Saturday, December 24, 2005

வல்லாதிக்கக் கனவுகளும் அரசியல் பகடைகளும்

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வல்லாதிக்கமாவது நல்லாதிக்கமாவது என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கத்தான் செய்கின்றது. என்ன செய்வது ?... நீங்களும் நானும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நம்பினாலும் நம்பாவிட்டாலும் உலக நடப்புகள் அவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன.

'வல்லன வாழும் ' என்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறி நிற்கும் மிகமுக்கிய கூர்ப்புத் தத்துவமாகும். சிம்பிள் அண்ட் ஸ்வீற் ஆக சொல்லப்பட்ட தத்துவத்தின் வழியே ஒழுகி எல்லா உயிரினங்களும் ஆதி காலம் தொட்டு இன்று வரை உலகில் தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகின்றன.

மனிதனும் ஒரு விலங்காக இருப்பதனால் இந்த தத்துவத்தினின்றும் விலகிப் போகமுடியா ஒரு ஒழுங்குடன் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இன்னும் வாழ்வாங்கு வாழ்வான்.

கடந்த பல நூற்றாண்டுகளில் மனித பலம் கொண்டு வல்லமை நிரூபிக்கப் பட்ட பல போர்கள் நடாத்தப் பட்டு ஆட்சிகள் நிறுவப் பட்டிருந்தன. காலனித்துவ ஆட்சிக் காலங்களின் அஸ்தமனத்தின் பின்னர் நேரடிப் போர்கள் நடாத்தப் படுவது குறைந்து நவ காலனித்துவம் என்னும் அழகுப் பெயருடன் உலக மயமாக்கப் பட்ட பொருளாதாரம் என்னும் நவீன உறிஞ்சல் தத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இருந்த போதிலும் விதி விலக்காக வளர்ந்து விட்ட நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைத் தேடுதலும் சந்தைக்கான நாடுகளின் கையகப்படுத்துதலிலும் ஏற்படும் முரண்கள் உலகைப் பல கூறுகளாகப் பிரித்துப் போட்டுள்ளது. இம்முரண்கள் அதி கூர்மை பெறும் போது பெரும் போர்களாக உருவெடுக்கின்றது. முதலாம் இரண்டாம் உலகப் பெரும் போர்கள் இம்முரண்களின் கூர்மையினால் உலகு கண்ட பேரழிவுகளாகும். இப்பெரும் போர்கள் அதுவரை இருந்த உலக ஒழுங்கைப் புரட்டிப் போட்டதுடன் அதுவரை நம்பப்பட்டு வந்த தத்துவங்களையும் கருத்துகளையும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்தது.

பெரும் போர்களின் அழிவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொண்டு வளர்முக நாடுகள் மற்றும் பின் தங்கிய நாடுகளிடையே தம் ஆதிக்கத்தையும் உறிஞ்சலையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

தம் நலன்களுக்கு எதிரான சக்திகளையும் கருத்துக்களையும் இரும்புக் கரம் கொண்டும் நசுக்க இவை பின் நிற்கவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் நேரடி ஆக்கிரமிப்பும் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறைமுக ஆக்கிரமிப்பும் சிறந்த உதாரணங்களாகும்.

ஜனநாயகத்தின் காவலர்களாக வேஷம் போடும் இவர்கள் ஜனநாயகம் பற்றி வைத்திருக்கும் அளவு கோல்களின் தன்மையிலிருந்தே அவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வல்லாதிக்கக் கனவுகளில் இன்று பல நாடுகள் முன்னின்று போட்டி போடுகின்றன. இவர்களின் வல்லாதிக்கக் கனவுகள் உலக, பிராந்திய என்ற அளவுகளில் மாறுபட்டிருந்தாலும் கனவு என்னவோ வலிமை குறைந்தவர்களின் மீது ஏற்படுத்தத் துடிக்கும் ஆக்கிரமிப்பு என்பதில் எந்த மாற்றமும் கிடையாதிருக்கின்றது.

இந்தப் போட்டியில் அமெரிக்க ஐரோப்பிய ரஷ்யா போன்ற நாடுகளுடன் குட்டி நாடுகளான ஜப்பான் கொரியா போன்ற நாடுகளும் களத்தில் இருக்கின்றன என்ற உண்மை மீண்டும் 'வல்லன வாழும் ' என்ற கூர்ப்புத் தத்துவத்தை மெய்ப்பிப்பதாகவே இருக்கின்றது.

இருந்தபோதும் தாவரங்கள் விலங்குகளைப் பொறுத்த அளவில் நூறு வீதம் பொருந்தக் கூடிய இவ்வளவு கோல் ஆறறிவுடன் கூடிய மனித இனத்தின் ஆசைகள் பேராசைகளைத் தாண்டி எவ்வாறு பொருந்தும் என்பது ஆராச்சிக்குரியதே.

வேறு பட்ட மொழி சமய பண்பாட்டுக் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் கூட்டங்களின் ஆதிக்கத்தை நசுக்கி மேலாதிக்கத்தை ஏற்படுத்த விழையும் இக் கலாச்சார முரணான வல்லாதிக்கக் கனவுகள் எவ்வளவு தூரம் மெய்ப் படும் என்பதே இன்று உலகின் முன்னால் உள்ள பெறுமதி வாய்ந்த கேள்வியாகும்.

வேறு பட்ட கலாச்சாரப் பண்பாடுகள் கொண்ட இனக்குழுமங்களின் மேல் வலுக் கட்டாயமாக திணிக்கப் படும் ஆதிக்கம் ஒரு கால கட்டத்தில் வலுவிழந்து போகும் என்பதற்கு சோவியத் ஜூனியனின் உடைவு ஒரு சிறந்த உதாரணமாகும். அதே நேரம் பல இனக்குழுமங்கள் சேர்ந்து வலுவான ஆதிக்கச் சக்தியாக உருவெடுக்க முடியும் என்பதற்கு இந்தியா சீனா போன்ற நாடுகளும் சிறந்த உதாரணங்களாகும்.

அதே வேளை வேறு பட்ட கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியங்களை கொண்ட இனக்குழுமங்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட எத்தனை அழிவுகளின் பின்னாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டா என்பதற்கு பலஸ்தீனம் சூடான் இலங்கை போன்ற நாடுகளில் முன்னெடுக்கப் படும் விடுதலைப் போராட்டங்களும் கண்கூடான உதாரணங்களாகும்.

வல்லாதிக்கக் கனவுகளும் அவற்றை நிலை நாட்ட பலி கொள்ளப்படும் அரசியல் அபிலாசைகளுக்கும் ஊடாக புதிய பரிணாமத்தை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிறப்பான கருது கோள்களாக இருந்தவை இன்னொரு காலகட்டத்தில் மாற்றியமைக்கப் பட்டதும் புதிய கருத்துக்கள் சிறப்பானவையாக விளங்கியதும் உலகத்தின் வரலாறு. உலகின் வரலாற்றில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் கலைந்து காணாமலே போய் விட்டன என்பதையும் நாம் எம் கருத்தில் கொள்வது எப்போதும் மனித இனத்துக்கு நன்மை தரும் .

No comments: