Thursday, May 18, 2006

ஹுயூமன் றைற்ஸ் ......ஹுயூமன் றைறஸ்.....யார் சொல்வது றைற்....

ஹுயூமன் றைற்ஸ் வோச் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. சில நாட்களின் முன்பு விடுதலைப் புலிகளைப் பற்றி சில பல புரளிகளைக் கிளப்பியிருந்தது. யார் இதன் மூல கர்த்தாக்கள் என்பது மூடு மந்திரமாக இருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவில் சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் அவதூறுகளைக் கிளப்புவதற்காக முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் முந்நாள் கம்யூனிசநாடுகளின் அரசுகளை ஆட்டங்காண வைத்து ஸ்வாகா செய்வதற்கு பேருதவி செய்த ஒரு தனியார் அமைப்பு இன்று பரிமாண மாற்றங்களைக் கண்டு ஹியூமன் றைற்ஸ் வோச் என்ற அமைப்பாக புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. .நா போன்ற பொது ஸ்தாபனங்களின் எந்த தொட்ர்பும் இல்லாது தனியார் ஸ்தாபனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இது கிளப்பும் புரளிக்கெல்லாம் ஆதாரம் இருக்கின்றதோ இல்லையோ அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். ஆனாலும் இதன் தொடர் அறிக்கைகளில் பல சுவாரஸ்யமான சங்கதிகளும் வெளி வந்திருக்கின்றது. அப்படியொரு சுவையான சங்கதி அமெரிக்கா பற்றியது.

அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் என்ன கோபமோ என்னவோ அவரையும் அவர் சகா சென்னியையும் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கின்றது. அதே நேரம் ஏப்பிரல் 20 இல் சீனத் தலைவர் ஹூ ஜின்ராஓ அமெரிக்காவிற்கு விஜயம் செய்த வேளையில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் படியும் புஷ்ஷுக்கு கடிதம் அனுப்பியது. இது எப்படியிருக்கின்றது என்றால் ஒரு துட்டனிடம் இன்னுமொரு துட்டனைப் பற்றி முறைப்பாடு செய்வதைப் போல.

இங்கு கவனிப்புக்குரியதும் நகைப்புக்குரியதும் என்னவென்றால் நீதி நியாயம் ஜனநாயகம் பற்றிக் கதைக்கும் ஒவ்வொரு நாடும் தங்களளவில் முதுகு கொள்ளா அழுக்குகளைச் சுமக்கின்றன என்பது தான். ஊருக்குத் தான் உபதேசம் உனக்கல்ல..... என்று தான் எல்லா நாடுகளும் நடந்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உத்தம வேடம் போடுகின்றன. சர்வதேச சமூகம் என்று அலங்காரக் கொண்டையுடன் திரியும் இவர்கள் கொண்டைக்குள் ஆயிரம் அழுக்கு.

எங்களைக் குற்றம் சொல்லப் புறப்பட்ட சீமான்களை மறித்து ஆயிரம் கேள்வி கேட்கலாம். அத்தனை பட்டியல் இங்கிருக்கின்றது. இந்த ஹுயூமன் றைற்ஸ் வோச்சின் அறிக்கையை வைத்துத் தான் விடுதலைப் புலிகளை கனடா தடை செய்தது என்று ஆலாய்ப் பறந்த மனிதர்கள் சிலர் நியாயம் கற்பித்துத் திரிந்தார்கள். அப்படியென்றால் இதோ இந்தியா பற்றி அமெரிக்கா பற்றி ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் பற்றியெல்லாம் கிழி கிழியென்று கிழித்து அறிக்கை விட்டிருக்கின்றார்களே. இப்போ கனடா என்ன செய்யப் போகின்றது.

விடுதலைப் புலிகளைத் தடை செய்யச் சொல்லப்பட்ட காரணங்களை விட ஆயிரம் மடங்கு நீதிக்குப் புறம்பானதும் மனித உரிமைகளை துச்சம்மெனவும் மதித்து இந்நாடுகள்

நடக்கின்றனவே.

இந்த அழகில் .நா டுகளின் மனித உரிமைக் கவுன்சிலின் ஆசியாவிற்கான 13 அங்கத்துவ நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இலங்கையும் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனவே. இந்த இலட்சணத்தில் மனித உரிமைகள் எப்படி காப்பாற்றப் படப் போகின்றன. ஏன் யாரும் இது பற்றிக் கேள்வி யெழுப்பவில்லை.

அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வண்வே ரபிக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை அள்ளிக் கொண்டு வந்து வழ்க்கு விசாரணை எதுவுமின்றி ஆண்டுக் கணக்கில் வைத்திருக்கின்றதே.

கனடா என்ன செய்யப் போகின்றது? அமெரிக்கா அண்ணனென்றால் பிரித்தானியா தம்பி.

அமெரிக்காவையும் இந்தியாவையும் ஜப்பானையும் தடை செய்து இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்கப் போகின்றதா?

இதோ அபூ ஹாரிப் ( Abu Gharaib ) சிறையில் நிர்வாணமாக கைதிகளை வைத்து சித்திரவதை செய்தார்களே. உலகமே அதிர்ந்து போனதே. இன்றுவரை அதிலீடுபட்டவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இது அறிக்கையில் சொல்லியிருக்கின்றதே. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் கியூபாவின் குவான்ரனாமோ பே சிறையில் எந்த விசாரணையுமின்றி சித்திரவதையில் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றார்களே. அவர்களை நீதியின் முன்பாக நிறுத்துமாறு அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றதே. இந்த ஹுயூமன் றைற்ஸ் வோச். இது மனித உரிமை மீறலாக ஸ் ரீபன் கார்ப்பரின் கொன்ஸ்ரவேற்றிவ் அரசாங்கத்திற்குத் தெரியவில்லையா?

ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் குஸேனின் சிறையில் இருந்தவர்களை விட அதிகம் பேர் சிறையில் இருக்கின்றார்கள் ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர் ஆட்சியில். எங்கே தப்பு நடந்தது.

அமெரிக்காவான அமெரிக்கா. ஆனானப்பட்ட அமெரிக்கா. .நாடுகள் சபையை உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா இவற்றுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றது?

இந்தியா காஸ்மீரில் இராணுவத்தைப் போட்டு அப்பாவி காஸ்மீரிகளைக் கொன்று குவித்துப்போடுவதை குஜராத்தில் அரசே வலிந்து மதக் கலவரங்களைத் தூண்டி முஸ்லீம் மக்களைத் துடிக்கத் துடிக்க நெருப்பில் போட்டுக் கொல்வதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளதே. இது வெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா?

இரண்டாம் மகாயுத்த காலத்தில் சீனா, கொரியா, வியற்நாம், பிலிப்பைன்ஸ் என்று எல்லா தூரகிழக்கு நாட்டு மக்களையும் கொன்று குவித்துப் பெண்களை தன் இராணுவத்தின் பசிக்குக் கூட்டிக் கொடுத்தும் இன்னும் பாவச் சுமையை முதுகில் சுமந்து கொண்டிருக்கும் ஜப்பானும் புத்தரின் போதனைகள் போல ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்பளம் போல பொரிந்து பொடிபட்டுப் போய் அணு குண்டின் வீரியத்தையும் வேதனையையும் அனுபவித்தவர்கள் அதே அமெரிக்காவின் தாளத்திற்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் ஆசைக்கு அகாஸி அண்ணாச்சியும் அவுட் ஆப் போகஸில் அலட்டிக் கொண்டிருக்கின்றார்.

அகிம்சையையும் அடாவடியையும் உலகுக்கு ஒருசேரப் போதித்த இந்தியா . காஸ்மீரயும் பஞ்சாப்பையும் காலடியில் போட்டு நசுக்கிய இந்தியா ஈழத்தமிழனுக்கு மட்டும் அகிம்ஸையைப் பேதி மருந்து போலப் பருக்குகின்றார்கள்.

எங்கே ஹுயூமன் றைற்ஸ் .... எங்கே ஹுயூமன் றைற்ஸ் என்று தேடத்தான் வேண்டும். இதில் யார் சொல்வது யார் செய்வது ஹுயூமன் றைற்ஸ்.

3 comments:

Anonymous said...

appa puli ptadchijalarkal enru solla vareenkala brother?

இளந்திரையன் said...

விடுதலைப் புலிகள் புரட்சியாளர்களா ? இல்லையா என்பதற்கு முதல் புத்திமதி சொல்வதற்குண்டான தகுதிகளை சர்வதேசசமூகம் என்று சொல்லிக்கொண்டு முண்டியடிக்கும் நாடுகள் கொண்டிருக்கின்றனவா ? என்பதுதான் எனது கேள்வி.

பதில் தெரிந்தால் கூறுங்களேன்.

வருகைக்கு நன்றி அனானி.

ஈழபாரதி said...

நல்ல பதிவு, இது போல் மேலும் வர வாழ்துக்கள்.