Friday, December 30, 2005

புதிய ஆண்டு உங்களுக்கு என்ன கொண்டுவருகின்றது?

2005 ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் வேளையில் புத்தம் புதிய ஆண்டொன்றையும் வரவேற்கும் முஸ்தீபுகளிலும் ஈடு பட்டுக்கொண்டிருக்கின்றோம். 2005 ஆம் ஆண்டில் நாம் சாதித்த பட்டியலை எழுதிப் பார்த்தோம் என்றால் ஒரு சிலரைப் பொறுத்தவரை பட்டியல் நிறைந்திருக்கலாம் . வேறு சிலரைப் பொறுத்த அளவில் பட்டியல் சிறிதாக இருக்கலாம். இன்னும் சிலரைப் பொறுத்தவரை பட்டியல் காலியாகவே இருக்கலாம்.

நாம் இந்தப் பட்டியலில் எந்தப் படிநிலையில் இருந்தாலும் 2005 ஆம் ஆண்டின் இந்த இறுதிக் கணங்களில் இனியும் எம்மால் சாதிக்கக் படக் கூடிய விடயங்கள் பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை.

எமது நிலை எதுவாக இருந்தாலும் பிறக்கப் போகின்ற புது வருடத்தில் எங்களுக்கே எங்களுக்கான பாவிக்கப் படாத புத்தம் புதிய 365 நாட்கள் இருக்கின்றன. எங்களுக்கே உரித்தான நாட்கள். யாராலும் அவற்றை திருடவோ பறித்துக் கொள்ளவோ முடியாத எங்களுக்கு மட்டுமே சொந்தமான நாட்கள்.

நாங்கள் இதுவரை எப்படி எங்கே இருந்திருந்தாலும் கவலை இல்லை. இனி என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திப்போம்.

இந்த ஆண்டின் இறுதியில் எப்படி இருப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம் என்பதே இப்பொழுது எங்கள் முன்னால் உள்ள கேள்வி. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு ஆசை கனவுகள் இருக்கும். அப்படி கனவுகள் இல்லாதவர்கள் கூட இப்போதே கனவு காணத்தொடங்குவோம். காணும் கனவைப் பெரிதாகக் காணுங்கள் என்று உங்களுக்குச் சொல்லி வைக்கின்றேன். ஏனெனில் எமது மனித மனத்தின் சக்தி எத்தகையது என்பதை அறியாதவர்களாகவே நாம் இருக்கின்றோம். மனதின் சக்தியை மட்டும் நாம் புரிந்து கொண்டோம் என்றால் அதனால் முடியாத காரியம் என்று இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகின்றேன். முடியுமா என்ற சந்தேகமே உங்களுக்குத் தேவையில்லை. மனத்திடம் சொல்லி விட்டு காரியத்தை மட்டுமே செய்து கொண்டிருங்கள். மனமானது உங்கள் இலக்கை அடைவதற்கு வேண்டிய எல்லாவித சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கி உருவாக்கி உங்கள் இலக்கை நோக்கி உங்களைக் கொண்டு சென்றிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்கள் கனவு என்ன என்பதை கண்டு கொண்டு மனதிடம் சொல்வது தான்.

சரி உங்கள் கனவு என்ன? பலராலும் சட்டென்று பதில் சொல்ல முடியாத கேள்வியாக இது இருக்கக்கூடும். ஆனாலும் இதை நீங்கள் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் நீங்கள் எப்படி ஆகவேண்டும் என்பது உங்களைத் தவிர வேறு யாருக்குத் தெரிந்திருக்க முடியும் ?

கனவு காண்பதைப் பெரிதாகக் காணுங்கள். மனதின் சக்தி அபரிமிதமானது. அற்புதமானது. இதில் ஒரு சந்தேகமும் தேவையில்லை .

எப்படி ஆகவேண்டும் ? கனவு ரெடி. அடுத்து ... அந்தக் கனவை அடையும் பாதையில் உள்ள இலக்குகளை நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ளவேண்டும்.

எப்படி என்றால் மாபெரும் அரண்மனை ஒன்றை நாம் அடையத்திட்டமிட்டிருக்கின்றோம். அதை அடைவதற்கான பாதையை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ? மாபெரும் அரண்மனையான எங்கள் கனவை அடைவதற்கான பாதையிலுள்ள இலக்குகளை அவை எவ்வளவிற்கு எவ்வளவு முக்கியமோ அந்த முக்கியத்தின் அடிப்படையில் அவற்றை ஒழுங்கு படுத்திக் கொள்வோம்.

ஒவ்வொரு இலக்கையும் அடையக் கூடிய கால எல்லையை எமது இயல்புக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப நிர்ணயித்துக் கொள்வோம். அந்தக் கால எல்லைக்குள் அவற்றை அடைவதற்கான முயற்சிகளில் எந்த சமசரமோ விட்டுக் கொடுப்போ இல்லாமல் ஈடுபடுவோம் என்பதில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

எங்கள் இலக்குகளை அடைவதற்குத் தேவையான தகவல்கள் உதவிகளைச் சேகரித்துக் கொள்வதும் தங்கு தடையின்றி இலக்குகளை அடைவதை இலகுவாக்கும். ஆகவே தரவுகளைத் திரட்டிக் கொள்வோம்.

இனி என்ன ? எங்கள் கனவான மாபெரும் அரண்மனைக்கு குடி போக வேண்டியது தான். அரண்மனைக்குக் குடி போகும் போது இப்படியேவா போகமுடியும். ஒரு ராஜ களை தோரணை வேண்டாமா ? ஆகவே இப்போதே , நாங்கள் அதை அடைந்த பின்னால் எப்படியிருப்போமோ அவ்வாறே இப்போதிருந்தே பழகிக் கொள்வோம். எவ்வாறு ஆக வேண்டும் என்று கனவு காண்கின்றோமோ அவ்வாறே ஆகிவிட்டதாகப் பாவனை செய்வோம். இது மிக முக்கியமானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கத் தேவையில்லை. எங்களுடைய கனவு ... நாங்கள் தான் அதை அடைய விரும்புகின்றோம் என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விடக்கூடாது.

அடுத்து என்ன ? காரியங்களில் இறங்க வேண்டியது தான். முடிந்தவரை காரியங்களை சிக்கல் இல்லாமல் இலகுவானவையாக வகைப் படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் வீண்மனக் குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கி செயற்படவேண்டும். செயற்படும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க இலக்கு மிக அருகில்... ஒவ்வொரு இலக்கின் நிறைவேற்றமும் கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சியில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.

இனி என்ன ? வெற்றி........ வெற்றி....... வெற்றி........

2006 இனி உங்களுக்கு வெற்றி ஆண்டு. 365 புத்தம் புதிய நாட்களுடன் உங்கள் கனவு நிறைவேற உங்களிற்காகக் காத்திருக்கின்றது.


உங்கள் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

Thursday, December 29, 2005

போராட்டம் என்பதற்கு வரை விலக்கணம் உண்டா?

ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் சுய கெளரவத்துக்குமான போராட்டம் இன்று உலகளாவிய ரீதியில் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக கடந்த மூன்று நான்கு தசாப்த காலத்தில் போராட்டம் கூர்மை பெற்று இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் அரசியல் சமூக வாழ்வியல் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் கவன ஈர்ப்புப் பெற்றுள்ளது.

இனங்களுக்கிடையிலான மோதல் என்ற அளவில் ஒரு நாட்டின் சட்ட வரையறைகளுக்குள் அடக்கிவிட முடியாத வகையில் அதன் ஞாயாதிக்கத் தனமைகளின் குணாம்சங்கள் சர்வதேச சட்டவரைபுகளுக்குள் ஒழுகுவனவாகக் காணப்படுகின்ற காரணத்தாலேயே இன்று சர்வதேச நாடுகள் பலவும் தலையுடும் ஒரு நிலமை காணப்படுகின்றது. இலங்கையில் வாழும் இனங்களில் தமிழர்களும் தனியான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பிரதேசத் தொடர்ச்சியான வாழ்விடம் என்பவற்றைக் கொண்ட தனியான இனம் என்பது சர்வதேச நாடுகள் அனைவற்றினாலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நிலமையாக இன்று காணப்படுகின்றது.

ஆகவே ஈழத் தமிழர் சுதந்திரப்போராட்டம் (அதிக பட்சம்) அல்லது உரிமைப் போராட்டம் (குறைந்த பட்சம் வாழ்வியல் உரிமைகள்) சரியானதும் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியதும் என்பதும் ஒத்துக் கொள்ளப் பட்டுள்ளது.

இவ்வளவில் இதை வரலாற்றுப் பின்னணிச் சுருக்கமாகக் கொண்டு போராட்டம் செல்லும் திசை, முன்னெடுக்கப் படும் நடவடிக்கைகள், போராட்டத்தை வழி நடத்தப்பட்டவர்களாக அறியப்பட்டவர்கள் பற்றியும் அது சார்பாக அல்லது எதிர்ப்பாக மொழியப் படும் வாதப் பிரதி வாதங்கள் பற்றியும் இன்று பலதரப் பட்டவர்களாலும் பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,இணையத் தளங்கள் என்று இன்னோரன்ன வழிகளிலும் அலசி ஆராயப் பட்டுக் கொண்டிருக்கின்றது. ஊடகங்களில் மிகவும் கொதி நிலையில் இருக்கக் கூடிய விவாதப் பொருள்களாகவே ஈழத்தமிழர்களும் அவர்கள் போராட்டமும் இருந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையும் அதற்கான தேவை இருக்கின்றது என்பதையும் ஒத்துக் கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கலாம்.

அடுத்ததாக போராட்டம் முன்னெடுக்கப் படும் வழிமுறைகள் மற்றும்
முன்னெடுப்பவர்கள் பற்றிய கருத்துக்கள்.

சுதந்திர இந்தியாவின் விடுதலைக்காக நடந்த போராட்டம் நம் அனைவருக்கும் நன்கு அல்லது ஓரளவுக்கேனும் தெரிந்த விடயம் என்ற வகையில் அதையே ஒரு உதாரணமாகப் பார்க்கலாம்.

ஒரு சுதந்திரப் போராட்டம் எவ்வகையில் ஆரம்பிக்கக் கூடும் அல்லது எவ்வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று ஏதாவது வரைவிலக்கணம் இருக்கின்றதா? சுதந்திரப் போராட்டம் என்பது மட்டும் அன்றி உலகின் மக்களின் நலனுக்காக அல்லது எதிராக நடைபெற்ற அல்லது நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற எந்தப் போராட்டமும் எந்தவொரு வரைவிலக்கணத்துக்குள்ளும் கட்டுப்படாது அல்லது கட்டுப்படமுடியாத தன்மை வாய்ந்தனவாகவே காணப் படுகின்றன. முதலாளித்துவச் சிந்தனாவாதப் புரட்சிகளோ இல்லை சோஸலிஷ சமதர்மக் கோட்பாடுகளை உள்வாங்கிய புரட்சிகளோ கூட ஒன்றுக்கொன்று வேறுபட்டதும் வித்தியாசமானதுமான சந்தர்ப்பங்களிலும் காரண காரிய நிலக்களன்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய உபகண்டத்தின் சுதந்திரத்துக்கான போராட்டம் கூட பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தள நிலமைகளில் வாழ்ந்த மனிதர்களால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு என்று தான நாம் கூறக் கூடும். அண்ணல் காந்திஜியின் தலமையில் இறுதி வடிவம் பெற்று நிறைவு கண்டது என்பதற்கு அப்பால் முழுச் சுதந்திரப் போராட்டமும் காந்திஜியின் தலமையிலும் ஸ்தாபனக் காங்கிரசின் முயற்சியிலும் பெற்றுக் கொண்டது என்பது சரியான கூற்றாகவே அமையாது. வாஞ்சி நாதன் முதற்கொண்டு நேதாஜிவரை இராணுவ நம்பிக்கை கொண்ட அணுகு முறையும் சத்தியாக்கிரகிகளின் அகிம்சா தத்துவமும் கலந்த ஒரு கலவை வடிவமே இந்தியச் சுதந்திரப் போராட்டம் ஆகும்.

இதிலிருந்து போராட்டங்கள் அந்த அந்தக் காலங்களில் இருந்து பெறக் கூடிய வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டதாகவே வடிவம் பெறுகின்றது. அதே நேரம் எதிரியானவனின் நம்பிக்கையும் செயற்பாடும் கூட போராட்டத்தின் வடிவத்தையும் திசையையும் தீர்மானிக்கின்றது.

அந்த வகையில் ஈழப் போராட்டமும் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னால் பல வடிவங்களில் பல தலைவர்களாலும் முன்னெடுக்கப் பட்டு இன்று இத்தகைய நிலமையிலும் வடிவத்திலும் உருக் கொண்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இதன் வடிவமும் போராட்டக் களமும் மாறுபட்டிருக்கின்றது. அகிம்சா வழியில் முன்னைய தலைவர்களால் முன்னெடுக்கப் பட்ட போராட்டம் குறிக்கப் பட்ட இலக்கை அடைந்து விடமுடியாத நிலமைகளான தடைக்கற்களை புரட்டிப் போடும் திறனாக, நம்பிக்கையாக ஆயுதப் பாவனையை முற்று முழுதாக வரித்துக் கொண்டுள்ளது. அதனாலேயே உள் முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் அதிக பட்சமான இரத்தக் கறைகளைப் போர்த்திக் கொண்டுள்ளன. மிகவும் வருந்தத் தக்கதும் மனித நேயங்கொண்டவர்களால் மிகவும் வெறுத்து ஒதுக்கக் கூடியதுமான இந்த நிலமைக்கு மாற்றுத் தான் என்ன?

கொடுக்கப் படக் கூடிய மாற்றுத் திட்டம் ஒன்று இருக்குமானால் அவ்வகையான மாற்றுத் திட்டமும் சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தையோ வீரியத்தையோ மழுங்கடிக்கக் கூடியவாறு இருத்தலாகாது என்பது எப்போதும் எமது மேலான கவனத்தில் கொள்ளப் படவேண்டியதாகும்.

ஈழத் தமிழ் மக்களுக்கான மேலான சுதந்திரம் கிடைப்பதற்கான வழிவகைகளை அடைக்கக் கூடிய எந்தக் கருத்துக்களையோ அல்லது செயற்பாடுகளையோ இந்தத் தருணத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையிலும் சூழ்நிலமையிலும் ஈழத் தமிழ் மக்களில் பெரும் பான்மையோர் இல்லை என்பது தான் யதார்த்தம். அதற்காக மனித உரிமை மீறல்களையோ அராஜகங்களையோ ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதோ ஆமோதிக்கிறார்கள் என்பதோ இதன் பொருளன்று.

ஆனால் சுதந்திரம் கிடக்கும் வரை சகித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பது உணரப் பட்டுள்ளது என்பதும் உண்மையான விடயங்களாகும். சுதந்திரத்துக்கான முகூர்த்தம் வரும் வரை முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்ட ஜின்னா செய்தது போலவோ அல்லது சுதந்திரத்தின் பின்னான காலங்களில் தமிழ் நாடு பஞ்சாப் போன்ற மொழி வழி முன்னெடுக்கப் பட்ட பிரிவினை முயற்சிகல் போலவோ அல்லது இன்றும் தொடரும் மிஸோரம் , நாகலாந்து , காஸ்மீர்ப் பிரதேச மக்கள் சுதந்திரப் போராட்டக் கால கட்டத்தில் நடந்து கொண்டது போலவோ ஈழத் தமிழ் மக்களும் உயரிய நோக்கத்துக்கான சகிப்பு நிலமையில் நடந்து கொள்கின்றார்கள்.

சுதந்திரத்தின் பின் தங்களுக்குத் தேவையான அரசியல் வாழ்க்கை முறையை ஈழத்தமிழ் மக்களே தெரிவு செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். தங்களுக்குப் பொருத்தமான தலமையைத் தீர்மானிப்பதில் மக்களை விட தகமையும் உரிமையும் உள்ளவர்கள் வேறு யாராகத்தான் இருக்க முடியும்.

சுதந்திரத்துக்கான போராட்டக் கால கட்டங்களில் ஏற்ற இறக்கங்களும் பிறழ்ச்சிகளும் இருக்கும் என்பதிலும் சுதந்திரத்துக்கான விலை அதிகம் இருக்கும் என்பதிலும் ஈழத்தமிழ் மக்களில்ப் பெரும்பான்மையோர் மிகவும் தெளிவாக இருக்கும் அதேநேரத்தில் ஈழத் தமிழ் மக்களின் பாலும் அவர்தம் போராட்டத்தின் பாலும் அக்கறையும் கரிசனையும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களும் அவ்வாறே இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்ற எதிபார்ப்புடனும் இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

Tuesday, December 27, 2005

நீளும் பொழுது

கழுவித் துடைத்து
நாரி நிமிர்த்த
சுருட்டி இழுக்கும்
முதுகு வலி

ஈரம் துடைக்கும்
விரல்கள்
சிக்கிக் கொள்ளும்
கிழிசல்

'அம்மா வர்ரேன்'
கனத்துத் தொங்கும்
வார்த்தைகள்
வீட்டின் திசைகளுக்குள்
ஒட்டிக் கொள்ளும்

முன் படிகள்
கால்கள் தாண்ட
குளிர் காற்றின்
உரசலில்
விடைக்கும் மூக்கு
'ச்..சூ...........ய் '

கந்து வட்டிக்
கடன்காரன்
கண்ணீர் தீர்த்த
பட்டினிப் பிள்ளை
ஊதல் காத்தில்
போதைதீர்க்கும்
புருஷன்

யார்
நினைத்திருப்பார்கள்?

பிசிறிய ஒளியில்
வெளுத்திருந்த
பிறை
மரங்களின் தலையில்
ஒழுகிய
வெளிச்சக் கரைசல்
இருட்டைப் பறித்து
துப்பிய வழி

கொடிய விஷங்கள்
கருக்கும்
கணங்களுள்
எட்டி வைக்கும்
கால்களில்
நீளும் பொழூது

தெளிவு

பிடித்து வந்திருக்கிறார்கள்
கைகளைக் கட்டி
கதிரையோடு
தள்ளி விட்ட
அலட்சியத்தோடு

விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்
வெள்ளைத்தோல்
காயம் பட்டதுபற்றி
மனதொன்று
சிதைந்தது பற்றி
யாதொரு தெளிவில்லாமல்

என் நிறம்பற்றி
சொல்லிக்கொண்டபோது
காயம் பட்டது

அப்போது புரிந்தது
எனதும் அவனதும்
இரத்தம் போல
எனது தோலும்
அவனது உள்ளமும்
ஒரே நிறமென்று

வெட்டி மறைந்த மின்னல்
அறையின் ஒளியையும்
காவுகொண்டது
கைதடவும் நேரத்தில்
என் மன அழுக்கையும்

முன்னெப்போதையும் விட
இப்போது எனது நிறம்
மனதிற்குப் பிடித்திருக்கின்றது

Monday, December 26, 2005

சுனாமி-அழிவின் அலை ஒரு துயரம்

சரியாக இன்றுடன் ஒரு வருடம். உலகையே உலுக்கிப் போட்ட துயரத்தின் ஓராண்டு நீட்சி. இலடசக்கணக்கான உயிர்களையும் கோடிக் கணக்கான மனங்களையும் கொன்று போட்ட நாளின் வருடப் பூர்த்தி. கண்களின் முன்னாலேயே உயிராய் உறவாய்ப் பழகிய மனிதர்களை மரணத்தின் கரங்களில் வாரிக்கொடுத்து ஒரு வருடமாகின்றது.

இறந்து பட்டவர்கள் போக இதயம் துண்டு பட்டவர்கள் இன்றும் மீள முடியா இருளில் துவண்டு போயிருக்கின்றார்கள். அன்னையை, தந்தையை ,பிள்ளையை, உறவை, சுற்றத்தை என்று இழப்பின் பட்டியல் நீண்டு செல்லும் வேளையில் ஆறுதல் கூறும் வார்த்தைகளும் வரண்டு தான் போகின்றது.

உலகின் மூலை முடுக்கெங்கும் நினைவுச்சுடர்களும் மலர்த் தூவல்களும் இதயத்தில் கொப்பளித்த குருதித்துளிகளுமாக நினைவஞ்சலியைச் செலுத்தி நிற்கின்றோம். ஓராண்டு வலியின் கொடுமையைக் கனத்த இதயமும் கண்ணீர் பனித்த கண்களுமாக உயிர் பிழைத்த அதிர்ஷ்டத்தையும் உறவுகளை இழந்த துரதிர்ஷ்டத்தையும் மீண்டும் ஒரு முறை விவரணமாக்கி நினைவு கூர்ந்ததையும் நாம் பார்த்தோம்.

வலியும் வேதனையும் மனித வரலாற்றின் காலடியைத் தொடரும் நிழல் என்றாலும் உலகெங்கும் துடித்தெழுந்த மனிதம் அங்கிங்கெனாதபடி கண்துடைத்து தோள் தட்டி ஆறுதல்ப் படுத்திய அற்புதமும் இங்கு தான் விளைந்தது.


இன்னும் எத்தனை அழிவின் அலைகள் பூமியைத் துடைத்துச் செல்ல முயன்றாலும் ஆயிரம் ஆயிரம் கரங்கள் தோள் கொடுக்கவும் துயர் துடைக்கவும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் என்பதே வாழ்க்கை என்பதை அற்புதமாக்கி நிற்கின்றது.

எங்களுடன் வாழ்ந்து இன்றும் எங்கள் நினைவுகளில் வாழும் அந்த அற்புத உயிர்கள் அனைவருக்கும் உலகிலுள்ள அனைத்து மக்களுடன் சேர்ந்து எனது இதய அஞ்சலிகளும் உரித்தாகின்றது.

பணம் பந்தியிலே....

என்னாது பணம் பந்தியிலேன்னு ஒரு தலைப்பூ.. காதில பூச்சுத்துரவங்களைப் பாத்திருக்கோம் ... இது என்னா தலைப்பூன்னு யோசிச்சா.. அதாங்க கிரீடம் மகுடம்ன்னு எத்தனை பேர் சொன்னாலும் ... எண்சாண் உடம்புக்கும் தல எத்தனை முக்கியமோ அத்தனை தூரம் வாழ்க்கைக்கு பணம் முக்கியம்னதால இது தலைப்பூ அப்பிடீயாச்சுங்க...

பணத்துக்கு செல்வம்னு இன்னொரு பேர் இருக்கில்லியா... செல்வம்ன்னா அது செல்வாக்குன்னு அர்த்தம். அவன் செல்வாக்கானவன் அப்பிடீன்னு சொன்னா அவன்கிட்ட செல்வம் இருகுன்னு பொருள். இதிலிருந்து என்னா புரியுதுன்னா வாழ்க்கையில் செல்வாக்கு வேணும்னா செல்வம் இருக்கணும்.

இது தெரிஞ்சுதான் 'பணம் பத்தும் செய்யும் ' பணம் இல்லாதவன் பிணம்' என்னு பல பழமொழிகளை சொல்லிப் போயிருக்காங்க.

'பணம் கையிலிருந்தால் முகத்தில் தானாகவே அழகுண்டாகி விடும்' என்கிறார் கதே என்கிற அறிஞ்ர். இதை கதை அப்பிடின்னு கவனத்திற்கு எடுக்காமல் விட்டுடாதீங்க. முகத்துக்கு அழகு தரும் அழகு சாதனப் பொருட்களில் முதன்மையானது பணம்னு தான் சொல்லுவேன். பணமுள்ளவர்களையெல்லாம் பாருங்க. என்னா மினுங்கு மினுங்குகிறார்கள்.

பணம் வந்தா உள்ளத்தில ஒரு ஒளிவந்திடுங்க... உள்ளத்தில ஒளி வந்தால் வாக்கினிலே ஒளி வந்துடும்னு சொல்வாங்க.. அதாங்க செல்வாக்கு. அதனால் தான் இல்லாதவன் சொல் சபையேறாது அப்பிடீன்னு சொல்லியிருக்காங்க. அதனால் தானோ என்னவோ 'உழைப்புக்கும் வாழ்விற்கும் ஆதாரமான அவசியமான பொருள் பணம்' அப்பிடீன்னு நேரு கூட சொல்லியிருக்கிறார். உலகில் அழகும் உயிரும் உள்ளது பணம்னு திருக்குர் ஆனும் சொல்லுறது.

ஆண்டவன் படைப்புகளில் சிறந்தது மனிதன் தான்னு சொல்வாங்க.. மனிதன் படைப்புகளிலேயே சிறந்தது பணம்னுதான் நான் சொல்லுவேன். உலகின் அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொள்ள உதவி செய்யக் கூடியது பணம் தாங்க...


உலகிலேயே அமேரிக்கா இன்னைக்கு முதல் நாடுன்னு சொன்னா.. அது அங்கே இருக்கின்ற பனத்தை வைச்சும் அந்த பணத்தை வைச்சு அது தேடிக் கொண்டிருக்கிற வளர்ச்சியை வைச்சும் தாங்க.... இலக்கியம் கலை நாகரீகம்னு பார்த்தா எத்தனையோ நாடுகள் முதலிடத்துக்கு போட்டி போடுங்க.. அனா இந்தப் போட்டியிலயும் முதலிடம் பணத்துக்கு தாங்க...

' ஒரு நாடோ மனிதனோ உயர்வடைய வேண்டுமென்றால் பணத்தைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் சுபீட்சமாக வாழ முடியும்' சொன்னது யாரு தெரியுமா ? பொருளாதார விற்பன்னர் ஆடம் ஸ்மித்.

இன்று எங்கு பார்த்தாலும் சீனா பற்றிய பேச்சு. எங்கோ தொலை தூரதில கேட்ட சீனாவின் குரல் இன்னைக்கு காதுக்கு அருகிலேயே கேட்கிறதுன்னா என்னா காரணம்... சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி,செல்வம்...பணம் இருந்தால் போகமுடியாத தொலைவுகளே கிடையாது... அண்மையில் அண்ட வெளிக்கே போய் வந்திருக்கிறார்கள் மிகப் பெரிய செல்வச் சீமான்கள்.

ஆகவே பணம் பந்திக்கு வந்திரிச்சு.... இப்போ போய் கல்வியா வீரமா செல்வமான்னு பட்டி மன்றம் வீண் வேலையப்பூ.... கல்வியில சிறந்தவனும் பணம் சம்பாதிக்கத்தான் வேலை தேடிப்போறான். வீரத்தில சிறந்தவனும் விளையாடிப் பணம் சேர்க்கப் போறான் ...இல்லை பட்டாளத்துக்குப் போய் பணம் பாக்குறான்.

பணம் இல்லைன்னா நம்ம பேச்சைக் கேட்க ஆளே கிடையாதுங்க... ' இல்லானை இல்லாளும் வேண்டாள் ' அப்பிடீன்னு நம்ம வள்ளுவரும் சொல்லியிருக்கிறாருங்க..

சரீ பணம் பந்திக்கு வந்திரிச்சு... நாமளும் அந்த பந்தியில சேரணும்னா பணம் வேணுமே.... என்னா பண்ணலாம்?


நாம எல்லாரும் பணத்தை பாத்திருக்கிறோம்.. தொட்டுப் பாத்திருக்கோம்.. அதைக் கொண்டு எங்களுடைய வேலைகளைச் செய்ய வைச்சிருக்கோம்...
ஆனா..... அதை பிடிச்சி வைச்சுக்கத்தான் தெரியல்லே...

உலகில் ஆபத்தான இடம் எதுவென்னு கேட்டால் ''வரவை மீறின செலவிருக்கிற இடம்னு'' தான் சொல்லுவேன். வரவை மீறாத செலவு வாழ்க்கையில முதல்ல நிம்மதியைக் கொண்டாந்துடும்.

அப்பிடீன்னா நாம செளக்கியம்னு அர்த்தங்க...

ஏழைகளின் நாணய உற்பத்திச்சாலை சேமிப்புன்னு சொல்லுறார் அறிஞர் கதே. அப்புறம் என்னா தயக்கம்... பணக்காரனாகிற வழி கண்டு பிடிச்சாச்சா.... இனி பணக்காரராக வேண்டியது தான பாக்கி...

நம்முடைய வாழ்க்கை ஒரு நிலம்னு பாத்தா... உழைப்பும் சேமிப்பும் அதில நாங்க போடுற விதைங்க... இவை இரண்டும் சரியா இருந்துட்டா ... அப்புறம் என்னாங்க பண அறுவடைதான்... இதில எதுவொன்னு சரியா இல்லன்னாலும் வாழ்க்கை சரியா இருக்காதுங்க. உழைப்பு சேமிப்பு இத்தோடை அறிவும் முன்னெச்சரிக்கயும் இருந்திட்டால் அவர்கள் முன்னேறுவதை யாரும் தடுத்து விட முடியாதுங்க.

' வெற்றியின் முதல் பெரும் தத்துவம் சேமிப்பேயாகும்.அதுவே அவனைச் சுதந்திர மனிதனாக்கும். ஊக்கத்தை உண்டு பண்ணும். மகிழ்ச்சி அமைதி ஆகியவற்றை நல்கும் ' என்கிறார் அமெரிக்க கோடீஸ்வரர் தாமஸ் லிப்டன்.

அப்புறம் என்னாங்க ..... அடுத்தவாட்டி வெற்றி பெற்ற மனிதர்களாக சந்திப்போமா?

Sunday, December 25, 2005

விடி வெள்ளியும் கிறிஸ்து ராஜாவும்

இன்று கிறிஸ்மஸ் நாள். லீவு வுட்டாங்களா சும்மா அக்கடான்னு இருந்து யோசிச்சுக்கிட்டிருந்தேன். யோசிக்கிரேன்னு சொன்னதும் சும்மானாச்சும் நமுட்டு சிரிப்பு சிரிக்கிரீக. உலகத்து மனுசங்க துன்பமெல்லாம் அவரே ஏத்துக்கிட்டு மனுசங்க நல்லா வாழணும்னு பிரயாசைப் பட்ட தேவன் பிறந்த நாளு. எல்லார் மேலும் அன்பாய் இருப்பது எப்பிடீன்னு கத்துக்குடுத்து வாழ்ந்து காட்டியவரு. உன்னைப் போல அயலவனையும் நேசிச்சா ஏற்ற இறக்கமோ துன்ப துயரமோ வாராதுன்னு போதிச்ச மஹான் பொறந்த நாள்.

உலகம் முச்சூடும் மகிழ்ச்சியோட கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. விடிவெள்ளி வழிகாட்ட மூவேந்தரும் வந்து வழிபட்ட அவதார புருஷன் அவதரித்த நாள்.


ஆனா இப்போ நாமெல்லாம் அவர் கத்துக் கொடுத்தது எல்லாத்தையும் தூக்கி கடாசிப்பிட்டு வெறுமனே கொண்டாட்டத்தை மட்டும் கொண்டாடிக் கிட்டிருக்கோம். சவுக்கு மரம் நடுறதும் பரிசுப் பொருள் வைக்கிறதும் தான் முக்கியம்னு நெனைச்சுக்கிறோமோன்னு கவலையா இருக்கு.


பயந்து பயந்து வாழ வேண்டிய காலமாயிருக்கு. இங்கே கனடாவில டொரொன்ரோவிலயும் இந்த ஆண்டு கணக்குக்கு 77 கொலை விழுந்திருக்கு. அதுவும் 55கொலை துப்பாக்கியால அப்பிடீன்னு சொல்லுறாக. இந்த துப்பாக்கியை எல்லாம் பறிமுதல் செய்யணும்னு சட்ட மூலமே கொண்டு வந்திருக்காவ. எவ்ளோ தூரம் நடைமுறை ஆவுமுன்னு அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். அமெரிக்காவுல இருந்து தான் இந்த துப்பாக்கில்லாம் கனடாவுக்க வந்து சேருதுன்னு பேசிக்கிறாவ. அத்திலாந்திக் கடல்ல இருந்து பசிபிக்கடல் வரை அமெரிக்கா கனடா எல்லை விரிஞ்சு கெடக்கு.

இதும் கூத்து பத்தாதுன்னு அமெரிக்காவுல இந்த ஆண்டு துப்பாக்கிகளாவே பரிசு கொடுத்து தள்ளுராவுகளாம். எதை கொடுக்கிரது எதை வுடுரதுன்னு வெவஸ்தையே இல்லாமப் போச்சு. கத்தியும் ஆபத்தானதுன்னாலும் அதை வைச்சு பிரயோசனமான காரியம் நெறையவே செய்யலாம். இந்த துப்பாக்கி சனியனை வைச்சு கொல பண்ணுரது தவிர்த்து வேற என்ன நல்ல காரியம் பண்ணலாம்னு கேட்குறேன். சொல்லுங்க பாப்பம். பொறகு எதுக்குத் தான் இதை வுட்டு வச்சிருக்காங்களோ.

அதும் பத்தாம இண்ணைக்கு ஒரு படம் பாத்தேன் ஆறுன்னு. எதாச்சும் நோக்கம் வச்சு எடுத்தாகளான்னே புரியல்ல. வெட்டும் கொத்தும் ரெத்தமுமா படம் முழுக்க கொலையாத்தான் இருக்கு. எப்பிடித்தான் சென்சார் எல்லாம் வுட்டு வைச்சாங்களோ. இதைப் பாத்து யாருக்கும் அப்பிடீ ஒரு எண்ணம் வந்துடும்னு நெனைச்சாலே நெஞ்சம் பதறுது.

எவ்வளவு கொடூரமா மனுசங்க மாறிக்கிட்டு வராங்க. இப்பிடீ எங்கனாச்சும் நடக்கிரத பாத்து படம் எடுத்தாகளா? இல்லை இதைப் பாத்து செய்யிங்கடான்னு சொல்ல வராகளா?

கொடுமையிலும் கொடுமை ஒண்ணு இலங்கயில நடந்திருக்கு. கிறிஸ்மஸ் பூசையில கலந்துட்டு புறப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் எம்பியை சேர்ச்சு வாசலில வைச்சே கொன்னு போட்டிருக்காங்க. பெரிய கொடுமை கொலையாளிங்களும் பூசையில் கலந்து கொண்டிருக்காங்க. இதில இருந்து மனிசரிட்ட மனிசத் தன்மையே துண்டற இல்லைன்னுதான் சொல்லத் தோணுது.

மனிசர பாபங்கள்ல இருந்து காக்க வந்த தேவன்ர பிறந்த நாளை மட்டும் ஞாபகம் வைக்கத் தெரிஞ்ச மனுசரால அவர் சொன்ன வெஷயங்கள ஞாபகம் வைக்க முடியல்ல.

இன்னொரு முறை விடிவெள்ளியும் கிறிஸ்து ராஜாவும் வந்தாலாவது மனிசங்க மனம் திருந்துவாகளா?

Saturday, December 24, 2005

அவள் போகின்றாள்

அவள் போவதென்பது எப்போதோ தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அந்தக் கணம் நிகழ்கையில் மனம் கனத்துத்தான் போய்விடுகின்றது. இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையும் அதைத் தடுத்து நிறுத்த முடியா கையாலாகா நிலமையும் சூழ்நிலையை ரொம்பவே அசெளகரியத்துக்குள்ளாக்கி விடும். மூன்று வருடத் தாம்பத்தியம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. மூன்று வருடத்துள்... விவாகரத்து வரை வந்தாகி விட்டது. காரியங்கள் தான் எத்தனை வேகமாக நடந்தேறுகின்றன.

நேற்றுப் போல இருக்கின்றது. அவள் வந்ததும் ... அவர்கள் திருமணம் நடந்ததும். எங்கே பிரச்சனை ஆரம்பித்தது என்றே விளங்காத நிலமையில் இத்தனையும் ஆகிவிட்டது. அவர்கள் வாழ்க்கை பிரச்சனையுடன் தான் ஆரம்பமானதாகத் தோன்றியது. ஆரம்பமே சரியாக அமையாததால் தானோ என்னவோ எல்லாமே வேகவேகமாக முடிந்து விட்டது. சீர் வரிசையில் குறை வைத்ததாகவே அம்மாவிற்கும் அவளுக்கும் இடையில் முதல் பிரச்சனை வேர் விட்டது. சீர்வரிசை எதுவும் வேண்டும் தேவை இல்லாத சம்பாத்தியமும் சேமிப்பும் அவர்களிடம் இருந்தும் கெளரவத்திற்காக கேட்க வேண்டியிருந்தது. அப்படித்தான் அம்மா அவனிடம் சொல்லியிருந்தாள்.

மூன்று பெண்களின் கரையேற்றத்தின் பின்னால் நிகழ்ந்த அவனுடைய திருமணப் பேச்சு ஆரம்பத்திலேயே தடல்புடல்ப் பட்டது. ' உன் படிப்புக்கும் வசதிக்கும் பெண்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் பார்' என்று அம்மாவால் சதா நினைவூட்டப் பட்டது. முப்பது வயது நிறைந்த அவனின் உணர்வுகளோ ஆசைகளோ அங்கு கணக்கிலெடுக்கப் படவில்லை. அவர்களின் குடும்பக் கெளரவம் நிலை நிறுத்தப் படுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே அவர்கள் கண்களுக்கு அவன் தென்பட்டிருக்க வேண்டும். அவ்விதமாகவே காரியங்கள் கனகச்சிதமாக அரங்கேறின. குடும்பப் பின்னணி படிப்பு வசதி என பலதரப்பட்ட சுற்றுக்களிலும் பெண்கள் அலசி ஆராயப் பட்டனர். இறுதிச் சுற்றில் ஜெயித்து இந்த வீட்டிற்கு வலது கால் எடுத்து வைத்து வந்தவள் தான் இதோ வெளியேறப் போகின்றாள்.

ஒரு வருடம் பிரிந்திருந்து பார்த்தும் சரிவராமல் போகவே சட்டப்படியும் பிரிந்தாகி விட்டது. கடைசி கடைசியாக தனது உடமைகளை எடுத்துப் போக அவன் அனுமதியுடனேயே அங்கு வந்திருந்தாள். அவள் அங்கு வருகிறாள் என்று அறிந்தவுடனேயே அவளிடம் இருந்து அவனைக் காக்கவும் அவளைக் கண்காணிக்கவும் ஆபீசிற்கு அரை நாள் லீவு போட்டு விட்டு தங்கையும் கூடவே வந்து நிற்கின்றாள். அம்மாவென்றால் அவள் முகத்தில் முழிப்பதே பாவம் என்பது போல தன் அறையே கதி என்று கிடக்கின்றாள். தங்கையின் ஆறுமாதக் கைக்குழந்தயின் 'ங்கா ' என்ற ஒலிச் சிமிட்டல்கள் தவிர்த்து வீடு ஒரு மோனத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

அவனைப் பொறுத்த அளவில் அந்த சம்பவத்துடன் ஒட்டாத ஒரு பார்வையாளனாகவே வைக்கப்பட்டிருந்தான். வாழ்க்கை பற்றிய அவன் கற்பிதம் அங்கு நிறைவேறாக் கனவாகவே அமைந்த வகையில் காரியங்கள் அதன் அதன் போக்கிலேயே நடை பெற்றுக் கொண்டிருந்தன. அவன் வாழ்க்கை யார் யார் கையிலோ பொம்மையாகிப் போன ஆதங்கத்தில் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.

ஆசாரமான அல்லது கட்டுப் பெட்டித்தனமான வாழ்க்கைச் சூழலில் காலடி எடுத்து வைத்தவுடனேயே தான் மிகவும் ஏமாந்து போனதாக அவளே ஒரு முறை அவனிடம் சொல்லியிருந்தாள். புருஷனுடன் மட்டுமே ஒன்றிய வாழ்க்கை பற்றிய கற்பனையுடன் வந்திறங்கிய அவளுக்கு அவன் அம்மா தங்கைகளுடன் கூடிய சட்டதிட்டங்கள் நிறைந்த அக்குடும்பத்தின் வாழ்க்கை முறை அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் அதீத மரியாதையை எதிர்பார்த்த மாமியாரும் அனுசரணையை எதிர்பார்த்த மருமகளும் அது கிடைக்காத போது இரு துருவங்களாகிப் போனார்கள். இருவருக்கும் இடையில் அகப்பட்ட அவன் இரண்டு பேருக்கும் வேண்டாதவனாகிப் போனான். முதுகெலும்பில்லாத கோழை என்று மனைவியாலும் பொண்டாட்டிதாசன் என்று தாயாராலும் பழிசுமத்தப்பட ..... இரண்டு பேருக்கும் நடுவில் அகப்பட்டு பேந்தப் பேந்த முழித்ததென்னவோ அவன் தான்.

அம்மாவின் மனதையும் நோகவிடாமல் அவள் மனதையும் காயப் படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல அவன் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் என்னவோ அவனுக்குக் கை கொடுக்கவில்லை.

அவளை விட்டுப் பிரிதல் என்பது, நிச்சயமாக அவனுக்குச் சந்தோசம் கொடுக்கப் போவதில்லை என்பதை அவன் நிச்சயமாகவே அறிந்திருந்தான். அதே போல அவனுடன் கூடிய வாழ்க்கையில் புறக் காரணிகளைத் தவிர்த்துப் பார்க்கும் போது குறைகளை விட நிறைகளே நிறைந்திருந்ததை இந்த ஒரு வருட பிரிவுக்காலத்தில் அவள் நிறையவே சிந்தித்து அறிந்திருந்தாள். தன்னைப் போக வேண்டாம் என்று மறித்து விட மாட்டானா ?என்ற ஒரு நப்பாசையும் அவள் உள்ளத்தினுள்ளே ஊடுருவி நின்றதையும் அவள் அறிந்திருந்தாள். அந்த நப்பாசையின் தூண்டுதலால் தான் தன் உடமைகளை எடுப்பது என்ற போர்வையில் அவள் அங்கு வந்திருந்தாள்.

வரும் போதே அங்கு நந்தி மாதிரி வந்திருந்த அவன் தங்கையை அவள் கவனித்து விட்டிருந்தாள். இவற்றையெல்லாம் பெரிசு படுத்தும் ஒரு மன நிலையில் அவள் அன்றிருக்கவில்லை. அவன் என்ன செய்யப் போகின்றான் என்பதை அறிவதிலேயே அவள் கருத்தாகவிருந்தாள். வேண்டுமென்றே அவன் கன்ணில் படும் வகையில் தன் நடமாட்டங்களை வைத்துக்கொண்டாள். அவனைப் பார்க்கும் போது பல வேளைகளில் பாவமாகவும் சில வேளைகளில் கோபமாகவும் இருந்தது.

தன் வாழ்க்கை என்பதை தனியாகப் பார்க்கமுடியாத என்னவொரு ஆண்பிள்ளை என்றே அந்தக் கோபமும் இருந்தது. தாய் சகோதரிகள் என்ற தடைகளைக் கடந்து பிரிந்து வந்தான் என்றால் என்னவொரு அழகிய வாழ்க்கை அவர்களுக்காகக் காத்திருக்கின்றது என்றே அவள் சிந்தித்துப் பார்த்தாள்.

முப்பது வருட காலம் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயையும் தன்னுடன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட சகோதரிகளையும் தூக்கி எறிய முடியாத ஒரு தளையில் அவன் கட்டுண்டு கிடப்பதை அவளால்ப் புரிந்து கொள்ள முடியவேயில்லை.

வாசலில் நிழல் ஆடியதை உணர்ந்து தலையுயர்த்திப் பார்த்தான். நிலைக்கதவைப் பிடித்தபடி அவள் நின்றிருந்தாள். என்ன என்பதைப் போல அவளைப் பார்த்தான்.

"ஒரு டாக்ஸி பிடித்துத் தர முடியுமா? " பலகீனப் பட்ட ஒரு குரலில் அவள் கேட்டாள். அக்குரல் அவளுக்கே அன்னியமாக இருந்திருக்க வேண்டும். எதையும் ஆராய்ந்து கணீர் என்று பேசக் கூடிய அவள் குரலா அது என்று நினைத்துப் பார்த்தான். தன்னைப் போலவே இப்பிரிவு அவளையும் மிகவும் பாதித்திருப்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அவன் மேல் அவள் கொண்டிருந்த பிரியத்தையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். ஒரு ஆதுர்யத்துடன் அவளை இறுதியாகப் பார்த்தான். அவள் கரிய விழிகளில் நீர் திரையிட்டிருக்க அவன் கன்களை ஊடுருவி அவள் எதையோ தேடினாள்.

'டாக்ஸிதானே .. நான் கோல் பண்ணுகின்றேன் ' என்ற அவன் தங்கையின் குரல் கேட்டதும் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவள் உள்ளே சென்று விட்டாள். கடைசி கடைசியான தன் முயற்சியையும் தோற்று விட்டதான அயர்சியில் அவளிடம் இருந்து பெருமூச்சொன்று விடை பெற்றுக்கொண்டது. இதற்கு மேலும் பெண்னான அவளால் எப்படி தன்னை வெளிப்படுத்த முடியும் என்று அவள் அறியாதிருந்தாள்.

அவன் மனதினுள்ளே அவள் மேல் ஏற்பட்ட கழிவிரக்கமே முழுவதுமாய் நிறைந்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழந்திடவே அவன் மனம் இப்பொழுதும் ஆசைப்பட்டது. அவனுடைய ஒரு சொல்லுக்காக அவள் காத்திருப்பதும் அவனுக்குத் தெளிவாகவே புரிந்திருந்தது.

இரண்டு வருட இடைப்பட்ட வாழ்க்கையில் அவள் பட்ட துன்பத்தை மீண்டும் அவளுக்குக் கொடுப்பதற்கு அவன் மனம் ஒப்பாமல் இருந்தது. டாக்ஸி செல்லும் போது அவள் பார்வையைத் தவிர்ப்பதற்காக அவன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். அங்கும் ஒரு ஒற்றைக்குருவி ஓலமிட்டபடி....

வல்லாதிக்கக் கனவுகளும் அரசியல் பகடைகளும்

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வல்லாதிக்கமாவது நல்லாதிக்கமாவது என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கத்தான் செய்கின்றது. என்ன செய்வது ?... நீங்களும் நானும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நம்பினாலும் நம்பாவிட்டாலும் உலக நடப்புகள் அவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன.

'வல்லன வாழும் ' என்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறி நிற்கும் மிகமுக்கிய கூர்ப்புத் தத்துவமாகும். சிம்பிள் அண்ட் ஸ்வீற் ஆக சொல்லப்பட்ட தத்துவத்தின் வழியே ஒழுகி எல்லா உயிரினங்களும் ஆதி காலம் தொட்டு இன்று வரை உலகில் தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகின்றன.

மனிதனும் ஒரு விலங்காக இருப்பதனால் இந்த தத்துவத்தினின்றும் விலகிப் போகமுடியா ஒரு ஒழுங்குடன் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இன்னும் வாழ்வாங்கு வாழ்வான்.

கடந்த பல நூற்றாண்டுகளில் மனித பலம் கொண்டு வல்லமை நிரூபிக்கப் பட்ட பல போர்கள் நடாத்தப் பட்டு ஆட்சிகள் நிறுவப் பட்டிருந்தன. காலனித்துவ ஆட்சிக் காலங்களின் அஸ்தமனத்தின் பின்னர் நேரடிப் போர்கள் நடாத்தப் படுவது குறைந்து நவ காலனித்துவம் என்னும் அழகுப் பெயருடன் உலக மயமாக்கப் பட்ட பொருளாதாரம் என்னும் நவீன உறிஞ்சல் தத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இருந்த போதிலும் விதி விலக்காக வளர்ந்து விட்ட நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைத் தேடுதலும் சந்தைக்கான நாடுகளின் கையகப்படுத்துதலிலும் ஏற்படும் முரண்கள் உலகைப் பல கூறுகளாகப் பிரித்துப் போட்டுள்ளது. இம்முரண்கள் அதி கூர்மை பெறும் போது பெரும் போர்களாக உருவெடுக்கின்றது. முதலாம் இரண்டாம் உலகப் பெரும் போர்கள் இம்முரண்களின் கூர்மையினால் உலகு கண்ட பேரழிவுகளாகும். இப்பெரும் போர்கள் அதுவரை இருந்த உலக ஒழுங்கைப் புரட்டிப் போட்டதுடன் அதுவரை நம்பப்பட்டு வந்த தத்துவங்களையும் கருத்துகளையும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்தது.

பெரும் போர்களின் அழிவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொண்டு வளர்முக நாடுகள் மற்றும் பின் தங்கிய நாடுகளிடையே தம் ஆதிக்கத்தையும் உறிஞ்சலையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

தம் நலன்களுக்கு எதிரான சக்திகளையும் கருத்துக்களையும் இரும்புக் கரம் கொண்டும் நசுக்க இவை பின் நிற்கவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் நேரடி ஆக்கிரமிப்பும் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறைமுக ஆக்கிரமிப்பும் சிறந்த உதாரணங்களாகும்.

ஜனநாயகத்தின் காவலர்களாக வேஷம் போடும் இவர்கள் ஜனநாயகம் பற்றி வைத்திருக்கும் அளவு கோல்களின் தன்மையிலிருந்தே அவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வல்லாதிக்கக் கனவுகளில் இன்று பல நாடுகள் முன்னின்று போட்டி போடுகின்றன. இவர்களின் வல்லாதிக்கக் கனவுகள் உலக, பிராந்திய என்ற அளவுகளில் மாறுபட்டிருந்தாலும் கனவு என்னவோ வலிமை குறைந்தவர்களின் மீது ஏற்படுத்தத் துடிக்கும் ஆக்கிரமிப்பு என்பதில் எந்த மாற்றமும் கிடையாதிருக்கின்றது.

இந்தப் போட்டியில் அமெரிக்க ஐரோப்பிய ரஷ்யா போன்ற நாடுகளுடன் குட்டி நாடுகளான ஜப்பான் கொரியா போன்ற நாடுகளும் களத்தில் இருக்கின்றன என்ற உண்மை மீண்டும் 'வல்லன வாழும் ' என்ற கூர்ப்புத் தத்துவத்தை மெய்ப்பிப்பதாகவே இருக்கின்றது.

இருந்தபோதும் தாவரங்கள் விலங்குகளைப் பொறுத்த அளவில் நூறு வீதம் பொருந்தக் கூடிய இவ்வளவு கோல் ஆறறிவுடன் கூடிய மனித இனத்தின் ஆசைகள் பேராசைகளைத் தாண்டி எவ்வாறு பொருந்தும் என்பது ஆராச்சிக்குரியதே.

வேறு பட்ட மொழி சமய பண்பாட்டுக் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் கூட்டங்களின் ஆதிக்கத்தை நசுக்கி மேலாதிக்கத்தை ஏற்படுத்த விழையும் இக் கலாச்சார முரணான வல்லாதிக்கக் கனவுகள் எவ்வளவு தூரம் மெய்ப் படும் என்பதே இன்று உலகின் முன்னால் உள்ள பெறுமதி வாய்ந்த கேள்வியாகும்.

வேறு பட்ட கலாச்சாரப் பண்பாடுகள் கொண்ட இனக்குழுமங்களின் மேல் வலுக் கட்டாயமாக திணிக்கப் படும் ஆதிக்கம் ஒரு கால கட்டத்தில் வலுவிழந்து போகும் என்பதற்கு சோவியத் ஜூனியனின் உடைவு ஒரு சிறந்த உதாரணமாகும். அதே நேரம் பல இனக்குழுமங்கள் சேர்ந்து வலுவான ஆதிக்கச் சக்தியாக உருவெடுக்க முடியும் என்பதற்கு இந்தியா சீனா போன்ற நாடுகளும் சிறந்த உதாரணங்களாகும்.

அதே வேளை வேறு பட்ட கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியங்களை கொண்ட இனக்குழுமங்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட எத்தனை அழிவுகளின் பின்னாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டா என்பதற்கு பலஸ்தீனம் சூடான் இலங்கை போன்ற நாடுகளில் முன்னெடுக்கப் படும் விடுதலைப் போராட்டங்களும் கண்கூடான உதாரணங்களாகும்.

வல்லாதிக்கக் கனவுகளும் அவற்றை நிலை நாட்ட பலி கொள்ளப்படும் அரசியல் அபிலாசைகளுக்கும் ஊடாக புதிய பரிணாமத்தை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிறப்பான கருது கோள்களாக இருந்தவை இன்னொரு காலகட்டத்தில் மாற்றியமைக்கப் பட்டதும் புதிய கருத்துக்கள் சிறப்பானவையாக விளங்கியதும் உலகத்தின் வரலாறு. உலகின் வரலாற்றில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் கலைந்து காணாமலே போய் விட்டன என்பதையும் நாம் எம் கருத்தில் கொள்வது எப்போதும் மனித இனத்துக்கு நன்மை தரும் .

Friday, December 23, 2005

'நான்' வாழ்க.....

என்னடா இது ஒரு கிருக்குப் பிடித்த மனிசனாய் இருக்கிறானே... உலகத்திலேயே முதல் முதல் நான் வாழ்க என்று கோஷம் போட்ட முதல் ஆளாய் இருப்பதாய் யோசித்து நீங்கள் மண்டை காய்வது எனக்கு விளங்குகின்றது. இருந்தாலும் என் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் நினைப்பது சரியா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்திலேயே அதிகம் உச்சரிக்கப் படுற வார்த்தை எது தெரியுமா? உச்சரிக்கப்படுகின்ற வார்த்தை என்பதுடன்.... எண்ணங்களை உருவாக்கின்ற வார்த்தை..... அதனைச் சுற்றிச் சுற்றியே ஆயிரம் சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்ற வார்த்தை எதுவென்று கேட்டால் .... என்ன சொல்வீர்கள்?

உங்களைக் கேட்டால் அன்பு, காதல்,கடமை என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றை அடுக்கிக் கொண்டே போவீர்கள். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தத்தை ஏற்படுத்துகின்ற மூலம் ' நான் ' தான். இந்த நான் இல்லையென்றால் இங்கு எதுவுமே கிடையாது. அன்பு இல்லை.... காதல் இல்லை...... பாசம் இல்லை. ஏன் ... ? இந்த உலகத்தில் பேசப்படுவதற்கு எதுவுமே இருந்திருக்காது. அப்போ மனிதர்கள்....ஆமாம் அவர்கள் இருந்திருப்பார்கள். பல்லாயிரக்கணக்கான விலங்குகளில் ஒன்றாக கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒன்றாக அவர்களும் வாழ்ந்து விட்டுப் போயிருப்பார்கள். விலங்குகளிற்கும் தாவரங்களிற்கும் இருக்கும் வாழ்க்கை முறை போல ஏதோ.. ஏதோபோல ஒரு வாழ்க்கை முறை இருக்க அதை வாழ்ந்து விட்டிருப்போம்.

ஆறறிவு நிறைந்தவன் மனிதன் என்று நாம் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாலும் அந்த ஆறாவது அறிவு சுத்திக் கொண்டிருக்கும் மூலப் பொருள் இந்த 'நான் ' தான். இந்த நான் இருந்திருக்கவில்லை என்றால் உலகத்தில் எதுவும் இருந்திருக்காது. வளர்ச்சிகள், உயர்ச்சிகள் ஏன் வீழ்ச்சிகள் கூட. மனிதன் குழந்தையாய்ப் பிறந்த பொழுதிலிருந்தே இந்த நான் தட்டிக் கொடுக்கப்படுகின்றது. இந்த நான் ஐ மற்றவர்கள் தட்டிக் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இங்கு காரியம் அனைத்தும் இயற்றப் படுகின்றது. தட்டிக் கொடுக்க கொடுக்க காரியத்தில் வேகம் ஏற்படுகின்றது... கூர்மை ஏற்படுகின்றது. மற்றைய நான்களில் இருந்து ஒரு நான் வேறு பட்டு நிற்க வேண்டுமென்றால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்க சாதனைகள் பிறக்கின்றன. சாதனைகள் கண்டுபிடிப்புகளாக மாற்றமடையும் பொழுது மனித வாழ்க்கையில் வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. வாழ்க்கை இலகுவாக இலகுவாக வழி வகுத்தவர்கள் புகழப் படுகின்றார்கள். புகழ் கிடைக்கக் கிடைக்க இந்த நான் வெகுவாக திருப்திப்பட்டுக் கொள்கின்றது.

ஒருவர் நல்லவராக இருக்கும் பொழுது மற்றவர் கெட்டவராக நடந்து கொள்வதும் இந்த நான் ஐத் திருப்திப் படுத்த அவரவர் எடுத்துக் கொள்ளும் மாறுபட்ட வழி வகைகளினாலேயாகும். இல்லை என்றால் காந்தியும் ஆபிரகாம் லிங்கனும் இருந்த மண்ணில் ஒரு ஹிட்லரும் முசோலினியும் தொன்றியிருக்கிறார்களே.

எது எப்படி இருந்த போதும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கின்ற நான்களே இன்றைய உலகின் சிறப்புக்கும் சீரழிவுக்கும் காரணமாக இருக்கின்றார்கள். உலகத்தைப் படைத்தவர் யாராயிருந்தாலும் இந்த உலகத்தை ஆக்கியவர்கள் மனிதர்களே. மனிதர்கள் எதற்காகப் பிறந்துள்ளோம் என்று ஒரு கேள்வி கேட்டால் ... எத்தனை பேர் எத்தனை பதில் சொன்னாலும் .... அவை அத்தனையும் வாழ்க்கை என்பதற்குள் தான் அடக்கம். முற்பிறப்பு மறு பிறப்பு என்று எதனையும் ஆதார பூர்வமாக கண்கூடாக அறிந்து கொள்ளாத இந்த நிலமையில் இது தான் உண்மை. இந்த வாழ்க்கையை ... வாழ்தலை இலகுவாக்கிய இந்த உணர்வு மனிதர்களுக்குள் இருக்கின்ற நான்களே. வாழ்க்கையின் ஆதாரமும் இதுவேதான். இங்கு பேசிக்கொண்டிருக்கும் நானும் நீங்களும் கூட .... நான் அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதெல்லாம் வேறு எதற்காக? என்ன ஒரு உலகக் கடமை இருக்கின்றது என்று யாரும் சொல்லக் கூடுமோ? இந்த நான்கள் இருந்தால் தால் நாம் ஆறறிவு உள்ள மனிதர்கள். உலகம் உலகமாக இருக்கும். ஆகவே நான்கள் வாழ வேண்டும். மனிதர்கள் இருக்கும் வரை நான்கள் வாழும்.

இந்த நான் கள் வாழ்கவென்று எல்லோரும் ஒரு முறை ஓ ...... போடுவோமா?

மனதிலறைந்த சிலுவை

உறவு உயிர்
துறந்து போக

உணர்வு நிலை
குலைந்து போக

நினைவில் ரணம்
நிறைந்து போக

வாழ்வின் அடி
அசைந்து போக

கரையிற்கடல் கால்
வைத்துப் போக

மனதிலறைந்த சிலுவை
மறக்காது போகும்

ஓராண்டு வந்து
சேர்ந்ததம்மா...

Tuesday, December 20, 2005

ஒரு வரவுக்காய் நானும்

அன்றைப் போலவே
இன்றும் எல்லாம்
முடிந்து விட்டது

சிரிப்பும் சிறுகெக்கலிப்பும்
கம்மலும் இருப்பும்
கதவு சாத்திப்போய்விட்டது

ஒரு வரவுக்காய்
நானும்
ஒரு செலவுக்காய்
இவர்களும்
மூடிய அறைகளுக்குள்

பதினாறு வயதில்
திருவிழா போலவே
இருந்தது
முப்பது வயதிலும்
முடியாமல் போனது

கூண்டுக்குள்
அடைபட்ட கிளி
சிறகடித்துச் சிறகடித்துச்
சிறகுதிர்த்தது

கூண்டைக் கொத்தி
இரும்பை வளைக்கும்
முயற்சியில்
சொண்டு மட்டும்

பச்சைப் பசேல் காடும்
பறந்து திரியும்
உரிமையும்
கிளிக்கு மட்டும்தானா?

Sunday, December 18, 2005

இணையமும் மொழிகளும்

புலம் பெயர் நாடுகளிலெல்லாம் இப்போ ஒரு புது விடயம் (இது புது விடயமே இல்லை கால காலமாக இருந்து வரும் பிரச்சனைதான்) - எப்போதும் புதிது போல் தோன்றுவதாலும் புதிதாய் இருப்பதாய் எண்ணுவதாலும் - பேசப் பட்டு வருகின்றது.

விட்டு விட்டுப் புயல் அடிப்பது போல ஊடகத்துறையில் அது சம்பந்தப் பட்டவர்களாலோ இல்லை கல்வி வேள்விகளில் சிறந்தவர்களாலோ அல்லது சமூக அக்கறை கொண்டவர்களாலோ அடிக்கடி கிளறப் பட்டு பிரச்சனையின் (பிரச்சனை என்று நினைத்தால்) நீள அகலங்கள் கிழிக்கப் பட்டு சத்திர சிகிச்சை செய்யப் படுகின்றது. தெரிந்தோ தெரியாமலோ விளங்கியோ விளங்காமலோ சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களின் எண்ணங்கள் ஆசைகள் அல்லது நிராசைகள் அனைத்தும் பதிவிடப் படுகின்றன. மொழிகளின் நசிவு அல்லது வழக்கொழிவு எனப்படுதலில் நாம் தமிழராய் இருப்பதனால் தமிழ் மொழியின் நசிவு அல்லது வழக்கொழிவு என்பது பற்றிய கருத்தாடலாகவே இப்பரிமாற்றங்கள் புலம் பெயர் மண்ணில் அடிக்கடி நிகழ்கின்றது. தமிழ் மொழி சாகாது என்ற வாதமும் சாகக் கூடாது என்ற அங்கலாய்ப்பும் சாவதைத் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பதான பதிவுகளும் இக் கருத்தாடல்களில் ஊடாடுவதைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. இது பற்றிய தொடக்க நிலை விவாதமாக இதை எடுத்து வருகின்றேன். ஆர்வமுள்ளவர்கள், தெளிவுள்ளவர்கள் உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யும் போது இதுவொரு பரந்து பட்ட கருத்துக் கணிப்பு மையமாக செயற்படக் கூடும். உங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து எனது கருத்துக்களையும் முன்வைப்பேன்.

Thursday, December 15, 2005

காத்திருப்பு

ஒரு சிகரட்
ஒரு தீக்குச்சி
காத்திருக்கின்றது
புகைத்தலுக்காய்
நுரையீரல் வேண்டி

ஒரு காழ்ப்பு
ஒரு வதந்தி
காத்திருக்கின்றது
புகைச்சலுக்காய்
சுவாசம் வேண்டி

இரண்டுமே
இருமித்
தொலைக்கின்றன
சமூகத்தின்
சாபக்கேடு

Tuesday, December 13, 2005

பூ இவ்வளோதானா.....?

இதை வாசித்து விட்டு நீங்கள் ப்...பூ... இவ்வளோதானா .... ? என்று பல்லை நெருடும் சத்தம் இப்போதே எனக்குக் கேட்கின்றது.

இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லாமல் விடுவதும் சரியில்லைதானே..... இனி கேட்பதும் கேட்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

உலகெங்கும் பனிக்காலத்தின் தாக்கத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் வைற் கிறிஸ்மஸ் கொண்டாடவென்று பனிக்குளிரில் விறைச்சாலும் வீறாப்பாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கை இந்திய நாடுகளிலோ திருக்கார்த்திகை திருவெம்பாவை என்று ஆண்டவனின் சிறப்புக்களைப் பாட அதிகாலை வேளையிலேயே பனிக்குளிரில் குளித்து வெடவெடத்துக் கொண்டிருக்கின்றார்கள். பத்தாக் குறைக்கு தேவர்களும் நீண்ட துயில் கலைந்து எழுந்து ஆண்டவனை தொழ ஆயத்தங்கள் செய்யும் காலமாம் இது.

தேவர்களுக்கு இக்காலம் அதிகாலை வேளை என்கிறார்கள். மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களுக்கு ஒர் நாளாம். கொடுத்து வைத்தவர்கள் . இருக்காதா பின்னே.... ஆறு மாதம் தூங்கி எழுந்தால் ..... ஒவ்வொரு இருபத்திநாலு மணித்தியாலத்துக்கும் ஒரு முறை தூங்கி எழுந்து வேலைக்குப் போய் ஏதோ செய்து கிழித்து விட்டு மூண்டு வேளையும் கட்டாயம் சாப்பிட்டு..... இந்தக் கஸ்ரம் அவர்களுக்கெங்கே தெரியப் போகின்றது.

தேவர்கள் இப்படி சோம்பேறித்தனமாக இருக்கிறதாலோ என்னமோ தான் எங்களால் அவர்களை இன்னும் பார்த்துப் பேச முடியாமல் இருக்கிறது போல.

இவர்கள் இப்படி என்றால் அசுரர்களில் சொல்லவே வேண்டாம். தூக்க்கத்திற்குப் பேர் போனவர்களெல்லாம் அவர்களில் இருக்கிறார்கள். இப்படி தேவர்கள் மேலுலகத்தில் வசிக்க கீழுலகத்தில் அசுரர்கள் வசிக்க இடையுலகத்தில் நாங்கள் மாட்டுப் பட்டது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று நான் நினைக்கின்றேன். இல்லாவிட்டால் மேலேயும் போகமாட்டாமல் கீழேயும் போகமாட்டாமல் என்ன வாழ்க்கை.

நாமிருக்கும் இடையுலகத்தை இடையுலகம் என்று அழைக்காமல் பூவுலகம் என்று ஏன் சொல்லுறம். இந்த ஆராச்சிக்குப் போய்த் தான் வந்தது இவ்வளவு வில்லங்கமும். மேலுலகத்தை மேலோகம் அல்லது தேவலோகம் என்று சொல்லிறம். கீழுலகத்தை கீழோகம் அல்லது பாதாளலோகம் என்று சொல்வதைப் போல மனிதர் வாழும் உலகத்தை இடையுலகம் அல்லது மனிதலோகம் என்று சொல்லலாம் தானே. அதை விட்டிட்டு ஏன் பூலோகம் என்று அழைக்கின்றார்கள்.

பூ உலகம் என்று அழைப்பது போல ஏன் காய் உலகம் கனி உலகம் என்று யாரும் அழைக்கவில்லை. ரொம்ப்பத்தான் கடிக்கிறேனோ ...?

சம்பூர்ணம் என்றால் நிறைவாக உள்ளது என்று தானே பொருள். அப்ப சொல்ல வந்ததை நிறைவாகத் தானே நானும் சொல்லவேணும்.

சம் என்றால் நிறைவு. பூ என்றால் உருவாக்கம் அல்லது உருவானது என்று பொருளாகும். அப்படியென்றால் பூலோகம் என்றால் உருவாகும் லோகம் அல்லது உருவாக்குகின்ற லோகம் என்று தானே பொருள் படும். அதாங்க நீங்க நினைத்ததை நான் சொல்லி விட்டேனா ...? யாவும் உருவாகின்ற லோகம் அல்லது யாவற்றையும் உருவாக்குகின்ற லோகம். அப்பாடா... இனியும் ஏன் காய் லோகம் கனி லோகம் என்று பெயர் வைக்கவில்லை என்று கேட்கமாட்டீர்கள் தானே.

இதுதான் இந்த லோகத்திற்கு சரியான பெயர் என்று அடித்துச் சொல்வேன். ஏன் இதுதான் சரியான பெயர் என்று சொல்கிறேன் என்றால் இங்கு தானே எல்லாம் உருவாகின்றது. வேதங்கள் ,ஆகமங்கள், மதங்கள், அரசியல், தத்துவம், அரசு ,அணுகுண்டு இத்தியாதி... இத்தியாதி.

மனிதன் தான் கடவுள் என்று நான் சொல்வேன். ஆக்குவதற்கு சோதனைக் குளாயைக் கண்டுபிடித்தான். அழிப்பதற்கு அணுகுண்டைக் கண்டு பிடித்தான். காப்பதற்கு ஆர்மியைக் கண்டு பிடித்தான். மறைத்தலுக்கு
இரசாயன, உயிரியல் ஆயுதங்களைக் கண்டு பிடித்தான். அருளலுக்குப் பஞ்சத்தை கண்டு பிடித்தான். அப்பத்தானே அழுகின இறைச்சியையும் பழுதான கோதுமையையும் நாடு கடத்தலாம். இது போதாதென்று......... உருவாக்கியவன் ஒருவன் என்று சொல்லிக் கொண்டே நிறையவே உருவாக்கியவர்களை உருவாக்கி உருவாக்கி பூலோகத்தை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்கிறோம். என்ன தலை சுத்துகின்றதா...?

மனிதர்கள் ஒரே அச்சமைப்பில் இருந்தும் தட்ப வெப்ப நிலைகளால் தோல் நிறம் மட்டும் மாறிப் போக... பிடிச்சுக் கொண்டான் மனிதன். கறுப்பு வெள்ளை சிகப்பு சொல்லி குடுமிச் சண்டை ஜோரா நடக்கின்றது. இது என்னவோ உண்மைதானே...... இல்லை என்றால் உலகெங்கும் இருக்கின்ற மரஞ் செடி மலை மடு கடல் எல்லாம் ஒரே நிறத்தில் இருக்க மனிதரில் மட்டும் ஏன் இவ்வளவு நிற வேறுபாடு என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. என்னவோ போங்க .... எல்லாவற்றுக்கும் எப்போதும் காரணம் இருந்து கொண்டுதான் இருக்கும்.


சரி இது உலகம் என்றால் ஊருக்குள் என்ன நடக்கின்றது. ஒரே நிறத்துக்குள் எப்படி உயர்வு தாழ்வு பார்ப்பது ... உருவானது சாதி. உருவாக்குகின்ற லோகம் அதுதான் பூலோகம் அல்லவா?

மெய்ஞானம் விஞ்ஞானம் எல்லாம் இங்கு தான் உருவானது. அம்பு வில்லும் அண்குண்டும் இங்கு தான் உருவானது. அம்பு வில்லுடன் அடிபட்ட மனிதன் அணு குண்டு போட்டு அடித்துப் பார்க்கின்றான். புதுப் புது நோய்களுக்கு புதுப்புது மருந்துகள் அல்லது புதுப் புது மருந்துகளுக்கு புதுப் புது நோய்கள். ஆமாங்க உண்மைதாங்க.... புதுப் புது நோய்கள் உருவாகின்ற இடங்களைப் பாருங்க . வறுமைப் பட்ட ஆசியாவும் ஆபிரிக்காவும். மருந்து கண்டு பிடிக்க ஆராய்ச்சி நடக்கலாமில்லே.


எது எப்படியோ... பூலோகம் என்பது உருவாகும் அல்லது உருவாக்கும் இடமல்லவா .... ? அப்படித் தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் மனிதர்களை இயற்கையாய் உருவாக்கியது போதாதென்று
இப்போ செயற்கை முறையில் கூட ........ ஏதாவது உருவாக இல்லை என்றால் உருவாக்க வேண்டும். கடவுள்களையும் தேவர்களையும் உருவாக்கிய அசுரமனிதர்களுக்கு இதுவொன்றும் பெரிய விடயமல்லவே... ப் ... பூ வென்று ஊதிவிடக் கூடியவிடயம் தான்.

இப்போ முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். நீங்கள் பூ இவ்வளவு தானா என்பதும் பல்லை நெருடுவதும் எனக்கும் கேட்கவே செய்கின்றது.

Sunday, December 11, 2005

பிறந்த நாள்

வீடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. மகனின் பிறந்த நாள் வருகின்றது. இதிலென்ன அல்லோல கல்லோலம். வீட்டிலல்ல என் சிந்தனையில் தான்.

ஒரு மாதம் முதலே பிறந்த நாள் எண்ணப் படத் தொடங்கியாய் விட்டது. என்ன வகை கேக் ( என்ன தமிழ் ) வாங்குவது, ஆடை எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதங்கள் பிள்ளைகளுக்கிடையில் விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்தது. பிள்ளைகளின் ஆசைகளுக்குள் தலை போட்டுக் குழப்பாமல் இருந்து கொள்வேன். சிலருக்குத் தங்கள் மூக்கை எங்கும் நுழைக்காமல் இருப்பதே முடியாத காரியம் என்பது வேறு விடயம். spiderman, batmaan இல் தொடங்கி இறுதியில் The incredible இல் வந்து நின்றது. தெரிந்தவர்களுக்குப் பரவாயில்லை. தெரியாதவர்களுக்கு என்ன இதெல்லாம் சின்னப் பிள்ளைச் சமாச் சாரங்கள் விட்டுத் தள்ளுங்கள். இறுதியில் பிறந்த நாள் காணும் பிள்ளையின் முடிவே இறுதியாக ஏற்றுக் கொள்ளப் படும். நம்ம சமத்துப் பிள்ளைகள் உலகத்தை வளைக்கத் தொடங்குகின்ற முதல் இடம்.

எவ்வளவு குதூகலம். என் பிறந்த நாள் நினைவுகளை அல்லது கனவுகளை (கனவுகள் தான் அதிகம் இருந்தது என்பது தான் உண்மை) எண்ணிப் பார்க்கின்றேன். குக் கிராமத்து வாழ்க்கை முறைகளுக்கு கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாடுவது எல்லாம் எவ்வளவு சுமையான விடயம் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்படித் தான் நானும் எனது பிறந்த நாளை கொண்டாட முடிவெடுத்த ஒரு பொழுது இன்றும் என்னால் மறந்து விட முடியாத பொழுதாய்ப் போனது. பள்ளிக் கூடத்தில் சக படிப்பாளிகளிடம் எல்லாம் பெரிதாகப் பீற்றிவிட்டு ( அதாங்க அப்பிடி இப்பிடின்னு காத்தாடி விடுறதுங்க) வீட்டிற்கு வந்தால்.... பிறந்த நாளாவது மண்ணாவது. பிறந்த நாளுக்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை. வீட்டில் என்ன நிலமையோ ஏது சங்கடமோ அது பற்றியெல்லாம் கவலைப் படுகிற நிலமையில் நான் இல்லை. எனது சில பிறந்த நாட்களைக் கொண்டாடி உற்சாகப் படுகின்ற அப்பா கூட மெளனமாக இருந்தது எனக்குத் தாங்கவில்லை.

அம்மாவிடம் மெதுவாக ஆரம்பித்த எனது அழுகை பெரிதாகிப் பெரிதாகி அப்பா காதுவரை கேட்கிற அழுகையாகி போனது. ஒரு குரலில் பயம் காட்டுகின்ற அப்பா அன்று பேசாமல் இருந்தபோது தான் எனக்கு ஒரு உண்மை பளிச்சீட்டது. பிறந்த நாள் பிள்ளையான எனக்கு அன்று எல்லா வகை சாம தான பேத தண்டைனைகளிலிருந்து விலக்கு என்ற உண்மை. பிறகு கேட்கவா வேணும். என் குறையை ஊருக்கே கேட்கச் சொல்லியழ என்ன அவசரத்துக்கு வைத்திருந்த பணமோ என்னவோ என் கைக்கு வர என் பிறந்த நாள் கேக் வாங்க நானே ஒரு மைல் தூரத்திலுள்ள கடைக்கு ...வலிப்புத்தான். நேரம் என்ன ? ...ஆக ஐந்து... ஐந்தரை தான்.... யாரைப் பிழை சொல்வது? ... இடையிடை கேக் சுகம் காட்டிய பெற்றோரையா? அல்லது வீட்டின் பொருளாதாரம் பற்றி படிக்காத என்னையா....?

அன்று பார்த்தா ... அப்படி யொரு மழை பெய்ய வேண்டும். வானமே இடிந்து விழுந்து போல பொத்துக் கொண்டு பெய்தது. அப்பிடி ஒரு மழை. வைகாசி மாதத்தில் அப்படி ஒரு மழை வருமா? ... மழை ஒன்றும் எனக்கு ஒரு பொருட்டல்ல.... அப்பிடி கரையக் கூடிய வெல்லக் கட்டியுமல்ல நான்... ஆனால் கையிலிருக்கும் கேக்.... பகீரதப் பிரயத்தனத்தில் நான் பிறந்த நாள் கொண்டாட ஆயத்தமாக ..... மழை கெடுத்துக் கொண்டிருந்தது.

நேரம் போய்க் கொண்டிருந்தது. போகப் போக இருட்டுவதற்குள் பிறந்த நாளக் கொண்டாட முடியுமா என்ற சந்தேகம். அதை விட பெரிய கேள்வி ஒன்று என்னைத் துளைத்துக் கொண்டிருந்தது. எனது வீர தீரப் பராக்கிரமத்தை நானே சோதித்துக் கொள்ளப் போகின்ற நிலமை எனக்கு வரப் போகின்றதா ?....என்று. வேறொன்றுமில்லை... நான் போகும் வழியில் தான பெரீய்ய்ய இடுகாடொன்று வருகின்றது. பகலில் அதைக் கடந்தாலே அந்தப் பக்கம் பார்க்காமலேயே மறு பக்கம் பார்த்துக் கொண்டு போகிற அளவிற்குத் துணிச்சல் இருந்தது.

இன்று பிறந்த நாளும் அதுவுமா ...மதுரைக்கு வந்த சோதனை ..எனக்கும் காத்திருக்க மழை சிறிது சிறிதாக குறைந்து வர தாவியேறினேன்.
மழைகால இருட்டு வேறு ... பயத்தில் நெஞ்சு தடக் தடக் அடிக்க இடுகாட்டைக் கடந்து கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு உருவம் குடையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தது. அப்பா.... எல்லாப்பயமும் போய் அப்பா பயம் வந்து குந்திக் கொண்டது. ஒரு கதையும் கேட்காது ஏறு என்ற ஒற்றைச் சொல்லுடன் என்னை யும் ஏற்றிக்கொண்டு வீடு வந்தார். அதே இடுகாட்டில் நான் பானை உடைத்து அவரை வழி அனுப்பி வைத்ததும் இன்னொரு நாளில் நடந்தது.

இப்போதெல்லாம் பிறந்த நாள் வருவது அப்படியொன்றும் ரசிக்கக் கூடியதாக இல்லை. பிறந்ததிலிருந்து சாதித்தது என்ன என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் மனம் கனப்பது போல சாதனைகள் கனப்பதாகக் காணோம். பத்தாததிற்கு டாக்டர் சொல்லும் கவனம் வேறு எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்றது. இப்போ பிறந்த நாள் வருகின்றது என்பதே ஒரு மலைப்பாகத் தான் இருக்கின்றது. சின்ன வயதுப் பிறந்த நாள் தான் சுவாரஷ்யம் என்பது என் கருத்து . என்ன நான் சொல்வது....

Saturday, December 10, 2005

அது


சிறு ஒளி
சிறு துகள் விளக்கம்
கால காலமான
காத்திருப்பு
வழி அளந்த
விசுபரூபம்
வரட்சி செழுமை
வாழ்க்கையாய்

பிரபஞ்சத்தின்
கொடியிடைத்
தொடர்பு
பொருள்
அறிந்த
அறியத் துடிக்கும்
எத்தனம்
அறிய முடியாத
அயர்வு

மனித வாழ்வு
மண்டியிட்ட
கணங்கள்
வியாபிதமாய்
அறிந்தும்
அறியாமலும்.....

ஆ...ஆ......அம்மா

கதவைத் திறக்கையில்
கால் தடுமாறுகிறது
காத்திருப்புக்கு
யாருமில்லாது
மூடிக் கொள்கிறது

குளிரேறிய உணவும்
குண்டிச் சட்டியில்
மிட்டாயும்
குதித்துக் கைதட்டும்
பொம்மையும்

எப்போதும் போல்
இப்போதும்

எனக்கு வேண்டுவது
குளிர்ந்த கரத்துக்கு
சூடும்
மூடிய மனதுக்கு
மருந்துமாய்
ஒரு முத்தம்