Monday, January 28, 2008

உயர் தொழில்நுட்ப ராடர் கருவியை கனடா சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது

சிறிய படகுகளையும் துல்லியமாகக் கண்காணிக்ககூடிய அதியுயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 39 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் கனடாவினால் தயாரிக்கப்பட்ட ராடர் கருவியை, கனேடிய அரசு சிறீலங்கா அரசுக்கு விற்றுள்ளமை தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடிய அரசின் இந்த ஆயுத விற்பனை தொடர்பான அம்பலப்படுத்தல் டேவின் பக்லீஸ் (David Pugliese) என்ற ஊடகவியலாளரால் இன்று வெளியான "தி ஒட்டாவா சிட்டிசன்" (The Ottawa Citizen) என்ற பத்திரிகை மூலம் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர், தன்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்கென 39 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உயர் கதிரியல் அலைவீச்சைக் கொண்ட இந்த ராடர் கருவியை கனேடிய அரசு, "ஒட்டாவா பாதுகாப்பு விஞ்ஞானிகள் அமைப்பு"(Ottawa defence scientists), மற்றும் "றெய்தியோன் கனடா" (Raytheon Canada) என்ற கூட்டமைப்புகள் ஊடாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தயாரித்திருந்தது.கடனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 43 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான எட்டு கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டன. ஆனால் சாதாரண பொதுமக்களின் தொலைத் தொடர்புகளை இந்த துல்லிய அலைவரிசைகள் குழப்புவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து கனடிய அரசினால் பின்னர் இந்த பாதுகாப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த உயர் தொழில்நுட்ப ராடர்களை வெளிநாட்டு அரசுகளுக்கு விற்பனை செய்ய முயன்ற கனடிய அரசு, கனடாவின் வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் (Canadian Commercial Corporation) உதவியுடன் முதல் தொகுதியை சிறீலங்கா அரசுக்கு விற்பனை செய்திருக்கின்றது.சிறீலங்காவிற்கு உயர் ரக ராடர்களை விற்பளை செய்த பின்னர் ஏனைய நாடுகளும் அதனைப் பெற்றுக்கொளவதில் போட்டியிடுவதாக "றெய்தியோன் கனடா" (Raytheon Canada) என்ற அமைப்பின் துணைத் தலைவர் டென்னி றொபேட்ஸ் (Denny Roberts) தெரிவித்திருக்கின்றார். "றெய்தியோன் கனடா" (Raytheon Canada) என்ற அமைப்பு அமெரிக்காவில் தாய் நிறுவனத்தைக் கொண்ட ஒரு கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் இந்த புதிய ராடர் கருவி மூலம் கடற்பரப்பில் 200 மைல்கல் (370 கிலோமீற்றர்) தூரத்தை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.கனடிய அரசு உலகிலேயே அதியுயர் தொழில்நுட்பம் நிறைந்த ராடர் கருவிகளை சிறீலங்கா அரசுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் தற்பொழுது கசிந்துள்ள போதிலும், எத்தனை ராடர்கள் இவ்வாறு வழங்கப்பட்டன, எப்பொழுது வழங்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

No comments: