Friday, December 23, 2005

'நான்' வாழ்க.....

என்னடா இது ஒரு கிருக்குப் பிடித்த மனிசனாய் இருக்கிறானே... உலகத்திலேயே முதல் முதல் நான் வாழ்க என்று கோஷம் போட்ட முதல் ஆளாய் இருப்பதாய் யோசித்து நீங்கள் மண்டை காய்வது எனக்கு விளங்குகின்றது. இருந்தாலும் என் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் நினைப்பது சரியா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்திலேயே அதிகம் உச்சரிக்கப் படுற வார்த்தை எது தெரியுமா? உச்சரிக்கப்படுகின்ற வார்த்தை என்பதுடன்.... எண்ணங்களை உருவாக்கின்ற வார்த்தை..... அதனைச் சுற்றிச் சுற்றியே ஆயிரம் சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்ற வார்த்தை எதுவென்று கேட்டால் .... என்ன சொல்வீர்கள்?

உங்களைக் கேட்டால் அன்பு, காதல்,கடமை என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றை அடுக்கிக் கொண்டே போவீர்கள். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தத்தை ஏற்படுத்துகின்ற மூலம் ' நான் ' தான். இந்த நான் இல்லையென்றால் இங்கு எதுவுமே கிடையாது. அன்பு இல்லை.... காதல் இல்லை...... பாசம் இல்லை. ஏன் ... ? இந்த உலகத்தில் பேசப்படுவதற்கு எதுவுமே இருந்திருக்காது. அப்போ மனிதர்கள்....ஆமாம் அவர்கள் இருந்திருப்பார்கள். பல்லாயிரக்கணக்கான விலங்குகளில் ஒன்றாக கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒன்றாக அவர்களும் வாழ்ந்து விட்டுப் போயிருப்பார்கள். விலங்குகளிற்கும் தாவரங்களிற்கும் இருக்கும் வாழ்க்கை முறை போல ஏதோ.. ஏதோபோல ஒரு வாழ்க்கை முறை இருக்க அதை வாழ்ந்து விட்டிருப்போம்.

ஆறறிவு நிறைந்தவன் மனிதன் என்று நாம் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாலும் அந்த ஆறாவது அறிவு சுத்திக் கொண்டிருக்கும் மூலப் பொருள் இந்த 'நான் ' தான். இந்த நான் இருந்திருக்கவில்லை என்றால் உலகத்தில் எதுவும் இருந்திருக்காது. வளர்ச்சிகள், உயர்ச்சிகள் ஏன் வீழ்ச்சிகள் கூட. மனிதன் குழந்தையாய்ப் பிறந்த பொழுதிலிருந்தே இந்த நான் தட்டிக் கொடுக்கப்படுகின்றது. இந்த நான் ஐ மற்றவர்கள் தட்டிக் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இங்கு காரியம் அனைத்தும் இயற்றப் படுகின்றது. தட்டிக் கொடுக்க கொடுக்க காரியத்தில் வேகம் ஏற்படுகின்றது... கூர்மை ஏற்படுகின்றது. மற்றைய நான்களில் இருந்து ஒரு நான் வேறு பட்டு நிற்க வேண்டுமென்றால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறக்க சாதனைகள் பிறக்கின்றன. சாதனைகள் கண்டுபிடிப்புகளாக மாற்றமடையும் பொழுது மனித வாழ்க்கையில் வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. வாழ்க்கை இலகுவாக இலகுவாக வழி வகுத்தவர்கள் புகழப் படுகின்றார்கள். புகழ் கிடைக்கக் கிடைக்க இந்த நான் வெகுவாக திருப்திப்பட்டுக் கொள்கின்றது.

ஒருவர் நல்லவராக இருக்கும் பொழுது மற்றவர் கெட்டவராக நடந்து கொள்வதும் இந்த நான் ஐத் திருப்திப் படுத்த அவரவர் எடுத்துக் கொள்ளும் மாறுபட்ட வழி வகைகளினாலேயாகும். இல்லை என்றால் காந்தியும் ஆபிரகாம் லிங்கனும் இருந்த மண்ணில் ஒரு ஹிட்லரும் முசோலினியும் தொன்றியிருக்கிறார்களே.

எது எப்படி இருந்த போதும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கின்ற நான்களே இன்றைய உலகின் சிறப்புக்கும் சீரழிவுக்கும் காரணமாக இருக்கின்றார்கள். உலகத்தைப் படைத்தவர் யாராயிருந்தாலும் இந்த உலகத்தை ஆக்கியவர்கள் மனிதர்களே. மனிதர்கள் எதற்காகப் பிறந்துள்ளோம் என்று ஒரு கேள்வி கேட்டால் ... எத்தனை பேர் எத்தனை பதில் சொன்னாலும் .... அவை அத்தனையும் வாழ்க்கை என்பதற்குள் தான் அடக்கம். முற்பிறப்பு மறு பிறப்பு என்று எதனையும் ஆதார பூர்வமாக கண்கூடாக அறிந்து கொள்ளாத இந்த நிலமையில் இது தான் உண்மை. இந்த வாழ்க்கையை ... வாழ்தலை இலகுவாக்கிய இந்த உணர்வு மனிதர்களுக்குள் இருக்கின்ற நான்களே. வாழ்க்கையின் ஆதாரமும் இதுவேதான். இங்கு பேசிக்கொண்டிருக்கும் நானும் நீங்களும் கூட .... நான் அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதெல்லாம் வேறு எதற்காக? என்ன ஒரு உலகக் கடமை இருக்கின்றது என்று யாரும் சொல்லக் கூடுமோ? இந்த நான்கள் இருந்தால் தால் நாம் ஆறறிவு உள்ள மனிதர்கள். உலகம் உலகமாக இருக்கும். ஆகவே நான்கள் வாழ வேண்டும். மனிதர்கள் இருக்கும் வரை நான்கள் வாழும்.

இந்த நான் கள் வாழ்கவென்று எல்லோரும் ஒரு முறை ஓ ...... போடுவோமா?

2 comments:

Suka said...

நன்றாகச் சொன்னீர்கள். சுயம் உணராமல் மற்றதெல்லாம் தெரிந்து என்ன பயன்.

வாழ்த்துக்கள்
சுகா

இளந்திரையன் said...

நன்றி சுகா

அன்புடன் இளந்திரையன்