Tuesday, January 29, 2008

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி- 17 பேர் படுகாயம்

மன்னார் மாவட்டம் தட்சணாமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று பிற்பகல் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சின்னபண்டிவிரிச்சான் அ.த.க. வித்தியாலய பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் பள்ளமடு மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு சம்பவ இடத்தில் வாகனங்கள் இல்லாதிருந்த காரணத்தால் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தாக்குதல் குறித்தும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்தும் பள்ளமடு மருத்துவமனை மருத்துவர் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
இது வரை 17 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 17 பேர் மோசமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காக இவர்களை கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சடலங்களில் 11 சடலங்கள் மாணவர்களினுடையது. அதேநேரம் காயமடைந்தவர்களில் 9 பேர் மாணவர்கள் ஆவர்.
படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலர் இரண்டு கண்களிலும் காயமடைந்துள்ளனர். சிலரது உடல் அவயங்கள் சிதறிக் காணப்படுகின்றன.
இவர்களுக்கான முதலுதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஏனையோர் படுகாயமடைந்த நிலையிலும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு பெற்றோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தமது பிள்ளைகளைத் தேடி வருகின்றனர். சிலர் தங்களின் பிள்ளைகளைக் காணவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

No comments: