Sunday, May 21, 2006

யாரைக் குறி வைக்கின்றார்கள்?

அமெரிக்கா பிரிட்டன் கனடாவைத் தொடர்ந்து இப்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப் போகின்றது என்று ஒரு கதை அடிபடுகின்றது. தடை செய்யுமா? இல்லையா? என்று பலத்த வாதப்பிரதிவாதங்களும் கருத்தெடுப்புகளும் கூட நடை பெறுகின்றது. தடை செய்யும் செய்யாது என்பதற்கு அப்பால் ஏன் தடைசெய்கின்றன என்பதற்கான காரணங்களையும் அப்படித் தடைசெய்வதனால் ஏதாவது பலனை இந்நாடுகள் பெறுகின்றனவா? என்பதையும் நாம் ஆராய்வோமானால் பல சுவாரஸ்யமான விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இலங்கையில் தன் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்காக தமிழ் மக்கள் நடாத்திவரும் போராட்டமாகும். விடுதலைப் புலிகள் என்பது அம் மக்களில் பலர் போராட்டமே வாழ்வாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கமாகும்.

தமிழ் மக்கள் வேறு விடுதலைப் புலிகள் வேறு என்று பிதற்றிக் கொண்டு திரிவதெல்லாம் வெறும் மாயைதான். விடுதலைப் புலிகள் என்றல்லாமல் வேறு எந்தப் பெயரிலென்றாலும் மக்களுக்காக மக்களின் சார்பில் தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் எந்த ஒரு இயக்கமும் தமிழ் மக்களும் வேறு வேறல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் வேறு போராடும் இயக்கம் வேறு என்பது தமிழீழப் போராட்டத்தை பலவீனப் படுத்த எதிரியானவன் பாவிக்கும் ஒரு உளவியல் தந்திரம் என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.

இது மக்களுக்கான போராட்டம் என்பதுவும் மக்களே முன்னின்று நடாத்துகின்றார்கள் என்பதையும் இந்நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் சிறிலங்காவின் தவறான பரப்புரையினால் எடுக்கப்படும் தவறுகளில் இருந்து இந்நாடுகள் தங்களைக்காத்துக் கொள்ளக் கூடும். இதை நாம் கூறிக்கொள்வது சிறிலங்காவின் பரப்புரைகளினாலேயே சர்வதேசம் இவ்வாறான முடிவுகளை எடுக்கின்றது என்ற தவறான என்ணங்களுடன் சிந்திக்கும் மக்களுக்காக.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தான் இங்கு சுவாரஸ்யமானது. உலகை இன்று ஆண்டு கொண்டிருப்பது அமெரிக்காவோ இல்லை பிரித்தானியாவோ இல்லை ஜப்பானோ அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகை இன்று ஆண்டு கொண்டிருப்பது உலகெங்கும் பரந்து வாழும் சில நூறு கோடீஸ்வரர்கள் மட்டுமே. ஆம் அந்த ஒரு சில பணமுதலைகளின் சித்தாந்தங்களின் படியே இத்தனை கோடி மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதிகள் முதல் இராணுவத்தின் கடைக்கோடி சிப்பாய் வரை இவர்களின் நலனுக்காக தமது வாழ்வையும் கடைசி சொட்டுக் குருதியையும் அர்பணித்துப் போராடுகின்றார்கள்.
மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள்.

இன்று உலகினையே குளோபலிஸம் என்ற அதிஉச்ச நுகர்வோர் பொருளாதாரத்தில் கட்டிப் போட ஆவல் கொண்டு இப்பண முதலைகள் எடுக்கும் நடவடிக்கைகளே இன்று உலகெங்கும் ஓடும் இரத்த ஆறுகளுக்கும் கொல்லப்படும் உயிர்களுக்கும் அழிவுகளுக்கும் மூல காரணங்களாகும்.

நாடுகள் சிறு சிறு துண்டுகளாகச் சிதறிப் போவதையோ நுகர்வோர் மனப்பான்மையிலிருந்து மாற்றம் பெற்று உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மூன்றாம் உலக நாடுகள் வருவதையோ இவர்கள் அனுமதிப்பதில்லை. இது அவர்களின் குளோபலிஸம் எனப்படும் உலக ரீதியான நுகர்வோர் சந்தைக்கு பெரும் ஆபத்தாக முடிந்து விடும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள், உலக வங்கி, அரசு சாரா தொண்டர் அமைப்புகள் என்ற போர்வையில் வளர் முக நாடுகளுக்குள் ஊடுருவி வளர்ந்து வரும் சுதேசியப் பொருளாதாரத்தை சீரழிப்பதுவும் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற மஜாஜாலங்களில் மக்களை ஈடுபடுத்தி மக்களின் சிந்திக்கும் திறனையும் உழைக்கும் நேரத்தையும் வீணடிப்பதும் சினிமா ,மதம், இனம் , நான் பெரிது நீ பெரிது என்ற சில்லறை விடயங்களில் மக்களை அலைக்கழித்து மக்கள் சக்தியை ஒருங்கிணைய விடாது மிகக் கவனமாகக் கையாண்டு தங்கள் நலன்களுக்கு கெடுதல் இல்லாத போக்கில் பூமியின் சுழற்சியைத் தீர்மானிப்பதும் இவர்களே.

தங்களின் இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட இவர்கள் மக்களின் நீண்ட கால,குறுகிய கால நன்மைகள் என்ற எவற்றிலுமே அக்கறை காட்டுவதேயில்லை.

பூமியில் பெரும் ஆபத்தாய் முடியக் கூடிய ஓசோன் மண்டலங்களின் சிதைவு பற்றியோ கிறீன் ஹவுஸ் எபக்ட்டினால் வெப்பமடைந்து வரும் சூழல் பற்றியோ இவர்கள் எந்த அக்கறையும் கொள்வதில்லை.

இப்பண முதலைகளுக்கு தலைமை தாங்கி நிற்கும் அமெரிக்காவின் செல்வந்தர்களின் நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இதுவரை சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தன்னை ஈடுபடுத்தி கையொப்பம் போட்டுக்கொள்ளவில்லை என்பதே இவர்களின் அக்கறை எவ்வகையானது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

வல்லரசு என்ற மாயைக்குள் மக்களைத்திணித்து பயங்கர வாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் உலகின் ஓரங்களில் இருந்து வரக்கூடிய குளோபலிஸம் என்ற சித்தாந்தத்திற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் களைவதில் இவர்கள் மும்முரமாக ஈடுபடுகின்றார்கள். தங்கள் நலனுக்கு எதிரானவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொருளாதாரத் தடைகள் முதல் படையெடுப்புவரை நடாத்தி தடைகளை அகற்ற முற்படுகின்றார்கள்.

வீடியோ கேம்ஸ்களிலிருந்து டாவின்சி கோட் போன்ற பரபரப்பான விடயங்கள் வரை மக்காளை மூழ்கடித்து சிந்திக்கவிடாது கவனத்தை சிதறடிக்கின்றார்கள்.

இக்கட்டுகளில் இருந்து மக்களைக்காத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப் பட்ட சோஸ்லிஸப் பொருளாதாரக் கொள்கையையும் முனைப்புடன் குறிவைத்து சிதைப்பதில் வெற்றி கண்டு விட்டார்கள். அதையும் விட சிறப்பான ஒரு சித்தாந்தம் வரும் வரை உலகம் இப்பண முதலைகளின் நலனின் போக்கிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டே நாம் எம் தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் வழிவகைகளையும் ஏற்படக் கூடிய தடைகளைக் களைவது என்பது பற்றியும் சிந்திப்பது சரியானதாக இருக்கும்.

இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் பலர் பலவித சித்தாந்தக் குழப்பத்தில் மூழ்கி போராட்டம் முன்னெடுக்கப் படும் விதம் சரியானதா? கோட்பாடு என்ன சொல்கின்றது என்ற குழப்பத்தில் இருந்து தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். நுகர்வோர் கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்ற மக்களை இவற்றில் இருந்து மீட்டெடுத்து வருகின்ற பிரமைகளை நாம் மறந்து விடத்தான் வேண்டும்.

கார்ல் மாக்ஸ்ஸும் லெனினும் இப்போது பிறந்து மறுபடியும் சோசலிஸப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்பது இன்றைய காலகட்டத்தில் சந்தேகத்திற்குரியதே. இதைப் புரிந்து கொண்டே சீனா தனது பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரக் கட்டமைப்புக்குள் உட்படுத்திக் கொண்டமையினாலேயே அது இன்று தன்னைக்காத்துக்கொள்ளக் கூடியதாகவும் வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.

இப்போது சர்வதேச சமூகம் என்பது எது என்பதையும் அவை எடுக்கக் கூடிய முடிவுகள் எவ்வாறு இருக்கக் கூடும் என்பதையும் நாம் புரிந்து கொள்வதில் எந்தத் தடைகளும் நமக்கு இருக்க முடியாது. உலகப் பொருளாதார ஒழுக்கினையும் அதன் நலன்களையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் இவற்றின் போக்கு எவ்வாறு இருக்கக் கூடும் என்பதையும் ஊகித்துக் கொள்வதில் ஒன்றும் சிக்கல் கொள்ளத் தேவையில்லை.

ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரப் படப்போகும் தடை என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டியதே. உலகை ஆளுகின்ற பணமுதலைகளின் நலன் நுகர்வோர் கலாச்சாரத்தைக் கொண்ட அடிமை நாடுகளையே ஊக்குவிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளும் போது இனங்களின் எழுச்சி என்பதும் நாடுகளின் பிரிவுகள் என்பதையும் இவர்களினால் எள்ளளவும் சகித்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்வோம். அதே நேரம் தமிழீழப்போராட்டத்திற்கான உளவியல் ரீதியான ஆதரவும் பொருளாதார ரீதியான ஆதரவும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மூலமே சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றது என்பதையும் இவர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளுக்கான ஆதரவிற்குத் தடை என்பது தமிழ்த் தேசியத்தின் போராட்டத்தில் பாதிப்பினைக் கொண்டுவரும் என்பதையும் அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அமெரிக்கா பிரித்தானியா கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் தடையக் கொண்டுவரத் துடிக்கும் நேரத்தில் மற்றொரு நாடான ஜப்பானில் தடை கொண்டு வரப்பட மாட்டாது என்றும் ஒரு பிரச்சாரம் கொண்டு வரப் படுகின்றது. ஜப்பானில் தமிழ்மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்து வாழவில்லை என்பதுவும் இவ்வாறான தடைகளினால் ஜப்பானினால் தமிழீழப் போரரட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் கோண்டுவர முடியாது என்பதையும் ஜப்பானியர்கள் நன்கு அறிவார்கள்.

ஆகவே விடுதலைப் புலிகளுக்கான தடை என்பது ஆங்காங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை விடுதலைப் போராட்டத்தின் பங்களிப்பிலிருந்து தடை செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டது என்பதை நாம் அனைவரும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றோம் என்பதை சர்வதேச நாடுகளுக்குப் புரிய வைக்கவேண்டிய கடப்பாடும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான பங்களிப்பில் எம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் இருக்கின்றார்கள்.

இங்கு நாம் உழைக்கும் பணம் என்பது எமது வியர்வைக்கும் நாம் சிந்தும் குருதிக்கும் விலையாகக் கிடைப்பது. இந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு வரி செலுத்தப் படுவது. அப்பணத்தை நாம் எவ்வாறு செலவழிப்பது என்பதில் எமக்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. அதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இலங்கை நாட்டில் நடப்பது என்பதையும் சர்வதேச நாடுகளின் சட்டம் ஒழுங்கு எவற்றுக்குமே தீங்கோ இடையூறோ செய்யாதது என்பதையும் நாம் இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சர்வதேச நாடுகள் தங்கள் நலனை முன்னிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் சிங்களப் பேரின வாதத்தின் அடக்கு முறைகளுக்கு ஓரளவில் அனுகூலமாய் இருக்கின்றது என்பதை ஒத்துக் கொண்டாலும் தங்களுடைய வேண்டுதலினாலேயே சர்வதேசம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கின்றன என்று மார் தட்டிக் கொண்டிருக்கும் சிங்கத்துக்குப் பிறந்த சிங்களக் குட்டிகளுக்காக நாம் அனுதாபப் படுவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்.

No comments: