Tuesday, January 17, 2006

"இது தான் தமிழ் நாடு" .... ஞானியாரின் பதிவுக்கான எனது தெளிபு

http://nilavunanban.blogspot.com/2006/01/blog-post_17.html

உலகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் தாய்த் தமிழகத்துடன் ஒரு உளப்பூர்வமான உறவு இருந்து கொண்டிருக்கும். தாய்த் தமிழகம் என்பது தொப்பூள்க் கொடி உறவு முறையானது. உலகின் மூலை முடுக்கில் இருக்கக் கூடிய எந்தத் தமிழனுக்கும் தமிழ் நாடு என்பது ஒரு பாதுகாப்பு உணர்வையும் நிம்மதியையும் அதே வேளையில் மனக்கிளர்வையும் தரக்கூடியது.

பலரும் இதனை உணர்ந்திருப்பார்கள் என்னைப் போல.தாய்த் தமிழகம் என்பது தமிழரின் கலை கலாச்சாரப் பண்பாடுகளுக்கு வேரடி மண்ணாய் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.

உறவு முறைகளில் தாய்வழி வந்தவர்களுடன் மனது ஒட்டிக் கொள்வது அதிகம்.

"தமிழகத்தில் தும்மினால் தலவாக்கொல்லையில் கேட்கும் " என்று சொல்வார்கள். ( தலவாக்கொல்லை இலங்கையின் மலைநாட்டைச் சேர்ந்த ஒரு ஊரின் பெயர்).

உலகெங்கும் இருக்கும் தமிழர்களை அதிகம் பாதிப்பது தமிழ் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்.

அந்த வகையில் நமது சக வலைபதிப்பாளர் ரசிகவ் ஞானியார் "இதுதான் தமிழ்நாடு " என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.

வண்ணப் படங்களுடன் வளமான கவிதை வரிகள் வேறு அழகாகப் போட்டிருந்தார்.

"பெரியோரைக் கனம் பண்ணு " என்று பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதனைப் பற்றியதே இந்தப் பதிவு. அதுவும் செயல் முறை விளக்கங்களுடன் வண்னப்படங்களாக கறுப்பு வெள்ளை படங்களாக என்று கலக்கலுடன்.

முதல் படமே அன்வர் ராஜா செய்முறை விளக்கம் கொடுக்க அற்புதமான கவிதை வரிகள்.

" தமிழ் நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம் தரையில் விழுந்தே பல சாதனைகள் புரிவோம்" எத்தனை அழகான கவிதை வரிகள்.தமிழ் நாடு என்பதில் நாம் கொள்ளும் பெருமிதம் நம் எல்லோருக்கும் தெரியும்.அதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் கிடையாது. அதற்கான காரணங்களையும் நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். உலகில் வாழும் தமிழர் அனைவரும் ஒரு முறையேனும் தமிழ் நாட்டைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் இருக்கும். அப்படி இல்லையென்றால் அவர்களின் வாழ்க்கை ஜென்ம சாபல்யம் அடைந்து விடாது.

சாதனை செய்வதென்றால் இலேசானதா ? தரையில் விழுந்து "தண்ணீ'யில் விழுந்தெல்லாம் சாதனை செய்வார்கள். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் 'கின்னஸ்' புத்தகத்தைப் பார்த்து தெளிபு கொள்ளலாம். எத்தனை விதமான சாதன முறைகள் இருக்கின்றன என்றெல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். தமிழிலும் இது மொழி பெயர்க்கப் பட்டால் இச் செய் முறை செய்து காட்டுபவர்களிற்கு பலவித புதிய உத்தி முறைகள் தோன்ற வாய்ப்பிருக்கின்றது என்பதனால் இதனை நான் பலமாகச் சிபாரிசு செய்கின்றேன்.

இப் படங்களைப் பார்க்கும் போது 'செய்முறை' விளக்கங்கள் எல்லாம் சில குறிப்பிட்ட வகையிலேயே இருக்கின்றன. சில செய்முறைகள் திரும்பத்திரும்ப செய்யப் படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. பல வேறுபட்ட முறைகளில் "தரையில் விழுந்து " செய்யும் சாதனைகளுக்கு இது உதவக் கூடும் என்பதனால் என் பலமான சிபாரிசு தரப்படுகின்றது.

தனபால் என்பவரின் செய்முறைக்கான கவிதை இவ்வாறு சொல்கின்றது.
"தோளில் விழுந்தால் துண்டு மரியாதைப் படும். காலில் விழுந்தால் மரியாதை துண்டிக்கப் படும்"
பின்னடியில் ஏதோ உள்குத்து நோக்கம் இருப்பதாக எனக்குப் படுவதால் கடும் கண்டனத்துக்குள்ளாகின்றது. காலில் விழுவதால் எப்படி மரியாதை துண்டிக்கப் படும். இந்து சமயத்தில் "விழுந்து" கும்பிடுவது போற்றப் படுகின்றது.

ஆண்களுக்கு 'அட்டாங்க நமச்காரம்" என்பதும் பெண்களுக்கு "பஞ்சாங்க நமஸ்காரம்" என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இங்கு காட்டப்படும் விழுந்து கும்பிடும் செய் முறைகள் இவையொன்றையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. "அட்டாங்க" என்பது எட்டு அங்கங்கள் நிலத்தில் பட வணங்குவது. கால்கள் இரண்டு கைகள் இரண்டு என்ற ரீதியில் வளைந்து கும்பிடுவது பிழையானது என்று ஞானியார் குறிப்பிட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கின்றேன். இடப்பிரச்சனை கூட ஒரு காரணமாக இருக்கலாம். மேடை அமைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வருங் காலத்தில் அமைக்கப் படும் மேடைகளில் விழுந்து கும்பிடும் இடம் குறைந்த பட்சம் ஆறு அடி விஸ்தீரணம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஜீவானந்தத்தின் செய்முறை பூரண மரியாதை செய்யும் முறைக்கு மாறு பட்டது. போலியாக மரியாதை செய்யும் முறைக்கு " கூழைக்கும்பிடு" என்று சொல்வார்கள். கூழைக் கும்பிடு என்பது போலி மரியாதை. "நக்கல்" மனதிலுள்ளவர்களால் தான் இவ்வாறு நடக்க முடியும். அவர் பார்வையும் சரியாக இல்லை. படத்தை உற்றுப்
பார்ப்பவர்கள் இதனைக் கவனிக்கலாம். பாதார விந்தங்களைப் பார்க்காது பார்வை எங்கோ போகின்றது.( பணப்பையைக் கூட பார்க்கலாம்)

இச்செயல் முறைக்கு ஞானியார் குறளொன்றை எடுத்து விட்டிருக்கின்றார். இப்போலி மரியாதையுள்ள ஜீவனைப் பெற்ற தாயும் பெரிதுவப்பாள் என்று என்னால் நம்பமுடியவில்லை. போர்க்களத்தில் புறமுதுகிட்டான் எனக் கேட்ட தாயவள் பால் கொடுத்த முலையறுப்பேன் என்று பொருமி நின்றது எம் தமிழ்ப் பெண்களின் வீரம் என்பதை எடுத்துக் கூறவேண்டும். முறத்தால் புலி விரட்டிய தமிழ்ப் பெண்ணின் வீர உணர்வை உங்களுடைய எடுத்துக் காட்டு குறை சொல்வதாக எனக்குத் தோன்றுகின்றது.

அடுத்து ஜெயக்குமார் காட்டும் செயல் முறையில் ஒருபடி முன்னேற்றம் காணப்படுகின்றது. தலையும் நிலத்தில்ப் பட ஐந்து அங்கங்களுக்கு முன்னேறியிருக்கின்றார். பஞ்சாங்க நமஸ்காரம் பெண்களுக்கானது என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லை என்று படுகின்றது. இவர் தலையில் இருக்கும் ஒளிவட்டம் மட்டும் இல்லையென்றால் ஒரு பெண்ணின் மரியாதை என்று நானும் எடுத்துக் கொள்வேன்.

ஞானியார் கொடுத்த கவிதை வரிகள் "வளைந்து விடு மூங்கிலாய் நீண்டுவிடு வளைந்தே இருந்தால் மனிதா நீ மாண்டுவிடு " என்று கூறுகின்றது. இதில் ஞானியார் பற்றியும் எனக்குச் சந்தேகம் வருகின்றது.

மரியாதை செய்யும் இடத்தில் வன்முறைகளைத் தூண்டும் வார்த்தைகளை இவர் பயன்படுத்துகின்றார் என்றே தோன்றுகின்றது. முதலில் வளைந்து விட்டு மூங்கிலாய் நீண்டு விடு என்று கூறுகின்றார். வளைந்த மூங்கில் நிமிரும்போது பாரிய விசையுடன் அது நிமிரும். இப்படி நிமிரும் போது முன்னால் உள்ளவர்களை அது குத்திக் குதறிவிடக் கூடிய ஆபத்து இருக்கின்றது. இதை தான் ஞானியார் விரும்புகின்றாரா ? ஞானம் பெற்றவர்களே இவ்வாறு புத்திமதி சொல்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தைத் தரம் தாழ்த்தி விடும் என்பதால் எனது கடும் கண்டனங்களை இங்கே கூறிக் கொள்கின்றேன்.

மூங்கில் என்ற இடத்தில் நாணல் என்று பாவிக்குமாறும் அவருக்கு சிபாரிசு செய்கின்றேன். இவ்வாறு செய்வதால் தடா பொடா பாய்வதிலிருந்து அவர் தப்பிக்கக் கூடும். நாணல் நீரோட்டதில் வளைந்தாலும் முறிந்து போகாது தப்பிக் கொள்கின்றது என்பதால் ஞானியாரின் கருத்துக்கு ஏற்றது என்பதுடன் பல உயிர்களையும் காப்பாற்ற முடிகின்றது. " மனிதா நீ மாண்டுவிடு " என்று ஈற்று வரியில் குறிப்பிடுவதைத் தான் குறிப்பிடுகின்றேன். மரியாதை செய்பவர் எல்லோரும் மாண்டுவிடுவது என்றால் மரியாதை செயவதிலுள்ள மரியாதையே போய்விடும்.

பாண்டுரங்கன் செய்யும் செய் முறை இடம் மாறி இங்கு வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. "தவளைப் பாய்ச்சல் " என்பதற்கு செய்முறை காட்டுவது போல் இருக்கின்றது. மரியாதை செய்யும் இடங்களிலெல்லாம் இவ்வாறு " விளையாடுவது" எற்றுக் கொள்ள முடியாததாகும். " தவளைப் பாய்ச்சல்" என்பது விடுதலைப் புலிகளின் வெற்றி பெற்ற யுத்தத் தந்திரமாகும். இவ்வாறான செய்முறைகளைச் செய்பவர்களிடம் அதிக கவனம் தேவை என்பதை மரியாதை பெறுபவர்களுக்கு சிபாரிசு செய்கின்றேன்.

"வளைக்க வை வளையாதே மரித்துப் போகும் மரியாதை" என்று கவிதை சொல்லியிருக்கின்றார் ஞானியார். இது மரியாதை கொடுப்பவருக்கா ? இல்லை மரியாதை வாங்குபவருக்கா ? என்ற குழப்பத்தில் என் தூக்கம் கெட்டுப் போனது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஞானியார் பெரிய கவிஞர் என்றாலும் என்னைப் போன்ற கத்துக் குட்டிகளை இவ்வாறு கவுத்துப் போடக் கூடாது என்றும் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.

பன்னீர்ச் செல்வத்தின் செயல் முறை பன்னீர் தெளிப்பதைப் போலத்தான் இருக்கின்றது. கண்மூடி இருப்பதிலேயே அந்த " பயபக்தி" தெரிகின்றது.

ஞானியாரின் " அருவியாய் விழு சுனாமியாய் எழு" என்பது ஒரு எதுகை மோனையை கருத்தில்க் கொண்டு எழுதியது என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு சுனையாகக் கூட ஒழுக முடியாதவரை சுனாமி அது இது என்பதெல்லாம் உங்களுக்கும் நகைச் சுவை உணர்வு இருக்கின்றது என்பதைத் தான் தெரிவிக்கின்றது. கார்ப்பரேஷன் குளாயில் ஒழுகும் சொட்டுத் தண்ணீருக்கு வேண்டுமென்றால் ஒப்பிடலாம்.

அடுத்து பொன்னையன். இவரின் செயல் முறை தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டது போல் காணப்படவில்லை. ஜப்பானின் சமுராய் வீரர்கள் போன்ற ஒரு நிமிர்ந்த முறை காணப்படுகின்றது. ஞானியார் குறிப்பிடும் " சிந்திய கெளரவத்தைப் பொறுக்கவோ கோர்க்கவோ ? " என்ற கவிதை வரியும் வேறு வகைக் குறிப்பை உணர்த்துகின்றது. பாரதத்தில் வரும் கர்ணன் துரியோதனன் போல் எதாவது "சோத்துக்" கடன் இருக்கலாம்.

செம்மலையின் செய்முறை நன்றாக உட்கார்ந்து செய்யும் முறை. ஆனாலும் பூரணப்படவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. அதிக பட்சம் ஆறு அங்கங்கள் பயன்பட்டிருக்கலாம். இரு முழங்கால்களையும் சேர்த்துக் கொள்கின்றார்.

ஞானியார் மு. மேத்தா ரேஞ்சுக்கு கவிதை எழுத முயன்றிருக்கின்றார். அவர் தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு "காற்று புயல்" என்றெல்லாம் கவிதை எழுதுவார். அல்லது ஞானியார் வீரசிவாஜி கட்டப்பொம்மன் போன்ற திரைப்படங்களைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்ச்சிக் குறுகுறுப்பாகவும் இருக்கலாம்.

"யாரங்கே தன்மானத்தைத் தரையில் போட்டது ?" என்று எழுதித் தள்ளியுள்ளார். தன் மானம் என்பது தூக்கிப் போடும் பொருள் அல்ல என்பதை மட்டும் அவருக்குச் சொல்லிக்கொள்கின்றேன்.

சண்முகநாதன் இவர் செய்முறையைப் பார்த்தால் நோய்வாய்ப்பட்டவர் போன்றிருக்கின்றது. மூல வருத்தம் உள்ளவர்களையெல்லாம் இப்படி போட்டு வருத்துவது தவிர்க்கப் பட வேண்டும். ஞானியார் இவரைச் சீரியஸ் ஆகவே கணக்கெடுக்கவில்லை என்று தெரிகின்றது.

"அம்மா இங்கே வா வா ஆசீர்வாதம் தா தா காலில் விழும் எனக்கு கட்சியில் இருக்கு கணக்கு" என்று குழந்தைப் பாடல் ரேஞ்சுக்குப் போய் "தோ தோ நாய்க்குட்டி துள்ளி வா வா நாய்க்குட்டி" என்ற குழந்தைப் பாடல் மெட்டையும் எடுத்து கவிதை எழுதிய பாங்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. " நக்கல் இருக்கலாம் நளினம் இருக்கக்கூடாது " என்று சொல்வார்கள். இது நக்கலா ? இல்லை நளினமா? என்பதை ஞானியார் விளக்கினால் நன்றாக இருக்கும்.

அடுத்து தளவாய் சுந்தரத்தின் செயல் முறை தொட்டுக் கும்பிடுகின்ற ரேஞ்சில் இருக்கின்றது. தளவாய் என்ற பட்டப் பெயரும் இருப்பதால் வீரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதுதான். வீரப் பரம்பரை என்பதற்காக " கல்தோன்றா மண் தோன்றா காலத்தே முன் விழுந்த மூத்த குடி " என்று ஞானியார் அவரை அம்பு வில்லுக் காலத்திற்கு கொண்டு சென்றிருப்பது அதீதப் புகழ்ச்சி என்றே எனக்குப் படுகின்றது. கல்லும் தோன்ற வில்லை மண்ணும் தோன்றவில்லை என்பதால் கடலில் விழுந்த குடி என்று ஞானியார் கருதுவதாக தோன்றியபொழுது ஒரு உண்மை பளிச்சிட்டது.

கூர்ப்புத் தத்துவம் நீரில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் பின் தரைக்கும் பரவியது என்று சொல்கின்றது. ஆமை பாம்பு போன்ற இரண்டிலும் வாழக் கூடிய இரண்டும் கெட்டானுகள் இதற்கு நல்ல உதாரணம்.

மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என்ற நவீன விஞ்ஞானத்தை முறியடிக்கும் வகையில் நீரிலிருக்கும் ஏதாவது உயிரினத்தில் இருந்து தமிழன் தோன்றினான் என்ற வகையில் " கல்தோன்றா மண்தோன்றா .... ......... மூத்தகுடி " என்ற சொல் தொடரை ஆதாரமாக வைத்து ஒரு நவீன விஞ்ஞானத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்த உண்மை. இதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

அடுத்து தம்பித் துரையின் செயல் முறை. ஞானியார் " துறைக்காக துரையிங்கு கரையானதோ ? " என்று எழுதிய கவிதை முற்றுப் பெறாமல் தொக்கி நிற்கின்றது என்றே கருதுகின்றேன்.
" அதனால்- மக்களெல்லாம் இரையாவதோ ? " என்று முடித்திருக்கலாம்.

கவிதையில் அழகுணர்ச்சியுடன் ஒரு மெஸேஜ் உம் இருந்தால் மக்களிடம் இலகுவாக ரீச் ஆகும் என்பதால் ஞானியாரிதைக் கவனத்தில் எடுத்து வருங்காலத்தில் இன்னும் டாலடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைத்திலிங்கத்தின் செயல் முறைக்கு ஞானியாரின் கவிதை இடக்கு முடக்காக இருக்கின்றது. " விழுந்தால் காலில். விழுந்தது கட்சி" என்று தமிழ் நாட்டையே கலக்கத்திற்குள்ளாக்கி விட்டீர்கள். இந்தக் கட்சி விழுந்தால் தமிழரின் பாரம்பரியங்களை யார் கட்டிக் காப்பது ? எனவே இக் கவிதையை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து வளர்மதி. நிலவு என்பதை அல்லது தேயும் பொருட்களை குறியீடாக வைத்து இந்தக் கவிதையை ஞானியார் எழுதியிருக்கின்றார் என எண்ணுகின்றேன்.

" எழுந்திரு அஞ்சலி எழுந்திரு" என்று கவிதை எழுதி 'அஞ்சலி .. அஞ்சலி ' என்ற பாடலின் இசையை எடுத்துக் கொள்ளும் உங்கள் எண்ணம் புரிந்து கொள்ள முடிந்தாலும் மணிரத்தினத்திடம் ஒரு வார்த்தை கூறிவிடுங்கள். இல்லாவிட்டால் காப்பி ரைட் பிரச்சனை வந்து விடக்கூடும். குஷ்புவின் வார்த்தையைக் காப்பி அடித்ததற்கே அவர் மனைவி படும் பாட்டில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதியாக வேலுச்சாமியின் செய்முறையுடன் ஞானியார் இந்தத் தொகுப்பை நிறைவு செய்துள்ளார். கண்ண தாசன் வரிகளான " பறவையை கண்டான் விமானம் படைத்தான் எதனைக் கண்டான் மனிதனைப் படைத்தான் ? " என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்டவன் தன்னைப் போல படைத்த மனிதனை சாதாரணமாக எடை போடுவது நல்லதல்ல. ஆண்டவனே எப்படி இருப்பார் என்று புரியாமல் ஆளுக்கொரு சாமி பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறான அதி மேதாவித்தனமான கேள்விகள் கேட்டு உங்களை உயர்த்திக் கொள்ள முயல்வது எங்களுக்குப் புரியாத இரகசியம் அல்ல.

ஆண்டவனை எவ்வாறு புரிந்து கொள்ள முடியாது அல்லாடுகின்றோமோ அதுபோலவே இதுவும் ரோதனையான விடயம் என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்கின்றேன். காசி ராமேஸ்வரம் என்றே சுத்தி சுத்தி வந்தும் அறிந்து கொள்ள முடியாத விடயத்தை கணணிக்குள் வந்து கண்டு பிடித்து விடலாம் என்பது ஞானியாரின் அதீத தன்னம்பிக்கை என்று சொல்லிக் கொள்ளலாம். இவ்வாறான தொகுப்பைத் தருவதற்கு என்னவோ ஸ்ராங்காக (தமிழ் நாட்டிலிருந்து தருவதற்கு) இருக்க வேண்டுமென்பது எனது கணிப்பு. அந்த வகையில் அவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் "விழுந்து" மரியாதை செய்கின்றது.

பின்னூட்டங்களில் ஹா....ஹா என்று சிரித்த அனானிமஸ்ஸும் நல்லா இருக்கு என்று சொன்ன என்னார் இவர்களெல்லாம் நிறைவை எடுத்துக் கொள்வது போல குறறயையும் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் இவ்வாறான குறைபாட்டு செயல் முறைகளையே தமிழனின் பண்பாடு என்று அகில உலகமும் காப்பி அடிக்கக் கூடிய அபாயமும் இருக்கின்றது. ஜீ.இராகவனின் வயிற்றெரிச்சல் புரிகின்றது. சரியாக நடிக்கத் தெரியாத கபோதிகளின் செய்முறைகள் அவரை எரிச்சல் அடையச் செய்திருக்கும். மற்றும் உலகிற்கே மரியாதைப் பண்பை எடுத்துச் சொல்லும் இப்படியான தொகுப்புக்களில் இருக்கக் கூடிய நடிகர்களின் குறைபாட்டைக் குறித்து அவர் மானம் போவதாக அடித்துக் கொள்வதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

இனிமேல் ஆவது இவ்வாறு தொகுக்க முனைபவர்கள் அரசாங்கத்தில் இருந்து அவர்கள் எண்ணங்களையும் விசேட குறிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும் மரியாதை பெறுபவர் கும்பிடுவதை விட்டு ஆசீர்வதுப்பது போல் அபயக்கரம் காட்டவேண்டும். இது கரங்களில் கறை இல்லை என்பதைக்காட்டவும் சமயத்தில் பிடிக்காதவர்களின் தலையை அமுக்கி விடவும் இன்ன பிற காரணங்களுக்காக உதவக்கூடும் என்பதையும் இம்முறையை கைக்கொள்ளுமாறும் சிபாரிசு செய்கின்றேன்.

பின்னூட்டம் இட கை நமநமத்தால் 'சிந்து'வை அழுத்தி முன் பக்கம் வர வேண்டுகின்றேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

ஞானியாரின் பதிவு http://nilavunanban.blogspot.com/2006/01/blog-post_17.html


12 comments:

Anonymous said...

என்ன பார்வை உந்தன் பார்வை

Anonymous said...

இதற்கு மேல் சிறப்பாக கூறமுடியுமா? என்ன ?

Anonymous said...

இதுதான் தமிழ்நாட்டுடைய நிலை என்று நினைக்கும்
போது மிக....மிக.... கவலைதான் போங்க... என்ன இருந்தாலும் ஞானியாருடன்சேர்ந்து இப்படி
வாட்டியிருக்கக் கூடாது பாருங்கோ.....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அனுமதியில்லாமல் மற்றவர்களின் கட்டுரைகளை பயன்படுத்துவோர் பலறிருக்க என்னுடைய பதிவுக்கு பதில் கட்டுரை போடலாமா என்று என்னிடமே அனுமதி வாங்கியது தங்களின் மீது மதிப்பை காட்டுகிறது நண்பா

உண்மையில் நனே அசந்துபோய்விட்டேன். இவ்வளவு ஆழமான அழுத்தமான பார்வையா..

ஆனால் நான் இதற்கெல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை.. காலில் விழும் கலாச்சாரத்தை நீங்கள் மரியாதை நிமித்தமாக கருதுகிறீர்கள். நான் அப்படிக் கருதவில்லை அவ்வளவுதான்.

கலில் விழுகின்ற அளவிற்கு அவர் அப்படி என்ன செய்தார்?
இவருக்கு இத்தனை வயதில் அவர் காலில் விழவேண்டிய அவசியம் என்ன?
விழுவது தனிமனிதனா தமிழ்நாடா..?


விவாதம் என்று ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும். ஆனால் தாங்கள் மதரீதியான விளக்கங்களையும் குறிப்பிட்டு இருப்பதால் இதில் தலையிட்டு பிரச்சனையை உருவாக்க விரும்பவில்லை.

ஒரு நகைச்சுவைக்கான பதிவில் இவ்வளவு சீரியஸான பார்வையும் பார்க்க முடியும் என்று நிருபித்துள்ளீர்கள்.

நன்றி பதிவுக்கும் பதிலுக்கும்

"என்னையும் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துவதே என் தலையாய பணி
"
ரசிகவ் ஞானியார்

G.Ragavan said...

இளந்திரையன், உங்கள் பார்வையின் கோணம் வேறு மாதிரி இருக்கிறது. ம்ம்ம்..எப்பொழுதுமே நாம் நினைக்கிறது போல எல்லாரும் நினைக்க வேண்டும் என்ற தேவையில்லை.

மரியாதை செய்வது நியாயம்தான். பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது தமிழ்ப் பண்பாட்டின் படி மிகச் சரியே. பெற்றவர்கள் காலில் விழலாம். அறிவு மிக்க பெரியவர்கள் காலில் விழலாம். தெய்வத்தின் காலில் விழலாம். ஆனால் ஒரு முதல்வரின் காலில்? அதுவும் அமைச்சர்கள்? அவர்கள் பதவிக்கே இழுக்கல்லவா....அந்த வகையில்தான் நான் சொன்னதும். அதுவுமில்லாமல் நீங்களும் குறிப்பிட்டது போல இதெல்லாம் நடிப்புதான்....இந்த நேர்மையின்மைதான் எரிச்சலைக் கிளப்பி விடுகிறது. சரி விழனுமுன்னு வந்தாச்சு....ஒழுங்கா வளர்மதி மாதிரி விழ வேண்டியதுதானே....பாதி குனிஞ்சி..பாதி நிமிந்து....பொன்னையனின் வணக்கம் டீசண்ட் என்பதையும் சொல்ல வேண்டும். அவ்வளவுதாங்க நான் சொல்ல வந்தது. ஆனாலும் மனசு என்னவோ கேக்கலைங்க...என்ன கிருபானந்த வாரியாரா சொற்பொழிவு நடத்துறாரு...கால்ல விழுந்து துந்நூறு வாங்க.

இளந்திரையன் said...

நிலவு நண்பன், ஜீ.இராகவன் உங்கள் வரவிற்கு நன்றி.

பெரியோரைத் தான் கனம் பண்ண வேண்டும். அதைத் தான் நானும் சொல்லியிருக்கின்றேன்.

புகழ்ச்சியில் இரண்டு வகை உண்டு. உண்மையிலேயே புகழ்வது. புகழ்வது போல இகழ்வது(வஞ்சகப் புகழ்ச்சி). இது இரண்டாவது வகை. இவர்களின் செயல்களை எத்தனை பேச்சுப் பேசியிருக்கின்றேண். மீண்டும் படித்துப் பாருங்கள்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்... இப்பதிவை இவர்களிடமே கொடுத்தால் இவர்கள் கட்சிப்பத்திரிகையிலேயே பிரசுரித்து எனக்கு மந்திரிப் பதவி கூட கிடைக்கலாம்.... ஹா..ஹா..

நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகி விட்டீர்கள்... இவர்கள் எம்மாத்திரம்...

-அன்புடன் இளந்திரையன்

Anonymous said...

என்ன இளந்திரையன் அவர்களே!
பசங்க இம்மட்டு சீரியஸ் ஆயிட்டாங்க??????
நான் நல்லா ரசித்துசிரித்த கட்டுரை பாருங்க....
என்ன ஞானியாரே புரிஞ்சிக்க முடியல்லையா??????? அடடா சரிதான் போங்க சாரு....

G.Ragavan said...

அட மக்கான்...இப்பிடிக் கவுத்துட்டீகளே....எனக்கு நீங்க விளையாட்டாச் சொல்றீரா...வெனையாச் சொல்றீரான்னே வெளங்கலை....சரி விடுங்க.....ஆனா நீங்க சொன்னாப்புல இதக் கொண்டோயி அம்மா கிட்ட காட்டுனா....ரசிகவ் புண்ணியத்துல ஒங்க போட்டோவுக்கும் நான் வயித்தெரிச்சல் படலாம். ஹா ஹா ஹா

Anonymous said...

இளந்திரையன் உண்மையில் சிரிப்பை அடக்க முடியவில்லை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நக்கலையும் இவ்வளவு சீரியசாக சொல்லமுடியும் என்று நிரூபித்துள்ளீர்கள் .:)

இளந்திரையன் said...

இராகவன் குழைக்காட்டான் அன்புக்கு நன்றி. இதை விட வேறு என்ன இந்த " தெய்வங்களுக்கு " காணிக்கை கொடுக்க முடியும்.

தேர்தலில் தீக்குளித்து புனிதம் பெற வேண்டியது வாக்காளர்களே... இராகவன் நல்ல சந்தர்ப்பம் வருகின்றது.

இது மாறும் என்கின்றீர்களா ? மாறாது என்கின்றீர்களா ?

பரஞ்சோதி said...

இளந்திரையன்,

அருமையாக சொல்லியிருக்கீங்க.

ஞானியாரின் ஒவ்வொரு வரியையும் விமர்சித்தது அருமை.

இளந்திரையன் said...

நன்றி பரஞ்சோதி ! ஞானியாரும் ரசித்துத்தான் கவிதை போட்டிருக்கின்றார்.