Wednesday, January 18, 2006

மீண்டும் ஒரு முறை இந்தியா ?

" எனது அரசியல் வாழ்வின் அனுபவமும் இவரின் வாழ்க்கையின் வயதும் ஒன்றே " என்று எகத்தாளமாகக் குறிப்பிட்டவர் அரசியல் குள்ள நரி என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்.. ஜெயவர்த்தனா. முதன் முதலில் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னால் இவ்வாறு குறிப்பிட்டார். அவரால் இவ்வாறு சுட்டிக்காட்டப் பட்டவர் காலஞ்சென்ற இரஜீவ் காந்தியவர்கள். தொடர்ந்து " இந்தியாவை எங்களுக்காக தமிழருடன் போரிட விட்டு எனது படைகளை ஓய்வில் வைத்திருக்கப் போகின்றேன் " என்றும் குறிப்பிட்டார்.

அவரின் கணிப்பு பொய்க்கவில்லை என்பதும் அதன் பின்னர் என்னென்னவோ நடந்தேறியதும் நாமறிவோம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் அவர் வாரிசுகள் இன்றும் அதே மன நிலையிலேயே இருக்கின்றார்கள் என்பதை விளங்கப் படுத்தவே.

ஈழப்பிரச்சனையில் கையைச் சுட்டுக் கொண்ட இந்தியா என்ன முடிவில் இருக்கின்றதோ என்னவோ ஆனால் இலங்கைச் சிங்கள ஆட்சியாளர்களின் கனவு அதுவாகத் தான் இருக்கின்றது. முடிந்தவரை இந்தியாவை ஈழத்தமிழருடன் மோத விடுவது அதே நேரம் மேற்குலகுடன் விசுவாசமாக இருப்பது என்ற இரட்டை மன நிலையிலேயே அது காய் நகர்த்தி வருகின்றது.

இந்தியாவை மோதவிடுவது சுலபம் என்ற முடிவிற்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கும் காரணங்கள். ஒன்று இந்தியா ஏற்கனவே விடுதலைப் புலிகளுடன் மோதிப் பகைமை கொண்டுள்ளது. ஆகவே இந்தியா ஈழத்தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கும் என்று அவர்கள் நம்புவது.
இரண்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளைக் கொண்டுவருவதை தன் பாதுகாப்பைக் கருதி தவிர்க்கும் கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்று எண்ணுவது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்களின் கருத்து சரியென்றே படுகின்றது. இதுவரை நடைபெற்ற தமிழ் மக்களின் படுகொலை பற்றி இந்தியா இதுவரை எந்தக் கருத்தும் கூறாதது இந்நம்பிக்கையை சரியென்றே ஊர்ஜிதம் செய்கின்றது.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை அதிபர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை சந்திப்பதிலேயே ஆர்வம் காட்டினார் என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் இந்திய மத்திய அரசு உடனடி ஆர்வம் எதனையும் காட்டாவிட்டாலும் இவர்களின் நம்பிக்கை எதனையும் மறுத்தும் கூறவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. எதிர்பார்த்து வந்த சமிக்ஞை கிடைக்காததைத் தொடர்ந்து அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றதும் இதற்காகவே காத்திருந்தது போல அமெரிக்காவிடுதலைப் புலிகளை காரசாரமாகக் கண்டித்து அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருக்கின்றது.

இதே நேரம் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த சமாதான ஒப்பந்தம் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதுவும் போர் மூளும் அபாயம் நெருங்கிக் கொண்டிருப்பதும் வெளிப்படையாகும். இந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்துக்கான திட்டங்களும் விருப்பும் இல்லாத சிங்கள அரசு இந்தியாவை இழுத்து விடுவதற்கான சகல வழிமுறைகளையும் கையாளுகின்றது.

இலங்கை அதிபரின் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசியல் அமைப்புப் பற்றியும் நடைமுறை பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டியதும் இந்தியாவிற்கு வைக்கப் போகும் இன்னொரு பொறியேயாகும். விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளின் சமஸ்டி முறையைப் பற்றி அறிந்து தெளிபு பெற்றிருக்கும் இவ்வேளையில் நோர்வே தலைமையிலான சமாதான நாடுகளும் ஈழப்பிரச்சனைக்கான தீர்வாக சமஸ்டி முறையை முன்மொழியும் வேளையிலேயேயும் இது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி யுத்தம் தவிர்க்க முடியாது என்னும் ஒரு சூழல் தோன்றுகையில் அல்லது மேற்கு நாடுகளின் நெருக்குதல் அதிகரிக்கும் போது இந்திய அரசியல் அமைப்பு போன்ற ஒரு தீர்வுக்கே உடன்படுவதாக காட்டிக் கொள்வதே இலங்கை அரசின் தற்போதைய உத்தியாகும்.

ஒன்று விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் மறுதலிக்கும்போது உலக நாடுகளுடன் பேரம் பேசுவதற்கும் விடுதலைப் புலிகளின் மேல் அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு நெருக்குவதற்கும் உதவலாம்.

இரண்டு விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொண்டால் இதனை வடக்குக் கிழக்கில் நடைமுறைப் படுத்தும் தார்மீகக் கடமையும் இந்தியாவிற்கே போய்ச் சேரச் செய்வது. இன்று தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவான அலையைத் தணிக்கும் முகமாக இந்தியா இக்கடமையை ஏற்றுக் கொள்ளும் என்றும் நம்புகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் நன்மை பெறப் போவதென்னவோ சிறிலங்கா இனவாதிகளே. ஏற்றுக் கொண்டால் நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் இந்தியா களத்தில் இறங்கும். அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமது சம இனத்தவரே ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுதந்திரப் பற்றாக் குறையான அரசியலமைப்பில் வாழுவதை தமிழக மக்கள் உணர்ந்து கிளர்ச்சியில் ஈடுபடமுயலலாம். அதனால் எப்பாடு பட்டேனும் விடுதலை புலிகளை நெருக்கி இவ்வரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்ள வைக்க இந்தியா களத்தில் இறங்கியே தீரும் என எதிர்பார்ப்பது.

அடுத்த கட்ட இந்தியாவின் காய் நகர்த்தலுக்காக காத்திருக்கும் சிறிலங்காவின் துருப்புச் சீட்டாகவே இந்திய அரசியலமைப்பை ஒத்த முறையை இலங்கையில் அமுல் படுத்துவது என்பது விளங்குகின்றது.

சிறி லங்கா அரசியல் வாதிகள் மட்டுமன்றி புத்தி ஜீவிகளும் இவ்வாறு விரும்புவதும் நம்புவதும் தான் மிகப் பெரிய சோகம். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு சிங்களப் பேரினவாதம் இன்னும் தயாரில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலமையில் இந்தியா எவ்வாறு செயல்படும் என்பதிலேயே சிறிலங்காவின் அடுத்த கட்ட நகர்வும் செயற்பாடும் அமையும்.

4 comments:

வன்னியன் said...

உங்கள் எண்ணங்கள் சரியாகவே படுகிறது. அனால் இந்திய சமஸ்டி பற்றிய அறிவிப்பின் மூலம் புலிகளின் பிடிவாதம் இன்னும் அதிகமாகும் என்றே தோன்றுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தை இன்னுமின்னும் வலுவாக முன்வைக்கும் அதேவேளை, அதைச் செய்துவிட்டுத்தான் மிகுதி எதைப்பற்றியும் பேசலாமென்றும் புலிகள் சொல்லக்கூடும். ஜே.வி.பி, ஹெல உறுமய போன்றவற்றின் கருத்துக்கள் இன்னும் தெளிவாகவில்லை. புலிகளின் நம்பிக்கையே இவர்கள் தானென்றால் யாரும் மறுக்க முடியாது. அவர்கள் (ஜே.வி.பி, ஹெல உறுமய ) இருக்கும்வரை தமிழர்கள் பயப்படத் தேவையில்லை.

இந்திய சமஸ்டி பற்றிய கதை, போர் மூளுவதை விரைவாக்குமென்பது என் கணிப்பு.

இளந்திரையன் said...

இந்திய சமஸ்டி ஏற்றுக்கொள்ளப் படமுடியாது என்பதை விட ஏற்றுக் கொள்ளும் நிலமையைக் கடந்திருக்கின்றோம்.

சிங்களப் பேரின வாதிகளுடன் ஏற்படக் கூடிய எந்தவொரு தீர்வும் அதிக பட்ச சுயாதிக்கம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என தமிழர் தரப்பு எதிர்பார்க்கும். அது தவறு என்றும் கூறமுடியாது. அத்தனை வலியை அது சுமந்து நிற்கின்றது.

Kanags said...

மிகவும் ஆழமான பதிவு. நன்றி.

இளந்திரையன் said...

உங்கள் வருகைக்கும் நன்றி கனக்ஸ்