Thursday, February 07, 2008

யுத்தத்தில் எந்தத் தரப்பும் வெற்றிபெறாத ஸ்தம்பித நிலையை நோக்கி இலங்கை - யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியை வருட முடிவுக்குள் கைப்பற்றப் போவதாக இலங்கைத் தலைவர்கள் கூறுகின்றபோதும் அந்த நம்பிக்கைக்கு பொருத்தமானதாக கள நிலைவரம் இல்லையெனவும் எந்தவொரு தரப்புக்கும் வெற்றிகிட்டாத இராணுவ ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையே ஏற்படும் என்று யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருட இறுதியில் ஓய்வுபெறும் போது பயங்கரவாதப் பிரச்சினையை, தனக்கு அடுத்துவரும் தளபதிக்கு விட்டுச் செல்லப்போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்லப்போவதாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ சூளுரைத்திருந்தார். இதேசமயம், முன்னொருபோதுமில்லாத வகையில் ஆயுதப் படைகள் வெற்றிபெற்று வருவதாகவும் கடந்த இரு வருடங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கியமான பகுதிகள் படையினர் வசம் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் ஒன்றரை மாவட்டங்களே இன்னமும் புலிகளிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியமையும் அவர்களின் கணிசமான கப்பல்கள் அழிக்கப்பட்டமையும் தென்னிலங்கையில் பொது மக்களின் மனநிலையை அதிகளவு நம்பிக்கையுடன் வைத்திருப்பதற்கு உதவியது. ஆயினும், 2007 நடுப்பகுதியின் பின்னர் குறிப்பிடத்தக்க வெற்றிகள் வெளிக்காட்டப்படவில்லை. இது இராணுவ ரீதியான ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தி விடுமென்று யுத்த விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது. வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னாரில் கடந்த வருடம் செப்டெம்பரில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. விடத்தல் தீவை கைப்பற்றுவதே நோக்கமாக இருந்தது. ஆனால், 4 மாதங்கள் இடம்பெற்ற மோதலின் பின் 8 கிலோமீற்றர் தூரமே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது அண்டிய பகுதியிலுள்ள அண்மித்த பகுதி என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவ நிபுணர் ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்.ஸுக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முதலாவது இரண்டாவது கட்டுப்பாட்டுக் கோடுகளை உடைப்பதற்கு அரச படையினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிறந்த படையினரும் இராணுவத் தளபாடங்களும் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால், புலிகள் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்தி வெளியிட்டுள்ளது. இரு தரப்பிலும் இழப்புகள் அதிகமாகும். அரச படையினருடன் ஒப்பிடுகையில் விடுதலைப்புலிகள் தரப்பு இழப்புகள் சுமார் இரண்டு மடங்காகும் என்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். வடக்கே யாழ் குடாநாட்டில் சுமார் 50 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ளனர். அரச படைகளின் சக்தியை திசைதிருப்ப மணலாறுப் பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். அத்துடன், பலாலி மீதும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட தென்னிலங்கையில் சிறியளவிலான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர். வருட முடிவில் வடபிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான படையினரை அங்கு வைத்திருக்க வேண்டும். அதேசமயம், தெற்கில் புதிதாகப் படையினரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள 50 ஆயிரம் படையினருக்கு அப்பால் கிழக்கில் புதிதாகக் கைப்பற்றிய 2 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பகுதிக்கு 1 இலட்சம் படையினர் தேவைப்படுகின்றனர். யாலவுக்கு 4 ஆயிரம் பேர் தேவையாகும். இலங்கையில் மொத்த நிலப்பரப்பில் இவை சுமார் அரைப்பங்காகும். இதற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் படையினர் தேவை. இது முக்கியமான கொழும்புப் பிராந்தியத்தை உள்ளடக்காத தொகையாகும். கொழும்புப் பிராந்தியத்திற்கு 1 இலட்சம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக கூறியுள்ளார். 2007 இல் பாதுகாப்பு செலவினம் 139 பில்லியன் ரூபாவாகும். ஆனால், உண்மையான செலவினம் இதன் 20 சதவீதம் அதிகமானதாகும். இந்த வருட செலவினம் 166 பில்லியன் ரூபாவென எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

1 comment:

Anonymous said...

இளந்திரையன்,

இந்த ஹரி குணதிலகாவின் மகனே தற்போதைய விமானப்படைத்தளபதி.
கடந்த காலங்களில் ஹரி குணதிலகா ஸ்ரீலங்கா வான்படையை மிகக்கடும்மையாக விமர்சித்த ஒருவர் மட்டுமல்ல ஸ்ரீலங்கா ராணுவத்தினர் மீது கடும் விமர்சனத்தை வைத்த முதலாவது அதிகாரி. ஆனால் அண்மைக்காலங்களில் (அவரது மகன் நியமிக்கப்பட்ட பின்னர்) அவரது கருத்துகள் வெளிவரவில்லை. இப்போது வந்திருக்கிறது என்றால் காரணம் இல்லாமல் இல்லை எனவே நினைக்கத் தோன்றுகிறது.

அத்துடன் இந்த செய்தியின் கடைசிப் பந்திகளில் திரு.முத்துகிருஷ்ன சர்வானந்தா என்பவரின் கருத்தும் வெளியாகியுள்ளது. அவர் சொல்ல்கிறார் மேற்கு நாடுகள் தமது உதவிகளை நிறுத்துவது ஸ்ரீலங்கா வுக்கு மேலும் பாதகமான நிலைகளைத் தோற்றுவிக்கும் என. ஆனால் ஏறக்குறைய ஒரு மாதத்தின் முன்னர் பி.பி.சி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் அவர் அதற்கு எதிரான கருத்தை தெரிவித்தார். அவர் கூறியது என்ன எனில் ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒப்பிடும் போது மேற்குநாடுகளின் உதவி ஒன்றும் பெரியதல்ல எனவே அது குறிப்பிடத்தக்க்க தாக்கத்தை ஏற்படுட்தது என்று.
இவர் ஆங்கில ஊடகங்களுக்கு ஒரு கருத்தும் ஈழத்தமிழர் கேட்கும் பி.பி.சிக்கு இன்னொரு கருத்தும் கூறும் 'உள்நோக்கம்' கொண்ட பேராசிரியர் எனவே நினைக்க வைக்கிறது