Monday, December 26, 2005

சுனாமி-அழிவின் அலை ஒரு துயரம்

சரியாக இன்றுடன் ஒரு வருடம். உலகையே உலுக்கிப் போட்ட துயரத்தின் ஓராண்டு நீட்சி. இலடசக்கணக்கான உயிர்களையும் கோடிக் கணக்கான மனங்களையும் கொன்று போட்ட நாளின் வருடப் பூர்த்தி. கண்களின் முன்னாலேயே உயிராய் உறவாய்ப் பழகிய மனிதர்களை மரணத்தின் கரங்களில் வாரிக்கொடுத்து ஒரு வருடமாகின்றது.

இறந்து பட்டவர்கள் போக இதயம் துண்டு பட்டவர்கள் இன்றும் மீள முடியா இருளில் துவண்டு போயிருக்கின்றார்கள். அன்னையை, தந்தையை ,பிள்ளையை, உறவை, சுற்றத்தை என்று இழப்பின் பட்டியல் நீண்டு செல்லும் வேளையில் ஆறுதல் கூறும் வார்த்தைகளும் வரண்டு தான் போகின்றது.

உலகின் மூலை முடுக்கெங்கும் நினைவுச்சுடர்களும் மலர்த் தூவல்களும் இதயத்தில் கொப்பளித்த குருதித்துளிகளுமாக நினைவஞ்சலியைச் செலுத்தி நிற்கின்றோம். ஓராண்டு வலியின் கொடுமையைக் கனத்த இதயமும் கண்ணீர் பனித்த கண்களுமாக உயிர் பிழைத்த அதிர்ஷ்டத்தையும் உறவுகளை இழந்த துரதிர்ஷ்டத்தையும் மீண்டும் ஒரு முறை விவரணமாக்கி நினைவு கூர்ந்ததையும் நாம் பார்த்தோம்.

வலியும் வேதனையும் மனித வரலாற்றின் காலடியைத் தொடரும் நிழல் என்றாலும் உலகெங்கும் துடித்தெழுந்த மனிதம் அங்கிங்கெனாதபடி கண்துடைத்து தோள் தட்டி ஆறுதல்ப் படுத்திய அற்புதமும் இங்கு தான் விளைந்தது.


இன்னும் எத்தனை அழிவின் அலைகள் பூமியைத் துடைத்துச் செல்ல முயன்றாலும் ஆயிரம் ஆயிரம் கரங்கள் தோள் கொடுக்கவும் துயர் துடைக்கவும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் என்பதே வாழ்க்கை என்பதை அற்புதமாக்கி நிற்கின்றது.

எங்களுடன் வாழ்ந்து இன்றும் எங்கள் நினைவுகளில் வாழும் அந்த அற்புத உயிர்கள் அனைவருக்கும் உலகிலுள்ள அனைத்து மக்களுடன் சேர்ந்து எனது இதய அஞ்சலிகளும் உரித்தாகின்றது.

No comments: