Sunday, May 28, 2006

அமெரிக்காவின் ஏகாதிபத்யக் கனவும் ஈழப் போராட்டமும்

இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது.

தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது.

சர்வதேச நாடுகள் என்ற கோதாவில் ஈழப்பிரச்சனையில் தலையிடும் நாடுகளின் தலமைப் பொறுப்பை வலிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா தன் ஏக ஏகாதிபத்தியக் கனவுகளை வலிந்து திணித்து பிராந்தியங்களின் அரசியல் பலத்தினைத் தீர்மானிக்கும் முனைப்புடன் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது.

பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற அமெரிக்காவிற்கு அட்சயபாத்திரமாக அனைத்து அனுகூலங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும் வரை இந்த அவலம் தொடரத் தான் போகின்றது.

இன்று அமெரிக்காவின் அதிரடி ஆட்டங்களுக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச நாடுகள் வரலாற்றில் தலை குனிந்து நிற்கப் போகின்ற காலம் ஒன்று வரத்தான் போகின்றது.

ஈழப்போராட்டத்தின் தலைமைச் சக்திகளான விடுதலைப் புலிகளைத் தடை செய்த அமெரிக்கா தன் நட்பு நாடுகளையும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளைக் கொண்டு வர நிர்ப்பந்தித்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது. அந்த வரிசையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தன் நட்பு நாடுகளான பிரித்தானியா, ஒஸ்ரியா போன்ற நாடுகளின் மூலம் தன் எண்ணத்தை ஈடேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியப் போகின்ற ஐரோப்பிய ஒன்றியம் என்ன காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அக்கொள்கையில் இருந்து விலகி அமெரிக்காவின் எடுபிடியாகவே செயற்படப் போகின்றது. தன்னிடம் இருந்து கைநழுவிப் போன உலகின் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் முதன்மைச் சக்தி என்னும் நிலையை மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து மீட்டெடுக்கும் ஐரோப்பாவின் கனவு ஈடேறாமலேயே போகப் போகின்றது. அமெரிக்காவின் அபிலாஷைகளுக்கு எவ்வளவு தூரம் ஐரோப்பிய ஒன்றியம் பலியாகியுள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'' இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். அரசியல் பன்மைத்துவமும் மாற்று ஜனநாயகக் குரல்களையும் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அனைத்து இன மக்களின் நலன்களும் பாது காக்கப் படும்."

"ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகலால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டாய அறவிடலை ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்களால் இயன்றளவிற்கு தடை செய்ய வேண்டும் "

"கடல் சார் நடவடிக்கைகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாரிய அளவில் மீறியுள்ளனர். குறிப்பாக மே 11 ஆம் திகதி கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். கண்காணிப்புக் குழுவினரும் பேராபத்திற்குள்ளாகியுள்ளனர்"

இவ்வகையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கும் எதிரானதும் 30 ஆண்டுகால இனவிடுதலைப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பல சரத்துகள் அமெரிக்காவின் தூண்டுதலில் அவ்வறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் இராணுவ தளப்பிரதேசமாக இலங்கையைக் கொண்டு வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அமெரிக்கா வெகுவாக முன்னேறியிருக்கின்றது. இதுவரை அமெரிக்காவிற்குப் பிடி கொடாமல் நழுவி வந்த இந்தியா, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான "அணு ஆயுத பரிமாற்றுத் திட்டத்தின் மூலம்" வகையாகச் சிக்கிக்கொண்டுள்ளது.

அது எவ்வளவு தூரம் என்றால் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நடவடிக்கைகளைக் கவனித்தே காய் நகர்த்தி வந்த அமெரிக்கா இன்று இந்தியாவையும் தனது நடவடிக்கைகளுக்கு துணை போக வலியுறுத்தும் நிலை வரை வந்துள்ளது. அண்மையில் "இலங்கைப் பிரச்சனையில் எத்தகைய பங்காற்றுவது என்பதை முடிவெடுப்பது முழுக்க முழுக்க இந்தியாவைப் பொறுத்தது. இந்தியா சர்வதேச சமூகத்துடன் எந்தளவு இணைந்து செயற்படப் போகின்றது என்று இறுதியும் உறுதியுமான முடிவை இந்தியா தான் எடுக்க வேண்டும் " என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் அரச பிரதிச் செயலர் ரிச்சேட் பெளச்சர் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதிலிருந்து அமெரிக்கா இந்தியாவிற்கு அளிக்கும் செய்தி முடிவானதும் இறுக்கமானதுமாகும். அமெரிக்காவின் அபிலாஷைகளுக்கு எதிராக இந்தியா எடுக்கக் கூடிய முடிவுகளை அமெரிக்கா சகித்துக் கொண்டிராது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இதையும் மீறி இந்தியா ஏதாவது செய்ய முற்பட்டால் சர்வதேச பயங்கர வாதத்திற்கு எதிரான அணியில் இருந்து இந்தியாவை விலக்கி வைப்பதுடன் இந்தியாவின் அணு ஆயுத ஆராய்சிகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போடுவதுடன் பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்ட காஸ்மீரத் தீவிர வாதத்தைத் தூண்டி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா பின்னிற்காது. இந்தியாவின் கையறு நிலையைப் புரிந்து கொண்டே இந்திய மார்க்சிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்சனையில் ஆர்வம் காட்ட வெளிக்கிட்டிருப்பது அமெரிக்காவின் இலங்கைப் பிரசன்னத்தை எவ்வகையிலாக தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்ற ஆசையினாலேயே.

"ஐக்கிய இலங்கை என்னும் கட்டமைப்புக்குள் கூட்டாட்சி முறையில் உரிய அதிகாரப் பகிர்வின் மூலம் அமைதி வழித் தீர்வு காண வேண்டும் " என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஸ் கரத் கூரியுள்ளார்.

மார்க்சிஸ்டுகள் புரிந்து கொண்ட அளவு கூட இலங்கை இனப்பிரச்சனையையும் அமெரிக்காவின் அக்கறையின் தாற்பரியத்தையும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. அமெரிக்காவின் இலங்கையிலாலான தலையீடு பற்றி இவர்கள் இதுவரை வாயையே திறக்கவில்லை. இலங்கைப் பிரச்சனை இன்னும் இந்தியாவின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றது என்ற மனப்பான்மையில் இவர்கள் இருப்பார்களாயின் இந்திய மக்களின் முன்னால் தலை குனிய வேண்டிய காலம் ஒன்றிருக்கின்றது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் மீதும் அபரிமிதமான நெருக்கடிகளை ஏற்படுத்தி தனது எண்ணத்தை ஈடேற்ற அமெரிக்கா முயலும். அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் அதனையே சுட்டிக் காட்டுகின்றது.

அதேவேளை சிங்கள அரசாங்கத்தின் மீதும் தனது அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது. சிங்களத் தலைமைகளிடயே முரண்பாடுகளைத் தூண்டி விட்டு குறைந்த பட்ச தீர்வினைக் கூட இனப்பிரச்சனை தொடர்பாக எடுக்க முடியா கையறு நிலையில் சிங்களத் தலைமை இருப்பதைக் காரணம் காட்டி அமெரிக்கா தன் பிரசன்னத்தை ஞாயப் படுத்தப் போகின்றது. இதைப் புரிந்து கொள்ளா சுயநல அரசியல் மனப்பான்மையில் சிங்கள அரசியல் கட்சிகள் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் அமைதிப் படையின் வருகையை தவிர்க்க முடியாது என்னும் வகையில் ஐ.தே.கட்சியின் ராஜித சேனரத்ன கருத்துக் கூறியிருக்கின்றார். அமெரிக்காவின் நெருக்கத்திற்குரிய ஐ.தே.கட்சியின் ஆரூடம் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான அறிக்கையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐ.நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படக் கூடிய இலங்கைக்குப் படை அனுப்புவதற்கான தீர்மானத்தை மீறி இலங்கை அரசாலும் எதனையும் செய்ய முடியாது என்பதை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும். ஐ.நா வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடு ஒன்றின் இறைமையைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைதிப் படை உதவி புரியும் என்ற சரத்தின் கீழ் அங்கத்துவ நாடான இலங்கையும் கட்டுப்படும். "இலங்கையின் இறைமைக்கான ஆபத்து'' என்னும் வகையில் அமெரிக்கா கொண்டு வரப் போகும் தீர்மானத்திற்கு அமெரிக்காவின் அடிப்பொடி நாடுகளான சர்வதேசம் நிச்சயம் ஆதரவளிக்கும்.

" இலங்கையில் முழு அளவிலான யுத்தம் ஒன்று ஏற்படாத வரையில் ஐ.நாடுகள் படையின் தேவை இலங்கையில் அவசியமல்ல" என்று அவுஸ்திரேய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி கூறியுள்ளார். ஆகவே இலங்கையில் முழு அளவிலான யுத்தம் ஒன்று ஏற்படும் போது ஐ.நா அமைதிபடையின் பிரசன்னம் இலங்கையில் இருக்கும் என்பதை அவர் நிச்சயப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானின் கருத்து நிச்சயமாக அமெரிக்காவின் முடிவினையே பகிரங்கப் படுத்துகின்றது.

இதே வேளை தமது சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் ஈழ மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப் போகின்றது. ஏற்கனவே இந்திய அமைதி காக்கும் படைகளினை வரவேற்று தங்களின் விரல்களைச் சுட்டுக் கொண்ட அனுபவம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

அதே நேரம் வலிந்து திணிக்கப்படப் போகின்ற ஐ.நா வின் அமைதிகாக்கும் படைகள் என்ற போர்வையில் வருகின்ற அமெரிக்காவின் அத்து மீறலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்.

உண்மையான ஜனநாயகச் சக்திகளினதும் நியாயமான ஒரு இனத்தின் போராட்டத்திற்கும் ஆதரவான சர்வதேசச் சக்திகளையும் வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகின்றார்கள் என்பதிலேயே இதற்கான விடை அடங்கியிருக்கின்றது.

No comments: