Thursday, February 16, 2006

கவிதையும் சமயமும்

அழகாயிருக்கலாம் அல்லது அவஸ்தையாயிருக்கலாம் 'பச்' என்று மனதோடு ஒட்டிக் கொள்வது நல்ல கவிதையாயிருக்கும். கவிதை மனதோடு சம்பந்தப்பட்டது. அதற்கு கோட்பாடுகள் கிடையாது. கோட்பாடு அறிவோடு சம்பந்தப்பட்டது. சமயமும் கோட்பாடுகள் அற்றது. கொள்கை கொண்டது. அதனால் தான் அறிவியல் ஒன்றாயிருக்கும் போது சமயம் பலவாயிருக்கின்றது. விதிகளற்றது. நிரூபணத்திற்கு அப்பால்பட்டது. நம்பிக்கை சார்ந்தது.

கவிதையும் மனதோடு சம்பந்தப்பட்டது. மனதில் நின்ற அனுபவங்கள், மனதில் எழுந்த சிந்தனைகளைச் சொல்லப் போவது. வாழ்க்கை பற்றிய மனித மனத்தின்
நம்பிக்கைகளைச் சொல்லப் போவது. அறிவின் தேடலின் பாதை குறுகியது. விதிகளின் வீச்சில் சுருங்கியது. நெகிழ்வுத்தன்மையற்றது. கவிதை நெகிழ்வுத் தன்மை கொண்டது. விட்டு விலகலும் ஒட்டி வருதலும் சாத்தியமானது.

"நல்ல கவிதையின் உச்சநிலை சமயத்தின் கீழ் நிலை. நல்ல கவிஞர்களின் தேடல் சமயத்தில் சென்று கலப்பதைத தவிர்க்க முடியாது" - ஓஷோ

நல்ல கவிதையின் தேடல் வாழ்க்கை பற்றியது. வாழ்க்கையின் தேடல், பிறந்ததன் காரணம் பற்றியது. சமயத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாக/பாடல்களாக இருந்திருக்கின்றன. சமய குரவர்கள் சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கக் கூடும். வாழ்க்கை பற்றிய தேடல் சமயத்திற்கு இட்டுச் சென்றிருக்கக் கூடும். பைபிள் வாசகங்கள் சங்கீதமாக இருக்கின்றன. ஜென் தத்துவங்கள் கவிதைகளாக இருக்கின்றன.

"பழைய குளம், அதில்
எட்டிக் குதித்தது தவளை
தண்ணீரின் ஓசை "
ஜென் தத்துவமொன்று.

" நாதமே பிரம்மம்"

ஓம் என்பது பிரணவம். பிரணவம் பிரபஞ்சமடக்கியது. பிற்காலத்தில் கண்ணதாசன் நல்ல கவிஞனாக இருந்தான். கவிதையின் உச்சத்தில் சமயத்தைச் சென்றடைந்தான். அர்த்தமுள்ள இந்து மதமும் யேசு காவியமும் படைத்தான்.

மிக மேலான கவிதை , ஆன்மீகத்தின் கீழ்நிலை வடிவம்- அதுதான் அவை சந்திக்கும் புள்ளி.

"நீராடை போர்த்திய பூமி
நிமிடத்தில் நீங்கும் காற்று
நிலவுக்கும் கதிருக்கும்
பிரித்த பொழுது
பஞ்சமேயில்லாத
பிரபஞ்சம்
நடுவில் 'நான்' "

பிரமிப்பாய் இருக்கின்றது.

"மதத்திற்கும் கவிதைக்கும் ஒரே மொழிதான்.
சொற்கள் வேறுபடும். ஆனால் அவை ஏதாவது புள்ளியில் சந்தித்து விடும். அந்த சந்திப்பு மையம் தான், அந்தக் கவிதையின் கரு.- ஓஷோ

1 comment:

Kanags said...

வணக்கம் இளந்திரையன்

தங்கள் //ஈழத் தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் - இந்திய மக்களுக்கு ஒரு விளக்கம்// என்ற பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் தலைப்பு மிகவும் நீண்டிருப்பதால் என நினைக்கிறேன். தலைப்பின் நீளத்தைக் குறைத்து தயவு செய்து மீண்டும் பதியுங்கள்.

நன்றி.