Saturday, February 25, 2006

ஈழத்தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள்

ஈழத்தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் -இந்திய மக்களுக்கு ஒரு விளக்கம்
----------------------
ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம்
அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப் படலாமாம். எந்த நூற்றாண்டுக் கதை இது என்பது விளங்கவில்லை. அவை ஏற்கனவே பாகிஸ்தானின் ஏவுகணைகளாலும் சீனாவின் ஏவு கணைகளாலும் குறிவைக்கப்பட்டுத்தான் இருக்கின்றது என்பதை யாராவது அவருக்குக் கூறுங்கள். இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புச் செலவினம் கூடுகின்றது என்ற ஒரு பட்டியல் வேறு. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்கி அழிக்க முயல்கிறது. செலவு கூடுகின்றது. சர்வ வல்லமை படைத்த பிராந்திய வல்லரசு இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகளும் பல பில்லியன்களில் தான் இருக்கின்றது. ஏன் என்று கேட்கின்றோமா?

ஈழப் போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான -பிறிதொரு இனத்தால் சகல வழிகளிலும் ஒடுக்கப்பட்டதனால் அவ்வொடுக்கு முறையில் இருந்து விடுபடவும், தப்பி உயிர் வாழவும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கவும் நடை பெறுகின்ற போராட்டம். வல்லரசு ஆசையிலோ அன்னிய நாடு பிடிக்கும் ஆசையிலோ நடத்தப்படுவதல்ல. இந்த இனவிடுதலையில் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஈழத்தமிழ் மக்களால் தங்களுக்காக நடாத்தப் படும் இன விடுதலைப் போர். பலஸ்தீன மக்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறீர்களே, அப்படியொரு ஆதரவைத் தான் உங்களிடமும் மற்றும் நாடுகளிடமும் எதிர்பார்த்தோம். ஆதரவு தருவதாக வந்தீர்கள். இலங்கையை உங்கள் அடிதொழும் நாடாக வைத்திருப்பதற்காக தமிழர்களுக்கு உதவுவது போல உதவினீர்கள். பிற நாடுகளின் கருத்துக்களையோ ஐ.நாவின் அபிப்பிராயத்தையோ எதிர்பாராது சோத்துப் பார்சல் போட்டீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறியது. சிங்கள அரசு ஓடி வந்து உங்களுடன் ஒப்பந்தம் போட்டது. உங்கள் இராணுவம் தமிழ் மண்ணிற்கு வந்தபோது பூரண கும்பம் வைத்து சந்தன மாலை போட்டு வரவேற்றோம் ஐயா. எங்களை ராங்கிகளின் சங்கிலியின் கீழ்ப் போட்டு அரைத்துப் போட்டீர்களே. பெண்களையெல்லாம் கற்பழித்து பெண்ணுறுப்பில் குண்டு வைத்து வெடித்தீர்களே. எதைச் சொல்வது எதை விடுவது. சமாதானப் படையாக வந்த நீங்கள் இரண்டிலொரு பகுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் விட்டு விலக விரும்புகின்ற பட்சத்தில் அந்தக் கணத்திலேயே "நீங்களே என்னவோ செய்து கொள்ளுங்கள் நாங்கள் போய் வருகின்றோம் "என்று கனவான்களாக திரும்பிப் போயிருக்க வேண்டும். அகிம்ஸை தேசத்தின் புகழ் வான் முட்டியிருக்கும். யாருக்குப் பாதுகாப்பு என்று ஓடிவந்தீர்களோ அவர்களையே சுட்டுப் போடுவது எந்த விதத்தில் நியாயமானது. இரஜீவ் காந்தியின் மரணம் பற்றி பேசுகிறீர்கள். யார் முதலில் துப்பாக்கி ஏந்தியது. சண்டையை வலிந்து திணித்தது. இந்திரா காந்தி சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். கண்ணைப் போல காத்த பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். நீங்களும் ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை வீதிகளில் கொன்று போட்டீர்கள்.அத்துடன் பிரச்சனையை முடித்து விட்டீர்களே. இதோ ஒரு சீக்கிய மகனிடமே நாட்டை நம்பி கொடுத்திருக்கிறீர்களே. இன்னும் சீக்கியர்களுடன் விரோதமா பாராட்டுகிறீர்கள்.

ஈழத் தமிழ் மக்களுடன் உங்களுக்குத் தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவிற்கு அயல் நாடுகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவு சாத்தியமாகும். அன்றைய தினம் பாகிஸ்தானும் சீனாவும் பங்களாதேசமும் உலகப் படத்தில் இருந்து இல்லாது போக வேண்டும். அந்த நல் நாள் உங்கள் கனவு நிறைவேறும் நாள்.

இராணுவம் என்பது அரசின் அடக்குமுறைக்கான ஒரு ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத ஒரு இராணுவம் ஒரு மண்ணில் இருக்கின்றதென்றால் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது அர்த்தமாகின்றது. ஐ.நா வின் அனுமதி இன்றி அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குச் சென்ற போது அது ஆக்கிரமிப்பு யுத்தம் என்று உங்கள் படைகளை அனுப்பாது மெளனம் காத்தீர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர் தரப்பின் எந்த சம்மதமும் இல்லாத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வந்தீர்கள். தமிழர் தரப்பிற்காக சிங்கள அரசுடன் நீங்களே ஒப்பம் இட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்போது இந்தியாவின் குடிமக்கள் ஆனோம். பாதுகாக்க வந்தவர்களே எம்மக்களை கொன்று கொன்று பாடையில் அனுப்பினீர்கள்.

நீங்கள் செய்தது சரியென்றால் தமிழ் நாட்டுமக்கள் உங்களைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க வேண்டும். செய்யவில்லையே. ஈழத்தமிழ் மக்களா சொன்னார்கள் வரவேற்பு அளிக்க வேண்டாமென்று. இல்லையே, சகோதர மக்கள் துன்பத்தில் செத்தொழிந்தது கண்டு இரத்தக் கண்ணீர் விட்ட தமிழ் சகோதரர்கள். தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல் ஒரு மனத்தாங்கல் உண்டு. தாங்கள் போற்றிய தலைவனைக் கொன்று போட்டார்கள் என்று. தங்கள் தலைவன் தாண்டவம் ஆடும் போது தடுக்காது விட்டதனால் அத்துர் மரணத்தில் அவர்களுக்கும் பங்குண்டே. யாரால் மறுக்க முடியும்.

இத்தனைக்கும் காரணம் ஹிந்திப் பெரும்பான்மையைக் கொண்ட இராமாயண இராமனின் மேலாண்மையை விரும்பும் நடுவண் அரசின் நீதியில்லாத நடைமுறையே. தமிழ் நாட்டு மக்கள் சொன்னால் உடனும் கேட்டு செயல்படுத்தக் கூடியவர்களா அவர்கள். யார் யாரினதோ முதுகில் ஏறி ஆட்சி செய்பவர்கள் சொல் கேட்பார்களா? இல்லாவிட்டால் ஒரு மாநில மக்களின் ஜீவாதார உரிமையான காவேரித் தண்ணீருக்கே இத்தனை காலம் கடத்துவார்களா? ஏன் நீங்களும் இந்தியக் குடி மக்கள் தானே ? ஏன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இழுத்தடிக்கப் படுகின்றது. யாராவது கேட்க முடியுமா? கேட்டது கிடைக்காவிட்டால் உங்களால் அவர்களை என்ன செய்து விட முடியும். 21 ஆம் நூற்றாண்டிலும் வயிற்றுப் பசிக்காக எலிகளைச் சாப்பிடும் மக்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பாவப்பட்ட மக்களை ஒரு வல்லரசின் போட்டியாகப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா? தமிழீழம் தான் உங்களுக்கு ஆபத்தென்றால் பாகிஸ்தானும் பங்களாதேசமும் உங்களைக் கபளீகரம் செய்து விட எத்தனை நேரம் ஆகும். அவ்வளவு வல்லமையற்றதா இந்திய நாடு . நடுவண் அரசின் பூச்சுற்றல்களைத் தங்கள் பிரச்சாரப் பீரங்கிகளில் ஊதிக் கொண்டிருக்கும் இவர்களை எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறீர்கள். இரஜீவை துப்பாக்கியினால் அடித்த சிங்களவருடன் உங்களுக்கு அப்படியென்ன பற்றுதல். சிங்களவர்க்கும் இன்னும் புரியவில்லை தாங்களும் பலியாடுகளே என்று. தெரிகின்ற காலம் வரும். அப்போது இதே போராட்டம் தமிழ் சிங்களம் என்ற இரு நாடுகளில் நடக்கக் கூடும்.

ஈழத்து மக்கள் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்களா? இல்லை இந்தியா ஈழத்தமிழ் மக்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றதா? 1991 இரஜீவின் மரணத்தின் பின்னால் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம். இந்தியாவால் ஈழப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சீண்டல்களுக்கு எங்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.

நாம் இந்தியா என்று நினைப்பது தமிழ் நாட்டு மக்களைத் தான். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றது. நிறைந்தளவு சாட்சியங்கள் இருக்கின்றது. எங்கள் மன்னன் எல்லாளன் ஒரு சோழ இளவரசன் தான். 44 ஆண்டுகள் அநுராத புரத்திலிருந்து அரசாண்டான். இராசேந்திர சோழமன்னன் பொலநறுவையில் இருந்து அரசாண்டான். வெள்ளையருக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே கிடையாது. சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழ் நாடுகள் இருந்தது. அவற்றுடன் எங்களுக்கு இரத்த உறவுகள் இருந்தது. நீங்கள் இந்தியராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தமிழர்கள். அந்த உறவுதான் எங்களுக்கும் உங்களுக்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் எதுவும் கிடையாது.

எங்கள் போராட்டம் எங்கள் எங்கள் இருப்புக்கான போராட்டம். யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நடந்தே தீரும். சரித்திரம் அப்படித்தான் சொல்கின்றது. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை எந்த ஆயுதமும் நசித்துவிட முடியாது.

அன்பர் பாஸ்டன் பாலாஜியின் "இந்தியாவும் வான் புலிகளும்" பார்க்க www.tamiloviam.com/unicode/06300505.asp

3 comments:

ஈழபாரதி said...

அருமையான பதிப்பு தொடர்ந்து இது போன்ற பதிவுகள் பதிக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

இளந்திரையன், நல்ல பதிவு.

உங்கள் தனி இடுகைகளில் பின்னூட்டம் மறைக்கப்பட்டிருக்கின்றது. முழுப் பதிவுக்கும் சென்றே பின்னூட்டம் இடவேண்டியிருக்கின்றது. உங்கள் பதிவின் templateஐ ஒருக்கால் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இளந்திரையன் said...

உங்கள் வரவிற்கு நன்றி ஈழபாரதி மற்றும் கனக்ஸ்.

கனக்ஸ், அது தான் எப்படி என்று விளங்கவில்லை. நானும் தெரிந்தளவில் முயன்று பார்த்து விட்டேன். சரிவரவில்லை. ஏதாவது வழி முறைகள் இருந்தால் அறியத்தாருங்கள். நன்றி

எனது email : ilanthirayan@hotmail.com