Saturday, December 24, 2005

அவள் போகின்றாள்

அவள் போவதென்பது எப்போதோ தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அந்தக் கணம் நிகழ்கையில் மனம் கனத்துத்தான் போய்விடுகின்றது. இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையும் அதைத் தடுத்து நிறுத்த முடியா கையாலாகா நிலமையும் சூழ்நிலையை ரொம்பவே அசெளகரியத்துக்குள்ளாக்கி விடும். மூன்று வருடத் தாம்பத்தியம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. மூன்று வருடத்துள்... விவாகரத்து வரை வந்தாகி விட்டது. காரியங்கள் தான் எத்தனை வேகமாக நடந்தேறுகின்றன.

நேற்றுப் போல இருக்கின்றது. அவள் வந்ததும் ... அவர்கள் திருமணம் நடந்ததும். எங்கே பிரச்சனை ஆரம்பித்தது என்றே விளங்காத நிலமையில் இத்தனையும் ஆகிவிட்டது. அவர்கள் வாழ்க்கை பிரச்சனையுடன் தான் ஆரம்பமானதாகத் தோன்றியது. ஆரம்பமே சரியாக அமையாததால் தானோ என்னவோ எல்லாமே வேகவேகமாக முடிந்து விட்டது. சீர் வரிசையில் குறை வைத்ததாகவே அம்மாவிற்கும் அவளுக்கும் இடையில் முதல் பிரச்சனை வேர் விட்டது. சீர்வரிசை எதுவும் வேண்டும் தேவை இல்லாத சம்பாத்தியமும் சேமிப்பும் அவர்களிடம் இருந்தும் கெளரவத்திற்காக கேட்க வேண்டியிருந்தது. அப்படித்தான் அம்மா அவனிடம் சொல்லியிருந்தாள்.

மூன்று பெண்களின் கரையேற்றத்தின் பின்னால் நிகழ்ந்த அவனுடைய திருமணப் பேச்சு ஆரம்பத்திலேயே தடல்புடல்ப் பட்டது. ' உன் படிப்புக்கும் வசதிக்கும் பெண்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் பார்' என்று அம்மாவால் சதா நினைவூட்டப் பட்டது. முப்பது வயது நிறைந்த அவனின் உணர்வுகளோ ஆசைகளோ அங்கு கணக்கிலெடுக்கப் படவில்லை. அவர்களின் குடும்பக் கெளரவம் நிலை நிறுத்தப் படுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே அவர்கள் கண்களுக்கு அவன் தென்பட்டிருக்க வேண்டும். அவ்விதமாகவே காரியங்கள் கனகச்சிதமாக அரங்கேறின. குடும்பப் பின்னணி படிப்பு வசதி என பலதரப்பட்ட சுற்றுக்களிலும் பெண்கள் அலசி ஆராயப் பட்டனர். இறுதிச் சுற்றில் ஜெயித்து இந்த வீட்டிற்கு வலது கால் எடுத்து வைத்து வந்தவள் தான் இதோ வெளியேறப் போகின்றாள்.

ஒரு வருடம் பிரிந்திருந்து பார்த்தும் சரிவராமல் போகவே சட்டப்படியும் பிரிந்தாகி விட்டது. கடைசி கடைசியாக தனது உடமைகளை எடுத்துப் போக அவன் அனுமதியுடனேயே அங்கு வந்திருந்தாள். அவள் அங்கு வருகிறாள் என்று அறிந்தவுடனேயே அவளிடம் இருந்து அவனைக் காக்கவும் அவளைக் கண்காணிக்கவும் ஆபீசிற்கு அரை நாள் லீவு போட்டு விட்டு தங்கையும் கூடவே வந்து நிற்கின்றாள். அம்மாவென்றால் அவள் முகத்தில் முழிப்பதே பாவம் என்பது போல தன் அறையே கதி என்று கிடக்கின்றாள். தங்கையின் ஆறுமாதக் கைக்குழந்தயின் 'ங்கா ' என்ற ஒலிச் சிமிட்டல்கள் தவிர்த்து வீடு ஒரு மோனத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

அவனைப் பொறுத்த அளவில் அந்த சம்பவத்துடன் ஒட்டாத ஒரு பார்வையாளனாகவே வைக்கப்பட்டிருந்தான். வாழ்க்கை பற்றிய அவன் கற்பிதம் அங்கு நிறைவேறாக் கனவாகவே அமைந்த வகையில் காரியங்கள் அதன் அதன் போக்கிலேயே நடை பெற்றுக் கொண்டிருந்தன. அவன் வாழ்க்கை யார் யார் கையிலோ பொம்மையாகிப் போன ஆதங்கத்தில் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.

ஆசாரமான அல்லது கட்டுப் பெட்டித்தனமான வாழ்க்கைச் சூழலில் காலடி எடுத்து வைத்தவுடனேயே தான் மிகவும் ஏமாந்து போனதாக அவளே ஒரு முறை அவனிடம் சொல்லியிருந்தாள். புருஷனுடன் மட்டுமே ஒன்றிய வாழ்க்கை பற்றிய கற்பனையுடன் வந்திறங்கிய அவளுக்கு அவன் அம்மா தங்கைகளுடன் கூடிய சட்டதிட்டங்கள் நிறைந்த அக்குடும்பத்தின் வாழ்க்கை முறை அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் அதீத மரியாதையை எதிர்பார்த்த மாமியாரும் அனுசரணையை எதிர்பார்த்த மருமகளும் அது கிடைக்காத போது இரு துருவங்களாகிப் போனார்கள். இருவருக்கும் இடையில் அகப்பட்ட அவன் இரண்டு பேருக்கும் வேண்டாதவனாகிப் போனான். முதுகெலும்பில்லாத கோழை என்று மனைவியாலும் பொண்டாட்டிதாசன் என்று தாயாராலும் பழிசுமத்தப்பட ..... இரண்டு பேருக்கும் நடுவில் அகப்பட்டு பேந்தப் பேந்த முழித்ததென்னவோ அவன் தான்.

அம்மாவின் மனதையும் நோகவிடாமல் அவள் மனதையும் காயப் படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல அவன் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் என்னவோ அவனுக்குக் கை கொடுக்கவில்லை.

அவளை விட்டுப் பிரிதல் என்பது, நிச்சயமாக அவனுக்குச் சந்தோசம் கொடுக்கப் போவதில்லை என்பதை அவன் நிச்சயமாகவே அறிந்திருந்தான். அதே போல அவனுடன் கூடிய வாழ்க்கையில் புறக் காரணிகளைத் தவிர்த்துப் பார்க்கும் போது குறைகளை விட நிறைகளே நிறைந்திருந்ததை இந்த ஒரு வருட பிரிவுக்காலத்தில் அவள் நிறையவே சிந்தித்து அறிந்திருந்தாள். தன்னைப் போக வேண்டாம் என்று மறித்து விட மாட்டானா ?என்ற ஒரு நப்பாசையும் அவள் உள்ளத்தினுள்ளே ஊடுருவி நின்றதையும் அவள் அறிந்திருந்தாள். அந்த நப்பாசையின் தூண்டுதலால் தான் தன் உடமைகளை எடுப்பது என்ற போர்வையில் அவள் அங்கு வந்திருந்தாள்.

வரும் போதே அங்கு நந்தி மாதிரி வந்திருந்த அவன் தங்கையை அவள் கவனித்து விட்டிருந்தாள். இவற்றையெல்லாம் பெரிசு படுத்தும் ஒரு மன நிலையில் அவள் அன்றிருக்கவில்லை. அவன் என்ன செய்யப் போகின்றான் என்பதை அறிவதிலேயே அவள் கருத்தாகவிருந்தாள். வேண்டுமென்றே அவன் கன்ணில் படும் வகையில் தன் நடமாட்டங்களை வைத்துக்கொண்டாள். அவனைப் பார்க்கும் போது பல வேளைகளில் பாவமாகவும் சில வேளைகளில் கோபமாகவும் இருந்தது.

தன் வாழ்க்கை என்பதை தனியாகப் பார்க்கமுடியாத என்னவொரு ஆண்பிள்ளை என்றே அந்தக் கோபமும் இருந்தது. தாய் சகோதரிகள் என்ற தடைகளைக் கடந்து பிரிந்து வந்தான் என்றால் என்னவொரு அழகிய வாழ்க்கை அவர்களுக்காகக் காத்திருக்கின்றது என்றே அவள் சிந்தித்துப் பார்த்தாள்.

முப்பது வருட காலம் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயையும் தன்னுடன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட சகோதரிகளையும் தூக்கி எறிய முடியாத ஒரு தளையில் அவன் கட்டுண்டு கிடப்பதை அவளால்ப் புரிந்து கொள்ள முடியவேயில்லை.

வாசலில் நிழல் ஆடியதை உணர்ந்து தலையுயர்த்திப் பார்த்தான். நிலைக்கதவைப் பிடித்தபடி அவள் நின்றிருந்தாள். என்ன என்பதைப் போல அவளைப் பார்த்தான்.

"ஒரு டாக்ஸி பிடித்துத் தர முடியுமா? " பலகீனப் பட்ட ஒரு குரலில் அவள் கேட்டாள். அக்குரல் அவளுக்கே அன்னியமாக இருந்திருக்க வேண்டும். எதையும் ஆராய்ந்து கணீர் என்று பேசக் கூடிய அவள் குரலா அது என்று நினைத்துப் பார்த்தான். தன்னைப் போலவே இப்பிரிவு அவளையும் மிகவும் பாதித்திருப்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அவன் மேல் அவள் கொண்டிருந்த பிரியத்தையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். ஒரு ஆதுர்யத்துடன் அவளை இறுதியாகப் பார்த்தான். அவள் கரிய விழிகளில் நீர் திரையிட்டிருக்க அவன் கன்களை ஊடுருவி அவள் எதையோ தேடினாள்.

'டாக்ஸிதானே .. நான் கோல் பண்ணுகின்றேன் ' என்ற அவன் தங்கையின் குரல் கேட்டதும் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவள் உள்ளே சென்று விட்டாள். கடைசி கடைசியான தன் முயற்சியையும் தோற்று விட்டதான அயர்சியில் அவளிடம் இருந்து பெருமூச்சொன்று விடை பெற்றுக்கொண்டது. இதற்கு மேலும் பெண்னான அவளால் எப்படி தன்னை வெளிப்படுத்த முடியும் என்று அவள் அறியாதிருந்தாள்.

அவன் மனதினுள்ளே அவள் மேல் ஏற்பட்ட கழிவிரக்கமே முழுவதுமாய் நிறைந்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழந்திடவே அவன் மனம் இப்பொழுதும் ஆசைப்பட்டது. அவனுடைய ஒரு சொல்லுக்காக அவள் காத்திருப்பதும் அவனுக்குத் தெளிவாகவே புரிந்திருந்தது.

இரண்டு வருட இடைப்பட்ட வாழ்க்கையில் அவள் பட்ட துன்பத்தை மீண்டும் அவளுக்குக் கொடுப்பதற்கு அவன் மனம் ஒப்பாமல் இருந்தது. டாக்ஸி செல்லும் போது அவள் பார்வையைத் தவிர்ப்பதற்காக அவன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். அங்கும் ஒரு ஒற்றைக்குருவி ஓலமிட்டபடி....

No comments: