Monday, February 04, 2008

சிங்களத்தின் 60 ஆண்டுகால இன அழிப்பினை வெளிப்படுத்தும் நோர்வே பொருட்காட்சி

























































தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறைக் கொடுமைகளையும், தாயக மக்களின் இன்றைய நிலைமைகளையும் வெளிப்படுத்தும் வகையிலான பொருட்காட்சி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
தமிழர் வள ஆலோசனை மையத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இப்பொருட்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10.02.08) நாள் வரை நடைபெறுகின்றது.
இதில் முப்பரிமாண மாதிரி அமைப்புக்கள் (3 dimension models), ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய காலத்திலிருந்து இற்றைவரையான 60 ஆண்டுகளாக தமிழர்கள் மீது கொடிய இன ஒடுக்குமுறையினை சிங்களம் கட்டவிழ்த்த விட்டு வருகின்றது. இன்றைய நிலையில் தமிழர்கள் மீதான பாரிய இன அழிப்பினை மேற்கொண்டுள்ளது என்பதனை வெளிப்படுத்தும் வகையில் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமைகளை நோர்வேஜிய மக்களுக்கும் நோர்வேயில் உள்ள தமிழ் இளையோர்களுக்கும் எடுத்துரைப்பதே பொருட்காட்சியின் முதன்மை நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முப்பரிமாண மாதிரிகள்
மக்களின் வாழ்விடங்கள், பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள், வணக்கத்தலங்கள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை, மீன்பிடித்தடையால் தமிழ் மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், 50 000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு, ஏ-9 பாதை மூடப்பட்ட நிலையில் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழும் யாழ். குடாநாட்டு மக்களின் அவல வாழ்வு, இராணுவ சுற்றிவளைப்புகளுக்கு உட்பட்டுள்ள தமிழ்ப் பாடசாலைகள் போன்ற இராணுத்தின் கொடூர நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண மாதிரிகள் அமைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு ஒடுக்குமுறைக் கொடுமைகளையும் அவலங்களையும், வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் மற்றும் தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாட்டினை வலியுறுத்தும் வகையிலான வராலாற்று ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, காணொளியிலும் காண்பிக்கப்படுகின்றது.
நோர்வே ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள்
தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக நோர்வேஜிய நாழிதழ்களில் நோர்வே தமிழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.










சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள்- தமிழர்களுக்கு கறுப்பு நாள்











சிறிலங்காவின் 60 ஆவது ஆண்டு சுதந்திர நாளினை கறுப்பு நாளாக அடையாளப்படுத்துமாறு நோர்வே தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மற்றும் பணிமனைகளுக்குச் செல்லும் போது கறுப்புப் பட்டி அணிந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: