Friday, February 01, 2008

சிறிலங்கா மீதான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் செயற்திறன் அற்றவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமூகத்தின் கவனம் செறிவாகி வருகின்ற போதிலும் முக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் மந்தமாகவும், செயற்திறன் அற்றும் உள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சமூகத்தின் கவனம் செறிவாகி வருகின்ற போதிலும் முக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் செயற்திறன் அற்றவையாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை அனுமதிக்க சம்மதித்ததன் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தப்பிப் பிழைத்த போதிலும், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைப்பதனை பின்னர் அது நிராகரித்துள்ளது.
எனினும் சிறிலங்கா மீதான முக்கிய நாடுகளின் நடைவடிக்கைகள் காத்திரமானவையாக இல்லை. மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து அமெரிக்கா அரசின் மிலேனியம் சவால்களுக்கான நிதியம் 110 மில்லியன் டொலர்கள் உதவியை நிறுத்தியுள்ளது. பிரித்தானியாவும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி 3 மில்லியன் டொலர்கள் உதவியை நிறுத்தியுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் சிறிலங்காவில் 1,100-க்கும் அதிகமானோர் கடத்தப்பட்டு காணாமல் போய் உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள்.
இரு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. சட்டவிதிகளை பயன்படுத்தி கொழும்பில் எழுந்தமானமாக பெருமளவான தமிழ் மக்கள் கைது செய்யப்படுவதுடன், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள், பொதுச்சேவை பணியாளர்கள் ஆகியோரும் இலங்கையில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய விடயம். அனைத்துலக நாடுகள் தனது கண்டனத்தை தெரிவிக்கத் தவறுகின்றன என்றே கருதுகிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.