Thursday, December 29, 2005

போராட்டம் என்பதற்கு வரை விலக்கணம் உண்டா?

ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கும் உரிமைக்கும் சுய கெளரவத்துக்குமான போராட்டம் இன்று உலகளாவிய ரீதியில் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக கடந்த மூன்று நான்கு தசாப்த காலத்தில் போராட்டம் கூர்மை பெற்று இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் அரசியல் சமூக வாழ்வியல் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் கவன ஈர்ப்புப் பெற்றுள்ளது.

இனங்களுக்கிடையிலான மோதல் என்ற அளவில் ஒரு நாட்டின் சட்ட வரையறைகளுக்குள் அடக்கிவிட முடியாத வகையில் அதன் ஞாயாதிக்கத் தனமைகளின் குணாம்சங்கள் சர்வதேச சட்டவரைபுகளுக்குள் ஒழுகுவனவாகக் காணப்படுகின்ற காரணத்தாலேயே இன்று சர்வதேச நாடுகள் பலவும் தலையுடும் ஒரு நிலமை காணப்படுகின்றது. இலங்கையில் வாழும் இனங்களில் தமிழர்களும் தனியான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பிரதேசத் தொடர்ச்சியான வாழ்விடம் என்பவற்றைக் கொண்ட தனியான இனம் என்பது சர்வதேச நாடுகள் அனைவற்றினாலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நிலமையாக இன்று காணப்படுகின்றது.

ஆகவே ஈழத் தமிழர் சுதந்திரப்போராட்டம் (அதிக பட்சம்) அல்லது உரிமைப் போராட்டம் (குறைந்த பட்சம் வாழ்வியல் உரிமைகள்) சரியானதும் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியதும் என்பதும் ஒத்துக் கொள்ளப் பட்டுள்ளது.

இவ்வளவில் இதை வரலாற்றுப் பின்னணிச் சுருக்கமாகக் கொண்டு போராட்டம் செல்லும் திசை, முன்னெடுக்கப் படும் நடவடிக்கைகள், போராட்டத்தை வழி நடத்தப்பட்டவர்களாக அறியப்பட்டவர்கள் பற்றியும் அது சார்பாக அல்லது எதிர்ப்பாக மொழியப் படும் வாதப் பிரதி வாதங்கள் பற்றியும் இன்று பலதரப் பட்டவர்களாலும் பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,இணையத் தளங்கள் என்று இன்னோரன்ன வழிகளிலும் அலசி ஆராயப் பட்டுக் கொண்டிருக்கின்றது. ஊடகங்களில் மிகவும் கொதி நிலையில் இருக்கக் கூடிய விவாதப் பொருள்களாகவே ஈழத்தமிழர்களும் அவர்கள் போராட்டமும் இருந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையும் அதற்கான தேவை இருக்கின்றது என்பதையும் ஒத்துக் கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கலாம்.

அடுத்ததாக போராட்டம் முன்னெடுக்கப் படும் வழிமுறைகள் மற்றும்
முன்னெடுப்பவர்கள் பற்றிய கருத்துக்கள்.

சுதந்திர இந்தியாவின் விடுதலைக்காக நடந்த போராட்டம் நம் அனைவருக்கும் நன்கு அல்லது ஓரளவுக்கேனும் தெரிந்த விடயம் என்ற வகையில் அதையே ஒரு உதாரணமாகப் பார்க்கலாம்.

ஒரு சுதந்திரப் போராட்டம் எவ்வகையில் ஆரம்பிக்கக் கூடும் அல்லது எவ்வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று ஏதாவது வரைவிலக்கணம் இருக்கின்றதா? சுதந்திரப் போராட்டம் என்பது மட்டும் அன்றி உலகின் மக்களின் நலனுக்காக அல்லது எதிராக நடைபெற்ற அல்லது நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற எந்தப் போராட்டமும் எந்தவொரு வரைவிலக்கணத்துக்குள்ளும் கட்டுப்படாது அல்லது கட்டுப்படமுடியாத தன்மை வாய்ந்தனவாகவே காணப் படுகின்றன. முதலாளித்துவச் சிந்தனாவாதப் புரட்சிகளோ இல்லை சோஸலிஷ சமதர்மக் கோட்பாடுகளை உள்வாங்கிய புரட்சிகளோ கூட ஒன்றுக்கொன்று வேறுபட்டதும் வித்தியாசமானதுமான சந்தர்ப்பங்களிலும் காரண காரிய நிலக்களன்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய உபகண்டத்தின் சுதந்திரத்துக்கான போராட்டம் கூட பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தள நிலமைகளில் வாழ்ந்த மனிதர்களால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு என்று தான நாம் கூறக் கூடும். அண்ணல் காந்திஜியின் தலமையில் இறுதி வடிவம் பெற்று நிறைவு கண்டது என்பதற்கு அப்பால் முழுச் சுதந்திரப் போராட்டமும் காந்திஜியின் தலமையிலும் ஸ்தாபனக் காங்கிரசின் முயற்சியிலும் பெற்றுக் கொண்டது என்பது சரியான கூற்றாகவே அமையாது. வாஞ்சி நாதன் முதற்கொண்டு நேதாஜிவரை இராணுவ நம்பிக்கை கொண்ட அணுகு முறையும் சத்தியாக்கிரகிகளின் அகிம்சா தத்துவமும் கலந்த ஒரு கலவை வடிவமே இந்தியச் சுதந்திரப் போராட்டம் ஆகும்.

இதிலிருந்து போராட்டங்கள் அந்த அந்தக் காலங்களில் இருந்து பெறக் கூடிய வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டதாகவே வடிவம் பெறுகின்றது. அதே நேரம் எதிரியானவனின் நம்பிக்கையும் செயற்பாடும் கூட போராட்டத்தின் வடிவத்தையும் திசையையும் தீர்மானிக்கின்றது.

அந்த வகையில் ஈழப் போராட்டமும் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னால் பல வடிவங்களில் பல தலைவர்களாலும் முன்னெடுக்கப் பட்டு இன்று இத்தகைய நிலமையிலும் வடிவத்திலும் உருக் கொண்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இதன் வடிவமும் போராட்டக் களமும் மாறுபட்டிருக்கின்றது. அகிம்சா வழியில் முன்னைய தலைவர்களால் முன்னெடுக்கப் பட்ட போராட்டம் குறிக்கப் பட்ட இலக்கை அடைந்து விடமுடியாத நிலமைகளான தடைக்கற்களை புரட்டிப் போடும் திறனாக, நம்பிக்கையாக ஆயுதப் பாவனையை முற்று முழுதாக வரித்துக் கொண்டுள்ளது. அதனாலேயே உள் முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் அதிக பட்சமான இரத்தக் கறைகளைப் போர்த்திக் கொண்டுள்ளன. மிகவும் வருந்தத் தக்கதும் மனித நேயங்கொண்டவர்களால் மிகவும் வெறுத்து ஒதுக்கக் கூடியதுமான இந்த நிலமைக்கு மாற்றுத் தான் என்ன?

கொடுக்கப் படக் கூடிய மாற்றுத் திட்டம் ஒன்று இருக்குமானால் அவ்வகையான மாற்றுத் திட்டமும் சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தையோ வீரியத்தையோ மழுங்கடிக்கக் கூடியவாறு இருத்தலாகாது என்பது எப்போதும் எமது மேலான கவனத்தில் கொள்ளப் படவேண்டியதாகும்.

ஈழத் தமிழ் மக்களுக்கான மேலான சுதந்திரம் கிடைப்பதற்கான வழிவகைகளை அடைக்கக் கூடிய எந்தக் கருத்துக்களையோ அல்லது செயற்பாடுகளையோ இந்தத் தருணத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையிலும் சூழ்நிலமையிலும் ஈழத் தமிழ் மக்களில் பெரும் பான்மையோர் இல்லை என்பது தான் யதார்த்தம். அதற்காக மனித உரிமை மீறல்களையோ அராஜகங்களையோ ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதோ ஆமோதிக்கிறார்கள் என்பதோ இதன் பொருளன்று.

ஆனால் சுதந்திரம் கிடக்கும் வரை சகித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பது உணரப் பட்டுள்ளது என்பதும் உண்மையான விடயங்களாகும். சுதந்திரத்துக்கான முகூர்த்தம் வரும் வரை முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்ட ஜின்னா செய்தது போலவோ அல்லது சுதந்திரத்தின் பின்னான காலங்களில் தமிழ் நாடு பஞ்சாப் போன்ற மொழி வழி முன்னெடுக்கப் பட்ட பிரிவினை முயற்சிகல் போலவோ அல்லது இன்றும் தொடரும் மிஸோரம் , நாகலாந்து , காஸ்மீர்ப் பிரதேச மக்கள் சுதந்திரப் போராட்டக் கால கட்டத்தில் நடந்து கொண்டது போலவோ ஈழத் தமிழ் மக்களும் உயரிய நோக்கத்துக்கான சகிப்பு நிலமையில் நடந்து கொள்கின்றார்கள்.

சுதந்திரத்தின் பின் தங்களுக்குத் தேவையான அரசியல் வாழ்க்கை முறையை ஈழத்தமிழ் மக்களே தெரிவு செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். தங்களுக்குப் பொருத்தமான தலமையைத் தீர்மானிப்பதில் மக்களை விட தகமையும் உரிமையும் உள்ளவர்கள் வேறு யாராகத்தான் இருக்க முடியும்.

சுதந்திரத்துக்கான போராட்டக் கால கட்டங்களில் ஏற்ற இறக்கங்களும் பிறழ்ச்சிகளும் இருக்கும் என்பதிலும் சுதந்திரத்துக்கான விலை அதிகம் இருக்கும் என்பதிலும் ஈழத்தமிழ் மக்களில்ப் பெரும்பான்மையோர் மிகவும் தெளிவாக இருக்கும் அதேநேரத்தில் ஈழத் தமிழ் மக்களின் பாலும் அவர்தம் போராட்டத்தின் பாலும் அக்கறையும் கரிசனையும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களும் அவ்வாறே இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்ற எதிபார்ப்புடனும் இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

No comments: