Sunday, December 11, 2005

பிறந்த நாள்

வீடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. மகனின் பிறந்த நாள் வருகின்றது. இதிலென்ன அல்லோல கல்லோலம். வீட்டிலல்ல என் சிந்தனையில் தான்.

ஒரு மாதம் முதலே பிறந்த நாள் எண்ணப் படத் தொடங்கியாய் விட்டது. என்ன வகை கேக் ( என்ன தமிழ் ) வாங்குவது, ஆடை எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதங்கள் பிள்ளைகளுக்கிடையில் விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்தது. பிள்ளைகளின் ஆசைகளுக்குள் தலை போட்டுக் குழப்பாமல் இருந்து கொள்வேன். சிலருக்குத் தங்கள் மூக்கை எங்கும் நுழைக்காமல் இருப்பதே முடியாத காரியம் என்பது வேறு விடயம். spiderman, batmaan இல் தொடங்கி இறுதியில் The incredible இல் வந்து நின்றது. தெரிந்தவர்களுக்குப் பரவாயில்லை. தெரியாதவர்களுக்கு என்ன இதெல்லாம் சின்னப் பிள்ளைச் சமாச் சாரங்கள் விட்டுத் தள்ளுங்கள். இறுதியில் பிறந்த நாள் காணும் பிள்ளையின் முடிவே இறுதியாக ஏற்றுக் கொள்ளப் படும். நம்ம சமத்துப் பிள்ளைகள் உலகத்தை வளைக்கத் தொடங்குகின்ற முதல் இடம்.

எவ்வளவு குதூகலம். என் பிறந்த நாள் நினைவுகளை அல்லது கனவுகளை (கனவுகள் தான் அதிகம் இருந்தது என்பது தான் உண்மை) எண்ணிப் பார்க்கின்றேன். குக் கிராமத்து வாழ்க்கை முறைகளுக்கு கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாடுவது எல்லாம் எவ்வளவு சுமையான விடயம் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்படித் தான் நானும் எனது பிறந்த நாளை கொண்டாட முடிவெடுத்த ஒரு பொழுது இன்றும் என்னால் மறந்து விட முடியாத பொழுதாய்ப் போனது. பள்ளிக் கூடத்தில் சக படிப்பாளிகளிடம் எல்லாம் பெரிதாகப் பீற்றிவிட்டு ( அதாங்க அப்பிடி இப்பிடின்னு காத்தாடி விடுறதுங்க) வீட்டிற்கு வந்தால்.... பிறந்த நாளாவது மண்ணாவது. பிறந்த நாளுக்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை. வீட்டில் என்ன நிலமையோ ஏது சங்கடமோ அது பற்றியெல்லாம் கவலைப் படுகிற நிலமையில் நான் இல்லை. எனது சில பிறந்த நாட்களைக் கொண்டாடி உற்சாகப் படுகின்ற அப்பா கூட மெளனமாக இருந்தது எனக்குத் தாங்கவில்லை.

அம்மாவிடம் மெதுவாக ஆரம்பித்த எனது அழுகை பெரிதாகிப் பெரிதாகி அப்பா காதுவரை கேட்கிற அழுகையாகி போனது. ஒரு குரலில் பயம் காட்டுகின்ற அப்பா அன்று பேசாமல் இருந்தபோது தான் எனக்கு ஒரு உண்மை பளிச்சீட்டது. பிறந்த நாள் பிள்ளையான எனக்கு அன்று எல்லா வகை சாம தான பேத தண்டைனைகளிலிருந்து விலக்கு என்ற உண்மை. பிறகு கேட்கவா வேணும். என் குறையை ஊருக்கே கேட்கச் சொல்லியழ என்ன அவசரத்துக்கு வைத்திருந்த பணமோ என்னவோ என் கைக்கு வர என் பிறந்த நாள் கேக் வாங்க நானே ஒரு மைல் தூரத்திலுள்ள கடைக்கு ...வலிப்புத்தான். நேரம் என்ன ? ...ஆக ஐந்து... ஐந்தரை தான்.... யாரைப் பிழை சொல்வது? ... இடையிடை கேக் சுகம் காட்டிய பெற்றோரையா? அல்லது வீட்டின் பொருளாதாரம் பற்றி படிக்காத என்னையா....?

அன்று பார்த்தா ... அப்படி யொரு மழை பெய்ய வேண்டும். வானமே இடிந்து விழுந்து போல பொத்துக் கொண்டு பெய்தது. அப்பிடி ஒரு மழை. வைகாசி மாதத்தில் அப்படி ஒரு மழை வருமா? ... மழை ஒன்றும் எனக்கு ஒரு பொருட்டல்ல.... அப்பிடி கரையக் கூடிய வெல்லக் கட்டியுமல்ல நான்... ஆனால் கையிலிருக்கும் கேக்.... பகீரதப் பிரயத்தனத்தில் நான் பிறந்த நாள் கொண்டாட ஆயத்தமாக ..... மழை கெடுத்துக் கொண்டிருந்தது.

நேரம் போய்க் கொண்டிருந்தது. போகப் போக இருட்டுவதற்குள் பிறந்த நாளக் கொண்டாட முடியுமா என்ற சந்தேகம். அதை விட பெரிய கேள்வி ஒன்று என்னைத் துளைத்துக் கொண்டிருந்தது. எனது வீர தீரப் பராக்கிரமத்தை நானே சோதித்துக் கொள்ளப் போகின்ற நிலமை எனக்கு வரப் போகின்றதா ?....என்று. வேறொன்றுமில்லை... நான் போகும் வழியில் தான பெரீய்ய்ய இடுகாடொன்று வருகின்றது. பகலில் அதைக் கடந்தாலே அந்தப் பக்கம் பார்க்காமலேயே மறு பக்கம் பார்த்துக் கொண்டு போகிற அளவிற்குத் துணிச்சல் இருந்தது.

இன்று பிறந்த நாளும் அதுவுமா ...மதுரைக்கு வந்த சோதனை ..எனக்கும் காத்திருக்க மழை சிறிது சிறிதாக குறைந்து வர தாவியேறினேன்.
மழைகால இருட்டு வேறு ... பயத்தில் நெஞ்சு தடக் தடக் அடிக்க இடுகாட்டைக் கடந்து கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு உருவம் குடையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தது. அப்பா.... எல்லாப்பயமும் போய் அப்பா பயம் வந்து குந்திக் கொண்டது. ஒரு கதையும் கேட்காது ஏறு என்ற ஒற்றைச் சொல்லுடன் என்னை யும் ஏற்றிக்கொண்டு வீடு வந்தார். அதே இடுகாட்டில் நான் பானை உடைத்து அவரை வழி அனுப்பி வைத்ததும் இன்னொரு நாளில் நடந்தது.

இப்போதெல்லாம் பிறந்த நாள் வருவது அப்படியொன்றும் ரசிக்கக் கூடியதாக இல்லை. பிறந்ததிலிருந்து சாதித்தது என்ன என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் மனம் கனப்பது போல சாதனைகள் கனப்பதாகக் காணோம். பத்தாததிற்கு டாக்டர் சொல்லும் கவனம் வேறு எண்ணிக்கை கூடிக் கொண்டு போகின்றது. இப்போ பிறந்த நாள் வருகின்றது என்பதே ஒரு மலைப்பாகத் தான் இருக்கின்றது. சின்ன வயதுப் பிறந்த நாள் தான் சுவாரஷ்யம் என்பது என் கருத்து . என்ன நான் சொல்வது....

No comments: