Tuesday, May 02, 2006

எங்களைச்சுத்திப் பேய்கள்- கொட்டகதெனியா அலறல்

இருந்தாலும் ஒரு மனிதனுக்கு இப்படியொரு துன்பம் நேர்ந்திருக்கக்கூடாது. நித்திரையும் இல்லாமல் கொட்டக்கொட்ட முழித்திருந்தால் யார் தான் வாய்விட்டுக் கதறியழாமல் இருக்க முடியும். இப்படிக் கதறியழுது கொண்டிருப்பவர் வேறு யாருமில்லை. சாட்சாத் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவின் பாதுகாப்பு ஆலோசகர் புத்தி சொல்லிக் கொடுப்பவர் என்று பல அவதாரம் எடுக்கும் எச்.எம். ஜி கொட்டக தெனியா தான் இவ்வாறு பேய் பிடித்து அலறிக்கொண்டிருக்கின்றார்

.

ஜனாதிபதியின் லோசகர் என்றால் பென்ஸ் காரில் சுத்தி வந்து வயிறு புடைக்க விருந்துகள் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. செத்த பேய்கள் மற்றும் இருக்கும் பேய்கள் என்று வகை தொகையில்லாமல் எல்லாப் பேய்களும் சேர்ந்து பிடிக்க குய்யோ முறையோ என்று அலறிக் கொண்டிருக்கின்றார் ஆலோசகர் கொட்டகதெனியா. கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தான் அவர் தன் குறைகளைக் கொட்டியிருக்கின்றார்

.

அவிசாவளையில் ஐந்து தமிழ் இளைஞர்களைப் பிடித்து சிங்கள இராணுவப் பேய்கள் தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்ள அவர்களின் தலைகளைத் துண்டிந்து சடலத்தைக் கொண்டு போடப் போக பேய் பிடித்தலின் உச்சக் கட்டம் ஆரம்பித்து விட்டது. தமிழ் இளைஞ்ர்கள் தான் என்று எப்படிச் சொல்வீர்கள் என்பது போல பொல பொலவென்று பிடித்துக் கொண்டார். பாதாள உலகத்தவராக இருக்கமுடியாதா ? அடிக்கடி நடக்கும் காவல்துறையுடனான மோதலில் இவ்வாறுதான் அவர்களைக் கொல்லுகின்றோம் என்று உதாரணம் காட்டியிருக்கின்றார். அதுவும் 21 ஆம் நூற்றாண்டில் பொறுப்பு வாய்ந்த ஒரு அரசாங்கம் கற்காலத்துக் காட்டு மிராண்டிகள் போல கொலை செய்கின்றார்கள் என்று உரக்கவே சொல்லியிருக்கின்றார். ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பவர் பேய் பிடித்திருக்காது விட்டால் இவ்வாறெல்லாம் பேசுவாரா

?

அதுவும் சர்வதேச ஆசிய நாடுகளுக்கான மனித உரிமைகள் சபை இலங்கை அரசாங்கத்தை வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கும்போது. சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் அந்த உடல்கள் தமிழர்களினதுதான் என்று எப்படி முடிவுக்கு வருவீர்கள் என்று கேட்டிருக்கின்றார். பின்னை என்ன? அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் உரிமைகளை நீங்கள் எப்படி உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம்

.

கொழும்பில் குண்டு வெடித்தவுடன் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று சொல்லி திருமலையில் குண்டு போடுவது அவர்களுக்கு மட்டும் இருக்கும் பிரத்தியேக உரிமையல்லவா? விசாரணையாவது ? மண்ணாவது ? மறந்தும் மூச்சு விடாதீர்கள்

.

தலையைத் திருகி எறியும் சிங்களப் படைகளின் ஒழுக்கம் பற்றி சந்தேகம் வருகின்றதா? அப்படியெல்லாம் வரக் கூடாது என்பதற்காகத் தான் அவரே தன் படையினருக்கும் ஒரு ஒழுக்கச் சேட்டிபிக்கேற் கொடுக்கின்றார்

.

// "

சிறிலங்கா அரச படைகள் மிகுந்த ஒழுக்கத்தோடு இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளால் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் அரச படைகள் பொறுமை காக்கின்றன. இங்கிலாந்து போன்ற நாடுகளில் குண்டு வெடிப்பு நடந்தபோது எதுவித உத்தரவுக்கும் காத்திருக்காமல் சந்தேக நபர்கள சுட்டுக் கொண்டார்கள் " - //

கொட்டகதெனியா

இப்படிச் சொல்வதால் இவர்களின் சிங்களப் படைகள் ஒவ்வொரு கொலைக்கும் தன்னிடம் அல்லது மகிந்தவிடம் அனுமதிபெற்றுத் தான் சுட்டுக் கொல்கின்றார்கள் என்பதை சொல்லாமல் சொல்கின்றாரா? அப்படியென்றால் வடக்கு கிழக்கில் நடக்கும் அத்தனை படு கொலைகளும் அரசின் ஆசீர்வாதத்துடன் நடப்பதாக ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி சொல்லலாமா? பேய் பிடித்திருந்தால் எதுவும் நடக்கலாம்

.

//

" இலங்கையில் இருக்கும் அரச சார்பற்ற நிறுவன முகவர்கள், ஊடகங்கள் ஆகியவை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு நாட்டை பிளவுபடுத்துகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினால் பயங்கரவாத அமைப்பின் நிழல் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத இயக்கத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்கின்றது. "- //

கொட்டகதெனியா

இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் தன்னைச் சுற்றியிருக்கும் பேய்களை இனங்காட்டியிருக்கின்றார். அவரைப் பொறுத்த அளவில் சிங்களப் பெளத்த பேரினவாதத்துக்கு ஜால்ரா அடிக்காத அனைவரும் பேய்களே

.

//"

சிறிலங்கா இராணுவ தளபதி மீது தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி கொழும்பில் பல மாதங்களாக தங்கியுள்ளார். ஆனால் நாங்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடாத்தினால் தமிழர்களின் உரிமையை மறுப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் கூப்பாடு போடுகின்றனர்." //-

கொட்டகதெனியா

அதுதானே எப்படி கூப்பாடு போட முடியும். அப்பாவி தமிழ் மக்களைப் பிடித்து சித்திரவதை செய்து காசு பறிப்பதைக் கூட அனுமதிக்காமல் சும்மா கூக்குரல் போடும் தமிழ் அரசியல் வாதிகளை முதலில் இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும். அப்படித் தான் சிங்களப் பிக்குகள் கூக்குரலிடுகின்றார்கள். பெளத்தத்தைக் காக்க இதைவிட்டால் வேறு வழி

?

//" ஜெனிவாவில் ஒரு மாதத்துக்கு முன்பாக அரச படைகள் மீது எதுவித தாக்குதலையும் நடாத்த மாட்டோம் என்று விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எதிரிகளால் வைக்கப்படும் விமர்சனங்களை மக்கள் நிராகரிப்பார்கள்". //-

கொட்டகதெனியா

இவர்கள் மட்டும் பெரிய மேன்மையானவர்களோ? உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றி விட்டார்களா? ஒட்டுக் குழுக்களைப் பிடித்து உள்ளுக்குப் போட்டுவிட்டார்களா? என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கின்றது. இதுதான் சொல்வது, படிக்கும் போது விசயத்தை விளங்கிப் படிக்க வேண்டும் என்று. மேலே கொட்டக தெனியா சொன்னதில் இறுதி வாக்கியத்தை மீண்டும் படிக்குமாறு நான் உங்களுக்கு சிபாரிசு செய்கின்றேன். ஆங்.. அதுதான் ... " சிறிலங்கா அரசாங்கத்தின் மீது

....."

//"

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகள் பலமாக ஊடுருவியிருப்பதாக அனைவரும் உணருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த ஒரு தமிழரும் வாயைத் திறந்து தகவல் கொடுப்பது இல்லை. கொழும்பில் உள்ள அதிகாரமிக்க சக்திகளால் விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியும். காவல் துறையிலும் இராணுவத்திலும் நிறையப் பேரை விடுதலைப் புலிகள் விலக்கு வாங்கியுள்ளனர். இராணுவத் தளபதி மீதான தாக்குதல் என்பது இராணுவத்தில் உள்ள சிலரது ஒத்துழைப்புடனேயே நடந்தது என்பதை உறுதியாக நான் கூறுவேன்".//

கொட்டகதெனியா

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் சிறிலங்கா இராணுவம் ஒழுக்கத்தின் சீலர்கள் என்று சேட்டிபிக்கேற் கொடுத்திருந்தாரே இப்ப இப்படிச் சொல்லுறாரே என்று ஆச்சரியப் படுகின்றீர்களா? பேய்களின் நடுவே வாழ்பவர்கள் சில வேளைகளில் உளறவும் செய்வார்கள் எந்த ஒரு தமிழரும் வாயைத் திறந்து தகவல் கொடுப்பதில்லையாம். அப்போ டக்லஸும் கருணாவும் எதைத் திறந்து தகவல் கொடுக்கிறார்களாம் என்று நீங்கள் சந்தேகப் படுவது எனக்கும் புரிகின்றது. எனக்கு இன்னுமொரு சந்தேகம் . அப்படியென்றால் அவர்களும் சிங்களப் பெளத்தத்தில் இணைந்து விட்டார்களா? அவர்களின் சிங்களப் பெயரைக் கூறினால் டக்லஸும் கருணாவும் கூறுவதைக் கேட்டு நியாயம் பிளக்க வரும் BBC மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிற்கு கதை சொல்லுவதற்கு எங்களுக்கு வசதியாகப் போய்விடும்.

//"

நாம் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் . நாம் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட முடியாது (அடடா.... புல்லரிக்கின்றதே).மனித உரிமைகளை மதித்துச் செயற்படுத்த வேண்டும் என்று விடுதளைப் புலிகளை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். ஆனால் அப்படிச் செய்திருக்கின்றார்களா? இப்போது கர்ப்பிணிப் பெண்ணை தற்கொலைதாரியாக அனுப்பியிருக்கின்றார்கள். இது .நா வின் சாசனங்களுக்கு எதிரானது. நம்ப முடியாதது."-//

கொட்டகதெனியா

எத்தனை கர்ப்பிணிப் பெண்களின் தலையில் குண்டுகள் போட்டு துடிக்கத் துடிக்க கொன்று போட்டார்கள். அப்போதெல்லாம் .நா வின் சாசனம் நினைவிற்கு வருவதில்லையோ? ஆசியாவிற்கான மனித உரிமைகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்துள்ளதே. கோபி அன்னான் பொது மக்களைக் கொல்லுவதை உடனடியாகநிறுத்தச் சொல்லி கேட்டிருக்கின்றாரே? இது எல்லாம் இலங்கை அரசாங்கத்தைதான் என்று அறிவாரோ ஆலோசகர்

.

இவ்வாறெல்லாம் நீதி நியாயம் பற்றிக் கதைப்பவர்கள் எல்லாம் இரண்டு காலுள்ள பேய்கள். பின்னே இருக்காதா? பென்ஸ் கார்களில் சுத்தி வந்து வயிறு புடைக்க விருந்துண்டு காலத்தைக்கடத்த விடாமல் அரசாங்கத்தைப் பற்றி குறை சொல்பவர்கள் நியாயம் கேட்பவர்கள் எல்லாம் தூக்கமும் இல்லாமல் செய்து விட்டார்களே. இதுக்கு மேலும் தாங்க முடியாமல் தான் கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் புலம்பித் தள்ளியுள்ளார். மகிந்தவின் ஆலோசகர் கொட்டகதெனியா

.

இவர்களுக்குத் தமிழ் மக்கள் சொல்லக் கூடிய ஆலோசனை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இந்தப் பேய்கள் எல்லாம் சிங்கள மாந்திரீகத்திற்குக் கட்டுப்படமாட்டாது. நல்ல மலையாள மாந்திரீகர் ஒருவரைத் தேடிக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் அரச தலைவரையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரால் வெளியிடப்பட்ட "மகிந்தவின் சிந்தனைகளும் " ஒரு தினுசாகத் தான் இருக்கின்றது.

4 comments:

Anonymous said...

ஆட்டோ ரைவரும் 70 வயது முதியவரும் பயங்கர வாதிகளாகத் தெரிகிற ஒழுக்கம் மிக்க (?)அரச படைகள். உலக நாடுகள் ஏன் பம்மிக் கொண்டு நிற்கிறர்கள்?

Anonymous said...

unmaijai sollunkal thitumalaiji singala vivasajikalai veddi konravarkal jaar?sikalavatai konrapadi kotuvathu suthanthitama?

விண்ணாணம் said...

யாழ். உதயன் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி- மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் பிரதான அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (02 மே) இரவு உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான ஈ.பி.டி.பி.யினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

உதயன் ஆசிரியர் குழுவினரை நோக்கி இன்று இரவு 7.45 மணியளவில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உதயன் அலுவலகத்திற்குள் 40 தடவைகளுக்கும் மேல் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அருகாமையில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

"ஆயுததாரிகள் அலுவலகத்தில் உள்நுழைந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். கடைசியாக அலுவலகக் கணணிகள் அனைத்தையும் நாசம் செய்துவிட்டுச் சென்றனர்" என்று தப்பியோர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய 4 பேர் கொண்ட குழுவினர் ரி-56 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்றும் மற்றொரு நபர் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

தாக்குதல் நடத்தியவர்களில் கறுப்பு உடை அணிந்திருந்த நபர் ஈ..பி.டி.பியைச் சேர்ந்தவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உதயன் நாளேட்டின் கொழும்பு வெளியீடான சுடரொளியின் அலுவலகத்தின் மீது முன்னர் இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் நமது ஈழநாடு, யாழ். தினக்குரல் ஆகியவற்றின் அலுவலகங்களுக்குள் சிறிலங்காப் படையினர் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல்களை நடத்தினர். உதயன் நாளேட்டிற்கும் படையினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் உதயன் அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைகளை இன்று நிகழ்த்தியுள்ளனர்.

யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் உதயன் அலுவலகம் அமைந்துள்ளது.
நன்றி: புதினம்

இளந்திரையன் said...

வருகை தந்த அன்னனி, மலர் உங்களுக்கு நன்றி.

மலர், மக்களின் இறப்பு என்றுமே ஏற்றுக் கொள்ளப்ப்ட முடியாது. ஏனெனில் போராட்டமும் அதனால் வரும் சுதந்திரமும் மக்களுக்கானதே.

இங்கு பிரச்சனை என்பது பேரினவாதத்தின் அடக்கு முறை. அடக்குமுறை கைவிடப்படும் போது இழப்புக்கள் யாருக்குமில்லை.