Tuesday, December 13, 2005

பூ இவ்வளோதானா.....?

இதை வாசித்து விட்டு நீங்கள் ப்...பூ... இவ்வளோதானா .... ? என்று பல்லை நெருடும் சத்தம் இப்போதே எனக்குக் கேட்கின்றது.

இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லாமல் விடுவதும் சரியில்லைதானே..... இனி கேட்பதும் கேட்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

உலகெங்கும் பனிக்காலத்தின் தாக்கத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் வைற் கிறிஸ்மஸ் கொண்டாடவென்று பனிக்குளிரில் விறைச்சாலும் வீறாப்பாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கை இந்திய நாடுகளிலோ திருக்கார்த்திகை திருவெம்பாவை என்று ஆண்டவனின் சிறப்புக்களைப் பாட அதிகாலை வேளையிலேயே பனிக்குளிரில் குளித்து வெடவெடத்துக் கொண்டிருக்கின்றார்கள். பத்தாக் குறைக்கு தேவர்களும் நீண்ட துயில் கலைந்து எழுந்து ஆண்டவனை தொழ ஆயத்தங்கள் செய்யும் காலமாம் இது.

தேவர்களுக்கு இக்காலம் அதிகாலை வேளை என்கிறார்கள். மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களுக்கு ஒர் நாளாம். கொடுத்து வைத்தவர்கள் . இருக்காதா பின்னே.... ஆறு மாதம் தூங்கி எழுந்தால் ..... ஒவ்வொரு இருபத்திநாலு மணித்தியாலத்துக்கும் ஒரு முறை தூங்கி எழுந்து வேலைக்குப் போய் ஏதோ செய்து கிழித்து விட்டு மூண்டு வேளையும் கட்டாயம் சாப்பிட்டு..... இந்தக் கஸ்ரம் அவர்களுக்கெங்கே தெரியப் போகின்றது.

தேவர்கள் இப்படி சோம்பேறித்தனமாக இருக்கிறதாலோ என்னமோ தான் எங்களால் அவர்களை இன்னும் பார்த்துப் பேச முடியாமல் இருக்கிறது போல.

இவர்கள் இப்படி என்றால் அசுரர்களில் சொல்லவே வேண்டாம். தூக்க்கத்திற்குப் பேர் போனவர்களெல்லாம் அவர்களில் இருக்கிறார்கள். இப்படி தேவர்கள் மேலுலகத்தில் வசிக்க கீழுலகத்தில் அசுரர்கள் வசிக்க இடையுலகத்தில் நாங்கள் மாட்டுப் பட்டது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று நான் நினைக்கின்றேன். இல்லாவிட்டால் மேலேயும் போகமாட்டாமல் கீழேயும் போகமாட்டாமல் என்ன வாழ்க்கை.

நாமிருக்கும் இடையுலகத்தை இடையுலகம் என்று அழைக்காமல் பூவுலகம் என்று ஏன் சொல்லுறம். இந்த ஆராச்சிக்குப் போய்த் தான் வந்தது இவ்வளவு வில்லங்கமும். மேலுலகத்தை மேலோகம் அல்லது தேவலோகம் என்று சொல்லிறம். கீழுலகத்தை கீழோகம் அல்லது பாதாளலோகம் என்று சொல்வதைப் போல மனிதர் வாழும் உலகத்தை இடையுலகம் அல்லது மனிதலோகம் என்று சொல்லலாம் தானே. அதை விட்டிட்டு ஏன் பூலோகம் என்று அழைக்கின்றார்கள்.

பூ உலகம் என்று அழைப்பது போல ஏன் காய் உலகம் கனி உலகம் என்று யாரும் அழைக்கவில்லை. ரொம்ப்பத்தான் கடிக்கிறேனோ ...?

சம்பூர்ணம் என்றால் நிறைவாக உள்ளது என்று தானே பொருள். அப்ப சொல்ல வந்ததை நிறைவாகத் தானே நானும் சொல்லவேணும்.

சம் என்றால் நிறைவு. பூ என்றால் உருவாக்கம் அல்லது உருவானது என்று பொருளாகும். அப்படியென்றால் பூலோகம் என்றால் உருவாகும் லோகம் அல்லது உருவாக்குகின்ற லோகம் என்று தானே பொருள் படும். அதாங்க நீங்க நினைத்ததை நான் சொல்லி விட்டேனா ...? யாவும் உருவாகின்ற லோகம் அல்லது யாவற்றையும் உருவாக்குகின்ற லோகம். அப்பாடா... இனியும் ஏன் காய் லோகம் கனி லோகம் என்று பெயர் வைக்கவில்லை என்று கேட்கமாட்டீர்கள் தானே.

இதுதான் இந்த லோகத்திற்கு சரியான பெயர் என்று அடித்துச் சொல்வேன். ஏன் இதுதான் சரியான பெயர் என்று சொல்கிறேன் என்றால் இங்கு தானே எல்லாம் உருவாகின்றது. வேதங்கள் ,ஆகமங்கள், மதங்கள், அரசியல், தத்துவம், அரசு ,அணுகுண்டு இத்தியாதி... இத்தியாதி.

மனிதன் தான் கடவுள் என்று நான் சொல்வேன். ஆக்குவதற்கு சோதனைக் குளாயைக் கண்டுபிடித்தான். அழிப்பதற்கு அணுகுண்டைக் கண்டு பிடித்தான். காப்பதற்கு ஆர்மியைக் கண்டு பிடித்தான். மறைத்தலுக்கு
இரசாயன, உயிரியல் ஆயுதங்களைக் கண்டு பிடித்தான். அருளலுக்குப் பஞ்சத்தை கண்டு பிடித்தான். அப்பத்தானே அழுகின இறைச்சியையும் பழுதான கோதுமையையும் நாடு கடத்தலாம். இது போதாதென்று......... உருவாக்கியவன் ஒருவன் என்று சொல்லிக் கொண்டே நிறையவே உருவாக்கியவர்களை உருவாக்கி உருவாக்கி பூலோகத்தை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்கிறோம். என்ன தலை சுத்துகின்றதா...?

மனிதர்கள் ஒரே அச்சமைப்பில் இருந்தும் தட்ப வெப்ப நிலைகளால் தோல் நிறம் மட்டும் மாறிப் போக... பிடிச்சுக் கொண்டான் மனிதன். கறுப்பு வெள்ளை சிகப்பு சொல்லி குடுமிச் சண்டை ஜோரா நடக்கின்றது. இது என்னவோ உண்மைதானே...... இல்லை என்றால் உலகெங்கும் இருக்கின்ற மரஞ் செடி மலை மடு கடல் எல்லாம் ஒரே நிறத்தில் இருக்க மனிதரில் மட்டும் ஏன் இவ்வளவு நிற வேறுபாடு என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. என்னவோ போங்க .... எல்லாவற்றுக்கும் எப்போதும் காரணம் இருந்து கொண்டுதான் இருக்கும்.


சரி இது உலகம் என்றால் ஊருக்குள் என்ன நடக்கின்றது. ஒரே நிறத்துக்குள் எப்படி உயர்வு தாழ்வு பார்ப்பது ... உருவானது சாதி. உருவாக்குகின்ற லோகம் அதுதான் பூலோகம் அல்லவா?

மெய்ஞானம் விஞ்ஞானம் எல்லாம் இங்கு தான் உருவானது. அம்பு வில்லும் அண்குண்டும் இங்கு தான் உருவானது. அம்பு வில்லுடன் அடிபட்ட மனிதன் அணு குண்டு போட்டு அடித்துப் பார்க்கின்றான். புதுப் புது நோய்களுக்கு புதுப்புது மருந்துகள் அல்லது புதுப் புது மருந்துகளுக்கு புதுப் புது நோய்கள். ஆமாங்க உண்மைதாங்க.... புதுப் புது நோய்கள் உருவாகின்ற இடங்களைப் பாருங்க . வறுமைப் பட்ட ஆசியாவும் ஆபிரிக்காவும். மருந்து கண்டு பிடிக்க ஆராய்ச்சி நடக்கலாமில்லே.


எது எப்படியோ... பூலோகம் என்பது உருவாகும் அல்லது உருவாக்கும் இடமல்லவா .... ? அப்படித் தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் மனிதர்களை இயற்கையாய் உருவாக்கியது போதாதென்று
இப்போ செயற்கை முறையில் கூட ........ ஏதாவது உருவாக இல்லை என்றால் உருவாக்க வேண்டும். கடவுள்களையும் தேவர்களையும் உருவாக்கிய அசுரமனிதர்களுக்கு இதுவொன்றும் பெரிய விடயமல்லவே... ப் ... பூ வென்று ஊதிவிடக் கூடியவிடயம் தான்.

இப்போ முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். நீங்கள் பூ இவ்வளவு தானா என்பதும் பல்லை நெருடுவதும் எனக்கும் கேட்கவே செய்கின்றது.

1 comment:

Anonymous said...

அட .. ஆமா