களும் சிறு யுத்தங்களை இணைத்து மகா யுத்தமாக்கியவர்களும் போரின்றி உலகம் இல்லை என்பதை நடைமுறைப் படுத்துபவர்களும் அவர்களின் வாரிசுகளே.

இலங்கையின் இன்றைய கண்ணீருக்கும் இரத்தத்திற்கும் பதில் சொல்லவேண்டியவர்களே நீதியாளர்களாக வேஷம் போடுவதே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துக்கம்.

வெள்ளையரின் வெளியேற்றத்தை ஒட்டி அநகாரிக தர்மபாலா தலைமையில் விழித்தெழுந்த சிங்களப் பேரினவாதத்தின் முன் தமிழ்த் தேசியவாதம் போட்டி போடவிரும்பாது போனதும் தமிழ்த் தலைமைகள் அரசியல்ச் சாணக்கியம் அற்ற சவடால்களையும் சரணாகதிகளையும் கொண்டியங்கியதும் இன்று முழுத்தமிழினத்தின் துயரத்தின் சாட்சியமாக நின்று நிலைக்கின்றது.

சரித்திரத்தின் பாடங்களை படிக்கத்தவறியதும் சாரட்டு வண்டிப் பவனிகளும் இங்கிலாந்துப் பாராளுமன்ற வாதப் பிரதிவாதங்களும் மட்டுமே வாழ்க்கையின் கிலாக்கியம் என்று திரிந்த தமிழ்த் தலைமைகள் சிறுகச் சிறுக கிளர்ந்தெழுந்த சிங்களப் பேரினவாதத்தின் முன் மண்டியிட்டுப் போயினர்.

அயல் தேசத்தின் ஜின்னாவின் அரசியல் சாணக்கியத்தை கண்மூடிக் காணாது விட்ட தமிழ்த் தலைமைகள் இன்று தமிழ் மண்ணில் ஓடும் கண்ணீர் ஆற்றுக்கு காரணமாகிப் போயினர்.

1948 இல் வெள்ளையரின் வெளியேற்றத்தின் போது சமத்துவமும் சகோதரத்துவமும் பேசிய சிங்களம் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே தன் கோர முகம் காட்டி நின்றது.

சட்ட மூளைகளும் சாணக்கிய மூளைகளும் வெட்கிப் போக சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களைத் தன் காலடியில் போட்டு கொக்கரித்து நின்றது.

1926 இல் இலங்கைக்கு சமஸ்டியே ஒரே தீர்வு என முழங்கி நின்ற ஆக்ஸ்போர்ட் மாணவன் எச்.டபிள்யூ. பண்டாரநாயக்கவே 1958 இல் ஆட்சியிலேறிய 24 மணிநேரத்தில் தனிச் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்று சொல்லிச் செயல்படுத்தியபோது தமிழ்ச் சாணக்கியத் தலைவர்கள் எல்லாம் காணாமல்ப் போயிருந்தனர்.

அர்த்தமில்லா 50 இற்கு 50 கோரிக்கைகளும் இரத்தப் பொட்டுகளும் வட்டுக்கோட்டைக் கொட்டைப் பாக்கும் இன்று தமிழ்ப் பிரதேசம் எங்கும் ஓடும் இரத்த ஆறுகளுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

தமிழனின் தோலில் செருப்புப் போடும் வேட்கை மீதூரப் பெற்ற இலங்கரத்னவின் வாரிசுகளிடம் மண்டியிட்டுப் பிச்சை கேட்கும் ஆர்வத்துடன் காட்டிக்கொடுப்புகளை விரும்பிச் செய்யும் முனைப்புடனும் இன்றும் இருக்கும் சில மாக்களை என்னவென்று சொல்லமுடியும்.

சரித்திரதில் இருந்ததென்னவோ ஒரு காக்கை வன்னியன் என்ற போதிலும் அச்சுப் பிரதிகளாக ஆயிரக் கணக்கில் உலா வரும் இவர்கள் வேண்டும் வரம் என்னவோ ?

1948 பெப்ரவரி 04 இல் ஆரம்பித்த இந்து சமுத்திரதின் சொர்க்கத்தின் துயரம் முடிவிற்கு வரும் காலம் எக்காலமோ ?

3 comments:

Kanags said...

இன்று தான் உங்கள் பதிவைக் கண்ணுற்றேன். நல்ல பதிவு.
//1948 பெப்ரவரி 04 இல் ஆரம்பித்த இந்து சமுத்திரதின் சொர்க்கத்தின் துயரம் முடிவிற்கு வரும் காலம் எக்காலமோ?//
விரைந்து வந்து கொண்டிருக்கின்றது!

Anonymous said...

விரைவில் வரும் என நம்புவோம்.

இளந்திரையன் said...

நம்பிக்கைகளை ஒன்றிணைப்பதே வாழ்க்கை.... நம்புவோம்.

கனாக்ஸ், குழைக்கட்டான் நன்றிகள்.

-அன்புடன் இளந்திரையன்