Friday, May 05, 2006

இலங்கையின் இனப்பிரச்சனை - பெளத்தத்தின் ஆணிவேர்

" என்னுடைய பெளத்த மதம் எப்படிப் பொறுமை காக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றது. என்னுடைய இராணுவத் தளபதியை கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டு படுகொலை செய்ய முயற்சித்தனர்.
இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மேற்கொண்ட போதும் நாம் பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். " இவ்வாறு சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை. இலங்கையின் சர்வ வல்லமையுடன் ஆட்சி பீடத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே தான்.

இவரைப் போலவே சிங்களவர்களில் அனைத்து மட்டத்தினருமே பெளத்த மேலாண்மை என்ற பொய்மையான மாயைக்குள் மூழ்கிப் போயிருக்கின்றார்கள். சிங்கள இனத்திலிருந்து பெளத்தம் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெளத்தம் என்பது இல்லாமல் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை என்பது தான் உண்மை.

சிங்களவர்களின் மஹாவம்சம் கூறுவதை எடுத்துக் கொண்டால் விஜயனின் வழித் தோன்றல்கள் சிங்களவர்கள் ஆயினர் என்று குறிப்பிடுகின்றது. இந்தியாவின் கலிங்கா என்ற இடத்திலிருந்து அவனின் துஷ்ட குணத்தினால் நாட்டு மக்களின் சீற்றத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான விஜயன் அரசனான தந்தையால் நாடு கடத்தப்படுகின்றான்.

நாடு கடத்தப்பட்ட துட்டனான விஜயன் யக்கினிப் பெண்ணான குவேனியை மணந்து பின்னர் அவளை ஒதுக்கி தென்னிந்தியாவின் மதுரையை ஆண்ட பாண்டுவின் மகளை மணந்து இலங்கையை ஆண்டான் என்று மஹாவம்சம் கூறுகின்றது. விஜயன் பிறப்பால் ஒரு பெளத்தன் அல்ல. மணம் கொண்ட வகையிலும் அவன் பெளத்தத்துடன் தொடர்பு கொண்டவனும் அல்ல.

ஆனால் மஹாவம்சத்தை எழுதிய மஹாநாம என்ற பெளத்தபிக்கு "இலங்கைத் தீவு பெளத்தம் வளர்வதற்கும் நின்று நிலைப்பதற்கும் சாக்கிய முனியால் ஆசீர்வதிக்கப்பட்டதென்றும். அதனால் விஜயனும் அவன் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள் "என்று தேர வாதப் பெளத்தத்தின் மத அடிப்படை வாதத்தை அழகாகப் புகுத்தி விடுகின்றார். தந்தையால் நாடு கடத்தப்பட்ட துட்டனான ஒருவனுக்கு கடவுளின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவது என்பது தர்மத்துக்கும் இறை அன்புக்கும் எதிரானது. ஆனாலும் இங்கு இலங்கையில் பெளத்தத்தை வளர்ப்பதற்கு மிகவும் பாடுபட்டவர்கள் யார் என்று பார்த்தோமானால் அவர்கள் இந்தியாவின் வடக்கிலிருந்து வந்திருந்த பெளத்தத் துறவிகளாகும். திராவிட கிரந்த எழுத்துக்கள் பாவனையில் இருந்த இலங்கையில் ஆரிய கிரந்த எழுத்துக்களை பிரதியீடு செய்ததிலும் பாளி மற்றும் ஒலு மொழிகளின் கலப்பிலான புதிய மொழியான சிங்களத்தின் உருவாக்கத்திலும் இவர்களின் பங்கு அளப்பரியது. மற்றும் அவர்கள் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் தென்னிந்தியாவின் தாக்கம் அதிகம் இருந்த இலங்கையில் வட இந்திய மதமான பெளத்தத்தின் பரம்புதலை ஊக்கப் படுத்தவும் அவர்கள் கையிலெடுத்த பிரமாஸ்திரமே மேலாண்மைச்சமூக மனப்பான்மையின் கூறான ஆரிய இனத் தோன்றலான விஜயனின் கதையும் வரலாறும்.

இத்தனைக்கும் மஹாவம்சம் எழுதப்பட்ட காலம் 5ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. கி.மு 161ஆம் ஆண்டு தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்து துட்டகெமுனு ஆட்சி பீடமேறிய 700 வருடங்களின் பின்னால் எழுதப்பட்ட மஹாவம்சத்தில் துட்ட கெமுனுவை சிங்களத்தின் காவலனாகவும் காவிய நாயகனாகவும் வரித்துக் கொண்டு எழுதப்பட்ட காவியமே மகாவம்சமாகும். அதற்கு முதல் எழுதப்பட்ட தீபவம்சம் அதன் பின் எழுதப்பட்ட சூள வம்சம் ராஜவாளிய அனைத்தும் சிங்கள அடையாளத்தின் ஊற்று மூலமாகவும் பெளத்த மேலாண்மையின் வெளிப்பாடாகவும் இயற்றப் பட்டவையே ஆகும்.

தேரவாதப் பெளத்தம் இல்லாது சிங்களம் என்ற இனத்தின் கலை கலாச்சார சமுகவியல் கூறுகள் தனித்து இயங்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

ஆனால் தமிழ்த் தேசியம் என்பது இந்து சமயம் என்பதற்கு அப்பாலும் தனித்து இயங்கக் கூடியது. சைவம் சமணம் சாக்கியம் கிறிஸ்தவம் இஸ்லாம் என்று தமிழ்த் தேசியத்தில் பல மதங்கள் செழித்து வளர்ந்திருந்தன. மதமே இல்லையென்ற ஈ.வெ ரா பெரியாரும் கிறிஸ்தவரான தந்தை செல்வாவும் தலைவர்களாக இருப்பதில் தமிழ்த் தேசியத்தில் எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை என்பது தமிழ்த் தேசியத்தின் விசால மனப்பாங்கிற்கு எடுத்துக் காட்டாகும்.

ஆனால் பிறப்பால் கிறிஸ்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா பெளத்தராக மதம் மாறிய பின்னர் தான் இலங்கையின் பிரதமராகலாம் என்பது தான் சிங்கள தேசிய இனத்தில் தேரவாதப் பெளத்தம் கொண்டிருக்கும் மேலாண்மைக்கு உதாரணமாகும்.

அரசு இயந்திரத்தில் அங்கம் வகிப்பவர்களிடம் மட்டுமல்ல அடிமட்டத்தில் இருக்கும் சிங்கள மக்களிடமும் ஆழ வேரூன்றியிருக்கும் தேர வாதப் பெளத்தம் எற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பதுவே இலங்கை இனப் பிரச்சனையில் மிகவும் சிக்கலை உருவாக்கும் அடிப்படைக் காரணியாகும்.

அரசு இயந்திரத்தின் உறுஞ்சுதலுக்கும் இனப்பிரச்சினையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கும் அடிமட்ட சிங்கள மக்கள் கூட அடிப்படையான சில உரிமைகளைக் கூட தமிழ் மக்களுக்கு வழங்கச் சம்மதியாது முகம் திருப்பிக் கொள்வதும் தமிழருக்கு எதிரான அனைத்துப் பிரச்சனையிலும் அரசு இயந்திரத்தின் அனைத்து அடக்கு முறைகளுக்கும் ஆதரவு கொடுப்பதற்கும் இதுவே முதன்மைக் காரணமாகும்.

அடக்கப்படும் அடிமட்டச் சிங்கள மக்களுடன் இணைந்து ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவது இனப்பிரச்சினைக்கும் சமூக பொருளாதாரப் பிரச்சினைக்கும் உவப்பான தீர்வு என்று சொல்பவர்கள் சிங்கள மக்களின் மீதான தேர வாதப் பெளத்ததின் ஆதிக்கத்தன்மையை கருத்துக் கெடுக்கத் தவறுகின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

2000 ஆண்டுகளாக கவனமாக ஊட்டப்பட்டு வரும் தேரவாதப் பெளத்தத்தின் இருப்புக்கான ஆதிக்க மனப்பான்மை என்னும் ஆணி வேரை அசைப்பதிலேயே தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான வழி இருக்கின்றது.

7 comments:

வெற்றி said...

இளந்திரையன்,
மகாவம்சம் நூல் புனை கதை நூல். அது வரலாற்று நூல் அல்ல. ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றினை எழுத வேண்டும் எனும் ஆசையால் நேரம் கிடைக்கும் போது பல ஆய்வுகள் [research] செய்து வருகின்றேன். சிங்கள இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மெண்டிஸ் அவர்கள் 50 களில் எழுதிய Problems with Ceylon's History எனும் நூலில் அவர் விஜயன் என்ற கதாபத்திரமே ஓர் கற்பனை என சுட்டிக்காட்டி இருந்தார்கள். இப்படி பல ஆதாரங்களுடன் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றினை நேரம் கிடைக்கும் போது எழுத உள்ளேன். படித்துப் பாருங்கள்.

Anonymous said...

இலங்கை இனப்பிரச்சனையை நன்றாக அலசுகிறீர்கள். நன்றிகள். வெற்றியாரின் ஆய்வுகளையும் பார்ப்போம்.

இளந்திரையன் said...

வெற்றி உங்கள் வரவிற்கு நன்றி.
மற்றும் பகுத்தறிவிற்கு உதவாதகதைகள் பல கொண்டது மஹா வம்சம். அதில் விஜயனின் தந்தை சிஹலபாகுவின் பிறப்பு. சிங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் பிறந்தவன் என்பது விஞ்ஞான ரீதியில் சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன். அதன் காரணமாகத்தான் சிங்க பரம்பரை என்று சிங்களவர் கூறிக்கொள்கின்றார்கள். இதில் ஏதும் பெருமை இருக்கின்றதா என்று எனக்கு விளங்கவில்லை.

வாளுடைய சிங்கத்தை இலங்கை கொடியில் பார்க்கும்போதெல்லாம் தவிர்க்க முடியாமல் அந்தப் பெண்ணின் ஞாபகம் வருகின்றது.

வசந்தன்(Vasanthan) said...

ஐயா வெற்றி,
எழுதப் போகிறேன், படித்துப் பாருங்கள் எண்டு சொல்லிப்போட்டு இருந்தாச் சரியோ? எப்ப படிக்கிறது?

இளந்திரையன் said...

வரவிற்கு நன்றி கனக்ஸ்,வசந்தன்.
வெற்றி போன்று பலரும் இலங்கையின் உண்மையான வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து இலங்கை ஒரு பெளத்த நாடு என்ற தேரவாதப் பெளத்தத்தின் மாயையை உடைக்க வேண்டும்.

இலங்கையின் இனப் பிரச்சனையை இலகுவாக புரிதலுடன் தீர்த்து வைக்க இது உதவும்.

இரா.சுகுமாரன் said...

தான் நம்பும் ஒரு மதத்தையே கேவலப்படுத்தும் மதவாதிகள் யார் என்றால் அது இலங்கையிலுள்ள மதவாதிகளான பௌத்தர்கள் தான்

வெற்றி said...

உங்களில் பலருக்கு Answers.com எனும் இணையத்தளம் பரீட்சயமாக இருக்கும். இத் தளம் ஓர் தகவற்களஞ்சியம் (encyclopedia)போன்றது. நீங்கள் தேடும் விடயங்கள் பற்றிய தகவல்களைத் தரும். அண்மையில் நான் இத் தளத்தில் Sri Lanka என்று தேடியதும், இலங்கை பற்றிய தகவல்கள் என்று சில செய்திகள் வந்தது. அதில் சிங்களவர்களே இலங்கையின் ஆதி குடியினர் என்றிருந்தது. எனக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது. உடனே Answers.com தள நிர்வாகிகளுக்கு மின்கடிதம் அனுப்பினேன். அக் கடிதத்தில் இலங்கை பற்றிய தகவல்கள் பிழையானதென்றும், எங்கிருந்து இத் தகவல்களை எடுத்தார்கள் என்றும் கேட்டிருந்தேன். அவர்களுடைய பதிலை இங்கே தருகின்றேன். இன்று CIA அமைப்புக்கும் அவர்களது Fact book ல் இலங்கை தொடர்பான தகவல்களில் தவறு உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டி உள்ளேன். நான் ஏன் இதை இங்கே கூறுகிறேன் என்றால், நாம் நமக்குள் மட்டும் பேசிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை. எனவே பொய்யான வரலாற்றினை தெரிந்தோ தெரியாமலோ பிரசுரிக்கும் சர்வதேச தளங்களுக்கு நாம் உண்மையை தெளியப்படுத்த வேண்டிய கடமை எம் அணைவருக்கும் உண்டு. நாம் இதைச் செய்யாவிட்டல், தமிழர்கள் வந்தேறி குடிகள் எனும் பொய்யை உலகம் மெய் என்று நம்பி விடும். Answers.com இணையத்தள நிர்வாகிகள் அனுப்பிய பதில் இதோ:
-------------------------------
Dear Vijay,

Thank you for contacting GuruNet, makers of Answers.com.

We really appreciate your input on the History of Sri Lanka. But since this Answers.com page displays an article from Wikipedia, the user-edited
encyclopedia, we invite you to edit this article yourself, directly at the source. It would appear, Vijay, that you have a great deal to contribute on the
subject. Answers.com will show the correction next time we receive an update from Wikipedia.

First, we recommend creating an account at
http://en.wikipedia.org/wiki/Main_Page . Once logged in, you'll be able to browse to the article you want to edit and make the appropriate changes. To make
it easier for you, you'll find a direct link to the Wikipedia source article in the copyright notice under every Wikipedia entry in Answers.com.

Answers.com is not yet receiving live updates from Wikipedia, although we are exploring this possibility. At the present, we manually update our content on a
regular basis.

Feel free to contact us if you have any further questions or comments about GuruNet Answers. Don't forget to tell your friends and colleagues about us.

Sincerely yours,
Leora Rabinowitz
GuruNet Customer Support
http://www.answers.com
The Answer Engine