Sunday, January 01, 2006

தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு

இன்று விடுதலை வேண்டிப் போராடுகின்ற இனக்குழுமங்களாக ஈழத் தமிழ் மக்களும் காஸ்மீர மக்களும் இனம் காணப் பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற பல இனக்குழுமங்களுள் காஸ்மீரம் நீண்ட கால வரலாறும் தொடர்ச்சியான வெளிப்பாடும் கொண்டது. அதே போல இலங்கையின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கும் உண்டு.

காஸ்மீரத்தின் சுதந்திரம் , பாகிஸ்தானிய படைகள் காஸ்மீரத்துள் புகுந்தபோதும் மன்னனின் சூழ்நிலை இந்தியாவை வலிந்து அழைக்கவேண்டியதாகிப் போனபோதும் பறிபோயிற்று. இன்று வரை தொடரும் போராட்டம் இரத்தமும் சதையுமாக குதறிப் போடும் அவலங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழத்தின் சுதந்திரம் 1505 இல் போத்துக்கேயர் கடற்கரையோரம் கால் வைத்தபோது பறிபோயிற்று. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சி முறை வசதிக்காக ஒன்று சேர்ந்து இலங்கையானபோது அதன் எல்லைகளும் காணாமற்போயிற்று. தொடர்ந்து ஐந்து நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சியின் முடிவிலும் அரசியல் தொலைநோக்கற்ற தமிழ் அரசியல் வாதிகளின் முடிவுகளால் சிங்களப் பேரின வாதிகளின் கால்களுக்கிடையில் சிதைந்து கொண்டிருக்கின்றது.

இன்றளவும் உலக வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப பந்தாடப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரத்தில் இன்று பாதுகாப்பிற்கெனச் சென்ற இந்தியப் படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? ஒருவேளை காஸ்மீரம் இந்தியாவின் உதவியை நாடியிராவிட்டால் பாகிஸ்தானின் பஞ்சாப் போன்றோ இல்லை பலூசிஸ்தான் போன்றோ பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கக் கூடும் என்று கருத்துக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஆனாலும் இப்பொழுதும் அதைவிடச் சிறந்த முறையில் தானா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ?

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையில் இருந்து தங்களை காத்தருளும் இரட்சகர்கள் என எதிர்பார்த்திருந்த தமிழ் ஈழ மக்களுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பரிசுதான் என்ன ? அவர்கள் இராணுவ வாகனங்களின் சங்கிலிப் பாதங்களுள் அரைபட்டு இரத்தமும் சதையுமாக சிதைந்து போனதைவிட வேறு என்ன பரிசு கிடைத்தது.

இந்தியா என்பதையும் விட தாய்வழிப் பந்தம் வேரடி மண் என்று காலாதி காலம் நம்பியிருந்த தமிழக மக்களும் தலைவர்களும் கூட மெளனமாகிப் போயிருந்தார்களே ? இன்று வரை தனது பிராந்திய நன்மைகள் என்ற குறுகிய வட்டத்துள் நின்றே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பதைத் தவிர இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது ?

ஆறரைகோடி தமிழ் நாட்டவர்களின் உறவுகளில் ஏற்படாத கரிசனை சிங்களவர்களின் பால் ஏற்படுவதற்கு இந்தியா இதைவிட வலுவான என்ன காரணத்தைக் கூறுக்கூடும்.

முன்னை நாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் மரணம் தான் காரணம் என்று கூறிக்கொள்ள முனையலாம். அப்படி என்றால் சமாதானப் படைகள் ஈழத் தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்ததற்கு என்ன காரணம் இருக்கமுடியும்.

இரண்டு பெரும் போர்களையும் தீவிரவாதத்திதின் தாக்குதல்களையும் இந்தியாவிற்குப் பரிசளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் எப்படி நேசக் கரம் நீட்டுகின்றார்கள். தீவிரவாதம் என்னும் பாஷை யில் பேசிக்கொண்டிருக்கும் பா கிஸ்தா னை விட தமிழ் ஈழம் எப்படி இந்தியாவிற்கு ஆபத்தானதாய் இருக்கமுடியும். இலங்கயின் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய நேரடி வாரிசுகளின் குடியுரிமையைப் பறித்ததிலிருந்து இரஜீவ் காந்தியை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபின் துப்பாக்கியால் அடித்தது வரை செய்தது சிங்களவர்கள் அல்லவா ? அவர்களுடன் வராத கோபம் ஈழத்தமிழ் மக்கள் மேல் வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இந்தியப் பகிஷ்கரிப்பு என்ற பெயரில் இந்தியப் பொருட்களைத் தீயிலிட்டு எரித்த கட்சிகளுடன் கூடிக் குலவுவதில் இந்தியாவிற்கும் அதன் அரசியல் கட்சிகளுக்கும் எந்த வெட்கமுமில்லை.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழ் ழ் மக்கள் சார்பாக கருத்து சொல்வதை மட்டும் கொச்சைப் படுத்துவதில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வசதியான வாழ்வுடையவர்கள். மலையகத்தமிழர்கள் தான் இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்ற கருத்தும் முன் வைக்கப் படுகின்றது. அப்படி ஸ்மாட் ஆக சிந்திக்கும் படியும் கருத்து விதைக்கப் படுகின்றது. தமிழ் ஈழத்தின் சுதந்திரப் போராட்டம் முன்னர் எப்படியிருந்த போதும் இப்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கான பொதுவான போராட்டமாக பரிணமித்துள்ளதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் தவறுகள் ஏற்படுவதும் பின்னர் திருத்தப் படுவதும் இயல்பானதே.

இதற்காகவே சொல்லி வைத்ததுபோல் போராட்டத்தின் முன்னோடிகளாக இருந்து கருத்து மோதல்களால் மரணித்த பத்மநாபா, சிறீசபாரட்ணம் போன்றோரின் மரணங்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன. மிகவும் துக்கரமான தவறுகள் இவை என்றாலும் போராட்டத்தின் ஆரம்பகால தவறுகள் இவை என்பதற்கப்பால் தமிழகத்தமிழர்களின் உணர்வுகளை வேறு எவ்வாறு பாதிக்கக் கூடும்.

நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்களும் சித்திரவதை செய்யப் பட்டு சீரழிக்கப் படும் அபலைகளும் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா?

இவையெல்லாம் இந்திய மேலாண்மை அரசின் போக்கை கேள்வி கேட்கவோ எதிர்ப்புக் காட்டவோ தமிழக மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதுமான காரணங்களாக இல்லையா? ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டதி ற்கான எதிர்ப்பிற்கு இந்தியாவின் பிராந்திய வல்லரசுப் பார்வை தவிர்ந்த வேறு ஏதாவது காரணங்கள் இருக்க முடியுமா ?

இன்று உலக நாடுகளுடன் இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கை பல நோக்கங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களின் அபிலாசைகளின் போக்கில் வளைத்தெடுக்கும் நோக்கிலேயே என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனும் நன்கு புரிந்தே இருக்கின்றார்கள். உலக நாடுகள் எவற்றையும் விட இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவையும் அனுசரணையையும் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். காரணம் பாரம்பரிய தொப்பூழ்கொடியுறவு தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஈழத்தமிழ் மக்களைப் போலவே காஸ்மீர மக்களும் இந்தியாவினதும் பாகிஸ்தானதும் உலக வல்லரசுகளினதும் பகடைக் காய்களாக இருப்பதைத் தவிர போராட்ட வடிவத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை. நோக்கமும் வேற் வேறாகவே காணப்படுகின்றன என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் ?

12 comments:

Kanags said...

பதிவுக்கு நன்றி.

இளந்திரையன் said...

உங்கள் வருகைக்கு நன்றி கனகாஸ்

முகமூடி said...

நல்லதொரு பதிவு இளந்திரையன். இதன் தொடர்ச்சியாக எழும் விவாதங்கள் என் போன்றோருக்கு (எனக்கு மட்டுமாவது) பயனாக இருக்கும். காத்திருக்கிறேன்.

இளந்திரையன் said...

வருகை தந்தமைக்கு நன்றி முகமூடி...இன்னும் விரிவாக எழுதவேண்டும் என்வே எண்ணியிருந்தேன். ஆனாலும் ஈழத்தமிழர் போராட்டத்தில் இன்றைய நிலமையில் தமிழக சகோதரர்களின் நாடித்துடிப்பு எவ்வாறு இருக்கின்றது எனப் பார்க்கும் நோக்கிலேயே ஒப்பீட்டை முழுதாக எடுத்து வரவில்லை. அண்மையில் அன்னையர் முன்னணித் தலைவி பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் தலமையில் கவிஞர் இன்குலாப்பும் கலந்து கொண்ட கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. இன்னும் எவ்வகையில் தமிழக மக்களின் மன மாற்றங்கள் வெளிப்படுமென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

thamillvaanan said...

வணக்கம் இளந்திரையன்,
உங்கள் பதிவுக்கு நன்றிகள்.
அண்மையில் ஈழத்துப்பிரச்சனை பற்றிய எதிரொலிப்புகள் மீண்டும் தமிழகத்தில் அதிகரித்துவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. இது உண்மையில் மிகவும் மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயமாகும். அதன் துடிப்புக்ளை தமிழ்மணத்திலும் அவதானிக்ககூடியதாக இருக்கிறது.

மீண்டும் உங்கள் பதிவுக்கு நன்றிகள். பல விரிவான பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

அன்புடன்
தமிழ்வாணன்

இளந்திரையன் said...

உங்கள் வருகைக்கு நன்றி தமிழ்வாணன்....

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு இனத்தின் குரல் இந்திய அரசு இயந்திரத்தினாலோ மேல்தட்டு அரசியல்வாதிகளாலோ புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்பதைவிட சகோதர தமிழக மக்களினால் புரிந்து கொள்ளப் பட வேண்டியதன் அவசியம் கருதியே இந்த முயற்சி....தமிழகத்தின் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈழமக்களின் துடிப்புகள் பகிரப்பட வேண்டும் என்பது எனது எண்ணம். வருகைக்கு மீண்டும் நன்றி

Anonymous said...

நல்ல விவாததிற்கு ஓர் தொடக்கப்புள்ளியாய் இக்கட்டிரை திகழும் என நம்புவோம், இளந்திரையன். இந்திய அரசின் நிலையில் இருந்து பார்த்தால் வெளிப்படையாக ஈழ விடுதலைக்கு ஆதரவளிப்பதில் பல உள்சிக்கல் உள்ளன.

நான் என்ன சொன்னாலும் அது வெளியாளின் சொல்லாகவே இருக்கும். எனக்கு அவ்விடத்து உண்மை நிலவரம் தெரியாது. இருந்த போதும் கேட்கிறேன். தனி நாடு என்ற நிலையிலிருந்து இறங்கி, ஓர் தேசியத்தின் கீழ் தமிழரும் சிங்களவரும் வாழ, தமிழர் சார்பிலிருந்து முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டனவா? தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். விவாதத்திற்காக அல்ல.

இளந்திரையன் said...

உலக அரசியல் பொருளாதார நிலமைகளைக் கருத்தில் கொண்டு அனுசரணை நாடுகளால் முன்மொழியப்பட்ட சமஸ்டி முறைத் தீர்வுக்கு உட்படுவதற்கு யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட தமிழர்தரப்பும் ஒத்துக்கொண்டுள்ளது. அதன்பிரகாரம் கடந்த ஆண்டுகளில் சுவிஸர்லாந்து.கனடா போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள சமஸ்டி அரசியல் அமைப்பு முறைகள் ஆராயப் பட்டிருக்கின்றன.

இந்திய அரசியல் அமைப்பான மாகாணங்களுக்கிடையிலான கூட்டாட்சி அரசியலமைப்பில் கொடுக்கப்படும் அதிகாரங்களை விட மேம்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் அவ்வமைப்பு முறைகளையே அனுசரணை நாடுகள் அமெரிக்கா உட்பட முன் மொழிந்துள்ளன. இருந்தபோதும் தொடரும் பேச்சுவார்த்தைகளுக்கூடாகவே எவ்வகையான தீர்வு என்பது இறுதி செய்யப்படும்.

உங்கள் வருகைக்கும் நன்றி சித்தார்த்....

பிருந்தன் said...

மிகவும் நல்லதொரு பதிவு இளந்திரையன், இது போன்றபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

பிருந்தன் said...

இந்திய அரசியல் அமைப்பான மாகாணங்களுக்கிடையிலான கூட்டாட்சி அரசியலமைப்பில் கொடுக்கப்படும் அதிகாரங்களை விட மேம்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் அவ்வமைப்பு முறைகளையே அனுசரணை நாடுகள் அமெரிக்கா உட்பட முன் மொழிந்துள்ளன. இருந்தபோதும் தொடரும் பேச்சுவார்த்தைகளுக்கூடாகவே எவ்வகையான தீர்வு என்பது இறுதி செய்யப்படும்.

சாதாரன சுனாமிகட்டமைப்புக்கே தடை விதித்த இலங்கை அரசின் நீதிமண்றம்,
கூடிய அதிகாரங்களை தமிழர்கு தருமா?
சிங்கள அரசயந்திரத்தின்மீது உங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறதா?

இளந்திரையன் said...

சிங்கள அரசியந்திரத்தின் மீது தமிழர்களிக்கிருந்த நம்பிக்கை பறிபோனதே இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும். ஆனால் உலகநாடுகளின் மீதும் அந்நாட்டு மக்கள் கொண்டிருக்கும் மனிதாபிமானத்தின் மீதும் நம்பிக்கை இருக்கின்றது. எத்தனையோ கொடுங்கோலர்களையும் அவர்கள் கொண்டுவந்த பெரும் போர்களையும் அழிவுகளையும் தாண்டி உலகம் இன்னும் தழைத்துக் கொண்டிருப்பதே என் நம்பிக்கையின் உரம்.

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி பிருந்தன்...

இளந்திரையன் said...

உங்கள் வரவிற்கு நன்றி eswarvaddam....

இந்திய அரசு மட்டுமன்றி இந்திய மக்களும் தமிழீழ மக்களும் தமது நண்பர்கள் யார் ? பகைவர்கள் யார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்..இன்றைய உலகப்போக்கில் எமது நாளைய இருப்பை உறுதி செய்ய இது உதவும்....