Sunday, December 25, 2005

விடி வெள்ளியும் கிறிஸ்து ராஜாவும்

இன்று கிறிஸ்மஸ் நாள். லீவு வுட்டாங்களா சும்மா அக்கடான்னு இருந்து யோசிச்சுக்கிட்டிருந்தேன். யோசிக்கிரேன்னு சொன்னதும் சும்மானாச்சும் நமுட்டு சிரிப்பு சிரிக்கிரீக. உலகத்து மனுசங்க துன்பமெல்லாம் அவரே ஏத்துக்கிட்டு மனுசங்க நல்லா வாழணும்னு பிரயாசைப் பட்ட தேவன் பிறந்த நாளு. எல்லார் மேலும் அன்பாய் இருப்பது எப்பிடீன்னு கத்துக்குடுத்து வாழ்ந்து காட்டியவரு. உன்னைப் போல அயலவனையும் நேசிச்சா ஏற்ற இறக்கமோ துன்ப துயரமோ வாராதுன்னு போதிச்ச மஹான் பொறந்த நாள்.

உலகம் முச்சூடும் மகிழ்ச்சியோட கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. விடிவெள்ளி வழிகாட்ட மூவேந்தரும் வந்து வழிபட்ட அவதார புருஷன் அவதரித்த நாள்.


ஆனா இப்போ நாமெல்லாம் அவர் கத்துக் கொடுத்தது எல்லாத்தையும் தூக்கி கடாசிப்பிட்டு வெறுமனே கொண்டாட்டத்தை மட்டும் கொண்டாடிக் கிட்டிருக்கோம். சவுக்கு மரம் நடுறதும் பரிசுப் பொருள் வைக்கிறதும் தான் முக்கியம்னு நெனைச்சுக்கிறோமோன்னு கவலையா இருக்கு.


பயந்து பயந்து வாழ வேண்டிய காலமாயிருக்கு. இங்கே கனடாவில டொரொன்ரோவிலயும் இந்த ஆண்டு கணக்குக்கு 77 கொலை விழுந்திருக்கு. அதுவும் 55கொலை துப்பாக்கியால அப்பிடீன்னு சொல்லுறாக. இந்த துப்பாக்கியை எல்லாம் பறிமுதல் செய்யணும்னு சட்ட மூலமே கொண்டு வந்திருக்காவ. எவ்ளோ தூரம் நடைமுறை ஆவுமுன்னு அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். அமெரிக்காவுல இருந்து தான் இந்த துப்பாக்கில்லாம் கனடாவுக்க வந்து சேருதுன்னு பேசிக்கிறாவ. அத்திலாந்திக் கடல்ல இருந்து பசிபிக்கடல் வரை அமெரிக்கா கனடா எல்லை விரிஞ்சு கெடக்கு.

இதும் கூத்து பத்தாதுன்னு அமெரிக்காவுல இந்த ஆண்டு துப்பாக்கிகளாவே பரிசு கொடுத்து தள்ளுராவுகளாம். எதை கொடுக்கிரது எதை வுடுரதுன்னு வெவஸ்தையே இல்லாமப் போச்சு. கத்தியும் ஆபத்தானதுன்னாலும் அதை வைச்சு பிரயோசனமான காரியம் நெறையவே செய்யலாம். இந்த துப்பாக்கி சனியனை வைச்சு கொல பண்ணுரது தவிர்த்து வேற என்ன நல்ல காரியம் பண்ணலாம்னு கேட்குறேன். சொல்லுங்க பாப்பம். பொறகு எதுக்குத் தான் இதை வுட்டு வச்சிருக்காங்களோ.

அதும் பத்தாம இண்ணைக்கு ஒரு படம் பாத்தேன் ஆறுன்னு. எதாச்சும் நோக்கம் வச்சு எடுத்தாகளான்னே புரியல்ல. வெட்டும் கொத்தும் ரெத்தமுமா படம் முழுக்க கொலையாத்தான் இருக்கு. எப்பிடித்தான் சென்சார் எல்லாம் வுட்டு வைச்சாங்களோ. இதைப் பாத்து யாருக்கும் அப்பிடீ ஒரு எண்ணம் வந்துடும்னு நெனைச்சாலே நெஞ்சம் பதறுது.

எவ்வளவு கொடூரமா மனுசங்க மாறிக்கிட்டு வராங்க. இப்பிடீ எங்கனாச்சும் நடக்கிரத பாத்து படம் எடுத்தாகளா? இல்லை இதைப் பாத்து செய்யிங்கடான்னு சொல்ல வராகளா?

கொடுமையிலும் கொடுமை ஒண்ணு இலங்கயில நடந்திருக்கு. கிறிஸ்மஸ் பூசையில கலந்துட்டு புறப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் எம்பியை சேர்ச்சு வாசலில வைச்சே கொன்னு போட்டிருக்காங்க. பெரிய கொடுமை கொலையாளிங்களும் பூசையில் கலந்து கொண்டிருக்காங்க. இதில இருந்து மனிசரிட்ட மனிசத் தன்மையே துண்டற இல்லைன்னுதான் சொல்லத் தோணுது.

மனிசர பாபங்கள்ல இருந்து காக்க வந்த தேவன்ர பிறந்த நாளை மட்டும் ஞாபகம் வைக்கத் தெரிஞ்ச மனுசரால அவர் சொன்ன வெஷயங்கள ஞாபகம் வைக்க முடியல்ல.

இன்னொரு முறை விடிவெள்ளியும் கிறிஸ்து ராஜாவும் வந்தாலாவது மனிசங்க மனம் திருந்துவாகளா?

No comments: