Friday, January 13, 2006

பொங்கலோ பொங்கல்

பொங்கல் பெருநாள். தமிழர் திருநாள் என்றெல்லாம் சிறப்பித்துச் சொல்லுகின்றோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் விழுந்து கிடப்பவனுக்கு உற்சாகம் ஏற்பட வேண்டும் என்று சொன்னார்களோ என்னவோ ? வாழ்க்கையே மறுதலிக்கப் பட்டவர்களுக்கு என்ன சொல்ல ?

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத்தில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபோது (ஒரு மார்கழி மாதத்தில்) தை பிறக்கப் போகின்றது வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எட்டிப் பார்த்தது.

ஆனால் இன்று .... பட்டாசு ஓசை கேட்கின்றதோ இல்லையோ துப்பாக்கி ஓசை கேட்கக் கூடாது என்று ஏங்கும் மக்கள் தான் எங்கும். பொங்கும் மங்களம் எங்கும் தங்குகின்றதோ இல்லையோ பொங்கும் பயம் எங்கும் தங்கி நிற்கின்றது.

நானா ? நீயா ? நைனாவா ? என்று "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் " என்று ஆளாளுக்குக் கிளம்பி இருக்கின்றார்கள்.

" குழந்தைப் பிள்ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது " என்னுமாப் போல் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம் அமெரிக்கா அவுஸ்திரேலியா நோர்வே இந்தியா என்று குழந்தைப் பிள்ளைகளின் கைகளில் சீவன் போகும் விளையாட்டில் சிக்கிக் கொண்டுள்ளது.

புதுப் பானை எடுத்துப் பொங்கலிடுகிறார்களோ இல்லையோ கையில் கிடைத்த தட்டுமுட்டுச் சாமான்களுடன் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கின்றார்கள் தமிழ் நாட்டிற்கு.

தமிழ் நாட்டில் மட்டும் என்ன வாழுதாம். புதுக்கதிர் வெட்டி பொங்கலிட அரிவாள் தூக்குகின்றார்களோ இல்லையோ ஆளை வெட்ட அரிவாள் தூக்கிக் காட்டுகின்றார்கள்.

சந்தி சிரிக்கச் சண்டை போட்டுக்கொண்டே பொங்கல் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கின்றார்கள். மனதில் பொங்க வேண்டிய அன்பு பொங்கக் காணோம்.

தமிழன் என்றால் ஒரு இனம் என்பதை மறந்து வீட்டுக்கொரு சாதி வீதிக்கொரு நீதி பேசித்திரியும் இனமாகி விட்டது தமிழ் இனம்.

" நான் " பெரிது .. " நீ " பெரிது என சண்டை போட்டு " நாம் " தாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

" சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காதவர்கள் " அல்ல நாங்கள், சொந்த சகோதரர்களை துன்பத்தில் போட்டு கொலை செய்வதில் சிந்தை மகிழ்பவர்கள் நாங்கள்.

இந்த நிலை மாறி தமிழராய் வாழ வேண்டும் என்று எண்ணுவோம்.

" பொங்கல் பொங்குகின்றதோ இல்லையோ இம்முறை இந்தக் கோபம் பொங்கட்டும் "


பொங்கலோ பொங்கல்.

No comments: