Thursday, April 20, 2006

பேச்சு வார்த்தை - ஒரு கபட நாடகம்

மூன்று தசாப்தங்களின் மேலாக வாழ்வதற்கான போராட்டம் என்ற ஆயுதப் போராட்டத்தினுள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவலங்களை தீர்க்கும் நோக்கிலேயே பெருமெடுப்பில் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேசசமூகம் கூறிக்கொள்கின்றது.

பேச்சு வார்த்தைகள் எதைப் பற்றியது என்பதையும் பேச்சு வார்த்தைகளால் அடையவேண்டிய இலக்குகள் எது என்பதையும் நன்கு தீர்மானித்து அதன் திசையில் நகர்வதே பேச்சு வார்த்தைகளில் இருந்து உரிய பலனைப்பெற இயலும். அவ்வாறு இல்லாது எதற்காகப் பேசுகின்றோம் என்ற இலக்கேயில்லாது பேசிக் கொண்டிருப்பதால் எதுவித பயனும் விளையப் போவதில்லை.

அத்தகைய ஒரு இலக்கற்ற பேச்சு வார்த்தை பற்றியே சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ஆரவாரமாகப் பேசிக் கொள்கின்றன.

இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் சிங்களம் என்ற இரு வேறுபட்ட கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட இரு பெரும் இனங்களுக்கிடையில் எழுந்துள்ள வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும் பற்றியதே இன்று இலங்கையில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைக்குக் காரணமாகும்.

ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முயலும் போது அடக்கப்படும் இனம் தன் உரிமைக்காகப் போராடுவது பல சந்தர்ப்பங்களில் சரித்திரத்தினூடு பதிவு செய்யப் பட்டுள்ளது. உலகின் பலதிசைகளிலும் வெடித்து நிற்கும் போராட்டங்கள் மக்களின் உரிமையும் சுதந்திரமும் வேண்டிய போராட்டங்களே.

இலங்கைத் தீவில் அடக்கும் இனமாக சிங்களமும் அடக்கப்படும் இனமாக தமிழ் தேசியமும் அதனால் போராடும் இனமுமாக நாங்கள் இருக்கின்றோம். சர்வதேச வரையறைகளுக்குள்ளேயே இவ்வாறு முரண்பட்ட பல இனங்கள் ஒன்றுக் கொன்று காத்திரமான விட்டுக்கொடுப்புகளுடன் தமக்குள் இணைந்து சம உரிமையுடன் வாழ்கின்றன.

இதை புரிந்து கொள்ளக் கூடிய சர்வதேச சமூகத்தின் அரசுகளால் இலங்கைத் தீவின் பிரச்சனையைப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது என்பதை யாரும் நம்பத் தயாராயில்லை. அடிப்படைப் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கும் அதற்கான தயாரிப்புக்கும் இலங்கை ஆட்சி வர்க்கத்தை தயார் படுத்துவதே இவர்கள் முன்னாலுள்ள முதல் கடமையாகும். இது இரு இறைமையுள்ள இனங்களுக்கிடையேயான பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முன் வராத மன நிலையுடன் ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கி விடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சிங்களப் பெரும்பான்மையுடன் எதைப் பற்றிப் பேசுவது என்பதை சர்வதேச சமூகம் தான் சொல்ல வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனையின் வரலாற்றுக் கால நகர்வில் நடாத்தப் பட்ட வட்ட மேசை மாநாடுகளும் திம்பு முதல் பாங்கொக் ஒஸ்லோ பேச்சுகளைத் தொடர்ந்து இறுதியாக ஜெனிவாவில் நடை பெற்ற பேச்சுகளில் இருந்தும் நாம் பெற்றுக் கொண்டது தான் என்ன?

அண்மையில் நடைபெற்ற திருகோண்மலை சம்பவங்களைப் பார்க்கும் போது மீண்டும் 58 ஆம் ஆண்டின் இருண்ட கற்கால மன நிலையிலேயே சிங்களச் சாதாரண மக்களும் இராணுவமும் சிங்கள அரசாங்கமும் இருப்பதையே நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இவர்களுடன் -இத்தகைய ஆதிக்க வெறியுடன் காட்டிமிராண்டி மன நிலையில் இருக்கும் இவர்களுடன் - எதனைப் பற்றிப் பேசுமாறு சர்வதேசம் தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் பகிரங்கப் படுத்த வேண்டும். ஜெனிவா பேச்சுக்களில் எட்டப்பட்ட உயர் பாதுகாப்பு வலைய அகற்றலும் ஒட்டுக் குழுக்களின் களையெடுப்பும் என்பதுவே இன்னும் நிறைவேற்றப் படாத சூழலில் அடுத்து பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்பதைக் கூற வேண்டும். . ஒரு இனம் தொடர்ந்தும் அடக்கப் படுவதும் வீதியிலும் வீட்டிலும் வைத்து கொல்லப்படுவதையும் கொழுத்தப் படுவதையும் வாளாவிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் எதைப் பற்றிப் பேச வேண்டி வலியுறுத்துகின்றது என்பதை தெளிபு படுத்த வேண்டும்.

சர்வதேச சமூகம் என்ற கோதாவில் களம் இறங்கியுள்ள அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜப்பானும் தங்களுக்கான அரசியல் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சாதகமான சூழலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கொண்டு வர கொண்டையை அள்ளி முடிந்து கொள்ளும் அவசரத்தில் காரியங்களை நகர்த்த முற்படுகின்றன.

அபரிமிதமான வேகத்தில் முன்னேறி வரும் சீனாவின் பொருளாதார இராணுவ வல்லமை இந்நாடுகளின் உலக வல்லாதிக்கக் கனவுகளை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வேரறுத்து விடக் கூடும் என்ற அச்சத்தின் உந்துதலினாலேயே அவசரக் கோலத்தில் இப் பிராந்திய நிலமைகளை சீர் செய்து தமது கால்களை ஆழப்பதிக்கும் நோக்கில் செயல் படுகின்றன. எதிர் காலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டிக்கான களத்தில் திருகோணமலையின் இயற்கைத் துறைமுகம் பாரிய பங்களிப்பைச் செய்யக் கூடும் என்பதே சர்வதேசம் என்ற போர்வையில் இவர்கள் எம் சுதந்திரப்போரில் மூக்கை நுழைக்கப் பெரிதும் காரணமாக இருக்கின்றது.

எண்ணை வலய நாடுகளில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் இராட்சத எண்ணெய்க் கம்பனிகளின் ஆதிக்கத்தையும் எண்ணெய் விற்பனையில் அமெரிக்க டொலரின் பிடியையும் முடிவுக்குக் கொண்டு வரவும் டொலருக்குப் பதிலாக யூறோவை மாற்றீடாகக் கொண்டுவரவும் ஈராக்கும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளும் எடுத்த முயற்சியை நசுக்குவதையே நோக்கமாகக் கொண்டு ஈராக் மீது படை எடுத்தன. ஆனால் சொல்லப் பட்ட காரணங்களோ வேறு. அவை அத்தனையும் பொய் என்பது ஈராக் கைப்பற்றப் பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

அத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான மத்திய , கிழக்கு ஆசியாவிற்கான எரி பொருள் தன்னிறைவுக் கட்டமைப்பு என்ற ஈரானின் பாகிஸ்தானுக்கூடான இந்தியாவிற்கான நிலத்தடி எரிவாயுக் குளாய்த் திட்டத்தையும் முறியடிக்கும் வகையில் அவசர அவசரமாக இந்தியாவுடன் அனல் மின்நிலையத்திற்கான உதவி என்ற பெயரில் இந்தியாவையும் தனது வலையில் அமெரிக்கா வீழ்த்திவிட்டுள்ளது. எதிர்கால சர்வவல்லமை வாய்ந்த சீனாவினால் வரக்கூடிய ஆக்கிரமிப்பு என்ற பயத்தை பூதாகாரப் படுத்தி அமெரிக்கா இதைச் சாதித்துள்ளது. எதிர்காலப் பேயைப் பார்த்து இன்றைய பூதத்திடம் இந்தியா வகையாகச் சிக்கிக் கொண்டுள்ளது.

இவையெல்லாம் எமக்குக் கற்றுத் தருவது என்னவென்றால் சர்வதேசத்தின் ( என்று கூறிக் கொள்ளும் வல்லாதிக்க நாடுகளின் ) நலன் கருதிய திசையிலேயே உலகின் போக்கு ஒழுங்கு படுத்தப் படும் என்பதே தவிர ஒரு நீதியான போராட்டம் பற்றிய உண்மையான அக்கறை எதுவும் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது என்பதே.

பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி நசுக்கப் படுவதும் வேண்டாத காரணங்கள் தேடிக்கொண்டு வரப்பட்டு போராட்டத்தின் நோக்கத்தையும் மலினப் படுத்த பல சக்திகள் தீவிரமாகச் செயல் படுகின்றன. விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது சர்வதேசத்தின் இவ்வகையான ஒரு முனைப்பேயாகும்.

உலகெல்லாம் ஜனநாயகம் பற்றி பாடம் நடாத்தும் இவர்கள் தமிழ் மக்களால் கடந்த கால பொதுத் தேர்தல்களிலும் உள்ளூராச்சிச் சபைகளின் தேர்தல் முடிவிலும் எடுத்துரைத்த ஜனநாயக விழுமியங்களை கண்ணெடுத்தும் பாராது சுலபமாக தட்டிக் கழித்து விடுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பாலஸ்தீன ஹமாஸின் அரசாங்கத்தையும் ஏற்றுக் கொள்வது மறுதலிக்கப் பட்டதும் உதவிகள் திரும்பப் பெறப் பட்டதும் இதையே காட்டுகின்றது.

இவர்களின் நலன் சார்ந்த உலகின் போக்கில் ஒழுங்குபட முரண்படும் சக்திகளையும் நியாயங்களையும் இவ்வாறு வேரறுக்க முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் படும். ஆனால் உண்மையான நீதியான சுதந்திரப் போராட்டங்கள் தம் இலக்கினைச் சென்றடைவதை எவையும் தடுத்து விடமுடியாது என்பதற்கு வியற்நாம் போன்ற வீரம் செறிந்த வரலாறுகள் இன்றும் எமக்கு முன்னுதாரணங்களாகும்.

3 comments:

Anonymous said...

நல்ல அலசல். நன்றிகள்.

thamillvaanan said...

உங்களுடைய பதிவில் தன்னியக்கமாக யுனிக்கோட்டில் வாசிக்ககூடியதாக இல்லை.

எனவே கீழே குறிப்பிட்ட பகுதியை கெட் <head> பகுதிக்கு இடையே சேர்த்துவிடுங்கள்.

<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">

கருத்து எழுதுவதற்கான இணைப்பும் ஒவ்வொரு தனிப்பதிவிலும் காட்டப்படவில்லை. கவனிக்கவும். உதவி தேவையானால் மின்னஞ்சல் இடவும்.

அன்புடன்
தமிழ்வாணன்.

இளந்திரையன் said...

கனக்ஸ் , தமிழ்வாணன் உங்கள் கருத்துகளுக்கும் உதவிக்கும் நன்றிகள்.

-அன்புடன் இளந்திரையன்