Sunday, April 23, 2006

சர்வதேசமே சிந்தனை செய்

வடக்கு கிழக்கு இன்று மரணங்களின் பூமியாகி விட்டது. மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களின் துயரத்துடன் ஒவ்வொரு காலையும் விடிகின்றது. அன்னிய நாட்டின் இராணுவத்தால் சூழப்பட்டவர்களின் மன நிலையுடன் மக்கள் ஒவ்வொரு பொழுதையும் நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களத்தின் வெறிபிடித்த இராணுவமும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து அராஜகம் ஆடிக்கொண்டிருக்கின்றது. தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக அமைதியிழந்து வாழ்வைத் தொலைத்த மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியத்தின் நியாயமான வாழ்தலுக்கான எத்தனிப்பைப் புரிந்து கொள்ளாத தன்மையுடன் சர்வதேசம் என்ற போர்வையில் பல நாடுகள் தங்கள் மனம் போன போக்கில் எமது நியாயாதிக்கப் போராட்டத்தை இழுத்துச் செல்கின்றனர். பிரச்சனையின் அடிப்படைத் தன்மையையே புரிந்து கொள்ளாத நுனிப்புல் மேய்தல் வழியில் அவர்கள் அறிந்து கொண்ட வகையில் அல்லது தங்கள் நலன் சார்ந்த லெளகீக வழிமுறையில் எமது எதிர்காலத்தை அவர்கள் வழி நடத்திச் செல்ல முனைவதை நாம் காணலாம்.

அண்மையில் Human Rights Watch என்ற அமெரிக்க அமைப்பு ஒன்றின் அறிக்கையில் தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய அவதூறான திரிக்கப் பட்ட செய்திகள் பரபரப்பாக பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதே போல அமெரிக்க இராஜாங்க அமைச்சகத்தின் அறிக்கைகளிலும் தமிழ் மக்களின் நியாயத்தன்மை வாய்ந்த போராட்டம் கொச்சைப் படுத்தப்படுவதும் போராட்டத்தின் தலைமை மீது அநாவசிய காட்டம் காட்டப் படுவதும் அனைவரும் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்த கனடிய அரசின் விடுதலைப் புலிகள் மீதான தடையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்வதேசத்தின் இத்தகைய கண்மூடித்தனமான போக்கும் சிங்களப் பயங்கர வாதத்தின் கோர முகத்தை பகிரங்கப் படுத்துவதில் காட்டப் படும் அக்கறை இன்மையும் இன்று சிங்களப் பேரினவாதிகளை தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்குவதில் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. அண்மையில் திருகோணமலையில் இடம் பெற்ற இன அழிப்பு பற்றி யாரும் அதிகளவு அக்கறை காட்டாத தன்மையே காணப்படுகின்றது.

இத்தனை ஒடுக்கு முறைகளையும் பகிரங்கமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகளின் மீதான தடையை எதிர்பார்த்திருப்பதாக கொக்கரித்து நிற்கின்றது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன இவ்வாறு கொக்கரித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் இன்னொரு முகமான ஐ. தே. கட்சியும் தனது ஆதரவை உடனடியாக பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மூலம் வழி மொழிந்துள்ளது.

சிங்களப் பேரினவாதத்தின் பொய்யான பரப்புரைகள் திட்டமிடப்பட்ட முறையில் வெகுசாதுரியமாக சர்வ தேசத்தின் பால் எடுத்துச் செல்லப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

நான்காம் ஈழப் போரின் தொடக்கமே அரச படைகளின் மீதான கிளைமோர்த் தாக்குதல் என்று இப்போதுள்ள அவல நிலமைக்கும் நெருக்கடிக்குமான பழியை சாதுரியமாக தமிழர் தரப்பின் மீது போடும் கைங்கர்யத்தை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்கின்றது. 51 அரச படையினர் கொல்லப் பட்டுள்ளதாகவும் அது செய்தி வெளியிடுகின்றது. வடக்கு கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட அப்பாவி மக்களின் கொலையை மூடி மறைத்து விடுகின்றது.

ஜெனிவாப் பேச்சுகளின் பின்னர் மட்டும் 60 படையினர் பலி என்று ஐ. தே. கட்சியின் ஊது குழலான பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க வாய் மலர்ந்திருக்கின்றார். மக்களை முட்டாளாக்கிய மகிந்த சிந்தனையால் மகிந்த பதவியேற்ற பின்னான 4 மாதங்களில் மட்டும் 250 மேற்பட்ட படையினர் பலி என்று மிகையான விளம்பரம் செய்துள்ளார். கொழும்பின் ஆங்கில ஊடகங்களை மட்டும் படிக்கும் சர்வ தேசத்தின் பிரதி நிதிகளை இந்தப் பொய்கள் இலகுவாக உண்மைகளாகச் சென்றடைகின்றன.

ஆனால் உண்மை நிலையோ NESHOR என்ற வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் செயலாளர் கலாநிதி என். மாலதி கூறுவதைப் போல கடந்த ஏழு வாரங்களில் மட்டும் 62 பொது மக்கள் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்கு வெளியே இவ்வமைப்பில் கடமையாற்றும் அங்கத்தவர்களுக்கு விடுக்கப் படும் கொலைப் பயமுறுத்தல்கள் மூலம் உண்மை சுடுவதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஜனவரியில் இருந்து 577 பேர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் இருக்கின்றனர். இவர்களில் 60 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் வாழுகின்றனர்.

சிங்களப் பேரினவாதிகளும் சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையை தங்களின் அரசியல் இலாபத்துக்காகப் பயன் படுத்துவதை சர்வதேசம் புரிந்து கொள்வதற்கான வழி வகைகளை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். நோர்வே வெளியேற வேண்டுமென்ற ஜே. வி. பியின் கோசம் இன்று மகிந்தவின் ஜே. வி. பிக்கான ஏழு அமைச்சுப் பதவிகளின் பேரத்தில் கைவிடப் படும் நிலையில் இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் ஜெனிவாப் பேச்சுகளில் இருந்து விலகும் நிலைப் பாட்டிற்கு ஜே. வி. பியின் நோர்வே எதிர்ப்பு நிலைப்பாடும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத க்களைவிற்கான முட்டுக்கட்டையுமே காரணம் என்று ஐ. தே. கட்சி அந்தர் பல்டி அடித்து அரசியல் ஆதாயம் தேடுகின்றது.

ஜெனிவாப் பேச்சுகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட உயர் பாதுகாப்பு வலய நீக்குதலுக்கான தடையும் இயல்பு நிலையைப் பேணுவதில் அக்கறை காட்டாத அரசாங்கத்தின் மெத்தனப் போக்குமே காரணம் என்பதை சர்வதேச சமூகத்தை உணரச் செய்யும் வழிவகைகளை நாம் எடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலமையில் ஜெனிவாவில் அடுத்த கட்டப் பேச்சுகள் எதைப்பற்றியது என்பதே தற்போதுள்ள மில்லியன் டொலர்க் கேள்வி என்ற தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் ஆதங்கத்தை சர்வதேசத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். உயர் பாதுகாப்பு வலையங்களால் மனித உரிமை மீறப்படுகின்றது என்ற யாழ் அரச அதிபரின் அறிக்கையில் உள்ள கருத்துகளையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல் காரணமாக அண்மையில் ஐ.நா ஆணைய மனித உரிமைக் குழுவில் இணைந்து கொள்ள சிறிலங்கா எடுத்துக் கொண்ட முயற்சியைச் சாடி ஆசிய மனித உரிமைகள் ஆணையம் ஹொங்ஹொங்கிலுள்ள அதன் தலைமையகத்தில் இருந்து வெளியிட்ட அறிக்கையை
எம் பரப்புரைக்கு நம்பகத் தன்மை ஏற்பட நாம் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளது. ஐ. நா மனித உரிமை ஆணையம் கடந்த 2003 இல் பரிந்துரைத்த எதனையும் சிறிலங்கா இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அதே போல் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சித்திரவதைகள் தொடர்பான குழுவின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டவைகளையும் சிறிலங்கா இதுவரை நடை முறைப் படுத்தவில்லை.

சிறிலங்காவின் காவல் துறை நீதித் துறை அனைத்துமே விமர்சனத்துக்குரிய வகையில் மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. சிறி லங்காவில் காணாமல்ப் போவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகையால் இத்தகைய சிறிலங்காவை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சிறிலங்காவின் தமிழர்களுக்கெதிரான அராஜக கொடுங்கோன்மையைத் தோலுரித்துக் காட்ட பெரிதும் உதவும்.

ஜெனிவாப் பேச்சு வார்த்தைகளிற்கு பெரிதும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதக் களைவு என்பது பற்றி உண்மைக்குப் புறம்பான பரப்புரை சர்வதேசத்தின் மத்தியில் செய்யப் படுகின்றது. கிழக்குப் பிரதேசத்தில் கருணா குழுவோ வேறு எந்த ஒட்டுக் குழுவுடனோ சிறிலங்கா இராணுவத்துக்கோ சிறிலங்கா அரசாங்கத்துக்கோ எதுவித தொடர்பும் இல்லை என்று ரொய்டருக்கு செவ்வி வழங்கிய பாலித கோகன்ன கூறியிருக்கின்றார். ஆனால் அண்மையில் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான SBS தொலைக்காட்சி தனது Date Line என்ற நிகழ்வில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியில் ஒட்டுக் குழுக்களின் பிரசன்னத்தை பகிரங்கப் படுத்தியுள்ளது.

இவையெல்லாம் சிங்களப் பேரின வாதத்தின் கபட நாடகத்தை அம்பலமாக்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவத்தின் அடக்கு முறைகளை சர்வதேசத்தின் முன்னால் வெளிக்கொணரவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

சர்வதேசம் இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ளாமலும் இருப்பதற்கு எம்மக்களிடையே இருக்கின்ற போட்டி பொறாமையும் அக்கறையின்மையும் ஒரு வகையில் காரணம் என்பதை ஓய்வு பெற்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் இடித்துரைத்திருக்கின்றார். எமக்கிடையே இருக்கக் கூடிய போட்டி பொறாமைகளை இறுகக் கட்டி வைத்து விட்டு தமிழ்த் தேசியமும் அதன் இருப்பும் என்ற நிலைப்பாட்டில் உறுதியான ஒற்றுமையையும் கூட்டுச் செயல்பாட்டையும் முன்னெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் உளப்பூர்வமாக நம்பி ஏற்படக் கூடிய சகல தடைகளையும் உடைத்தெறிய உறுதி ஏற்க வேண்டும்.

Lobby என்கின்ற கருத்தியல் பூர்வமான பரப்புரையின் மூலம் எமது போராட்டத்தின் நியாயாதிக்கத்தை சர்வதேசத்தின் நாடுகளுக்கும் மக்களுக்கும் தெளிபு படுத்தி அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று ஆறரைக் கோடி அரபு மக்களின் இடையே தனித் தீவாக இருக்கும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவினதும் சர்வதேச நாடுகளினதும் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இத் தந்திரோபாய கருத்துப் பரவலாக்க உத்தியால் தான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்தப் பட்ட இவ்வகையான தடைக்கு கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்களின் கருத்துப் பரப்புரையினால் கனடிய மக்களிடம் வென்றெடுத்திருக்கக் கூடிய ஆதரவைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டமையே காரணம் என்ற பேராசிரியரின் குற்றச் சாட்டு பொருள் பொதிந்ததுவே. இனி வரும் தமிழ் தேசியத்துக்கான போராட்டம் ஈழ மண்ணிலும் புலம் பெயர் மண்ணிலும் சம நேரத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளப் பட வேண்டும்.

இன்று எமது போராட்டத்திற்கு எதிரான கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கும் சர்வதேசத்தின் கருத்துக்களை எமது போராட்டத்தின் ஆதரவு நிலைப்பாட்டின் திசையில் எடுத்து வர வேண்டிய கடமையும் திறமையும் நம்மிடையே இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடலாகாது

No comments: