Wednesday, January 30, 2008

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்: அரசியல்துறைப் பொறுப்பாளர் ஐ-நாவிடம் அழைப்பு





ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் அங்கீகரித்து, கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழ் மக்களிற்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டுமென, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னார் மடுவில் நேற்று சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட நாசகார கிளைமோர் தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி மூனிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் நடேசன் இந்த அழைப்பினை விடுத்திருக்கின்றார்.
பாடசாலைச் சிறுவர்கள் பயணிக்கின்றார்கள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் நேற்றைய மனிதவேட்டைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அரசியல்துறைப் பொறுப்பாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்....
29-01-2008 மதியம் 2.30 மணிக்கு மன்னார் மடு-பாலம்பிட்ட வீதியில் பயணித்த பேரூந்தில் பாடசாலைச் சிறுவர்கள் பயணிக்கின்றார்கள் என்று தெரிந்தே சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 8-16 வயதிற்குட்பட்ட 12 பள்ளிச் சிறார்கள் உட்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜனவரி நான்காம் திகதி முல்லைத்தீவு உப்புக்குளத்தில் சிறீலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் 3-16 வயதிற்குட்பட்ட ஏழு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். நவம்பர் 27ஆம் திகதி பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 6 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர்.
அதே தினத்தில் புலிகளின் குரல் வானொலி மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு தர்மபுரத்தில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூவர் சிறுவர்கள். 8ஆம் திகதி நவம்பரில் அளம்பிலில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதுடன், மற்றொரு குழந்தை தனது கால் ஒன்றை இழந்திருந்தது.
2002ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரும் தமிழ் பொதுமக்கள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். 2005 நவம்பர் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர் 132 தமிழ் சிறுவர்கள் உட்பட 2056 பேர் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த கண்காணிப்புக்குழு வெளியேற்றப்பட்டு, ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் உள்ளேவர அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் படுகொலைகள் அதிகரித்துச் செல்லுகின்றன. இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கும் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை உயரதிகாரிகள் பயங்கரவாதிகளாக சிறீலங்கா அரசினால் சித்தரிக்கப்படுகின்றனர். போர் நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி மீள்கட்டுமானம், இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணப் பணிகள் உட்பட அனைத்து ஒப்பந்தஙகளையும் சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது.
எமது தீவில் அமைதியை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஒத்தாசை வழங்கி வருகின்றோம். இதற்கு ஏதுவாக 18 அகவைக்கு உட்பட்டவர்களை எமது அமைப்பில் இணைப்பதையும் நிறுத்தியுள்ளோம்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் அங்கீகரித்து, இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே இருக்கும் நிலையில். எமது அமைப்பு அமைதி முயற்சிக்கான முழுமையான ஆதரவை வழங்க எப்பொழுதும் தயாராக இருக்கின்றது.

No comments: