Friday, February 15, 2008

சிறந்த மாணவர் அமைப்பாக கனடா யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு தெரிவு







சிறந்த மாணவர் அமைப்பாக கனடா யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரத்தில் "பல்லின பண்பாட்டு வாரம் - 2008" அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களால் நடத்தப்பட்டது. யோர்க் பல்கலைக்கழகத்தின் 60-க்கும் அதிகமான மாணவர் கழகங்கள், 10,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்ற, உற்சாகமும், ஒன்றுபட்டதுமான வாரமாக, பல நிறங்களும், ஒலிகளும், பல்வேறு கண்கவர் காட்சிகளுமாக பல்லின பண்பாட்டு வாரம் கோலாகலமானது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பு இந்த நிகழ்வின் சிறப்பாக பங்குபற்றிய ஒரு அமைப்பாக விளங்கியது.
இந்த வருடம் மேலும் ஒரு விடயம் இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. ஓவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் பல்லின நாடுகளின் கொடிகள் யோர்க் வளாக பாதையில் கட்டப்பட்டன.
இந்த வருடம் அவற்றுடன் தமிழீழத் தேசியக் கொடியும் கம்பீரமாகப் பறக்க விடப்பட்டது. மிகவும் சிறப்பாக அனைத்து நிகழ்வுகளிலும் வாரம் முழுக்கக் கலந்துகொண்ட யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு பல வெற்றிகளை தனதாக்கிக்கொண்டது.
இந்த வாரத்தில் அளிக்கப்பட்ட ஆறு பரிசுகளில், மூன்றினைப் பெற்றுக்கொண்டு சிறந்த அமைப்பிற்கான பரிசிலையும் பெற்றுக்கொண்டது.
இந்த வாரத்தில் நடத்தப்பட்ட வீதி ஊர்வலத்தில், தமிழீழத் தேசியக் கொடியினை உயர்த்திப் பிடித்தவாறு தமிழ் மாணவர்கள் சென்றனர். அந்த ஊர்வலத்தின் கருப்பொருளாக தமிழ்த் திருமணத்தினைத் தெரிவு செய்து, மங்கள ஒலியுடன், பல வர்ணம் கொண்ட ஒரு ஊர்வலமாக அதனை வடிவமைத்திருந்தனர்.
ஊர்வலத்தினைத் தொடர்ந்து ஆடை அணிவகுப்பு நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய ஆடைகளில் மாணவர்கள் அணிவகுப்பினைச் செய்திருந்தனர். தமிழர் திருமண ஊர்வலத்திற்கு முதலாவது பரிசினையும், ஆடை அணிவகுப்பிற்கு இரண்டாவது பரிசினையும் அந்தப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு பெற்றுக்கொண்டது. பல இனத்தவர்களின் உணவுச் சாவடிகளுக்கு மத்தியில், தனித்துவமானதாக தமிழர் உணவுச் சாவடி திகழ்ந்தது. பல்லினத்தவருக்கும் தமிழரின் கைவண்ணமான பண்பாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பாபு கேட்டரிங்கின் ஆதரவுடன் தமது உணவுச் சாவடியினை அமைத்த யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினர், உணவுப் பிரிவிலும் முதலாவது பரிசினைப் பெற்றனர்.
இறுதி இரண்டு நாட்களும், பல்லின பண்பாட்டுப் பட்டறைகள் நடைபெற்றன. இதன் போது பரத நாட்டியத்தின் மேலோட்டமான அடவுகளை, வந்த மற்றைய இனத்தவருக்கு தமிழ் மாணவர்கள் கற்பித்திருந்தனர். இறுதியாக நடைபெற்ற மேடை நிகழ்வில், தமிழ் மாணவர் அமைப்பு ஒரு நிகழ்ச்சியினை வழங்கியிருந்தது. இதில், கலாச்சார நடனம், மேற்கத்தைய நடனம், இசை மற்றும் மேடைப்பாடல் என்பன ஒரு கோர்வையாகத் தமிழர் பாரம்பரியம் கூறும் வண்ணம் எடுத்து வரப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் கடின உழைப்புடன், நேர்த்தியான முறையில் அனைத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டு, யோர்க் பல்கலைக்கழகத்தின் "பல்லின பண்பாட்டு வாரம் - 2008" இன் அனைத்துத் துறையிலும் சிறந்த மாணவர் அமைப்பாகத் தமிழ் மாணவர் அமைப்புத் தெரிவு செய்யப்பட்டது. இந்த வாரத்தில் மற்றைய பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய தமிழ் மாணவர் அமைப்புக்களும், இளையவர்களும், தமது சக மாணவர் அமைப்பான யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பிற்கு தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பின் குறிக்கோள், அந்தப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களை ஒன்றிணைப்பதுவும், தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான புரிதலை வளர்த்தெடுப்பதுவும் ஆகும்.
இத்தகைய ஒரு நிகழ்வில் இந்த மாணவர்கள் தமது அமைப்பின் நோக்கினை வலுவாக உள்வாங்கி, அதனை நன்றே செயல்படுத்தியும் இருந்தனர் என்றே கூறவேண்டும்.

No comments: