Friday, December 30, 2005

புதிய ஆண்டு உங்களுக்கு என்ன கொண்டுவருகின்றது?

2005 ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் வேளையில் புத்தம் புதிய ஆண்டொன்றையும் வரவேற்கும் முஸ்தீபுகளிலும் ஈடு பட்டுக்கொண்டிருக்கின்றோம். 2005 ஆம் ஆண்டில் நாம் சாதித்த பட்டியலை எழுதிப் பார்த்தோம் என்றால் ஒரு சிலரைப் பொறுத்தவரை பட்டியல் நிறைந்திருக்கலாம் . வேறு சிலரைப் பொறுத்த அளவில் பட்டியல் சிறிதாக இருக்கலாம். இன்னும் சிலரைப் பொறுத்தவரை பட்டியல் காலியாகவே இருக்கலாம்.

நாம் இந்தப் பட்டியலில் எந்தப் படிநிலையில் இருந்தாலும் 2005 ஆம் ஆண்டின் இந்த இறுதிக் கணங்களில் இனியும் எம்மால் சாதிக்கக் படக் கூடிய விடயங்கள் பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை.

எமது நிலை எதுவாக இருந்தாலும் பிறக்கப் போகின்ற புது வருடத்தில் எங்களுக்கே எங்களுக்கான பாவிக்கப் படாத புத்தம் புதிய 365 நாட்கள் இருக்கின்றன. எங்களுக்கே உரித்தான நாட்கள். யாராலும் அவற்றை திருடவோ பறித்துக் கொள்ளவோ முடியாத எங்களுக்கு மட்டுமே சொந்தமான நாட்கள்.

நாங்கள் இதுவரை எப்படி எங்கே இருந்திருந்தாலும் கவலை இல்லை. இனி என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திப்போம்.

இந்த ஆண்டின் இறுதியில் எப்படி இருப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம் என்பதே இப்பொழுது எங்கள் முன்னால் உள்ள கேள்வி. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு ஆசை கனவுகள் இருக்கும். அப்படி கனவுகள் இல்லாதவர்கள் கூட இப்போதே கனவு காணத்தொடங்குவோம். காணும் கனவைப் பெரிதாகக் காணுங்கள் என்று உங்களுக்குச் சொல்லி வைக்கின்றேன். ஏனெனில் எமது மனித மனத்தின் சக்தி எத்தகையது என்பதை அறியாதவர்களாகவே நாம் இருக்கின்றோம். மனதின் சக்தியை மட்டும் நாம் புரிந்து கொண்டோம் என்றால் அதனால் முடியாத காரியம் என்று இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகின்றேன். முடியுமா என்ற சந்தேகமே உங்களுக்குத் தேவையில்லை. மனத்திடம் சொல்லி விட்டு காரியத்தை மட்டுமே செய்து கொண்டிருங்கள். மனமானது உங்கள் இலக்கை அடைவதற்கு வேண்டிய எல்லாவித சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கி உருவாக்கி உங்கள் இலக்கை நோக்கி உங்களைக் கொண்டு சென்றிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்கள் கனவு என்ன என்பதை கண்டு கொண்டு மனதிடம் சொல்வது தான்.

சரி உங்கள் கனவு என்ன? பலராலும் சட்டென்று பதில் சொல்ல முடியாத கேள்வியாக இது இருக்கக்கூடும். ஆனாலும் இதை நீங்கள் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் நீங்கள் எப்படி ஆகவேண்டும் என்பது உங்களைத் தவிர வேறு யாருக்குத் தெரிந்திருக்க முடியும் ?

கனவு காண்பதைப் பெரிதாகக் காணுங்கள். மனதின் சக்தி அபரிமிதமானது. அற்புதமானது. இதில் ஒரு சந்தேகமும் தேவையில்லை .

எப்படி ஆகவேண்டும் ? கனவு ரெடி. அடுத்து ... அந்தக் கனவை அடையும் பாதையில் உள்ள இலக்குகளை நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ளவேண்டும்.

எப்படி என்றால் மாபெரும் அரண்மனை ஒன்றை நாம் அடையத்திட்டமிட்டிருக்கின்றோம். அதை அடைவதற்கான பாதையை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ? மாபெரும் அரண்மனையான எங்கள் கனவை அடைவதற்கான பாதையிலுள்ள இலக்குகளை அவை எவ்வளவிற்கு எவ்வளவு முக்கியமோ அந்த முக்கியத்தின் அடிப்படையில் அவற்றை ஒழுங்கு படுத்திக் கொள்வோம்.

ஒவ்வொரு இலக்கையும் அடையக் கூடிய கால எல்லையை எமது இயல்புக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப நிர்ணயித்துக் கொள்வோம். அந்தக் கால எல்லைக்குள் அவற்றை அடைவதற்கான முயற்சிகளில் எந்த சமசரமோ விட்டுக் கொடுப்போ இல்லாமல் ஈடுபடுவோம் என்பதில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

எங்கள் இலக்குகளை அடைவதற்குத் தேவையான தகவல்கள் உதவிகளைச் சேகரித்துக் கொள்வதும் தங்கு தடையின்றி இலக்குகளை அடைவதை இலகுவாக்கும். ஆகவே தரவுகளைத் திரட்டிக் கொள்வோம்.

இனி என்ன ? எங்கள் கனவான மாபெரும் அரண்மனைக்கு குடி போக வேண்டியது தான். அரண்மனைக்குக் குடி போகும் போது இப்படியேவா போகமுடியும். ஒரு ராஜ களை தோரணை வேண்டாமா ? ஆகவே இப்போதே , நாங்கள் அதை அடைந்த பின்னால் எப்படியிருப்போமோ அவ்வாறே இப்போதிருந்தே பழகிக் கொள்வோம். எவ்வாறு ஆக வேண்டும் என்று கனவு காண்கின்றோமோ அவ்வாறே ஆகிவிட்டதாகப் பாவனை செய்வோம். இது மிக முக்கியமானது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கத் தேவையில்லை. எங்களுடைய கனவு ... நாங்கள் தான் அதை அடைய விரும்புகின்றோம் என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விடக்கூடாது.

அடுத்து என்ன ? காரியங்களில் இறங்க வேண்டியது தான். முடிந்தவரை காரியங்களை சிக்கல் இல்லாமல் இலகுவானவையாக வகைப் படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் வீண்மனக் குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கி செயற்படவேண்டும். செயற்படும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க இலக்கு மிக அருகில்... ஒவ்வொரு இலக்கின் நிறைவேற்றமும் கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சியில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.

இனி என்ன ? வெற்றி........ வெற்றி....... வெற்றி........

2006 இனி உங்களுக்கு வெற்றி ஆண்டு. 365 புத்தம் புதிய நாட்களுடன் உங்கள் கனவு நிறைவேற உங்களிற்காகக் காத்திருக்கின்றது.


உங்கள் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.