Sunday, February 10, 2008

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன்



இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது:
"புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம். "அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி? "மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) "ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து "நூறு கோடி தேவைப்படும்" என்றார். "சரி பார்க்கலாம்" என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர். அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989 ஆம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜொனியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார். ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி "நான் லண்டன் போய் வரட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம். ஜொனி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்' என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள். இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து "ஒரு கொலையை" மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?" தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே? "அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், "ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31 ஆம் திகதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5:00 மணியளவில் இராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. "அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார். அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய இராணுவத்தால் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாத குறையாக முறையிட்டார்.
அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை. அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா? "நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா? அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை? இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை. அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, "உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?" என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. "நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு" என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?" ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே? "உண்மைதான் அது. இந்திய இராணுவம் புதைமணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?" என்றார். நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். "அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்" என்று வருத்தப்பட்டார். "சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?" என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். "இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து "தமிழீழத் தாயகம்" என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2:30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் இரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால் ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன்.
இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது." புலிகளைக் காரணம் காட்டி காங்கிரசார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே? "பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியொரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்த பூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்

1 comment:

ஜோ/Joe said...

நெஞ்சில் ஈரமின்றி சும்மா ராஜீவ் ராஜீவ் என்று பிதற்றிக்கொண்டு ஒரு இனத்தின் அழிவுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் ,ஜெ வெத்து வேட்டுகளுக்கு புலமைப் பித்தன் ஐய்யாவின் சவுக்கடி உறைக்கும் என நான் நினைக்கவில்லை